Home » » தேவேந்திர குல சக்கரவர்த்தி-தலைவர் ஜான்பாண்டியன்

தேவேந்திர குல சக்கரவர்த்தி-தலைவர் ஜான்பாண்டியன்

Written By DevendraKural on Wednesday, 4 July 2012 | 09:10 
தேவேந்திர குல சக்கரவர்த்தி - தலைவர் ஜான்பாண்டிய

சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற தேவேந்திர குல வெள்ளாளர் தலைவர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஆளுமை கொண்ட தலைவர் ஜான்பாண்டியன். தனது 17 -ஆவது வயதில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் இறங்கியவர். அவரிடம் வெளிப்படுகின்ற  தேவேந்திர  போர்க்குணமானது இமானுவேல் சேகரனைப் போல, ஒரு மேலக்கால் வீரபத்திரனைப் போல, உத்தப்புரம் பொன்னையாவைப் போல அவரது தந்தையின் இர
மிடுக்கிலிருந்து உருவானது.
இளங்கலைப்பட்டம் பெற்றவராக இருந்தாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அன்றாடப் பிரச்சனைகளில் அபாரமான பட்டறிவு கொண்டவர். பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது சிலேட், புத்தகத்துக்காக எஸ்.சி. மாணவர்கள் எல்லாம் பெஞ்ச் மேல் ஏறி நில்லுங்க என்று அவமானப்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டு தீண்டாமைக் கொடுமைகளை சிறு பருவத்திலேயே அனுபவித்தவர். கிறித்துவ திருச்சபையின் ஒழுக்கங்களுக்கு உட்பட்டும் வளர்க்கப்பட்டவர். மது அருந்துவதோ, புகை பிடிப்பவரோ கூட அல்ல. அத்தகைய பலவீனம் தான் 
தேவேந்திர களை எளிதாக வீழ்த்தக் கூடியது என சக தோழர்களையும் நல்வழிக்கு அறிவுறுத்தக் கூடியவர். தனது சகோதரனையும் அவ்வாறு இழந்த அனுபவம் உடைய‌வர்.
1974 -ல் தேவேந்திர குல வேளாளர் முன்னேற்றச் சங்கத்தின் இளைஞரணித் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து 1990 வரையிலும் அச்சஙக்த்தின் ஒருங்கிணைக்கும் பணியை துடிப்புடன் செய்து வந்தார். 1979 -ல் நடந்த யூனியன் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டு சமுக அரசியலில் களமிறங்கினார். குறைந்தபட்சம் தென்மாவட்ட தேவேந்திரர்களையாவது ஒருங்கிணைப்போம் என முயற்சித்து 1981 -ல் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் முதல் மாநாட்டைக் கூட்டினார். இந்த மாநாட்டுக்குப்பின் அவருடைய அசுரத்தனமான கள ஈடுபாட்டைக் கண்டு வியந்த தேவேந்திரர்கள் தங்களின் பண்பாட்டு நடவடிக்கைகள் அனைத்தையும் ஜான்பாண்டியன் தலைமையில் நிகழ்த்த வீறுகொண்டனர். அவரும் மக்கள் பிரச்சனைக்கு முன்னுரிமை அளித்து தனது வாழ்க்கையை அவர்களுக்காக அர்ப்பணித்து, கிராமங்களை நோக்கி தனது சுற்றுப்பயணத்தைத் தீவிரமாக்கினார். இவரது அசாத்திய நடவடிக்கைகளைக் கவனித்து வந்த அன்றைய முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரன், ஜான்பாண்டியனின் பாதுகாப்புக்காக துப்பாக்கி லைசென்ஸ் வழங்கி, அவரோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும். (1995 வரை அந்த துப்பாக்கியை ஜான்பாண்டியன் பயன்படுத்தாத போதிலும் அ.தி.மு.க. அரசு 1995 -ல் ஆட்சிக்கு வந்தவுடன் எந்தவித காரணமும் சொல்லாமல் துப்பாக்கி லைசென்சை ரத்து செய்த‌து ஒரு வேடிக்கையான சம்பவம்). அப்படியான ஒரு களப்பணியின் போது 1989 -ல் போடியில் தேவேந்திரர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட சாதிக் கலவரத்தை அடக்க அவர் தலைமையேற்றார். மத நல்லிணக்கத்தோடு திருமணம் என்றால் அனைவரும் அனைத்துச் சாதியினரையும் மணந்து கொண்டால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக அதிக அளவில் வன்கொடுமைகள் எதுவும் நிகழாது என ஒரு மேடையில் பேசினார் என்பதற்காக அன்றைய அ.தி.மு.க. அரசு ஒரு பெரிய கலவரத்தை ஏற்ப‌டுத்தி 18 பேரை உயிர்ப் பலி வாங்கியது. வால்ட்டர் தேவாரம் வாலாட்டிக் கொண்டிருந்த அந்த நேரத்தில் முதன்முதலாக ஒடுக்கப்பட்ட தேவேந்திரர்க‌ளிடம் இருந்து தங்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என முக்குலத்தோர் அனைவரும் தமிழக அரசிடம் முறையிட வைத்த போராட்டக் காலம் அது. ஜான்பாண்டியனுக்கு எங்கிருந்து அப்ப‌டியொரு போர்க்குண வீரியம் பிறந்த‌து என்று எவராலும் அனுமானிக்க முடியாமல் திணறினர்.
