Home » » வைகோ வேட்பாளருக்கு கருப்பசாமி தந்தை ஆசி!

வைகோ வேட்பாளருக்கு கருப்பசாமி தந்தை ஆசி!

Written By DevendraKural on Wednesday, 7 March 2012 | 04:07

நான்குமுனைப் போட்டி நடக்கும் சங்கரன்கோவில் தனித்தொகுதியில் வி.ஐ.பி-​களின் வருகை, சினிமா கலைஞர்களின் அணி​வகுப்பு என்று, தேர்தல்பிரசாரம் களைகட்டத் தொடங்கிவிட்டது. இந்தத் தொகுதியில், தேர்தல் அறிவிப்புக்கு முன்பே களம் குதித்துவிட்ட ம.தி. மு.க-வின் நிலை குறித்து இந்த இதழில் பார்க்கலாம்.   

2011 பொதுத்தேர்தலில் போட்டியிடாத ம.தி.மு.க., இந்த இடைத்தேர்தலையும் புறக்கணிக்கும் என்றே பலரும் நினைத்தார்கள். ஆனால், 'சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ம.தி.மு.க. நிச்சயம் போட்டியிடும்' என்று அறிவித்து, தேர்தல் பணியைத் தொடங்கினார், வைகோ. இதுவரை, நாஞ்சில் சம்பத் ஐந்து பொதுக் கூட்டங்களில் பேசிவிட்டார். வைகோ மூன்று பொதுக்கூட்டங்களில் பேசி இருக்கிறார்.

தொகுதி மக்களுக்கு நன்றாக அறிமுகமான சதன் திருமலைக்குமார், ம.தி.மு.க-வின் வேட்பாளர். 2001 பொதுத் தேர்தலில் இதே தொகுதியில் ம.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டபோது, சதன் திருமலைக்குமார் வேட்பாளராக களம் இறங்கி 20,610 வாக்குகளைப் பெற்றார். அதற்குமுன், 1996-ல் இந்தத் தொகுதியின் ம.தி.மு.க வேட்பாளராக தங்கவேலு சுமார் 31,000 வாக்குகள் பெற்றார். ம.தி.மு.க-வுக்கு இந்தத் தொகுதியில் ஓரளவு தனிச்செல்வாக்கு இருப்ப தற்கு, வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டி இந்தத் தொகுதிக்குள் இருப்பதும் ஒரு காரணம்.

வேட்பாளர் சதன் திருமலைக்குமாருடன் வைகோவும் நேரடியாகக் களம் இறங்கி, வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்கிறார். வாக்கு கேட்கச் செல்லும் இடத்தில், மக்கள் தங்களின் சொந்தப் பிரச்னைகளைக்கூட வைகோவிடம் பேசி ஆலோசனை கேட்கும் அளவுக்கு நெருக்கம் இருப்பது ம.தி.மு.க.வுக்குப் பெரும் பலம்.

கிராமங்களில் வைகோவுக்கு வரவேற்பு அமோக​மாக இருக்கிறது. குறிப்பாக, மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் அவரைக் குடும்ப உறுப்பினர்கள் போல அனைவரும் வரவேற்கிறார்கள். அவர்களிடம், ''நான் உங்கள் தோளில் கைபோட்டுப் பேசும் அளவுக்கு நெருக்கமா இருக்கேன். அதனால் உங்களிடம் உதவி கேட்டு வந்திருக்கேன். எல்லாக் கட்சிகளுக்கும் எம்.எல்.ஏ. இருக்காங்க. ஆனா, நாங்க கடந்ததேர்தலைப் புறக்கணித்ததால், எங்களுக்கு உறுப்பினர்கள் இல்லை. இருப்பவர்களுக்கு உதவுவது பெரிய காரியம் இல்லை. இல்லாத வங்களுக்கு செய்யும் உதவிதான் பெரிது. அதனால் இந்தத் தொகுதியில் எங்க வேட்பாளரை ஜெயிக்க வைங்க. விருப்பு வெறுப்பு இல்லாமல் செயல்படக்கூடிய நல்லவரான சதன் திருமலைக்குமார் ஜெயித்தால், இந்தத் தொகுதி முன்னேறும்'' என்று நெஞ்சுருக வைகோ பேசுவது நன்றாக எடுபடுகிறது.

