Home » » பரமக்குடி துப்பாக்கிச் சூடு-தமிழக அரசு, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்

பரமக்குடி துப்பாக்கிச் சூடு-தமிழக அரசு, சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ்

Written By DevendraKural on Monday, 16 July 2012 | 22:40

பரமக்குடியில் கடந்த ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஏழு பேர் பலியானது குறித்து சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.மறைந்த தேவேந்திர தலைவர் இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த, கடந்த ஆண்டு, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் மற்றும் பலரும் சென்றனர். அப்போது, வன்முறை நிகழ்ந்தது. போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் இறந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் அப்டாப் ஆலம் மற்றும் ரஞ்சனா தேசாய் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. 
 
அப்போது, பிரிசில்லா பாண்டியன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜாராமன், "பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது, தேசிய மனித உரிமைகள் கமிஷனின் வழிகாட்டிக் குறிப்புகளை, தமிழக போலீசார் பின்பற்றவில்லை. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு மனுதாரர் வேண்டுகோள் விடுத்தும், தவறு செய்த தமிழக போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், எந்தப் பதிலும் இல்லை. மத்திய அரசு மற்றும் தமிழக அரசிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லாததால், அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்' என்றார்.இதையடுத்து, மனு தொடர்பாக, மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் மூன்று வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்