இன்றைக்கு நிகழ்ந்த‌து போலவே 1992 -ல் ஜான்பாண்டியன் பரமக்குடியில் நுழைந்த போது இதே அய்ந்து முக்குரோட்டில் துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேரைச் சுட்டுக் கொன்றது காவல்துறை. அந்த சம்பவத்துடன் இதனை ஒப்பிட்டுப் பார்த்தால் இருபது ஆண்டுகளுக்கு முன்பே ஜான்பாண்டியன் மீதும், தேவேந்திர‌ர்கள் மீதும் போலீசுக்கு ஏற்பட்ட ஆதிக்கப் புத்தியைக் கண்டுணர முடியும். இப்படியான இயக்க எழுச்சியில் பல இடங்களில் அவர் பெயரில் மன்றங்களும், பேரவைகளும், சங்கங்களும் கொடி தோரணையுடன் கால்கோல் இடப்பட்டன. 1996 -ல் பழனி முருகன் கோயிலில் 1500 ஆண்டுகளாக தேவேந்திரர்களுக்குப் பாத்தியப்பட்ட மண்டகப்படி உரிமையைக் கேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு, வெற்றியும் கண்டார். போடி கலவரத்துக்குப் பின் பல தலித் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் ஜான்பாண்டியனை சந்தித்து அவருடன் அரசியல் பண்ண ஆர்வம் கொண்டனர். எல். இளையபெருமாள், வை. பாலசுந்தரம், சக்திதாசன், தலித் ஞானசேகரன் போன்றோர் 1988 -ல் கன்ஷிராம் முன்னிலையில் உருவாக்கிய ஷெட்யூல்டு இன விடுதலை இயக்கம் (Scheduled Cast Liberation Movement – SCALM) ஜான்பாண்டியனை சந்தித்து தனது தோழமையை வளர்த்துக் கொணட‌து. வன்னியர் சங்கத்தின் சார்பில் டாக்டர். இராமதாசும், ஜான்பாண்டியனைக் கண்டு தேவேந்திரர்களுடனும் – வன்னியர்களுடனும் இணைந்து செயல்படுவோம் என பாட்டாளி மக்கள் கட்சியை தென்மாவட்டங்களில் விரிவுபடுத்தினார். இதே காலக்கட்டத்தில் மதுரையில் முகாமிட்டிருந்த விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனும், ஜான்பாண்டியனும் ஒன்றிணைந்து விட்டார்கள் என்கிற செய்தியும் ஆங்காங்கே பரவி காவல்துறை வட்டாரத்தில் சற்று புளியைக் கரைத்தது. இத்தகைய அனுபவங்களைக் கடந்து ஒரு கட்டத்துக்குப் பிறகு தேவேந்திரர்களை ஓர் அரசியல் குடையின் கீழ் கொணடு வரத் தீர்மானித்து 2000 -ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் என்கிற அரசியல் கட்சியை உருவாக்கினார். அதன் பிறகு அக்கட்சி இன்றைய அ.தி.மு.க., தி.மு.க. என்கிற நீர்த்துப் போன திராவிடப் பார்ப்பனியத்துக்கு எதிராக எவ்வாறு எதிர்நீச்சல் போட்டு வருகிறது என்பதை நன்கறிவோம்.
