Home » » உழவு செய்யாமலே விதைக்கலாம்...

உழவு செய்யாமலே விதைக்கலாம்...

Written By DevendraKural on Friday, 2 March 2012 | 03:40

''புழுதி நிலத்துல வரிசை முறையில நெல் விதைக்க புதுசா ஒரு கருவி வந்துடுச்சு. அது மூலமா விதைச்சதுல... குறைவானச் செலவு, உழைப்புலயே ஏக்கருக்கு 36 மூட்டை மகசூல் கிடைச்சுடுச்சு. இந்தக் கருவி, எனக்கு கண்கண்ட தெய்வம்'' என்று சிலாகித்துப் பாராட்டுகிறார், தஞ்சாவூர் மாவட்டம், குருவாடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி!

''நெல் சாகுபடியைப் பொறுத்தவரை நாத்து நடவு முறையைவிட, நேரடி விதைப்பு முறைதான் சிறப்பானது. நாத்து நடவுக்காக சேத்து உழவு செய்ய, நிறைய தண்ணி தேவைப்படும். நேரடி விதைப்பு முறையில தண்ணியே தேவைப்படாது. புழுதி உழவு ஓட்டி அப்படியே விதைச்சுடலாம். ஒரு மாசம் வரைக்கும் தண்ணி இல்லைனாலும்கூட தாங்கிக்கும். அதேமாதிரி, கனமழைக்கும் தாக்கு புடிச்சுடும். அதேசமயம், வரிசையா இடைவெளிவிட்டு விதைச்சாதான் சூரிய ஒளியும், காற்றோட்டமும் பயிருக்கு நல்லா கிடைக்கும். களை எடுக்குறதுக்கும் வசதியா இருக்கும். கையால தெளிக்கிறப்போ இதெல்லாம் சாத்தியமில்லாத விஷயமா இருந்ததாலேயே, புழுதி நேரடி விதைப்பை யாரும் கடைபிடிக்காம இருந்தாங்க. ஆனா, இப்போ வந்திருக்கிற கருவி, எல்லா குறையையும் போக்கிடுச்சு.

மானாவாரி விவசாயிகள் மட்டுமில்லாம, இறவைப் பாசன விவசாயிகள்கூட இந்தக் கருவியைப் பயன்படுத்தி, தண்ணீரைச் சிக்கனம் பண்ணலாம். அதோட, நிறைய செலவும் மிச்சம். ஏறத்தாழ பாதி செலவு குறைஞ்சுடும்'' என்ற ஆசைத்தம்பி, நெல் விதைக்கும் கருவி பற்றி விவரித்தார்.

ஒரே நேரத்தில் ஒன்பது வரிசைகள்!  

கருவியின் மேல்புறம், விதைகளைப் போடுவதற்காக நீண்ட பகுதி இருக்கிறது. இதில் விதைகளை நிரப்பிக் கொள்ள வேண்டும். பிறகு, கருவியை டிராக்டரின் பின்பக்கத்துடன் இணைத்து டிராக்டரை ஓட்டிக் கொண்டே சென்றால்... விதைகள் இருபத்தி ரெண்டரை சென்டி மீட்டர் இடைவெளியில் வரிசையாக விழுந்து கொண்டே வரும். ஒரே சமயத்தில்

9 வரிசைகள் விதைக்கலாம். வரிசைக்கு வரிசை உள்ள இடைவெளியை நமது தேவைக்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொள்ளலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு மணி நேரத்துக்குள் விதைத்துவிடலாம்.

உழவு செய்யாமலும் விதைக்கலாம்!

இந்தக் கருவியில், தாள் நீக்கி பிளேடுகள் ஒன்பது வைக்கப்பட்டு உள்ளன. இதன் மூலமாக நெல் அறுவடை செய்த நிலத்தில், புழுதி உழவு ஓட்டாமலேகூட விதைக்கலாம். இந்த பிளேடுகள் நிலத்தில் உள்ள தாள்களை வரிசையாக அறுத்து இரண்டு பக்கமும் போட்டுக் கொண்டே போகும். இந்தத் தாள்கள், மூடாக்காகப் பயன்பட்டு, களைகளைக் கட்டுப்படுத்தும். தாள் நீக்கியை இயக்குவதாக இருந்தால், 50 குதிரைத்திறன் கொண்ட டிராக்டர் தேவை. உழவு ஓட்டிய நிலமாக இருந்தால், தாள் நீக்கி பிளேடை இயக்க வேண்டியதில்லை. இதற்கு 35 குதிரைத்திறன் கொண்ட டிராக்டரே போதுமானது.

பிளேடுக்கு பின்புறம், சற்றுத் தள்ளி கொலு இருக்கும். இந்த கொலு, சுமார் 2 சென்டி மீட்டர் ஆழத்துக்கு மண்ணைக் கீறிக் கொண்டு போகும். அப்படிக் கீறுவதால் ஏற்படும் குழியில் கொலுவின் பின்புறம் இணைக்கப்பட்டுள்ள குழாயில் இருந்து விதைகள் விழும். ஒரு குழாய்க்கும், இன்னொரு குழாய்க்கும் இருபத்தி ரெண்டரை சென்டி மீட்டர் இடைவெளி இருக்கும். விதையின் எண்ணிக்கையையும் நமது தேவைக்கு ஏற்ப நிர்ணயம் செய்து கொள்ளலாம்.  

அடியுரமும் இடலாம்!

