Home » » மாவீரர் தினம்.......

மாவீரர் தினம்.......

Written By DevendraKural on Monday, 26 November 2012 | 13:05


யார் இந்த மாவீரர்கள்?. எதற்காக களமாடினார்கள் ?. உயிர்ப்பூவை உதிர்க்கும் அளவிற்கு மனவலிமையை அவர்களுக்கு கொடுத்த சக்தி எது?. சிரித்துக் கொண்டே கந்தகக் காற்றில் கலக்கும் வல்லமையைக் கொடுத்தது யார்?.
விடைகாணமுடியாத வினாக்கள் அல்ல இவை . ஒரு ஒடுக்கப்படும் இனம் தனது இருப்பிற்காகப் போராடும்போது இது புரியப்படும். போராடியோர் நினைவினைச் சுமந்து , மீண்டெழும் உணர்வினை ஊட்டும் நாளே மாவீரர்தினம்.
ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்படலாம்..ஆனால் விடுதலைக்கான போராட்டம் நிறுத்தப்படக்கூடாது என்பதனை நினைவுறுத்தும் நாள்தான் இந்த மாவீரர்தினம். எமை அழிக்கும் சிங்களமும், போர்க்குற்றத் தடியேந்தும் வல்லரசாளர்களும் ஒன்று சேர்ந்து , சுயநிர்ணய உரிமைக்கோட்பாட்டை கைவிடுங்களென்று வலியுறுத்துவதை, ஏற்கமாட்டோமென உறுதிபூணும் நாளே இம்மாவீரம்தினம்.

மாவீரர்கள் போராடிப்பெற்ற இறைமையை, உலகறியச் செய்வோம் என்பதனை உரத்துச் சொல்லும் நாள் இது. 13 இற்குள் இணைந்து போதல், 19 இற்குள் சரிந்து போதல் சரியென்று வாதிடுவோர் மாவீரர்களை நினைவுகூரத் தேவையில்லை. 77 இல் மக்கள் இட்ட ஆணை, போர்நிறுத்த காலத்தில் அங்கீகரிக்கப்படாத அரசாக பரிணாமம் அடைந்தது. அதன் இறைமையை ,சமாதானம் பேசிய வல்லரசாளர்களும் ஏற்றுக்கொண்டனர். இருப்பினும் ,போராடிப்பெற்ற இறைமையை, பேசிக்கொண்டே அழித்தார்கள். 'முழு நாட்டிற்குமான சிங்களத்தின் இறைமை' என்கிற பேரினவாத அரசியல் கருத்தியல், தமது பிராந்திய நலனுக்கு தேவையாக இருப்பதால், தமிழ்தேசிய இனத்தின் இறைமையை சிதைப்பதற்குத் துணை போனார்கள். ஆனாலும் அழிக்கப்படவில்லை எம்மினம் போராடிபெற்ற இறைமை.இதன் நீட்சியே தமிழினத்தின் அடுத்தகட்ட போராட்ட நகர்வாக இருக்க வேண்டும்.
அதிகாரப்பரவலாக்கம், அதிகாரப்பகிர்வு என்பன தேசிய இன முரண்நிலையைத் தீர்க்கும் என்போர் , தமிழ் தேசத்தின் இறைமையை மறுப்பவர்களாகவே கருத வேண்டும்.

சிங்களத்தின் இறைமையைப் பகிர்ந்து கொள்வதுதான் அதிகாரப்பகிர்வா ?. ஒற்றையாட்சி என்பது , சிங்களத்தின் முழு இலங்கைக்குமான இறைமையை ஏற்றுக்கொள்ளும் அரசியலமைப்புச் சட்டத்தினால் உருவாக்கப்படுவது.
ஆகவே ,'சிங்களத்தின் ஒற்றையாட்சிக்குள் சுயாட்சி' என்பது அடிப்படையில் தவறான அரசியல் கருத்தியல் என்பதைப் புரிந்து கொள்வது சிரமமல்ல . இறைமையுள்ள இரு தேசங்கள் என்பதன் அடிப்படையில் சுயாட்சி பற்றி பேசலாம். ஆனால் அதற்கும் சிங்களம் இணங்காது என்பதைப் புரிந்து கொள்ளாமல் ,இணக்கப்பாட்டு அரசியல் முயற்சிகளில் ஈடுபடும் தமிழர் தரப்புக்கள் ,எதையும் சாதிக்கப்போவதில்லை என்பதனை பல ஒப்பந்தக் கிழிப்புகள் எமக்கு உணர்த்துகின்றன.