 johnpandian
ஜான்பாண்டியனையும், அவர் சார்ந்த தேவேந்திர குலத்து எழுச்சியையும் எப்படியாவது ஒடுக்க முற்பட்ட போலீசு அன்றையிலிருந்து இன்று வரையிலும் அவர் மீது பல பொய் வழக்குப் போடும் படலத்தை நிகழ்த்தி வருகிறது. திண்டுக்கல்லில் நடந்த ஒரு சம்பவத்தில் 7 பேர் பலியானதைக் கேள்விப்பட்டு துக்கம் விசாரிக்கச் சென்றார். அங்கு ஒரு வீட்டில் காவல்துறைக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினார் என்று அவர் மீது பொய்வழக்குப் போட்டனர். அண்மையில் நிரபராதி என விடுவிக்கப்பட்ட, கோயம்புத்தூர் படுகொலைப் பிரச்சனையிலும் பொய்வழக்குப் போட்டனர். கோயம்புத்தூரில் நடந்த ஒரு படுகொலைக்கு திருநெல்வேலியில் இருந்து ஆள் அனுப்பினார் என்று பொய்க்குற்றம் சுமத்தி, திணிக்கப்பட்ட புட்-அப் வழக்கு போட்டு ஒரு தேவர் நீதிபதியை நியமித்து, சாட்சிகளே விசாரிக்கப்படாமல் துரித வேகத்தில் (Fastrack), 125 -ன் பிரிவின் கீழ், 2003 –ஆம் ஆண்டு இதே அ.தி.மு.க. அரசுதான் ஆயுள் தண்டனை வழங்கியது. மதுரையைச் சேர்ந்த சடையாண்டி என்ற நீதிபதிக்கு நன்றாகத் தெரியும், ஜான்பாண்டியன் குற்றமற்ற நிரபராதி என்று. ஆனால் அந்த நீதிபதியின் போதாத காலம் பலவீனங்களாலும், சுய சாதி விசுவாசத்தாலும் இறுதி வரையிலும் நீதியான தீர்ப்பு வழங்காமல் மவுனம் சாதித்தார். இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்ற போது அங்கிருந்த நீதிபதிகளான பாலசுப்ரமணியம், தணிகாசலம் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள அனைது அரசு வழக்குரைஞர்களையும் திரட்டி, போலீஸ் பட்டாலியனில் இருந்து 250 -க்கும் மேற்பட்ட காவலர்களைக் கொண்டு வந்து நிறுத்தி, சாட்சி சொன்ன டி.எஸ்.பி -யை ஜான்பாண்டியன் மிரட்டினார் என்றும், சாட்சிகளைக் கலைத்தார் என்றும் இரண்டு பொய் வழக்குகள் போட்டனர். உச்ச நீதிமன்றத்தில் இருந்து ராவ் என்ற அரசு வழக்குரைஞரை அழைத்து வந்தும் வாதிட வைத்தனர். அவர் ஜான்பாண்டியனின் எல்லா வழக்கு ஆவணங்களையும் ஆராய்ந்து பார்த்து இவர் மீது தண்டனை வழங்கும் அளவுக்கு வழக்குகள் இல்லை எனக் கூறி சென்றுவிட்டார். இதைப் பொறுத்துக் கொள்ளாத அரசு இனி நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என 104 நாட்கள் கழித்து தீர்ப்பு வழங்கியது. செய்யாத குற்றத்திற்காக 8 ஆண்டுகள் வரை சிறையில் தள்ளப்பட்டார். சிறையில் எந்த பிரச்சனையிலும் ஈடுபடாத போதே அவரை 4 முறை வெவ்வேறு சிறைகளுக்கு மாற்றி உளவியல் ரீதியாக சித்ரவதை செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் 4 வருடங்கள் வழக்கு நடந்த‌து. ஜான்பாண்டியன் தனது 17 -ஆவது வயதிலிருந்து இன்று வரையிலும் இவ்வாறு இட்டுக்கட்டி ஜோடிக்கப்பட்டதில் 65 -க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் அவர் மீது போடப்பட்டுள்ளன. 11 முறை சிறை சென்றுள்ளார். இவை அனைத்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கானதே தவிர அவருடைய சுயநலன் சார்ந்தவை எதுவும் அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இன்றைக்கு அவர் மீது ஒரு வழக்கும் இல்லை என்ற போதிலும் இனி போலீசின் அடுத்த கட்ட சாதியப்பழி நடவடிக்கையில் எதுவும் உத்தரவாத‌மில்லை.
உண்மையில் அங்கு நடந்த‌து என்னவென்றால் 2011 செப்டம்பர் 9 -ஆம் தேதி இரவு 12.30 மணியளவில் மண்டல மாணிக்கத்தில், பச்சேரியைச் சேர்ந்த பழனிக்குமார் என்கிற பதினோராம் வகுப்பு படிக்கும் தேவேந்திர மாணவனை முத்துராமலிங்கபுரத்தைச் சேர்ந்த தேவர்கள் படுகொலை செய்து விட்டனர் என்பதை அறிந்து அடுத்த நாள் 10 -ஆம் தேதி பழனிக்குமாரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல ஜான்பாண்டியன் ஆயத்தமானார். இதைக் கேள்விப்பட்ட இராமநாதபுரம் எஸ்.பி. ஜான்பாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பழனிக்குமார் இறுதிச் சடங்கிற்கு வரவேண்டாம், அப்படி வந்தால் நிறைய பிரச்சனைகள் உருவாகும். எனவே, நீங்கள் வர வேண்டாம் என வலிந்து கேட்டுக் கொண்டார். அதன் பிறகு திருநெல்வேலி கமிஷனர் வரதராஜனும், ஜான்பாண்டியனைத் தொடர்பு கொண்டு பழனிக்குமார் அடக்கத்துக்கு செல்ல வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டார். செப்டம்பர் 11 -ஆம் தேதி தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜை நிகழ்ச்சி இருப்பதால், எந்த பிரச்சனையும் தன்னால் உருவாகி விடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு பழனிக்குமாரின் இறுதிச் சடங்குக்கு செல்வதை ஜான்பாண்டியன் தவிர்த்து விட்டார். தனது கட்சி ஆதரவாளர்களையும், பொறுப்பாளர்களை மட்டும் அனுப்பி இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் அடக்கத்தை அமைதியாக நிகழ்த்தும்படி கேட்டுக் கொண்டார். அதனை ஏற்று 10 -ஆம் தேதி இரவு பழனிக்குமாரை மன இறுக்கத்துடன் கூடிய அமைதியோடு அடக்கம் செய்தனர்.

