Home » » பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்

பரமக்குடி படுகொலைகளும், சி.பி.ஐ. விசாரணையும்

Written By DevendraKural on Monday, 27 February 2012 | 04:41

கடந்த 1957ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 09ம் நாள், இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சேர்ந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடிய இம்மானுவேல் சேகரன் என்பார் ஆதிக்கச் சாதி இந்துக்களால் தனது 33ம் வயதில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சமூக நீதிக்காகப் போராடியதன் காரணமாக படுகொலை செய்யப்பட்டதால், அவர் பட்டியலின மக்களால் 'தியாகி'யாக கருதப்பட்டதோடு, அவரது  ஒவ்வொரு நினைவுநாளின் போதும் அவரது நினைவிடம் அமைந்துள்ள பகுதிக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், உறுப்பினர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள், பெண்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பட்டியலின மக்கள் போன்றோர் பெருந்திரளாக ஜாதி ஆதிக்கத்திற்கு எதிராக அணிவகுத்து, அவருக்கு மரியாதை செலுத்த ஆரம்பித்தார்கள். அவ்வப்போதைய ஆளும் திராவிட அரசுகளின், ஆதிக்க ஜாதியினருக்கு ஆதரவான செயல்பாடுகளும், பட்டியலின மக்களுக்கு எதிரான திட்டமிட்ட கண்டுகொள்ளாமையையும், அடக்குமுறைகளையும் மீறி ஆண்டுக்கு ஆண்டு இப்படியாகத் திரளும் மக்களின் எண்ணிக்கை பல இலட்சங்களைக் கடந்தும், கட்டுக்கடங்காமல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அரசியல் கட்சிகளைக் கடந்து, பட்டியலின மக்களின் தன்னெழுச்சியான ஒன்றிணைதலைக் கண்ட ஆதிக்க ஜாதியினருக்கு இது எரிச்சலூட்ட ஆரம்பித்தது.

இப்படிப்பட்ட சூழலில், கடந்த 10.09.2011 அன்று, கமுதி வட்டம் பள்ளப்பச்சேரியைச் சேர்ந்த பழனிகுமார் என்ற பட்டியலின மாணவர் ஆதிக்க ஜாதி இந்துக்களால் படுகொலை செய்யப்பட்டார். இதன் காரணமாக, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் அரசியல் கட்சியின் தலைவரான பெ. ஜான் பாண்டியன் அந்த ஊருக்கு செல்லவிருப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அவருக்கு மவட்ட ஆட்சித் தலைவரால் 144 தடை உத்தரவு போடப்பட்டது.
    
மறுநாள், தியாகி இம்மானுவேல் சேகரனது 54ஆவது நினைவு நாளான 11.09.2011 அன்று அதிகாலை முதலே, பரமக்குடி வழியாகச் செல்லும் அனைத்து போக்குவரத்து வழித்தடங்களும் வழக்கம்போல வேறுபாதையில் மாற்றிவிடப்பட்டது. காலைமுதலே அவரது நினைவிடத்தில் மக்கள் திரள ஆரம்பித்தார்கள். இதற்கிடையில் ஜான் பாண்டியன் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே காவல் துறையினரால் கைது செய்யப்படுகிறார். அந்த செய்தி பரமக்குடியில் திரண்டிருந்த மக்களுக்கு எட்டிய உடனே, அவரை விடுதலை செய்யக்கோரி சிலர் ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபடுகிறார்கள். சுமார் 200பேர் அளவில் அங்கு திரள்கிறார்கள். இதனைத்தொடர்ந்து அங்கு கூடியிருந்தவர்களுக்கும், காவல் துறையினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, காவல் துறையினரின் காட்டு தர்பாரில் பட்டியலினத்தைச் சேர்ந்த 6பேர் படுகொலை செய்யப்பட்டதுடன், 33பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது.

மறுநாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான் பாண்டியன் அவர்களை வெளிஉலகுக்கு கொண்டுவரக்கோரி, வழக்கறிஞர் இரஜினிகாந்த் மற்றும் விஜேந்திரன் ஆகியோரால் ஆட்கொணர்வு நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்படுகிறார்.        

அந்த வாரமே, மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பொ.இரத்தினம் அவர்கள், பரமக்குடியில் படுகாயம் அடைந்த 33பேருடைய உடல்நிலை குறித்து, மதுரை மற்றும், இராமநாதபுரம் மாவட்டத்தின் மாவட்ட நீதிபதிகளும், மாவட்ட ஆட்சித் தலைவர்களும் நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என பொது நல வழக்கு தாக்கல் செய்ததில், அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவில் கோரியபடியே அறிக்கையை சமர்பிக்கவும் உத்தரவிட்டது. அவர்களும் பார்வையிட்டு கூட்டு அறிக்கையும் தாக்கல் செய்தார்கள். அந்த கள ஆய்வு அறிக்கையின் படி, படுகாயமடைந்தவர்களில் மூன்று பேரின் உடல்நிலை மிகவும் கவலைகிடமானதாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அரசின் செலவில் சிறப்பு சிகிச்சை அளிக்க வேண்டுமென வழக்கறிஞர்களால் கோரப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டது.