விலைபோகாத கல்லறைகள் எமக்கு இடித்துரைக்கும் செய்தி இதுதான்.

'போராடினால் பெறுவாய் விடுதலை' என்பது வரலாறு எமக்களித்த வரம்.
'சுயநிர்ணய உரிமை கோரும் பயங்கரவாதிகள் ' என்பதே வல்லரசாளர்கள் எமக்கு வழங்கும் கலாநிதி பட்டம்.

ஆகவே கல்லறைச் செய்திகள் சொல்லும் , எளியோரை வலியோராக்கும் சாத்தியங்களைத் தேடுங்கள்.
மக்கள் சக்தியின் முன்னால் , மாபெரும் சாம்ராஜ்யங்கள் அடிபணிந்து போனதை கவனியுங்கள்.

இயங்காமல் இருப்பது மாற்றத்தைக் கொண்டு வராது. இயங்கு தளத்தினை அழிப்பதுதான் ஒடுக்குமுறையாளனின் நோக்கம். அடிபணிவு அரசியல் முழு இனத்தையும் அழித்துவிடும். எம்மினம் அழியப்போகிறதா ,இல்லையேல் மீண்டும் நிமிரப்போகிறதா என்பதனை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

வீழ்வது தவறல்ல. வீழ்ந்தபின் எழாமல் இருப்பது தவறு. அதைவிடத் தவறு , ஒடுக்குபவனின் தோளைப் பற்றிப் பிடித்து எழுவது.

நம் மாவீரர்கள் பற்றிப்பிடித்தது, ஒரு தேசிய இனத்தின் பிறப்புரிமையை.

அவர்களின் இலட்சியம் தோற்கடிக்கப்படவில்லை. இலட்சியம் நிறைவேறும்போதுதான் அவர்களை வரலாறு பதிவு செய்யும்.
அதற்காக நாம் என்ன செய்யப்போகிறோம் ?.மூன்று வருடங்களுக்கு முன்னர் நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுற்றாலும், விடுதலைப் புலிகளின் பலம் களத்தில் ஓங்கியிருந்த வேளையில் மாவீரரை வணங்கும் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது போன்று இந்த வருட மாவீரர் வார நிகழ்வுகள் தாயகத்தில் இல்லாவிட்டாலும் தமிழகம் உள்ளிட்ட தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும்.....

.....சிறப்பாக இடம்பெறுவது தமிழர்கள் தமக்காகப் போரிட்டு இறந்த மாவீரர்களை மறக்க மாட்டார்கள் என்பதனையே எடுத்துக் காட்டுகிறது.

இந்த வருட மாவீரர் வார நிகழ்வுகள் வெகு சிறப்பாக நடைபெற தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. 2009-ஆம் ஆண்டிலிருந்து இடம்பெறும் மாவீரர் வார நிகழ்வுகள் பல்வேறு குழப்பமான சூழ்நிலையிலேயே இடம்பெற்று வந்துள்ளன.

தமிழர் வாழும் நாடுகளில் இயங்கும் அமைப்புக்களைத் தனது வலையில் சிக்க வைத்துக் குளிர்காயும் வேலைகளையே சிங்கள ஏகாதிபத்திய அரசு தனது தூதரகங்கள் மூலமாகச் செய்தது. இருந்த போதிலும், மாவீரர் வார நிகழ்வுகள் தடங்கல் இன்றியே இடம்பெற்றன.

யார் எத்தனை சூழ்ச்சிகளைச் செய்தாலும் தமிழர்கள் தமக்காகப் போரிட்டு இறந்தவர்களைப் பூசிப்பதற்குப் பின்னிற்கவில்லை.

தாயகத்தில் வாழும் மக்கள் பல்வேறு விதமான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் மாவீரர்களை வணங்க ஏதோ ஒரு வழியில் தம்மால் இயன்றவற்றைச் செய்தாலும், புலம்பெயர் நாடுகளில் இடம்பெறும் நிகழ்வுகள் மிக விமரிசையாகவே இடம்பெற்று வருகின்றன.

முன் எப்போதும் இல்லாதவாறு மாவீர்களுக்கு புலம் பெயர் நாடுகளில் வதியும் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள், தென் ஆபிரிக்கத் தமிழர்கள் என உலகெங்கும் வாழும் தமிழர்கள் தமது வீர வணக்கங்களை இந்த வருடம் செய்யத் தயாராகி வருகிறார்கள்.