 
அடுத்த நாள் 11.09.2011 அன்று தியாகி இமானுவேல் சேகரனின் குருபூஜையில் பங்கேற்று, மாவீரனுக்கு அஞ்சலி செலுத்த ஜான்பாண்டியனுக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. மாலை 3 மணியில் இருந்து 5 மணிவரையிலும் அஞ்சலி செலுத்த நிகழ்ச்சி நிரலிலும், பந்தோபஸ்திலும் முன்கூட்டியே திட்டமிட்டு அவருக்கு நேரம் வழங்கியிருந்தனர். அதனை ஏற்று தனது அமைப்புத் தோழர்களுடன் புறப்பட ஆயத்தமானார். இதற்கிடையில் அன்று காலை ஒன்பது மணிக்கு அமைப்புத் தோழர் சந்திரகாந்த் மகளின் பூப்புனித நீராட்டுவிழாவில் பங்கேற்று விட்டு, தூத்துக்குடியில் ஜான்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஒரு திருமணத்தையும் முடித்துக் கொண்டு வரும் போது எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் காவல்துறை அவரை வல்லநாட்டில் வைத்துக் கைது செய்தது. ஏன், என்னை கைது செய்கிறீர்கள்? என கேட்ட போது இமநாதபுரத்துக்குள் செல்ல உங்களுக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றனர். சரி இராமநாதபுரத்தில்தான் 144 தடையுத்தரவு, அதற்கு ஏன் திருநெல்வேலியில் கைது செய்கிறீர்கள்? என்னை வீட்டிற்கு செல்லவாவது அனுமதியுங்கள் என கேட்டபோது காவல் அதிகாரிகள் மறுத்தனர். அவரைக் கைது செய்து துப்பாக்கிச் சுடும் பயிற்சிக் களத்தில் சிறை வைத்தது அவருக்கு பலத்த சந்தேகத்தைக் கிளப்பியது. ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் தியாகி இமானுவேல் பேரவை பொதுச்செயலாளரும், குருபூஜை கமிட்டி விழா பொறுப்பாளர்களில் ஒருவருமான பூ. சந்திரபோசு காலை 11 மணியளவில் உடனடியாக பரமக்குடி காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கிருந்த இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தலை சந்தித்து குருபூஜை நாளில் ஜான்பாண்டியன் கைது செய்யப்பட்டது இங்கத்திய சூழலில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உருவாக்கும் எனவே அவரை குருபூஜையில் பங்கேற்க ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டுக்கொண்டார். அதற்கு இராமநாதபுரம் மாவட்ட டி.அய்.ஜி. சந்தீப்மித்தல் ஜான்பாண்டியனை நாங்கள் கைது செய்யவில்லை, திருநெல்வேலி போலீசு தான் கைது செய்தது என்றார். சரி நீங்களாவது தன்கண்டல அய்.ஜி -யிடம் பேசி அழைத்து வர ஏற்பாடு செய்யுங்கள் என கேட்டும் அவர் செவி சாய்க்கவில்லை. சட்டம்-ஒழுங்கு பிரச்சனை வந்தால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என பதில் அளித்தார். அப்போது பாம்பூரில் இருந்து தோழர்க‌ள் வல்லநாட்டில் சிறை வைக்கப்பட்ட ஜான்பாண்டியனை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தனர். அதனை அவர் முற்றிலுமாகத் தவிர்த்து விட்டார். ஏனென்றால் ஜான்பாண்டியன் போன் மூலமாக கலவரத்தைத் துண்டினார் என்று பொய் வழக்கு போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பதால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். அதன் பிறகு பரமக்குடியில் என்ன நடந்த‌து என்பதை அவரால் மிக, மிக தாமதமாகத்தான் அறிந்து கொள்ள முடிந்த‌து. அப்படி இருக்கும்போது ஜான்பாண்டியனை துப்பாக்கிச் சுடும் பயிற்சிக்களத்தில் தங்கள் கட்டுப்பாட்டில் சிறை வைத்துக் கொண்டு இராமநாதபுரத்தில் 144 தடை உத்தரவையும் பிறப்பித்து விட்டு, பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு ஜான்பாண்டியன்தான் காரணம் என போலீசாரால், மாவட்ட நிர்வாக அதிகாரிகளால் எப்படி சொல்ல முடியும்? இதை எப்படி ஊடகங்கள் நம்புகின்றன?
