Home » » மதுரை அருகே அம்பேத்கார்-இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு: பல இடங்களில் மறியல்

மதுரை அருகே அம்பேத்கார்-இம்மானுவேல் சேகரன் சிலைகள் உடைப்பு: பல இடங்களில் மறியல்

Written By DevendraKural on Tuesday, 7 August 2012 | 13:44

மதுரை அவனியாபுரம் அருகே, அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் சிலைகள் உடைக்கப்பட்டதைக் கண்டித்து, சாலை மறியல் நடந்தது. நேற்று முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். 

அவனியாபுரம் பெருங்குடியில் அம்பேத்கர் சிலை, சின்ன உடைப்பில் அம்பேத்கர் மற்றும் இமானுவேல் சேகரன் சிலைகளின் தலைகளை, சிலர் நேற்று முன்தினம் இரவு உடைத்தனர். எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் அப்பகுதிக்குச் சென்றனர். பெருங்குடியில் விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலர் பாண்டியம்மாள் தலைமையில் முட்களை போட்டு ரோட்டை மறித்தனர். சின்ன உடைப்பில், புதிய தமிழகம் எம்.எல்.ஏ., ராமசாமி, நிர்வாகிகள் தெய்வம், பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் மாநில துணை செயலர் இன்குலாப் தலைமையில், மறியலில் சிலர் ஈடுபட்டனர்.
  மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கம் சீலை முன் களமிறங்கிய மள்ளர்நாடு தோழர்கள் 

போக்குவரத்து நிறுத்தப்பட்டது : தென்மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம் வழியாகத் திருப்பிவிடப்பட்டன. பின், கலெக்டர் அன்சுல் மிஸ்ரா சின்ன உடைப்பில் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். சிலைகள் சீரமைக்கவும், வெண்கல சிலைகளை, 15 நாட்களில் அமைக்கவும், மறியலில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். கலெக்டர், ""சிலைகள் சீரமைக்கப்படும். உடைத்தவர்களை கைது செய்ய, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. உடைத்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர். சிலைகளுக்கு இரும்பு கிரில் கேட் அமைக்கப்படும்,'' என்றார். இருப்பினும் மறியலை கைவிட, அங்கிருந்தவர்கள் மறுத்து விட்டனர். சம்பவத்தைக் கண்டித்து, பெருங்குடியில் ஒரு பிரிவினர் சாலையில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானம் செய்தனர். நேற்று மாலை வரை அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

மக்கள் அவதி : நேற்று இப்பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பெருங்குடியிருந்து சின்ன உடைப்பு வரை முற்றிலும் போக்குவரத்து தடைபட்டது. கடைகள் அடைக்கப்பட்டன.

மதுரையில் 60 பேர் கைது : மதுரை தல்லாகுளம் பெருமாள்கோவில் அருகே, விடுதலை சிறுத்தைகள் நிர்வாகி தாமரைவளவன் தலைமையில் மறியலில் ஈடுபட முயன்ற, 14 பேரை, போலீசார் கைது செய்தனர். பந்தல்குடி அருகே இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நிர்வாகி ராஜா தலைமையில், மறியலில் ஈடுபட முயன்ற, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர். மகபூப்பாளையத்தில் மறியலில் ஈடுபட்ட, விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலர் எல்லாளன் உட்பட, 20 பேர், கோரிப்பாளையத்தில் தேவர் சிலை அருகே, மறியலில் ஈடுபட்ட மள்ளர்நாடு மள்ளர் கழக மாநில பொதுச் செயலர் பழனிவேல்ராஜ் உட்பட, 18 பேர், ஆகிய 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணசாமி கோரிக்கை : ""மதுரையில் அம்பேத்கர் மற்றும் இமானுவேலின் சிலைகளை உடைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, அரசைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜாதித் தலைவர்கள் சிலை கூண்டு அமைத்த, ஜாங்கிட்! : கடந்த, 1995ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலியில் நடந்த ஜாதிக் கலவரத்தை ஒடுக்குவதற்காக, எஸ்.பி.,யாக ஜாங்கிட் நியமிக்கப்பட்டார்.
டி.ஐ.ஜி.,யாக பதவி உயர்வு பெற்ற ஜாங்கிட், 2001ம் ஆண்டு அ.திமு.க., ஆட்சியில், திருநெல்வேலி சரக, டி.ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டார். ஆங்காங்கே ஜாதிக் கலவரம் துவங்கியதை, ஆரம்பக் கட்டத்திலேயே கட்டுப்படுத்தியவர், ஜாதித் தலைவர்களின் சிலைகளை விஷமிகள் சேதப்படுத்தாமல் இருக்க, புதிய திட்டத்தை வகுத்தார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஏறக்குறைய, 1,000க்கும் மேற்பட்ட ஜாதித் தலைவர்களின் சிலைகளுக்கு, இரும்புக் கம்பிகளால் கூண்டு அமைத்து பூட்டினார்.
பூட்டின் ஒரு சாவியை ஜாதித் தலைவரிடமும், மற்றொரு சாவி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் ஒப்படைக்க உத்தரவிட்டார். அத்திட்டத்தை மதுரை போலீஸ் கமிஷனராக, ஜாங்கிட் நியமிக்கப்பட்டதும், மதுரை நகர் மற்றும் புறநகர் மாவட்டப் பகுதியில் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த போது, அங்கிருந்து மாறுதல் செய்யப்பட்டார்.
அவரையடுத்து வந்த போலீஸ் கமிஷனர்கள், ஜாதித் தலைவர்கள் விஷயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. அப்படி செய்திருந்தால், தற்போது மதுரையில் ஏற்பட்டுள்ள, ஜாதித் தலைவர்களின் சிலை உடைப்பு கலவரத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

சிலை உடைப்பு குறித்து துப்பு கொடுத்தால் பரிசு : ""மதுரை அவனியாபுரம் மற்றும் சின்னஉடைப்பில் நடந்த சிலை உடைப்பு குறித்து தகவல் கொடுத்தால், ரூ.10ஆயிரம் வழங்கப்படும்,'' என, போலீஸ் எஸ்.பி., பாலகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் கூறியதாவது: பெருங்குடியில் சிலை உடைப்பு நடந்த பகுதியில், ஒரு சாவி கிடைத்துள்ளது. வீட்டுக்கு பயன்படுத்துவது போன்ற சாவியும், சாவி வளையத்துடன் இணைந்த எவர்சில்வர் பட்டை வடிவ "கீ செயினும்' கிடைத்துள்ளது. "கீ செயினில்' ஒரு பக்கம் பாலம் எனவும், மற்றொரு பக்கம் ஏ786006 மற்றும் 230.ஐ என எழுதப்பட்டுள்ளது. இந்த சாவி ஓட்டல் அல்லது மேன்ஷனில் பயன்படுத்துவதைப் போல் உள்ளது. சிலை உடைப்பில் ஈடுபட்டவர்களைப் பற்றியும், சாவி குறித்தும் தகவல் தெரிந்தால், உடனடியாக தெரிவிக்கலாம். துப்பு கொடுப்பவர்களுக்கு, ரூ.10ஆயிரம் வழங்கப்படும், என்றார். போன்: 94897 09003.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்