இதற்கிடையில் மாநில அரசானது, மேற்கண்ட நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட கணேசன், பன்னீர்செல்வம், ஜெயபால், தீர்ப்புக்கனி, முத்துக்குமார், வெள்ளைச்சாமி ஆகிய 6பேரது குடும்பத்தினருக்கும் தலா ஒரு இலட்சம் ருபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவிப்பு செய்தது.

இந்நிலையில் வழக்கறிஞர்கள் முருகன், புகழேந்தி, திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்), சாமுவேல்ராஜ் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), செல்வம், மள்ளர் நாடு நல சங்கம், வையவன், டாக்டர்.அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சட்ட பாதுகாப்பு மையம், சத்திய மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி) மதுரை மாவட்ட தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கம் மற்றும் குருவிஜயன் (பகுஜன் சமாஜ் கட்சி) ஆகிய பதினோறு மனுதாரர்கள் இந்த வழக்கை மத்திய குற்ற புலனாய்வுக்கு மாற்ற கோருதல், நிகழ்வில் தொடர்புடைய காவல் அதிகாரிகளை தற்காலிகமாக பணி நீக்கம் செய்ய வேண்டும், காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு தொகையை அதிகரிக்க வேண்டும், என்பது போன்ற பல்வேறு பரிகாரங்களைக் கோரி பொதுநல வழக்குகளை சென்னை மற்றும் மதுரை உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்தார்கள். நிகழ்விடம் மதுரை உயர்நீதிமன்ற விசாரணை எல்கைக்குள் வருவதால் அனைத்து வழக்குகளும் மதுரைக்கு மாற்றப்பட்டது.

எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல:

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த ஒவ்வொரு தருணத்திலும், சமூக நலனில் அக்கறை கொண்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூறுக்கும் அதிகமான வழக்கறிஞர்களும், பாதிக்கப்பட்ட மக்களும், பல்வேறு அமைப்புகளிச் சேர்ந்தவர்களும் அரசியல் கட்சியினரும் பெருந்திரளாக நீதிமன்றத்தில் திரண்டார்கள். இழப்பீடு தொகையை முன்னிலும் அதிகமாக அறிவித்து அதனை ஏற்றுக் கொண்டு வழக்கினை தள்ளுபடி செய்யக்கோரி காவல்துறையின் வழக்கறிஞர்களால் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டதை தொடர்ந்து, "எங்களுக்கு வேண்டியது நீதி; நிதி அல்ல" என்பது போன்ற பல்வேறு சுவரொட்டிகளும், போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பொது விசாரணை உள்ளிட்ட வழிகளிலும் சமூக நீதியில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகளால் மாநிலமெங்கும் நடத்தப்பட்டது. குறிப்பாக, மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம், பரமக்குடியில் காவல்துறையினரின் கோர தாண்டவத்தை கண்டித்து சிறப்பு கூட்டம் நடத்தியதோடு, மத்திய குற்றப் புலனாய்வுத் துரையின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தீர்மானம் ஏற்றியது. இதனைத் தொடர்ந்து, வழக்கறிஞர் குழுக்கள் பரமக்குடிக்குச் சென்று கள ஆய்வு செய்தார்கள்.  

பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு கடந்த 23.12.2011 அன்று நீதிபதிகள் கே. என். பாட்சா மற்றும் எம். வேணுகோபால் ஆகியோருக்கு முன்பாக வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள். பொ.இரத்தினம், சங்கரசுப்பு, இராதாகிருஷ்ணன், என்.ஜி.ஆர்.பிரசாத், பிரபுராஜதுரை மற்றும் ரஜினி ஆகியோரும், அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர். நவநீத கிருஷ்ணன், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர். சுப்ரமணியம் உள்ளிட்ட பலரும் வாதம்செய்தார்கள்.

விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கா?:

வழக்கறிஞர்கள், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டக்கல்லூரி மாணவர், பத்திரிகை ஆசிரியர், அரசியல் கட்சியை சார்ந்த உறுப்பினர் மற்றும் சமூக ஆர்வலர் போன்றோரைத் தவிர நிகழ்வில் பாதிக்கப்பட்ட எவரும் வழக்கு தொடரவில்லை. எனவே இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கத்தக்க வகையிலான தகுதிபெற்ற வழக்கு அல்ல என காவல்துறை சார்பில் வாதிடப்பட்டது. ஆனால், பாதிக்கப்பட்டோர் சார்பாக 20க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் ஏற்கனவே கவல்துறைக்கும், அரசுக்கும் அனுப்பப்பட்டு அதற்கான சான்றுகளும் இங்கே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பொது நல வழக்கு. எனவே, வழக்குக்கு தொடர்பே இல்லாத, சமூக நலனில் அக்கறை கொண்டுள்ள குடிமக்கள் எவரும் வழக்கு தொடரலாம் என்று மனுதாரர்களின் சார்பில் வாதிடப்பட்டதை ஏற்றுக்கொண்டு, காவல்துறை தரப்பு வாதத்தை தள்ளுபடி செய்த நீதிமன்றம், இது விசாரணைக்கு ஏற்கத்தக்க தகுதியான வழக்கே என்று கூறி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

