Home » » தருமபுரி சாதியக் கலவரம் : தமிழர்கள் தலைகுனிய வேண்டும்

தருமபுரி சாதியக் கலவரம் : தமிழர்கள் தலைகுனிய வேண்டும்

Written By DevendraKural on Friday, 16 November 2012 | 22:54


தமிழ்நாட்டில் சாதியக் கலப்புத் திருமணங்கள் நடைபெறாமல் இல்லை,ஆனால் அதே சமயம் சாதியம் ஒழிந்து விட்டது, சாதியக் கலவரங்கள் பழம் சங்கதிகள் என நினைப்போமானால் அதுவும் மிக மிகத் தவறான ஒரு எண்ணமே ஆகும். 

சாதியம் ஒழியவில்லை, சாதிய வெறுப்புணர்வு இந்தத் தலைமுறையில் கூடப் பலரிடம் இருக்கவே செய்கின்றது. ஏன் கடல் கடந்து புலம் பெயர் தேசங்களில் வாழ்வோரில் கூடச் சாதிய உணர்வுகள், சாதியம் சார்ந்த கற்பனை மேன்மைத் தனங்கள் இருக்கவே செய்கின்றது. இல்லை எனக் கூறிவிட முடியாது. 

தருமபுரியில் நடந்த சம்பவம் இதன் ஒரு வெளிப்பாடே ஆகும், எங்கோ ஒரு கிராமத்தில் நடந்துவிட்டது என நினைத்துக் கொண்டு தமிழர்களாகிய நாம் நமது மனதை ஏமாற்றிக் கொள்ள முடியாது. 

உண்மையில் அப்படியான ஒரு இக்கட்டான பின்னணியில் ஊர் வழக்கங்களை எதிர்த்து காதல் மணம், கலப்பு மணம் புரிந்த அந்தத் தம்பதியினரை பாராட்டியே ஆக வேண்டும். தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனும், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணும் மணமாறச் சாதியங்களைத் துறந்து மணம் புரிந்தமைக்கு முதற்கண் வாழ்த்துக்கள். 

ஆனால் பிள்ளைகளின் மகிழ்ச்சியான வாழ்வைக் கண்டு பெருமிதம் கொள்ளாமல் கற்பனைக் கோட்டில் வரையப்பட்ட சாதிய அடையாளங்களுக்காகத் தன் உயிரைத் துறந்த முட்டாள் தகப்பனை என்னவென்று சொல்வது. அதுவும் திருமணம் முடிந்த 40 நாட்கள் கழித்து ஒரு தந்தை தற்கொலை செய்வாரா என்ற கேள்வியும் எழுகின்றது. ? அத்தோடு நிற்காமல் வன்முறைகளைக் கையில் எடுத்துக் கொண்டு தலித் சமூகத்தினரின் மூன்று கிராமங்களைத் தீக்கிரையாக்கிய வன்னிய சாதிய வெறியர்களையும், இந்த நிகழ்வுகள் குறித்து முன்னரே விழிப்பாகச் செயல்படாத காவல்துறையினரையும் வன்மையாக நாம் கண்டிக்க வேண்டும். 

அத்தோடு சட்டத்தைத் தம் கையில் எடுத்துக் கொண்டு கட்டைப் பஞ்சாயத்துச் செய்து வரும் சாதிய, மதம் சார்ந்தவர்களைத் தண்டிக்காமல் விடுவது மிகப் பெரிய ஆபத்து என்பதை இச்சம்பவம் உணர்த்தியுள்ளது. அந்த இளம் பெண்ணிடம் தாலியை அறுத்துவிட்டு, கணவனை விட்டுவிட்டு பெற்றோர் வீட்டுக்கு போகும் படி பணித்துள்ளனர் ஊர் பஞ்சாயத்தினர், ஆனால் துணிச்சல் மிக்க அப்பெண்ணே ஊராரின் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் முற்றுமாக மறுத்துவிட்டார். இதனால் மீசையில் மண் ஒட்டிய வன்னிய சாதிய வெறியர்கள் தலித் மக்கள் மீது ஒட்டுமொத்த வன்முறையில் இறங்கியுள்ளனர். 

இவ்வளவு விடயங்கள் நடந்தும் காவல் துறையினர் எந்தவொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பது தான் சந்தேகத்தைக் கிளப்புக்கின்றது. நிச்சயம் காவல் துறையினர் ஒரு சாராருக்குத் துணையாக இருந்திருக்கக் கூடும் என்ற கோணத்திலும் நம்மைச் சிந்திக்கச் செய்கின்றது. 

ஒரு வயது வந்த பெண் தாம் விரும்பும் நபரை மணப்பதற்குச் சட்டத்திலேயே இடம் இருக்கும் போது, ஊரார் கற்பனை சாதிய பெருமிதம் பேசிக் கொண்டு வன்முறைகளைக் கையில் தூக்கியமை வேதனை தரும் நிகழ்வாகும். சொல்லப்போனால் இத்தகைய சம்பவத்துக்கு ஒட்டு மொத்த தமிழினமும் வருந்த வேண்டும் என்பேன். 

