Home » » 33 வயதே நிரம்பிய ஒரு போராளி.......

33 வயதே நிரம்பிய ஒரு போராளி.......

Written By DevendraKural on Monday, 19 March 2012 | 04:48

முல்லைப் பெரியாறு போராட்டத்திலிருந்து ஒரு உண்மை அப்பட்டமாக புலப்பட்டிருக்கிறது. இதோ தங்கள் அணைக்காக மக்கள் பல்லாயிரக்கனக்கில் கொதித்தெழுந்து போராட்டம் நடத்துகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தவோ, உச்சபட்சமாக தடியடி நடத்தி கலைய வைக்கவோ இந்தக் காவல்துறைக்கு சாத்தியமாகிறது.  எந்த உயிர்சேதமும் ஏற்படாமல், கவனமாகக் கையாள முடிகிறது. இந்தத் தடியடி நடத்துவதைக் கூட நாம் எதிர்க்கிறோம். ஆனால் பரமக்குடியில் நூற்றுக்கும் குறைவாக தலித் மக்கள் தெருவிலிறங்கி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். சர்வ சாதாரணமாக ஏழு தலித் மக்களைச் சுட்டுக் கொன்றது இதே காவல்துறை. இந்த முரண்பட்ட அணுகுமுறையில்தான் அழுகி, முடை நாற்றமெடுத்து, இறுகி, உறைந்து கிடக்கும் ஜாதீயம் வெளிப்பட்டுக் கொண்டு இருக்கிறது.


செப்.11-பரமக்குடி இம்மானுவேல் சேகரனின் 54வது நினைவு நாள். 1924 அக்டோபர் 9 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், செல்லூர் கிராமத்தில் வேதநாயகம், ஞானசுந்தரி தம்பதியரின் மூத்த மகனாகப் பிறந்த இம்மானுவேல் சேகரன் 1942ல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில், வழக்கறிஞரான தன் தந்தையோடு பங்கேற்று, 3 மாதம் சிறைத்தண்டனை பெற்றார். ஒரு இராணுவ வீரனாக பணியாற்றச் சென்றவர், 1950ல் சாதியக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவதே முதல் கடமை எனத்திரும்பிவிட்டார். ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தை துவங்கி,1953ல் ஒடுக்கப்பட்டோர் எழுச்சி மாநாடு நடத்தியவர். முதுகுளத்தூரிலும், அருப்புக்கோட்டையிலும் இரட்டைடம்ளர் முறைக்கு எதிராக நேரடிப்போராட்டம் நடத்தியது தமிழகத்தில் புதிய எழுச்சியின் துவக்கமாகும்.

ஆதிக்க சக்திகளின் மண்ணில் ஒடுக்கப்பட்டோர் உரிமை என குரல் எழுகையில் தாங்கிக்கொள்வார்களா? கொலை முயற்சிகள் நடந்தன. தலித் மக்களுக்கு எதிரான ஆதிக்க சக்திகளின் கலவரத்தையொட்டி அமைதிக்காக பணிக்கர் என்ற ஆட்சித்தலைவரின் தலைமையில் பேச்சுவார்த்தை 10.-09.-1957 அன்று நடக்கிறது. சுமூகமாக நிறைவு பெறாததால் புதிய பிரச்னைகள் துவங்குகின்றன. மறுநாளே ஒரு கொலைகார கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்படுகிறார் இம்மானுவேல்.