இந்த வருட மாவீரர் வார நிகழ்வுகள் பல்வேறு சோதனைகளையும், சாதனைகளையும் கண்டுகொண்டிருக்கும் ஆண்டில் இடம்பெறுகிறது என்றால் மிகையாகாது.

சோதனை ஆண்டு

ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இராணுவத்தினரை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தங்க வைத்துள்ளதாக நம்பகரமான தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த ஆண்டானது பல்வேறு சோதனைகளைத் தழுவிய ஆண்டாகத் தமிழர்களுக்கு இருக்கிறது. வடக்கு கிழக்குப் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புப் படையினர் பல்வேறு விதமான மனித உரிமை மீறல்களைச் செய்வதுடன், தமிழ் மக்களைப் பல்வேறு விதமான வன்புணர்வுக்கு ஆளாக்கி வருகின்றனர்.

மாவீரர்களைப் புதைத்த கல்லறைகளைக் கூட சிங்களம் விட்டு வைக்கவில்லை. மாவீரர்களின் எந்தவொரு அடையாளச் சின்னத்தையும் இல்லாமல் செய்து விடுவதில் சிங்களப் பேரினவாதம் வெற்றி கண்டுள்ளது.

தமிழ் நிலங்களில் பௌத்த விகாரைகளை நிறுவி தமிழர்களின் மத அடையாளங்களை அழிக்கும் வேலைகளைச் செய்கிறது சிங்களம்.

தமிழர்களை அவர்களின் குடியிருப்புக்களுக்குச் செல்ல அனுமதிக்காமல் சிங்கள மக்களைக் குடியேற்றும் வேலைகளையே செய்து வருகிறது மகிந்தவின் இன அழிப்பு ஆட்சி.

மூன்று வருடங்களாக முள்வேலி முகாம்களுக்குள் அடைபட்டிருந்த தமிழ் மக்கள் தற்போது திறந்த வெளிச் சிறைக்குள் வாழும் துர்ப்பாக்கிய நிலையே காணப்படுகிறது.

தமிழ் இளைஞர் மற்றும் யுவதிகளைப் பல்வேறு விதமான இம்சைகளுக்கு ஆளாக்கி அவர் தம் எதிர்காலத்தை அநியாயமாக அழித்து வருகிறது சிங்களம்.

தமிழ்ப் பெண்களைத் திருமணம் செய்வது என்கிற போர்வையில் தமிழ்ப் பண்பாட்டுக்கே ஒவ்வாத காரியங்களைச் செய்கின்றனர் சிங்களச் சிப்பாய்கள்.

இவைகள் அனைத்துக்கும் துணை போகின்றன தமிழ் ஒட்டுக் குழுக்கள்.

சிங்கள அரசு தமிழர் தாயகப் பகுதிகளில் ஆதிக்கத்தைச் செலுத்தி தமிழ் மக்களை சத்தம் சஞ்சாரம் இல்லாமல் இன அழிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

தமிழீழத்தில் செய்யும் அட்டூழியம் போதாதென்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலும் நேரடியானதும் மறைமுகமானதுமான வேலைகளைச் செய்கிறது சிங்களம்.

இந்த வருடம் நவம்பர்8-ஆம் தேதியன்று விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதியும் பின்னர் பிரான்ஸில் தமிழ் செயற்பாட்டாளராகவும் திகழ்ந்த பருதி பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் வைத்துச் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதைவிட பல்வேறு மறைவான செயற்பாடுகளைப் புலம்பெயர் தமிழர்கள் இடையே செய்து தமிழர்களுக்குள் பிளவை உண்டுபண்ணும் வேலையைச் செய்கிறது சிங்களம்.

சாதனை ஆண்டு

தமிழீழத்திற்காகத் தங்கள் இன்னுயிரை அர்ப்பணித்த மாவீரர்களைப் பூசிக்கும் இந்த நிகழ்வை முன் எப்போதும் இல்லாத அளவில் இந்த வருடம் கடைப்பிடித்து தமிழர்களை அழித்தொழிக்கக் கங்கணம் கட்டிச் செயற்படும் சிறிலங்கா அரசிற்குத் தகுந்த பாடம் கற்பிக்கத் தமிழினம் உறுதியேற்கும் தருணமிது.

முப்பது ஆண்டுகளுக்கு மேலான தமிழீழ ஆயுதப் போரில் 30,000-க்கும் அதிகமான மாவீரர்களைத் தமிழீழம் இழந்திருக்கிறது. இவர்களுடைய இழப்புக்கள் வீண் போகக் கூடாது.