இதுவரை 92 ஆதிக்கச் சாதியினரை இச்சம்பவம் குறித்துக் கைது செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ஆனால் அவை வெறும் கைதோடு நின்று விடுமா அல்லது தக்க தண்டனை கிட்டுமா என நம்மால் இப்போதைக்குக் கூறிவிட முடியாது. ஏனெனில் அதிகார மட்டத்தில், அரசியல் மட்டத்தில் வன்னிய சாதியினர் ஆழ்ந்த இரும்பு பிடியினைக் கொண்டுள்ளனர். 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இச்சம்பவம் குறித்துத் தமிழ்நாட்டு அரசிடம் முழுமையான விளக்கம் கேட்டுள்ளது. தேசிய அட்டவணை பிரிவினருக்கான கமிசனின், இயக்குநர் திரு வெங்கடேசன் சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டுள்ளார், தக்க நடவடிக்கை எடுக்க முனைவதாகவும் கூறியுள்ளார். 

காடுவெட்டி குரு என்னும் வன்னிய அரசியல் கட்சி தலைவர் அண்மையில் புதுவையில் நடந்த ஒரு கூட்டத்தில் வன்னிய இளைஞர்கள் வேற்று சாதி சமூகத்தோடு மணத் தொடர்புகளை ஏற்படுத்தக் கூடாது என எச்சரிக்கை விடுத்தார் என்ற ஒரு தகவலும் கிடைக்கின்றது. 

சாதியங்களைத் தக்க வைப்பதில் பெற்றோர்களை விடவும் முக்கியமாகத் திகழ்பவர்கள் சாதிய, மதச் சார்ந்த அமைப்புக்கள், கட்சிகள், மதக்குருக்களே என்பது திண்ணம். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கூட இருப்பவர்கள் அவர்களே. இதே போலத் தமிழ்நாட்டின் மற்றுமொரு ஆதிக்கச் சாதிய சமூகமான கொங்கு வெள்ளாளக் கவுண்டர் பேரவை கோயம்புத்தூரில் நடைப்பெற்ற கூட்டத்தில் வெள்ளாள சாதிப் பெண்கள் வேற்றின ஆண்களை மணக்கத் தடை விதித்துள்ளனர். 

இப்படியான சாதியம் சார்ந்த சமூக விரோதக் கூட்டங்களுக்குப் பெரும்பாலும் காவல்துறையினர் அனுமதி வழங்கி வருவதும் வாடிக்கையாகி விட்டது. வளர்ந்து வரும் பொருளாதாரம் சார்ந்த வாழ்வியல், கல்வி வளர்ச்சியால் இளையவர்கள் பலரும் சாதி மதங்கள் கடந்து மணக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இவற்றை எல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாத சாதிய, மதச் சங்கங்கள் அவற்றுக்கு வால் பிடித்து வரும் அரசியல் கட்சிகள், மதக் குருக்கள் சாதியத்தைத் தக்க வைக்கப் பல்வேறு வழிமுறைகளைக் கையில் எடுக்க ஆரம்பித்துள்ளனர். இவற்றைத் தடுக்கவோ, தட்டிக் கேட்கவோ தமிழ்நாட்டு அரசுக்கு திராணியில்லை என்றே தோன்றச் செய்கின்றது. வாக்கரசியல் சார்ந்த சமூகத்தில் சாதியம், மதங்களைத் தக்க வைக்கவே தமிழக அரசியல் கட்சிகளும் விரும்புகின்றன. குறிப்பாகச் சமத்துவம் பேசும் திராவிட அரசியல் வியாதிகள் பார்ப்பனரை மட்டும் கண்டிக்கவே விரும்புகின்றன, மாறாகத் திராவிடச் சமூகத்தில் நிலவும் சாதிய வெறித் தனங்களைக் கண்டிக்கத் தயங்குவதேன். 

ஆனால் இவற்றை எல்லாம் உடைத்தெறிய வேண்டும். சாதியம், மதம் என்பது எல்லாம் மனித குல வரலாற்றில் கடைசி மணித்துளிகளில் தோன்றிய அண்மையக் காலக் கண்டுப்பிடிப்புக்கள் என்பதை நாம் உணர வேண்டும். சாதியம், மதங்களில் ஒரு துளி அறிவியல் நிரூபணங்களும் கிடையாது. வருங்காலச் சந்ததினருக்கு சாதிய மேன்மை, மத மேன்மையைப் போதிக்க விடக் கூடாது. அவ்வாறான சங்கங்கள், கல்வி நிலையங்கள், மத நிலையங்கள் போன்றவற்றைக் கண்காணிக்க வேண்டும், அளவுக்கு மிஞ்சினால் அவற்றை முற்றிலும் தடை செய்ய வேண்டும். மனித சமூகமும், தேசமும் முன்னேற வேண்டுமானால் கொஞ்சம் கற்பனையில் கட்டி வைத்திருக்கும் பெருமிதங்களை இறக்கி வைத்துவிட்டு சமத்துவத்தோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்