சங்கரன்கோவில் தொகுதியில் பரமக்​குடியைச் சேர்ந்த ஜெயபிரசாத் என்கிற இளைஞர் குடும்பத்தோடு வந்து தேர்தல் பிரசாரம் செய்கிறார். ''பரமக்குடி கலவரத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடந்தபோது, அந்த வழியாகச் சென்ற என் மீது குண்டு பாய்ந்தது. பொறியியல் பட்டதாரியான நான் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் இருந்தேன். காயம் அடைந்தவர்களைப் பார்க்க வந்த வைகோவிடம், எனது தாய் கதறி அழுது எனது நிலைமையைச் சொல்லி இருக்கிறார். உடனே அவர், தனது சொந்தச் செலவில் என்னை மதுரை தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசென்று, சிறப்பான சிகிச்சை கொடுத்து பிழைக்க வைத்தார். எந்தப் பிரதிபலனும் எதிர்பாராமல் உதவி செய்தவருக்கு நன்றி செலுத்தவே இந்தத் தேர்தலில் பிரசாரம் செய்கிறேன்'' என்று உருகினார்.

இதேபோன்று, தமிழ் எழுத்தாளர் அமைப்பின் சார்பில் தொ.பரமசிவன், தி.க..சிவசங்கரன் போன்​றோரும் இடைத்தேர்தலில் ம.தி.மு.க-வை ஆதரித்து களம் இறங்க முடிவு செய்திருக்கிறார்கள். அத்துடன், மூன்று தமிழர்களின் தூக்குத் தண்டனைக்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தும் வைகோவுக்கு உதவும் வகையில் 'இணையதள நண்பர்கள் அமைப்பு' சார்பில் தொகுதி முழுவதும் இளைஞர்கள் களம் இறங்கி பிரசாரம் செய்கிறார்கள். தமிழருவி மணியன் இங்கு வந்து பிரசாரம் செய்ய இருக்கிறார்.

மறைந்த அமைச்சர் கருப்பசாமியின் சொந்த ஊரான புளியம்பட்டி கிராமத்தில் பிரசாரம் செய்ய வைகோ சென்றபோது, கருப்பசாமியின் தந்தை எதிரே வந்தார். அவரிடம் வைகோ, 'கூட்டணியில் இருந் தாலும் இல்லாவிட்டாலும் உங்க பையன் கருப்பசாமி தேர்தல் பிரசாரத்துக்கு கலிங்கப்பட்டி வரும்போது எங்க அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதை வழக்கமா வெச்சிருந்தார். இப்போது எங்க வேட்பாளர் சதன் திருமலைக்குமார் உங்களிடம் ஆசீர்வாதம் வாங்குவார்' என்றதும் அவரை வாழ்த்தினார், கருப்ப சாமியின் தந்தை சொக்கன்.

தொகுதியில் கிடைக்கும் வரவேற்பால் ஆளும் அ.தி.மு.க-வுக்கு இணையான உற்சாகத்துடன் இருக்கிறார்கள் ம.தி.மு.க-வினர். ஆளும்கட்சி மற்றும் தி.மு.க-வுடன் ஒப்பிடுகையில் ம.தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய ஆட்கள் பற்றாக்குறை இருப்பதும், வைட்டமின் 'ப' இல்லாததும் அப்பட்டமாகத் தெரிகிறது. ஆனால், வெற்றி பெற்றே தீரவேண்டும் என்று துடிப்பில் இளைஞர்கள் கூட்டம் பரபரவென சுற்றுவதைப் பார்த்தால், ஆச்சர்யம் நிகழாதா என்ற ஏக்கம் ம.தி.மு.க. தொண்டர்களிடமும் ஏற்பட்டுள்ளது!

ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்