இந்த வருடம் சர்வதேச அரங்கில் இடம்பெற்ற நிகழ்வுகளின் அடிப்படையில் இதை தமிழர்களுக்குரிய சாதனை ஆண்டாகவே கருத வேண்டும்.

ஆசிய, ஆபிரிக்க, ஐரோப்பிய,அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலியக் கண்டங்களில் இருக்கும் பல நாடுகள் தமிழீழத் தமிழர்களுக்காக வாதிட்டு சிங்கள அரசுக்கு எதிராக மனித உரிமை அமர்வில் வாக்களித்ததும் இந்த ஆண்டே.

மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளுக்காகச் சிங்கள அரச தலைவர்களும் மற்றும் இராணுவ அதிகாரிகளுமே பொறுப்பு என்கிற வகையில் குற்றங்களைச் சுமத்தி நீதியானதும் சர்வதேச சமூகத்தினால் நியமிக்கப்படும் விசாரணைக் குழுவினால் விசாரிக்கப்பட்டு மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்கிற குரலுக்கு அங்கீகாரம் கிடைத்ததும் இந்த ஆண்டே.

சிறிலங்காவுக்கு ஆதரவாக இதுவரை காலமும் செயற்பட்டு வந்த இந்திய அரசு முதன் முறையாக இந்த வருடத்திலேயே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும் சிங்கள அரசுக்கு எதிராகவும் வாக்களித்துள்ளது. இது மாவீரர் கண்ட கனவு பொய்க்கவில்லை என்பதனையே எடுத்துக் காட்டுகிறது.

சிங்கள அரசுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவளித்து வரும் இந்திய அரசுக்குத் தலையிடியைக் கொடுக்கக்கூடிய களம் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தவிர்ந்த தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதுடன் வெறும் பேச்சளவில் இல்லாமல் செயலில் இறங்கி வேலையாற்றும் பொறுப்பை ஏற்றுள்ளதும் இந்த ஆண்டிலேயே.

டெசோ என்கிற தமிழீழ ஆதரவு மாநாடுகளை நடத்தி, ஐ.நா. சபை சென்று கையளித்தனர் தி.மு.கவின் ஸ்டாலின் மற்றும் பாலு.

இந்திய மற்றும் பிரித்தானிய மூத்த அரசியல்வாதிகள் உட்படப் பல்வேறு தமிழ்ப் பேராளர்கள் கலந்து சிறப்பித்த மாநாடு பிரித்தானியாவின் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றதும் இவ்வாண்டே.

ஐ.நா. சபையின் நம்பிக்கையின்மை குறித்த அறிக்கை அதன் உள்ளக விசாரணையாளர்களினால் வெளிவந்து உலக நாடுகளின் மனக் கதவுகளைத் திறக்க வழி வகுத்ததும் இந்த ஆண்டே.

முன் கூறப்பட்ட தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்களை ஐ.நாவின் உள்ளக அறிக்கை பகிரங்கப்படுத்தியுள்ளதுடன், 70,000-க்கும் அதிகமான மக்கள் இறந்ததாகப் புதிய தகவலை வெளியிட்டு சர்வதேச சமூகத்தைத் திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.

இவைகள் அனைத்தும் தமிழீழ விடுதலைக்கு வித்தான அனைவருக்கும் கிடைத்த வெற்றியே. இவைகள் அனைத்தும் உலகத் தமிழர்களின் விடா முயற்சியின் சாதனையே.

கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலான தமிழீழத் தனியரசை நிர்மாணிக்கும் ஆயுத வழியிலான போராட்டத்துக்கு விதையான மாவீரர்கள் என்றென்றும் போற்றப்பட வேண்டியவர்கள்.

இவர்கள் பட்ட துன்ப துயரங்களை எவராலும் இலகுவில் அறிந்து கொள்ள முடியாது.

சாவு தமதருகில் வந்தும் அதனுடன் போராடி விதையாகிப் போய் உலகத் தமிழர்கள் அனைவர் மனங்களிலும் நிரந்தரமான ஒரு இடத்தைப் பிடித்து வாழ்ந்து வருபவர்களே மரணித்த மாவீரர்கள்.

"தமிழன் என்றொரு இனமுண்டு தனியே அதற்கொரு குணமுண்டு" என்று உலகம் கூறும் வகையில் அனைத்துத் தமிழரையும் புகழ்ச்சியின் உச்சிக்கே கொண்டுபோய் விட்ட மாவீரர்களை மறவாது பூசிப்போமாக. 

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்