 
பரமக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து மக்கள் கண்காணிப்பகமும், பரமக்குடி துப்பாக்கிச் சூடு எதிர்ப்புக் குழுவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பொது விசாரணை 2011 அக்டோபர் 7, 8 ஆகிய தேதிகளில் பரமக்குடியிலும், மதுரையிலும் நடந்த‌து. 8 -ஆம் தேதி மதுரை மக்கள் கண்காணிப்பகத்தில் நிகழ்ந்த பொது விசாரணையில் தலைவர் ஜான்பாண்டியன் துப்பாக்கிச் சூடுக்கான காரணத்தையும், தமிழகக் காவல்துறையின் பொய் முகத்தையும் தோலுரித்துக் காட்டிய வாக்குமுலம் என்னவெனில்,
இந்த துப்பாக்கிச் சூடு போலீசாரால் வேண்டுமென்றே ஏவிவிடப்பட்ட ஒரு சதித்திட்டம். கடந்த 38 ஆண்டுகளாக பல லட்ச‌ம் மக்கள் கூடுகின்ற இந்த 54 -ஆவது குருபூஜையை அரசு விழாவாக அறிவிக்க‌க் கேட்டு வருகிறோம். 2010 குருபூஜை விழாவில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் இவ்விழாவை அரசு விழாவாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தார். மத்திய அரசும் எங்களது கோரிக்கையை ஏற்று தியாகி இமானுவேல் சேகரனை மரியாதை செய்ய கடந்த 09.10.2010 அன்று அவருக்கு ஒரு தபால்தலை வெளியிட்டு கவுரவித்த‌து. ஒவ்வொரு ஆண்டும் நிகழ்கிற இவ்விழாவில் தேவேந்திர சமுகத்தைச் சாராத மக்களும் பெருந்திரளாக பங்கேற்கின்றனர். ஒரு கலாச்சார விழாவாக மாறி வருவகைப் பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்கச் சமுகங்களும், போலீசும் இவ்விழா இனி அரசு விழாவாக மாறிவிடக் கூடாது என்கிற கெட்ட எண்ணத்தில் சதிச்செயல் செய்து துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திதான் ஆக வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அவர்கள் முன்கூட்டியே அறிவித்திருக்கலாம். அல்லது லத்திசார்ஜ் செய்திருக்கலாம். இதில் எதையுமே போலீசு செய்யவில்லை. ஆயிரக்கணக்காக ம‌க்கள் கூடி பொதுச் சொத்தை சேதம் செய்ததாகக் கூறுகிறார்கள். எது பொதுச் சொத்து என்பது தெரியவில்லை. அனைவரும் ரோட்டில் நிற்கிறார்கள். ரோடுதான் அங்கு பொதுச் சொத்தாக இருந்த‌து. பொதுச்சொத்துக்கு சேதம் விளைவித்தார்கள் என அவர்களாக பொய்யான தகவலைக் கூறி கலவரத்தைத் தூண்ட துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கிறார்கள்.
 
இந்த பொது விசாரணையில் தென் மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாசைப் பற்றி நான் இங்கு நீதிபதிகளிடம் கூற வேண்டும். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராக இருந்த போது தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ -வான இராஜமன்னார் என்பவரின் வீட்டைச் சூறையாடி கொள்ளையடித்தவர். அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவதாக பெரியகுளத்தில் அம்பேத்க‌ர் சிலையை நிறுவும்போது தலித்துகளை அடித்துத் துன்புறுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்தினார். முன்றவதாக இவரும் இவரின் துணைவியாரும் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் இவரின் மனைவியைத் திரும்பிப் பார்த்தார் என்பதாகக் கூறி அந்த கான்ஸ்டபிளை நடுரோட்டில் வைத்து அடித்து காயப்படுத்தினார். இதன் காரணமாக அங்குள்ள காவலர்கள் போராட்டம் செய்து பிரச்சனையில் ஈடுபடவே அவரை அங்கிருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்தனர். சென்னையிலும் அவர் ஒழுங்காக இல்லை. ஒரு பெண் காவலரிடம் தவறாக நடக்க முயற்சித்தார் என்பதால் அன்றைய தி.மு.க. அரசால் 4 வருடம் பணிநீக்கம் செய்யப்பட்ட அயோக்கிய அதிகாரிதான் இந்த தென்மண்டல அய்.ஜி. ராஜேஷ்தாஸ். இந்த ஆட்சி வந்தவுடன் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் கலவரத்துக்காக தென்மண்டல அய்.ஜி. –யாகப் பணிமாற்றம் செய்துள்ளார்கள். இவரின் தலைமையில்தான் உயர்மட்ட அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து, இதை சீர்குலைக்க வேண்டும் என்றும், இதனை அரசு விழாவாக அறிவித்து விடக்கூடாது என்றும் துப்பாக்கிச் சூடு பிரயோகம் செய்திருக்கின்றனர். இவர்களுக்கு டைனமைட் பிஸ்டலில் சுட அதிகாரம் அளித்த்து யார்? நான் மருத்துவமனையில் பார்த்த போது யாருக்கும் காலுக்குக் கீழே குண்டு பாயவில்லை. அனைவருக்கும் தலை, மார்பு, நெஞ்சு பகுதியில்தான் குண்டு பாய்ந்திருந்தது.
