Home » » சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - வாழ்க ஜனநாயகம்?

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் - வாழ்க ஜனநாயகம்?

Written By DevendraKural on Friday, 16 March 2012 | 05:22


எதற்கு இந்த வீணான ஆர்பாட்டங்கள் ?!

இடைதேர்தல் ஒரு தொகுதிக்கு நடைபெறுவதாக எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்...ஆனால் தமிழ்நாட்டிற்க்கே தேர்தல் நடைபெற போவதை போல் எங்கும் ஒரே பரபரப்பு. தமிழ் நாட்டை அடுத்து ஆளபோவது யார் என்று நிர்ணயிக்க போவதே இந்த தேர்தல் தானோ என்பதை போல மொத்த அரசியல் கட்சியினரும் சங்கரன்கோவிலில் குவிந்திருக்கின்றனர்.

அரசியல் பற்றி அனா ஆவனா தெரியாத என்னையும் இந்த தேர்தல் ரொம்ப யோசிக்க வைத்துவிட்டது. எனக்கும் இந்த தேர்தலுக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை அங்கே எனக்கு ஓட்டுரிமை இருக்கு என்பதே. 15 வருடமாக பழகிப்போன ஊரில் இப்போது திரும்பிய திசை எங்கும் புது புது முகங்கள்...எல்லோரும் உரக்க பேசுகிறார்கள், வேகவேகமாக நடக்கிறார்கள், எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள், எதற்கு செல்கிறார்கள்...குழப்பத்தில் பாதி மக்கள் , ரொம்ப தெளிவாக மீதி மக்கள்(?) சந்தோசம், வருத்தம், குழப்பம், எல்லாம் சரிவிகிதத்தில் கலந்து ஒரு வித்தியாசமான மனநிலையில் இருக்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. 

வாசலில் மாதக்கணக்கில் காத்துக்கிடந்தாலும் தங்கள் முகத்தை காட்ட கூட நேரம் இல்லாத மாண்புமிகுகள் இப்போது சர்வ சாதாரணமாக பத்தடிக்கு பத்தடி தூரத்தில் தெருவில் மக்களுக்கு முன்னே கடந்து செல்கிறார்கள்...திருநெல்வேலி ராஜபாளையம் மெயின் ரோட்டில் தலையை குனிந்து கொண்டு போனால் எதிரில்  இடித்து கொள்ளும் நபர் அனேகமாக ஒரு மாண்பிமிகுவாக கூட இருக்கும் அல்லது எம் எல் ஏ,  மேயராக இருக்கலாம். எதற்கும் நிமிர்ந்து போவதே நல்லது...! பின்ன இப்ப இடிச்சிட்டு போனா சிரிச்சிட்டு போய்டுவாங்க ஆனா உங்க அட்ரெஸ் நோட் பண்ணபட்டு தேர்தல் முடிந்ததும் வீட்டிற்கு ஆட்டோ அனுப்படலாம்...! (வேற ஒன்னும் இல்ல, கூப்பிட்டு உங்களை பாராட்டத்தான் !!)

சில துறையை சேர்ந்த அதிகாரிகள் மாற்றபடுகிறார்கள், இப்போது இருப்பவர்களும் எப்போது கிளம்ப நேரும் என தயாராகவே  இருக்கிறார்கள் போல. தமிழகத்தை சேர்ந்த எல்லா கட்சியினரும் வட்டம் , மாவட்டம், சதுரம், செவ்வகம் என்று தேர்தல் வேலையை மாய்ந்து மாய்ந்து பார்க்கிறார்கள்...ஊரில் இருக்கும் பல வீடுகள் வாடகைக்கு என வலிந்து பெறபடுகின்றன, ஒரு சில வீடுகளுக்கு வீடு கட்டிய செலவை விட அதிக வாடகை கொடுக்கபடுகிறது...மக்களும் வாழ்க்கையில் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா என்ற ஒரு சந்தோஷ அதிர்வில் வீட்டினை கொடுத்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன். (தேர்தல் முடிந்த பின் வீடு எனக்கே சொந்தம் என்று எழுதி வாங்காமல் இருந்தால் சரி...எதுவும் நடக்கலாம் ?!!)
வீட்டிற்கு வெளியே, கட்சியினர் இருவர் என ஒவ்வொருவர் வீட்டு வாசலிலும் இருக்கிறார்கள். மக்களின் நடவடிக்கை அனைத்தும் ஏறக்குறைய ஏதோ ஒரு கட்சியினரின் கண்காணிப்பில் !! தீப்பெட்டி ஆபிஸ், தறி செட் , சினிமா, கோவில், திருவிழா, டீக்கடை அரட்டை என ரொம்பவே இயல்பாக வாழ்வை எதிர்கொண்டு வாழ்ந்து வருகிற சங்கரன்கோவில் தொகுதி மக்களுக்கு இந்த திடீர் ஆர்பாட்டங்கள் என்னதென்று புரியாத  ஒரு அதீத குழப்பத்தை கொடுத்திருப்பதை அந்த ஊர் பிரஜை என்னால் நன்கு உணர முடிகிறது. இந்த குழப்பத்தின் விளைவு எப்படியும் இருக்கலாம். இது போன்ற ஒரு நெருக்கடியான மனநிலையை ஏற்படுத்தும் இன்றைய அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது...?!

