Home » » ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு?: மலைப் பகுதியில் தஞ்சம் அடைந்த 69 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே போலீசார் மீது வெடிகுண்டு வீச்சு?: மலைப் பகுதியில் தஞ்சம் அடைந்த 69 பேர் கைது

Written By DevendraKural on Thursday, 28 June 2012 | 01:16

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வ.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள ஒரே பிரிவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து அடிக்கடி மோதிக்கொண்டனர். இதனால் இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக பகை இருந்து வருகிறது. 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோஷ்டியை சேர்ந்த ஒருவரின் வீட்டின் மீது கல் வீசப்பட்டது. இதனால் மீண்டும் இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது. 

இச்சம்பவம் தொடர்பாக நாகராஜ், பொன்ராஜ், கூடலிங்கம் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் ஒரு கோஷ்டியினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் துன்புறுத்துவதாகவும் எங்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என கூறியும் வழக்கு பதிவு செய்யப்பட்ட கோஷ்டியை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வண்ணான்பாறை என்ற இடத்தில் சென்று தங்கினர்.

மேலும் அவர்கள் முன்னதாக தாசில்தார் திரவுபதியிடமும் ஊராட்சி தலைவி பவுன்தாய் ஆகியோரிடமும் போலீசார் தொந்தரவு செய்வதால் நாங்கள் வீட்டை வீட்டு வெளியேறுகிறோம் என கூறி ரேசன் கார்டுகளை ஒப்படைத்தனர். 

கிராம மக்கள் மலைக்கு சென்றதால் அப்பகுதி முழுவதும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் வ.புதுப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே ஒரு கும்பல் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு ஓடி விட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 

அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மல்ஹோடாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்த மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு சென்று அவர்களிடம் சமரசம் செய்தனர். 

அப்போது அவர்களிடம் போலீசார், நீங்கள் ஊருக்குள் சென்றால் அமைதி நிலைமை திரும்பும் என்று கூறினர். எனினும் அவர்கள் தொடர்ந்து நாங்கள் ஊருக்குள் வரமாட்டோம் என்று கூறினர். 

இதையடுத்து போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 52 பெண்கள் உள்பட 69 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் வ.புதுப்பட்டி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை தாக்கும் நோக்கத்தில் மலை பகுதியில் தங்கியிருந்தவர்கள் நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

வ.புதுப்ப்டடி கிராமத்தில் உள்ள வீடுகளில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதா எனவும் போலீசார் வீடு வீடாக சோதனை நடத்தி வருகின்றனர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்