 
இதில் பரிதாபமான நிலை அடித்துக் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் 3 பேர். கொலை செய்யப்பட்டவர் 1. ஆக மொத்தம் 7 பேர்களின் உயிர் மாண்டுபோன நிலையிலும் கூட இராமநாதபுரத்தில் 144 தடையுத்தரவு போட்டு, நான் அங்கு போக அனுமதி வழங்கப்படவில்லை. உடனே உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டு அனுமதி கேட்ட போது நீங்கள் அங்கு போக உங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என பொய் சொல்கிறார்கள். பிறகு நானும், அமைப்பைச் சார்ந்த நெல்லைவர்மனும், 24 -ஆம் தேதி இராமநாதபுரம் சென்று மக்களைப் பார்க்க அனுமதி கேட்டும் ஏமாற்றுவதில் குறியாக இருந்தனர். துப்பாக்கிச் சூட்டை நடத்தி 6 பேரைக் கொன்ற காவல் அதிகாரிகள் மீது 302 பிரிவின் கீழ் ஏன் கிரிமினல் வழக்கு பதியக்கூடாது? அவ்வாறு பதிந்தால் அது ஒரு முன்மாதிரியாக இருக்குமல்லவா? டி.ஆர்.ஓ -தான் துப்பாக்கியால் சுட உத்தரவு கொடுத்தார் என்று பத்திரிக்கையில் செய்தி வந்திருக்கிறது. எவ்வளவு கேவலமான பதில்? டி.ஆர்.ஓ. என்ன அய்.ஏ.எஸ். அதிகாரியா? அய்.பி.எஸ். அதிகாரியா- சுட உத்தரவு கொடுப்பதற்கு. பரமக்குடியில் அந்த இடத்தில் 500-1000 பேர் இருந்திருக்கலாம். காவல்துறையோ 2000 பேர். என்ன செய்ய முடியும்? எப்படி இதை மக்கள் செய்தார்கள் என்று சொல்கிறார்கள்? முழுக்க, முழுக்க மேலிட காவல் அதிகாரிகள் திட்டமிட்ட செயல் இது.
தமிழ்நாட்டுப் போலீசைப் பற்றியும் இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும். திருநெல்வேலி மற்றும் மணிமுத்தாறு ஏ.ஆர். ரிசர்வர்டு போலீஸ் படையிலும், ஸ்பெஷல் பார்ட்டி பிரிவிலும் தேவர் போலீஸ், தேவர் அல்லாத போலீஸ், நாடார் போலீஸ் என மூன்று பிரிவுகள் இப்பவும் உள்ளன. இந்த மூன்று பிரிவுகளை அரசு ஆண்டாண்டு காலமாக நியமித்து செயல்படுத்தி வருகிறது. எஸ்.சி. சமுகத்தினர் ஒன்றாக்க கூடும் இடங்களில் அவர்கள் பகுதியில் கோயில் திருவிழா, திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவர் போலீசை அனுப்புவார்கள். தேவர் மத்தியில் பிரச்சனை என்றல் எஸ்.சி. போலீசை அனுப்புவார்கள். இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாக திருநெல்வேலியில் இருக்கிறது. காவல் குடியிருப்புகளைக் கூட தேவர், தேவர் அல்லாதவர், நாடார் என பிரித்து வைத்திருக்கிறார்கள். சிறைச்சாலையிலும் 4 -ஆம் பிளாக் எல்லாம் எஸ்.சி. கைதிகள், 6 -ஆம் பிளாக் எல்லாம் தேவர் கைதிகள் என இருக்கும். அந்தந்த கைதிகளுக்கு அந்தந்த சமுகங்களைச் சேர்ந்த காவல்துறையினரை நியமிப்பார்கள். தேவர் கைதிகளை அடிக்க எஸ்.சி. கைதிகளையும், எஸ்.சி, கைதிகளை அடிக்க தேவர் கைதிகளையும் அனுப்புவார்கள். இந்த நோய் இப்போது திருச்சிக்கும் பரவி வருகிறது. இதே நிலைதான் இராமநாதபுரத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதனால்தான் காவல் அதிகாரிகாளல் துணிச்சலாக இப்படியொரு துப்பாக்கிச் சூடு நடத்த முடிகிறது. எனவே, இது குறித்து விசாரிக்க ஒருநபர் கமிஷனை நியமிக்காமல் முழுமையான சி.பி.சி.அய்.டி. விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
ஜான்பாண்டியனின் மேற்கண்ட வாக்குமூலம் தமிழக போலீசின் சாதியாதிக்க உண்மை நிலையை சுடச்சுட வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது. பிரிட்டிஷ் விட்டுச்சென்ற முடைநாற்றக் காவல்துறை சாதிமயமாகிப் போனது ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பில் ஏற்பட்ட ஒரு துயரம்தான். ஆகவே. தான் இநதிய மற்றும் தமிழக காவல்துறையைப் பற்றிய மதிப்பீட்டுச் சீராய்வு தேவை என தற்போது சர்வதேச அளவில் விவாதங்கள் எழுந்து வருகின்றன. குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் ஸ்காட்லாந்து