'தேர்தல் என்பது மக்கள் சுயமாக சிந்தித்து கட்சிகளின் நிறைகுறைகளை சீர் தூக்கி வாக்கு அளிப்பது' என்ற அடிப்படை மாறி வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்கள் என்பதாக இன்று இருக்கிறது. 'சென்டிமெண்டல் மிரட்டல்கள்' என்று கூட சொல்ல தோணுகிறது.

ஒரே தெருவில் இந்த பக்கம் ஒரு கட்சி, அந்த பக்கம் மற்றொரு கட்சி பிரச்சாரம் இரண்டையும் ஒரு சேர கேட்கும் மக்களின் மனநிலை என்னவாக இருக்கும். நேரில் அனுபவித்த எனக்கு எரிச்சல் தான் வந்தது. ஒன்னுமே புரியலன்னு சொல்ல முடியல, எல்லாமே புரியல. ஏன் எதற்கு இந்த ஆர்பாட்டம் , இந்த தேர்தல் ஒன்று தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்க போகிறதா ?! கட்சிகள் இதில் வெற்றி பெற்று எதை நிலைநிறுத்த துடிக்கின்றன ?! 

தமிழ் நாட்டின் அத்தனை முன்னால், இந்நாள் அமைச்சர்கள், எம்.பி க்கள், எம் எல் ஏக்கள், மேயர்கள், சேர்மன், கவுன்சிலர்கள், பல துறை சேர்ந்த அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள்,அடிமட்ட,மேல்மட்ட கட்சி செயலாளர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கைத்துறை, தொலைக்காட்சி நிருபர்கள்,  நடிக, நடிகையர்கள் இன்னும் இதில் சொல்ல விடுபட்டுபோனவர்கள் அநேகம் என்று உள்ளூர் மக்களை விட மூன்று மடங்கு மக்களால் இத்தொகுதி மூச்சு திணறி விழி பிதுங்கி கொண்டிருக்கிறது.

தேர்தல் வேலை பார்க்கிறோம் என்று இத்தனை பேர் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தற்போது தமிழகத்தின் தலை போகிற பிரச்னை இது மட்டும்தான் என்பது போல் துடிக்கும் அரசியல்வாதிகள், மக்களின் பிரச்சனை எதிலும் தலையிடவில்லை.

*பரமக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் போய் மக்களை சந்தித்தார்கள் ?

* முல்லை பெரியாறு அணைக்கு இத்தனை கூட்டமும் குரல் கொடுத்ததா?!

* மூன்று மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் கூடங்குளம் மக்கள் போராட்டத்துக்கு எத்தனை அமைச்சர்கள் நேரில் சென்றார்கள். மக்களுக்காக மக்கள் நடத்தும் போராட்டம் தானே அதற்கு ஏன் மக்கள் பிரதிநிதி என்று சொல்லிக்கொள்ளும் ஒருவரும் துணை நிற்கவில்லை. 

அவைகூட போகட்டும் , ஆனால் குறைந்தபட்சம்.....

இங்கே நெல்லையில் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள் கல்விக்காக ஒரு மாதத்திற்கும் மேலாக செய்து வரும் உள்ளிருப்பு போராட்டத்தை ஒரு அமைச்சரும் ஏன் கண்டுகொள்ளவில்லை?! ( மாணவர்களாக கோர்டில் முறையீடு செய்து நல்லதொரு தீர்ப்பை பெற்றுவிட்டார்கள்)

குடிநீருக்காக அன்றாடம் அலைகிற மக்களுக்காக தங்களது சிங்காசனத்தை விட்டு இறங்கி வராத இவர்கள் ஒரு எம் எல் ஏ சீட்டுக்காக இரு வாரமாக மக்களிடம் கை ஏந்தி பிச்சை எடுத்து கொண்டிருக்கிறார்கள். இது போன்ற ஒரு அவலம் வேறன்ன இருக்கிறது ?!!