விதைக் குழாயின் பக்கவாட்டில் 2 சென்டி மீட்டர் இடைவெளியில் உரம் விழுவதற்கான குழாய் அமைக்கப்பட்டிருக்கிறது. கருவியின் மேல்புறம், உரம் போடுவதற்கென்றே அமைக்கப்பட்டிருக்கும் பாகத்தில் உரத்தைக் கொட்டினால், இந்தக் குழாயின் வழியாக சீராக உரம் விழுந்து விடும். அதனால், விதைக்கும் போதே, அடியுரத்தையும் கொடுத்துவிட முடியும் (இக்கருவி மூலமாக ரசாயன உரத்தைத்தான் தர முடியும். தொழுவுரம் இட விரும்புபவர்கள், விதைப்புக்கு முன்பாக புழுதி உழவு ஓட்டும்போதே கொடுத்துவிட வேண்டும்).

கருவியின் செயல்பாடுகள் பற்றி, செய்முறை விளக்கம் சொன்ன ஆசைத்தம்பி, அடுத்து இக்கருவியைப் பயன்படுத்தி, தான் சாகுபடி செய்த அனுபவத்தை விவரித்தார்.

உரச்செலவு மூன்று மடங்கு குறைகிறது!

''ஏக்கருக்கு 500 கிலோங்கற கணக்குல தொழுவுரத்தைப் போட்டு, ரோட்டோவேட்டர்ல ஒரு சால் புழுதி உழவு ஓட்டினேன். அதுக்கப்பறம் இந்தக் கருவியில 12 கிலோ ஏ.டி.டீ-36 ரக விதைநெல்லையும், 16 கிலோ டி.ஏ.பி. உரத்தையும் நிரப்பி, டிராக்டர் மூலமா இயக்கினேன். இருபத்தி ரெண்டரை சென்டி மீட்டர் இடைவெளியிலதான் விதைச்சேன். விதைச்ச 10-ம் நாள் லேசா மழை பெய்துச்சு. அதுக்குப் பிறகு 15 நாளுக்கு ஒரு தடவைதான் தண்ணி பாய்ச்சுனேன். பயிர் நல்லா வளர்ந்ததால, ரொம்ப கம்மியாத்தான் மேலுரம் தேவைப்பட்டுச்சு. நடவு முறையா இருந்தா, நான் பயன்படுத்தின மாதிரி மூணு மடங்கு அளவுக்கு உரம் தேவைப்பட்டிருக்கும். சூரிய வெளிச்சமும் காற்றோட்டமும் சீரா கிடைச்சதால, பூச்சி, நோய்த் தாக்குதலும் இல்லை. வழக்கமான நடவுமுறையில நெல் சாகுபடி செஞ்சா 120-ம் நாள்லதான் அறுவடைக்கு வரும். ஆனா, நேரடி விதைப்பு முறையில 110-ம் நாளே அறுவடைக்கு வந்துடுச்சு'' என்றார், மகிழ்ச்சியாக.

தஞ்சாவூர் மாவட்டம், காட்டுத்தோட்டத்தில் உள்ள மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவருமான சந்திரசேகர் மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான தானிய உற்பத்திப் பெருக்கத் திட்டத்தின் உழவியல் விஞ்ஞானி குமரன் ஆகியோர்தான் இந்த நடவு இயந்திரத்தை ஆசைத்தம்பிக்கு அறிமுகம் செய்திருக்கிறார்கள்.

உளுந்தும் விதைக்கலாம்!

அதைப் பற்றிப் பேசிய குமரன், ''சேற்று உழவு செய்தால், மண்ணின் இயல்பானத் தன்மை மாறிவிடும். மண் இறுகிவிடுவதால், அதன் கீழ் தொடர்ச்சி இல்லாமல் போய் விடும். அதனால் மண் வளம் குன்றுவதோடு, மழைநீர் ஊடுருவ முடியாத சூழ்நிலை உருவாகும். புழுதி உழவு ஓட்டும்போது இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். புழுதி நிலத்தில் இயந்திரத்தின் மூலம் வரிசை முறையில் நேரடி நெல் விதைப்பு செய்வது மிகவும் சிறப்பானது. இந்த இயந்திரத்தின் மூலம் புழுதி நிலத்தில் வரிசை முறையில் உளுந்தும் விதைக்கலாம்'' என்றவர்,

தஞ்சாவூர் மாவட்டம் மாத்தூர் பகுதிக்கு நம்மை அழைத்துச் சென்றார். அங்கு பெருமாள் என்பவர், தன்னுடைய நிலத்தில் நெல் அறுவடையை முடித்துவிட்டு, உழவு ஓட்டாமலே, இந்த இயந்திரத்தின் மூலம் உளுந்து விதைத்துக் கொண்டிருந்ததை செயல்விளக்கமாகவே நமக்குக் காண்பித்தார்.

ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்!

தொடர்ந்து பேசிய குமரன் ''இங்கு முக்கால் அடி இடைவெளியில், வரிசையாக நெல் தாள்களை நீக்கி, உளுந்து விதைத்துக் கொண்டிருக்கிறார். ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை உளுந்து போதுமானது. வரிசைக்கான இடைவெளியை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். இயந்திரத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்.

தஞ்சாவூர் பகுதி விவசாயிகள், விதைப்புக்கு 10 நாட்களுக்கு முன்பாகவே எங்களிடம் பதிவு செய்து கொண்டால், வாடகை இல்லாமலே இயந்திரத்தை அனுப்பி வைப்போம். போக்குவரத்துச் செலவை விவசாயிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என்று சொன்னார்.

 தொடர்புக்கு,

ஆசைத்தம்பி, செல்போன்: 96983-69927
குமரன், செல்போன்: 99650-97161
மண், நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம்,
தஞ்சாவூர். தொலைபேசி: 04362-268200


Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்