போலீசுக்கு இணையானவர்கள் தமிழக போலீஸ் என சொல்லிக் கொண்டாலும், மனித உரிமைகளை மதிப்பதில் ஜனநாயக வழியில் ஒரு சமுகத்தை வழிநடத்துவதில் மிகவும் பிற்போக்கானவர்கள் என்ப‌து பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் நிருபணமாகி உள்ளது. காமன்வெல்த் நாடுகளின் மனித உரிமை முயற்சிக் குழுவானது (Commonwealth Human Rights Initiative – CHRI) மத்திய உள்துறை அமைச்சகத்துடன் இணைந்து உருவாக்கிய காவல்துறை நடவடிக்கைகள், திட்டங்கள், புதிய அணுகுமுறைகள், சட்ட அமலாக்கங்கள், நிதி ஒதுக்கீடுகள், மக்களுட‌ன் இணைந்த மாதிரி காவல் நிலையங்கள்-2006 (Model Police Act – 2006) போன்ற மறுசீரமைப்பு நடைமுறைகள் எதுவும் தமிழ்நாட்டின் காவல்துறைக்குள் பேச்சளவில் கூட இல்லை. 2008-ல் தமிழ்நாடு அரசு கொண்டு வந்த தமிழ்நாடு காவல் மசோதா அறிக்கையில் (Tamilnadu Police Bill,2008) இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் மனித உரிமை அணுகுமுறையை 2008 சூலை 22-ல் ஆய்வு செய்து வி.பி. சாரதி வெளியிட்ட காவல் சீர்திருத்தம், அதன் மனித உரிமை நடவடிக்கைகள் (Tamilnadu's New Initiatives on Police Reforms – A Commaner's Perspective: Exercises in Subterfuge) மற்றும் 1979-ல் தேசிய காவல் ஆணையம் (National Police Commission) கொண்டு வந்த ஏழடுக்கு காவல் சீர்திருத்தம் (Seven Steps to Police Reform), உச்ச நீதிமன்ற நீதியரசர் வி.ஆர். கிருஷ்ணய்யர் விமர்சித்த கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நிலையான மனித உரிமை அணுகுமுறை (Standards and Procedure for Crowd Control) இவை எதையும் தமிழ்நாட்டு போலீஸ் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.
சாதி-ஒழுங்கைக் கடைப்பிடிக்கும் தமிழக போலீசுக்கு மேற்கண்ட சட்டம்-ஓழுங்குகள் ஒருபோதும் பொருந்தாதோ என்னவோ! எனவேதான் பரமக்குடியில் இந்த நூற்றாண்டிலும் இப்படியொரு கேவலமான காட்டுமிராண்டிச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
 
இவற்றைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் பரமக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்துக்கும் ஜான்பாண்டியனுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என நம்மால் நன்கறிய முடிகின்றது. அவருடைய ஆளுமை வளர்ச்சியையும், இயக்க எழுச்சியையும் தலைமைத்துவப் பணபுகளையும் ஜீரணித்துக் கொள்ள முடியாத போலீசும், ஆதிக்கச் சாதியினரும் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச்சூடு இது என்று வெளிப்படையாகத் தெரிகிறது. எதற்காக இவற்றைச் சொல்ல வேண்டியுள்ளது என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிட‌ம் களப்பணியாற்றும் எந்த ஒரு தலித் தலைவரும் மணல், ஜல்லி ஏவார‌ம் செய்து, குவாரி நடத்தி, சாதியைச் சொல்லி மீசை முறுக்கி, ஆண்ட பரம்பரை என அடியாள் பலத்தோடு அடாவடி செய்து, கந்துவட்டி வசூலித்து, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு சமுக அரசியலுக்குள் களமிறங்கவில்லை. ஆதிக்க சாதிகள் அப்படி உருவாகிதான் தங்கள் சுயநலப் பாதுகாப்புக்காக கடைசியில் அரசியலில் நுழைந்து சமுகத் தலைவர்க‌ளாக பாவனை செய்கிறார்கள். ஆனால் தலித் தலைவர்கள் எல்லாம் சம நீதிக்கான ஜனநாயகத்துக்கான கருத்தியல் புரிதலோடு களமிறங்கி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சமுகத் தலைவராக பரிணமித்து, போலீசாலும், ஆதிக்க சாதியாலும், ஊடகங்களாலும் இறுதியில் ரவுடிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் என்பதுதான் வேடிக்கை. அவிழ்த்துப் போட்டு கண்டிக்க வேண்டிய கொடுமையல்லவா இது!