33 வயதே நிரம்பிய ஒரு போராளியின் படுகொலை மரணம் தாழ்த்தப்பட்ட மக்களை கொந்தளிக்க வைக்கிறது. நியாயம் கேட்டு அன்று போராடியபோது அம்மக்கள் மீது ஆதிக்கசக்திகள் நடத்திய தாக்குதலையும் சேர்த்து அது சாதிக்கலவரம் என்றே அன்று கூறப்பட்டது. போராளியின் நினைவுகளை ஏந்தி கடந்த 54 ஆண்டுகளாக அவரின் நினைவு தினத்தை அனுஷ்டித்துவருகின்றனர். தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடிய இம்மானுவேல் சேகரனை சமூக நீதிக்கான போராட்ட வரலாற்றின் கள நாயகர்களில் ஒருவராக அங்கீகரிக்க வேண்டிய அரசு இன்றுவரை புறக்கணித்தே வருகிறது. இம்மானுவேல் பணியாற்றிய காங்கிரஸ் கட்சியும், பெரியாரின் வழி வந்ததாக தன்னை கூறிக்கொள்வோர்களின் கட்சியும் தான் தமிழகத்தை இன்றுவரை ஆண்டுவந்துள்ளனர். ஆனால், ஒரு அரசு விழா கூட இன்றுவரை எடுக்கப்படவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளாகத் தான் இம்மக்கள் குருபூஜை நடத்திவருகின்றனர். ஆனால் குருபூஜையில் மட்டுமல்ல நினைவஞ்சலி செலுத்தக்கூட எந்தவொரு அமைச்சரும் செல்வதில்லை. அனைத்து சாதிகளுக்கும் செல்லும் அமைச்சர்கள் தலித் போராளிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சிகளுக்கு மட்டும் செல்லாததை சாதி ஒடுக்குமுறை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்ல? 2010ல் இவருக்கு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. நினைவு தபால்தலை வெளியீடு என்றால் அரசு விழாவாக நடத்தப்பட்டு, முதல் தபால் உறையும் வெளியிடப்படும் என்று நாமறிவோம். ஆனால். இம்மானுவேலுக்கு..? விழா ஏதும் நடத்தப்படவில்லை.

மறைந்த முரசொலி மாறன் தபால் தலை 2004ல் வெளியிடுகையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி. ஆனால், அண்ணா அறிவாலயத்தில் மக்களைவைத் தலைவர், மத்திய அமைச்சர்கள் கலந்துகொள்ள சோனியாவை சிறப்பு விருந்தினராக அழைத்து விழா நடத்தி தபால் தலை வெளியிட்ட கலைஞர் தான் 2010ல் இம்மானுவேல் தபால் தலை வெளியிடுகையில் தமிழகத்தில் முதல் அமைச்சர். ஏன் விழா நடத்தவில்லை? சாதிய அரசியல் திராவிடக் கட்சிகளின் மையக்கொள்கையாக இருப்பதால்தான் இன்றும் தொடர்கின்றன தீண்டாமைக்கொடுமைகள். அரசின் நவீன தீண்டாமை அனைத்து துறைகள் மூலம் மட்டுமல்ல, காவல்துறை மூலமும் கோலோச்சுகிறது என்பதன் அடையாளமே தற்போது நடந்துள்ள துப்பாக்கிச்சூடு. ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராளியை சாதிய அடையாளத்துடன் இணைத்து ஒதுக்கிய அரசின் ஒடுக்குமுறையே 2011 செப்டம்பர்,11 துப்பாக்கிச்சூடு.

அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என காவல்துறைக்கு தெரியும். ஆனாலும், பதற்றமில்லாத பாதுகாப்பு தரவோ, ஆதிக்க சக்திகளின் கலவர முயற்சியை தடுக்கவோ மனமில்லாத காவல்துறை தலித் மக்களைத்தான் மீண்டும் கலவரக்காரர்கள் என்று, அரசுமுத்திரை குத்துகிறது. 11 வது வகுப்பில் பயிலும் தலித் பள்ளிச் சிறுவன் படுகொலை செய்யப்படுகிறான். மறுநாள் இம்மானுவேல் சேகரனின் நினைவு நாள். என்ன செய்திருக்க வேண்டும் அரசும், காவல் துறையும்? குற்றவாளிகளை கைது செய்வது மட்டுமல்ல, பரமக்குடிக்கு வரும் தலித் மக்களுக்கும், தலித் தலைவர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அச்சம் நீங்க அறிவித்திருக்க வேண்டும். ஆனால், பாதிக்கப்பட்ட தலித் மாணவனின் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரக்கூடாது என தடை விதிக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்கள் என்பதன் அர்த்தம் காவல்துறையில் இதுதானோ? தூத்துக்குடியில் கிளம்பும் ஜான்பாண்டியனை கைது செய்து தடுக்கிறது காவல்துறை. தங்கள் போராளியின் நினைவு நாளிலேயே ஒரு மாணவனை பறிகொடுத்து நிற்கும் தலித் மக்களிடையே, நம்பிக்கையை உருவாக்குவதற்குப் பதில் கொந்தளிப்பை உருவாக்கும் காவல்துறையின் இச்செயலை சட்டம் ஒழுங்கு நடவடிக்கை எனக்கூறலாமா அல்லது சாதிய நடவடிக்கை எனக்கூறலாமா? நினைவு அஞ்சலிக்கு வரும் மக்களிடம் வன்மத்துடன் நடந்துகொள்கிறது காவல்துறை. ஆறுதல் கூறக்கூட தடை விதிப்பது அநியாயம் எனக்கூறி சாலை மறியல் நடத்திய மக்களை காக்கை குருவி போல சுட்டுக்கொன்று சட்டம் ஒழுங்கை சரி செய்து விட்டதாக தற்பெருமை காத்துக்கொள்கிறது காவல்துறை.

போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனம் வைத்திருக்கிறார்கள், ஏன் பயன் படுத்தவில்லை எனக்கேட்டால் கலவரக்காரர்கள் எரித்துவிட்டதாக ஏகத்துக்கும் பொய் பேசிய காவல்துறை.. முதலில் கண்ணீர்ப்புகை குண்டு வீசி, வானத்தை நோக்கி சுட்டு அதன் பின்னரும் காவல் துறையினருக்கும், பொதுமக்கள் உயிருக்கும் அச்சம் என்ற நேரத்தில் தானே துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் எடுத்த எடுப்பிலேயே துப்பாக்கிச்சூடு நடத்திய நோக்கமென்ன? 30 முதல் 50 பேர் வரை மட்டுமே மறியல் செய்ததாகத்தான் அனைத்துப் பத்திரிகைகளும் கூறுகின்றன. குண்டுக்கட்டாக தூக்கிக்கூட அனைவரையும் அப்புறப்படுத்தியிருக்கலாம். ஆனால், சிறு கூட்டத்தைக்கூட அமைதியாக கலைக்கத் தெரியாதா காவல்துறைக்கு? தெரியும், இருப்பினும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதென்றால் விசாரணையும், கடும் நடவடிக்கைகளும் தேவை என்றுதானே அர்த்தம். பசும்பொன் தேவர் குறித்து தவறாக எழுதியதால் தலித் மாணவன் கொலை செய்யப்பட்டான் எனக்காரண, காரியங்களை விளக்கமாகக்கூறிய தமிழக முதல்வர் கலவரத்தை தடுக்கவே துப்பாக்கிச்சூடு என்று ஒரு வரியில் சட்டமன்றத்தில் கூறுகிறார். அப்படியெனில், முழங்காலுக்கு கீழே சுட்டு அவர்களை கலைத்திருக்கவேண்டும். அவ்வளவு தானே, மாறாக நெற்றிப்பொட்டிலும், மாரிலும் குறி பார்த்து சுடப்பட்டதன் நோக்கம் என்ன? இம்மானுவேல் சேகரன் நினைவு நாளிலேயே அம்மக்கள் மீது துப்பாக்கிச்சூடு எனில் காவல்துறையின் பாதுகாப்பு ஏற்பாட்டில் தானே குறைபாடு இருப்பதாக அர்த்தம்.

இரயில் விபத்தில் இறந்துபோனவர்களுக்கு 5 லட்சம் நிவாரண நிதி தருகையில், காவல்துறையின் துப்பாக்கிச்சூட்டால் இறந்துபோனவர் குடும்பத்துக்கு வெறும் ஒரு லட்சம் என்பது ஏமாற்றுவேலையே. தன் பரம்பரையிலேயே முதன் முதலாக ஒருவனை பாலிடெக்னிக் வரை அனுப்பிய தந்தை, இன்று அவனை இழந்ததோடு மட்டுமல்ல தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கும் அவரே மீண்டும் உழைக்கவேண்டிய கொடூர நிலைக்கு ஆளாகியுள்ளாரே, அவருக்கு இந்த ஒரு லட்சம் வாழ்வைத் தருமா? பரமக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டுக்கு வாகனங்கள் தீயெரிக்கப்பட்டதை காரணம் காட்டிப்பேசுவோர், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் மதுரை மாவட்டம் சிந்தாமணியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுக்கு என்ன காரணம் சொல்வார்கள்?ஒரே நேரத்தில் அனைத்து இடங்களிலும் துப்பாக்கிச்சூடு என்பதை நிலைமையை மனதில் கொண்டு எடுக்கப்பட்ட சட்டம்-ஒழுங்கு முடிவாகத் தெரியவில்லை. ஒரு விதமான நடவடிக்கைக்கு ஒரே உத்தரவு தானே காரணமாக இருக்கமுடியும் என ஐயம் எழுகிறது. ஐயத்தை போக்கவேண்டிய அரசு அடுத்தடுத்து எடுக்கும் நடவடிக்கைகளைப் பார்த்தால் வருத்தமே மேலோங்குகிறது.

அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரும் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நம்பிக்கையை ஏற்படுத்துவது மட்டுமல்ல அமைதி தொடரவும் அடித்தளமிடுவார்களே, அது ஏன் பரமக்குடியில் நடக்கவில்லை? பாதிக்கப்பட்ட தலித் மக்கள் 2000 பேர் மீது 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்கு என சுமார் 8 ஊரைச் சேர்ந்துள்ள மக்கள் மீது வழக்கு தொடர்ந்தது ஏன்? நடு இரவிலும் வீடுகளில் தேடுதல் மேற்கொள்வது ஏன்? இதற்கு பெயர் தான் வேட்டையோ? 15 நாட்கள் வரை ஆன பின்னும் 144 தடை உத்தரவு ஏன்? கேள்விகள் அநேகம் உள்ளன. பதில் யாரும் கூறப்போவதில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. இம்மானுவேல் சேகரன் நினைவுதினத்தில் நடந்ததைப்போன்று வேறெந்த நினைவு தினத்திலும் நடவாது. வேறு எந்தப் பிரிவு மக்களுக்கும் இப்படியொரு கொடுமை நிகழ்த்தப்படாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கும் நிதி உள்பட எந்த உரிமையும் அவர்களைப் போய் சேர்வதில்லை, அடக்குமுறையைத் தவிர.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கலவரத்தை தொடுத்த காவல்துறையின் கண்ணியமற்ற காரியங்களை விமர்சித்து, நடவடிக்கை எடுக்கவேண்டிய முதல்வர் ஏழு மனித உயிர்களைப் பறித்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத செயல்தான் காவல்துறையின் அநாகரிக செயல்களுக்கு, சட்ட விரோத செயல்களுக்கு துவக்கமாக அமைந்தது என்பதைத் தான் தமிழகம் அடுத்த சில நாட்களில் கண்டது. முதலில் மாவட்ட வருவாய் அதிகாரி தலைமையில் நீதி விசாரணை என அறிவிக்கும் முதல்வரின் முடிவும், மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளால் எதிர்ப்புக்குரலால் தான் நீதிபதியின் விசாரணை என மாறியது.ஓய்வு பெற்ற நீதிபதி சம்பத் தலைமையிலான ஒருநபர் விசாரனைக் கமிஷனை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியது.

இந்த விசாரனை கமிஷனுக்கும்  ஆட்சேபங்களும் கடுமையான எதிர்ப்புகளும் எழுந்தன.  சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.  துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தோழர் சாமுவேல் வழக்குத் தொடுத்திருந்தார். அவர் சார்பில் பிரபல வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார்.

இந்த வழக்கை விசாரித்த கேஎன் பாஷா மற்றும் வேணுகோபால் ஆகியோர் தலைமையிலான பெஞ்ச், துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டனர். 


ண்மைகளை மூடி மறைக்கவும், நீதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்திருக்கின்றன.  தாழ்த்தப்பட்ட  மக்கள் மீது நடத்தப்பட்ட வெறிகொண்ட தாக்குதலை அம்பலப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிசெய்வதோடு,, இனி இப்படியொரு கொடுமை நிகழாமல் தடுக்க வேண்டிய காரியமும் இதற்குள் அடங்கியிருக்கிறது. சமூகத்தின் மனசாட்சியைப் பிடித்து உலுக்காமல் அது சாத்தியமில்லை.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்