ஒரு நபர் விசாரணை ஆணையம்:

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசானது, 'விசாரணை ஆணையங்கள் சட்டம்', 1952 ன் படி, பரமக்குடி நிகழ்வு தொடர்பாக விசாரணை செய்து, இரண்டு மாத காலத்திற்குள் அரசுக்கு அறிக்கை தர வேண்டுமென்ற உத்தரவுடன்,  சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி. சம்பத் அவர்களின் தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை கடந்த 13.09.2011 அன்று அமைத்துள்ளது. அந்த அறிக்கை சமர்பிக்கப்பட்ட பிறகு மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். எனவே, இந்த வழக்கை தமிழக காவல்துறை மிகச்சிறப்பாகவே விசாரித்து வருவதால் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் இந்த வழக்கை ஒப்படைக்க வேண்டிய தேவையில்லை என தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் வாதம் செய்தார். அதற்கு, ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது கள ஆய்வு செய்யும் ஒரு அமைப்பு மட்டுமே. அந்த ஆணையமானது தனது கருத்தை அறிக்கை வடிவில் தயாரித்து சில பரிந்துரைகளுடன் சமர்பிக்கும். அந்த பரிந்துரைகளை அரசு ஏற்கலாம் அல்லது ஏற்காமல் போகலாம். எனவே ஆணையத்தின் அறிக்கை வரும்வரையில் காத்திருக்க வேண்டிய தேவையில்லை என மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்தீர்ப்பு நெறிகளைச் சுட்டிக்காட்டி வாதம் செய்தார்கள். மேலும் மாநில அரசின் காட்டுப்பாடில் இயங்கும் ஆணையத்தின் விசாரணையை பாதிக்கப்பட்ட மக்கள் நம்பத்தயாரில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட மக்கள் விசாரணை ஆணையம் வந்தபோது வாயில் கருப்புதுணி கட்டி தங்களது எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன், அந்த ஆணையத்தையும் புறக்கணித்துள்ளார்கள். எனவே, அரசு தரப்பினரின் இந்த வாதமும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வு:

இரு தரப்பு வாதங்களுக்குப் பின்னர், நீதிமன்றமானது, ஆயுதங்கள் ஏதுமின்றி, அமைதியாக அறவழியில் ஒன்றுகூடி ஆர்பாட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்ட ஒரு குறிப்பிட்ட சாராரின்மீது எந்தவித நியாயமான தேவையும் இல்லாமல் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்கள். இது ஒரு சோகமான, அச்சமூட்டுகிற, உணர்ச்சிமிக்க நிகழ்வாகும் என்று கூறியது.

பாரபட்சமற்ற, வெளிப்படையான விசாரணை: 

குடிமக்களுக்கு வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணையை உத்தரவாதப்படுத்த வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. மேலும், குடிமக்களுக்கு அவர்களது அடிப்படை உரிமைகளை உத்தரவாதம் செய்யவேண்டிய வகையில், முழுமையான நீதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையையும் உத்தரவாதத்தையும் வழங்க வேண்டியது அத்தியாவசியமானது. உள்ளூர் காவல் அதிகாரிகளுக்கு எதிராக புகார்கள் எழுந்திருக்கும் சூழலில், அவ்வழக்கில் அதே காவல் அதிகாரிகளே விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கும் சூழலில் விசாரணை குறித்த ஐயப்பாடு எழுவது இயல்பானதே.

விசாரணையானது நியாயமானதாக இருந்தால் மட்டும் போதாது. அது வெளிப்படையாகத் தெரியவும் வேண்டும். அதேவேளையில் அந்த விசாரணை, பாதிக்கப்பட்டோர், உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் மனங்களில் நம்பிக்கையை விதைக்கும் வகையிலும் அமைய வேண்டும்.  

மத்திய குற்றப் புலனாய்வுத் துறை:

வலுவான மற்றும் அழுத்தமான காரணங்கள் உள்ளதால், இந்த வழக்கில் வெளிப்படையான, நடுநிலையான விசாரணை தேவை என நாங்கள் கருதுகிறோம். எனவே, இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் அனைத்தும் இந்த தீர்ப்பின் நகல் கிடைத்ததிலிருந்து, பத்து நாட்களுக்குள் மத்திய குற்றப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்க வேண்டும். ஏதாவதொரு மத்திய குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் அந்த விசாரணையைக் கண்காணிக்க வேண்டும். வெளிப்படையான, வீரியமான விசாரணைக்காக, மாநில அரசு தனது பூரண ஒத்துழைப்பையும், ஒருங்கிணைப்பையும் நல்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இப்படியாக பல்வேறு தரப்பினர்களின் தொடர் போராட்டத்தினால், ஊர் கூடி தேர் இழுத்ததின் காரணமாக கிடைத்த ஒரு இடைக்கால வெற்றியே இந்த தீர்ப்பாகும். இதே முனைப்புடன் தொடர்ந்து அடுத்த கட்ட பணிகளை முன்னெடுத்தலில் தான் அடுத்தடுத்த வெற்றிகளை நோக்கி நாம் பயணிக்க முடியும்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்