தன் கட்சி வெற்றி பெறவேண்டும் என்பதற்காக சுய கௌரவம் என்பது இல்லாமல் மக்கள் கால்களில் விழும் இவர்கள் தேர்தல் முடிந்ததும் காக்கா கூட்டங்களை போல சிதறி ஓடி விடுவார்கள். இத்தனை ஆர்ப்பாட்டங்களையும் பார்த்து பொழுதுபோக்கிய மக்கள் வழக்கம் போல தீப்பெட்டி ஆபிஸ், தறி செட், பீடி உருட்ட என தங்களின் வயிற்று பாட்டை பார்க்க போய்விடுவார்கள்
இந்த தேர்தலால் பாமர மனிதனுக்கு கிடைக்ககூடிய நன்மை என்ன? அதிக அளவு பணம் நடமாடுகிறது...அவ்வளவும் மக்கள் பணம். மக்களுக்கு தானே போகிறது என்று சமாதானம் செய்து கொள்ள முடியவில்லை. இப்படி திடிரென்று கிடைக்ககூடிய பணம் நிச்சயமாக அவனது வறுமையை போக்க போவதில்லை, மாறாக அந்த பணம் டாஸ்மார்க் மூலமாக மீண்டும் அரசின் கைகளுக்கு தான் போக போகிறது. உழைக்காமல் கிடைத்த பணம் உற்சாக செலவிற்கு போகும் என்பதுதானே நியதி ?!! டாஸ்மார்க் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது, குடிக்க வைத்தே வாக்காளனின் சிந்திக்க கூடிய மூளையை மழுங்கடித்து கொண்டிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்.

மக்களுக்கு சிந்திக்கும் திறன் அறவே இல்லை என்றே முடிவு கட்டிவிட்டார்கள். தேர்தல் வரை நெருக்கடிக்கு ஆளாகும் மக்களை பற்றி யாரும் கவலை பட போவதில்லை. மக்களை சுயமாக சிந்திக்கவும் விடபோவதில்லை. தங்களை முன்னிறுத்துவது மட்டுமே நோக்கமாக இருக்கும் இவர்களா மக்களின் பிரச்சனைகளை தீர்க்க போகிறார்கள்...?!

தேர்தல் கமிசன் ?!!

தமிழகம் முழுவதும் தேர்தலை நடத்த முடிந்தவர்களுக்கு  ஒரு தொகுதியில் நடத்த ஏன் இத்தனை பரபரப்பு, அல்லோகலம் என்பது தான் புரியவில்லை. 50 கிலோமீட்டர் தள்ளி நடக்க போகிற ஒரு தேர்தலுக்காக திருநெல்வேலியின் ஏதோ ஒரு சிறிய தெருவின் சுவற்றில் எழுதி இருக்கும் அரசியல் வாசகங்களை அழித்து கொண்டிருக்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. தேர்தல் பணியாளர்கள் மாற்றபட்டுகொண்டே இருக்கிறார்கள், எதற்காக யார் வசதிக்காக ?! 

பத்திரிகை செய்திகளில் தவறாமல் தினம் இடம் பெற்று விடுகிறது இத்தனை லட்சம் இன்று பிடிபட்டது என்று. அது அரசியல்வாதியிடம் இருந்து என்றா ?! இல்லவே இல்லை. சோதனையில் பிடிபடுபவர்கள் அத்தனை பேரும்  வியாபாரிகளும், சிறு தொழிலதிபர்களும் தான். அரசியல்வாதிகள் புத்திசாலிகள், பணத்தை பல வழிகளில் சம்பாதிக்க தெரிந்தவர்களுக்கு அதை ஊருக்குள் கொண்டு வரும் வழியா தெரியாது...?! தேர்தல் கமிசனும் தான் சரியாக வேலை செய்வதாக காட்ட இப்படி ஏதாவது செய்தி வெளியிட்டு ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

பதட்டமான வாக்குசாவடிகள் ?!!