ஒவ்வொரு தலித் தலைவருக்கும் அவர் சார்ந்த சமுகத்தின் மீதான ஈடுபாடும், சாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிரான கோபமும், கிளர்ச்சியும்தான் அவர்களை அச்சமுகத்தின் தலைவர்களாக எழுச்சி பெறச் செய்துள்ளது. ஜான்பாண்டியன் அப்படியான சமூக நெறிமுறைகளில் பக்குவப்பட்டு வளர்ந்தவர் என்பதை ஆதிக்கச் சமூகங்களும், ஊடகங்களும், போலீசும் உணராத காரணத்தினால்தான் ஒரு மாபெரும் மாவீரனின் குருபூஜை நாளன்று, இமானுவேல் சேகரனையும் இழிவுபடுத்தி, ஜான்பாண்டியனை ரவுடியாகச் சித்தரித்து, அவரின் எழுச்சியையும் நசுக்கப் பார்க்கிறது தமிழக போலீசு. மதுரை டவுன் ஹால்ரோட்டில் ஜான்பாண்டியன் செருப்பு வாங்கப்போனால் அவரின் அழகான, ஆஜானுபாகுவான மிடுக்கைக் காண இனம் கலந்த ஒரு ரசிகப்பட்டாளமே அணி திரளும். யாராக இருந்தாலும் ஜான்பாண்டியனைத்தான் நிமிர்ந்து பார்க்க வேண்டும். அவர் யாரையும் நிமிர்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. மற்றவருக்கு எரிச்சலை ஏற்படுத்தும அப்படியொரு வசீகரத் தோற்றம் கொண்டவர். அவர் சாப்பிடுவதை யாராவது நோயாளிகள் சுற்றி நின்று வேடிக்கைப்பார்த்தாலே போதும். நாமும் இது போல் நொறுங்கச் சாப்பிட்டு, தெம்பாக நூறாண்டு வாழ வேண்டும் என்கிற தன்னம்பிக்கை பிறக்கும்.
 
ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் களப்பணியாற்ற தன் வாழ்வை அர்ப்பணித்த ஜான்பாண்டியன் என்கிற ஒரு சராசரி தனி மனிதனின் இளமைக்காலமும், சாதி ஒழிப்பைத் தூக்கி நிறுத்திய இல்வாழ்க்கையும் போலீசு, பொய்வழக்கு, சிறைச்சாலை, நீதிமன்றம் ஆகிய கொடுங்கோல் உக்கிரத்தால் அலைக்கழிக்கப்பட்டு, போராட வேண்டிய காலங்கள் வீணடிக்கப்பட்டுள்ளன. இத்தகைய உளவியல், பொருளாதார இழப்பீட்டுக்கு போலீசும், அரசும் என்ன விலை கொடுக்க முடியும்? தேவைப்பட்டால் அவரை எந்த நேரத்திலும் என்கவுண்டரில் கொல்ல போலீசும், இந்த அரசும் தயங்காது என்பது மட்டும் நிச்சயம். மாவீரன் இமானுவேல் சேகரனின் ரத்தத்தில் உருவான ஜான்பாண்டியனுக்கு உயிர் ஒரு போதும் வெல்லம் அல்ல. என்றைக்கோ அந்த உயிரைத் துறந்துவிட்டுதான் இந்த சமுகத்திற்கு பணியாற்றக் களத்தில் இறங்கியுள்ளார். கண் முன்னே நமக்கு நல்ல பல தலைவர்கள் கிடைத்த போதும், அவர்களைத் தலைவர்களாகப் பாவிக்காமல் தவறவிட்டு தவித்த நினைவேந்தல் கொடுமைதான் இங்கே தலித் வரலாறாகிக் கிடக்கிறது. அந்த நிலையை மாற்ற வேண்டுமெனில் நமக்குக் கிடைத்தத் தலவர்களை தலைவர்களாகப் பாவிப்பதும், அவர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களில் பங்கேற்பதும், இயக்கங்களில் இணைவதும் காலக்கட்டாயமாகும். இந்த உண்மையை ஆதிக்க சமுகங்களும். ஊடகங்களும், போலீசும் உணர மறுத்தாலும், ஒடுக்கப்பட்ட சமுகங்கள் உணர வேண்டும். ஜான்பாண்டியன் நம் சமூகத் தலைவர் என்று அவர் பெயரை உங்கள் நெற்றியிலும், மார்பிலும் எழுதி வையுங்கள். அடுத்த தலைமுறையாவது இயக்கங்களை அடையாளம் காணட்டும்.
Share this article :

+ comments + 1 comments

19 December 2015 at 22:50

தகவலுக்கு நன்றி

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்