தேர்தல் நடக்க இருக்கின்ற 242 வாக்குசாவடிகளும் பதட்டமானவை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி.  கடந்த வருட தேர்தலில் 16 வாக்கு சாவடிகள் பதட்டமானவை என்றார்கள், இப்போது அனைத்தும் பதட்டமானவை என்றால் எங்கே இருக்கிறது தவறு ?

* ஒரே வருடத்தில் ஊர் அந்த அளவிற்கு மோசமாக மாறிவிட்டதா ?

அல்லது

* இனி நடக்க போகிறவைகளுக்காக முன்கூட்டியே பூசிமெழுக வசதியாக இப்படி ஒரு செய்தி பரப்பப்படுகிறதா ?

எது உண்மை ? யார் விளக்குவது ? தேர்தல் கமிசன் எந்த விதத்தில் செயல் படுகிறது என்பதே சந்தேகத்திற்கிடமாக இருக்கிறது.

தீவிர சோதனை ?!!

ஆங்காங்கே நடுவழியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போலீசாரால் ஒவ்வொரு சீட்டாக சோதிக்கபடுகிறது. பயணிக்கும் கிராம மக்கள் என்னமோ ஏதோனு  ஒரு வித பதட்டத்துக்கு ஆளாகிறார்கள்...! இந்திய பாகிஸ்தான் எல்லை போல ஆகிபோச்சு சங்கரன்கோவில் !!

வீடு வீடாக புகுந்து சோதிக்கும் கொடுமையும் நடந்து கொண்டிருக்கிறது...! பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபடுவதை பற்றி துளியும் அக்கறைகொள்ளாத தேர்தல் கமிசன் !!

மக்களை நெருக்கடிக்கும், பதட்டத்துக்கும், அச்ச உணர்வுக்கும் ஆட்படுத்துவது தான் ஜனநாயக முறைப்படி ஆட்சி நடக்கும் ஒரு நாட்டின் லட்சணமா ?!!

இந் நாட்டின் மன்னர்கள் நாங்கள் ?!! 

இந்தியாவில் இருக்கும் விலையுர்ந்த அத்தனை விதமான மாடல் வாகனங்களையும் சங்கரன்கோவில் தொகுதியில் ஒரே சமயத்தில் பார்க்க முடிகிறது. வீட்டு வாசல்ல நிற்கிற  காரை பார்த்து பெருமிதமா பக்கத்து வீட்டுல சொல்லி பெருமைபட்டுகிற எம் மக்களின் வெகுளித்தனத்தை தங்களுக்கு சாதகமாக மாற்ற முயன்றுகொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.

நாலாபுறமும் கரைவேட்டி அரசியல்வாதிகளுக்கு நடுவே வெண்ணிற கதராடையில் காந்தியவாதி ஒருத்தர் தேர்தலில் நிற்கிறார்...வெகு நிதானமாக அமைதியாக காந்திய கொள்கைகளை சொல்லி வாக்கு கேட்கிறார். தனக்கு ஓட்டு போட்டால் பூரண மதுவிலக்கை(?) கொண்டுவருவதாக சொல்கிறார். நாடு தற்போது எதன் பின்னே ஓடிகொண்டிருக்கிறது என்பதை அறிந்து சொல்கிறாரா, அறியாமல் சொல்கிறாரா என தெரியவில்லை...!(ஆனால் அவரோட நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு...!!)

இப்படி மக்களை பாடாய்படுத்தி ஒரு தேர்தலை நடத்தி அதில் வெற்றி(?) பெற்றதாக பெருமை பட்டுக்கொள்ள போகிறார்கள். வழக்கம் போல இந்த நாட்டின் மன்னர்கள் நாங்கள் பட்டாஸ் வெடித்து கொண்டாடபோகிறோம் !!

வாழ்க ஜனநாயகம் ! வாழ்க மக்கள் !!

பின்குறிப்பு

இனி இடைதேர்தலே வரகூடாது என்பது போல் இந்த தேர்தலில் மக்கள் அவதி பட்டுவிட்டார்கள்...ஆனால் வெகு விரைவில் பக்கத்துலையே மற்றொரு இடைதேர்தல் வரபோவதை தவிர்க்க முடியுமா என்ன?! விரைவில் அந்த இடைதேர்தலில் சந்திப்போம்...!

வழக்கம் போல இந்த தேர்தலுக்கும் ஓட்டுரிமையை (மட்டும்) கையில் வைத்துகொண்டு முழித்து கொண்டிருக்கும் வெகு சாதாரணமான ஒரு வாக்காளன்...


* * * * *
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்