Home » » ஒபாமாவின் வெற்றி சொல்லும் செய்தி

ஒபாமாவின் வெற்றி சொல்லும் செய்தி

Written By DevendraKural on Thursday, 8 November 2012 | 13:37


அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் சென்ற முறை வென்றதற்கும் இந்த முறை வெற்றி பெற்றதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. எட்டு ஆண்டுகள் புஷ் செய்த ஆட்சியின் விளைவாக அமெரிக்கா போர்க்களத்திலும் உள்நாட்டில் மோசமான பொருளாதரப் பிரச்சினையிலும் தவித்துக் கொண்டு இருந்தது. இதனால் அப்போதே ஒபாமா தான் வருவார் என்று நிச்சயமாக தெரிந்து இருந்த போதும் அனைவரது கவனமும் வேறு ஒரு கோணத்திலும் இருந்தது. அது ஒபாமா ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்தவர் அவர் அமெரிக்க அதிபராக வருவாரா என்பது தான். என்ன தான் அமெரிக்கா பல்வேறு இனத்தவர்கள் இணைந்து வாழும் நாடாக இருந்தாலும் அங்கே வெள்ளை இனத்தை சேராத ஒருவர் அதிபராக வருவாரா என்பது கேள்விக்குரியாகவே இருந்தது. அப்படி அவர் அதிபரானால் அது தங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கொண்டாட ஆப்ரிக்க இனத்தவர்களும் காத்துக் கிடந்தார்கள். அதனால் என்ன தான் மற்ற பிரச்சினைகள் இருந்தாலும் இந்த இனப் பிரச்சினையும் சென்ற தேர்தலில் மேலோங்கியே இருந்தது. ஒபாமாவும் அமெரிக்காவின் முதல் ஆப்ரிக்க வம்சாவளியைச் சேர்ந்த அதிபராக தேர்வு பெற்று தனது பதவிக் காலத்தை முழுமை செய்து அடுத்த தேர்தலுக்கும் தயாரனார்


இந்த முறை ஒபாமா பெற்றிருக்கும் வெற்றி முழுக்க முழுக்க அவரது செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி இந்த தேர்தலில் அவரது பின்னணி எந்த பங்கையும் ஆற்றவில்லை. ஒபாமா தனக்கு முன் ஆட்சியில் இருந்த புஷ்ஷை விட நன்றாக ஆட்சி நடத்தினாரா என்பதே இந்த தேர்தலில் முக்கியமாக இருந்தது. அமெரிக்காவுக்கு வெளியில் இருக்கும் மக்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் சீனாவை தவிர பல்வேறு நாட்டவர்களும் ஒபாமாவே மீண்டும் அமெரிக்காவின் அதிபராக வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததில் இருந்தே அவருடைய செல்வாக்கு எத்தகையது என்று விளக்க வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் ஒபாமாவுக்கு இந்த முறை கிடைத்த வெற்றி சென்ற தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றியுடன் ஒப்பிடும் போது மிகவும் குறைவு தான். அந்த வெற்றியையும் அவர் மிகவும் இழுபறிக்கிடையே தான் பெற்று இருக்கிறார். நேற்ற வாக்கு எண்ணிக்கை நடந்த போது கூட முதலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இடங்களில் முதலில் குடியரசுக் கட்சியின் ராம்னியே முன்னிலையில் இருந்தார். நேரம் செல்ல செல்ல ஒபாமா முந்திக் கொண்டு வந்து தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்

நம்மூரில் கட்சிகள் தங்களுக்கென வாக்கு வங்கிகள் வைத்திருப்பதை போலவே இங்கும் கட்சிகளுக்கு வாக்கு வங்கிகள் இருக்கிறார்கள். பொதுவாக இளைஞர்கள், நடுத்தர வயதினர், தொழிலாளர்கள் மற்றும் பிற இனத்தவர்கள் ஒபாமாவுக்கு ஆதரவாகவும், வயதானவர்கள், முதலாளிகள் மற்றும் கிறுத்துவ அமைப்புகள் ராம்னிக்கு ஆதரவாகவும் இருந்தார்கள். நம்மூரில் கட்சிகள் சில இடங்களை தங்கள் கோட்டை என்று வர்ணிக்குமே அது மாதிரி தான் இங்கும் பல மாநிலங்கள் இரு கட்சிகளின் கோட்டையாக இருந்து வருகின்றன. நம்மூர் நடுநிலையாளர்களைப் போல இங்கிருக்கும் நடுநிலை மாநிலங்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். இந்த தேர்தலில் இந்த நடுநிலை மாநிலங்கள் ஒபாமாவுக்கு ஆதரவாக திரும்பவே அவரது வெற்றி உறுதியாகிவிட்டது. நியூயார்க், நியூஜெர்சி போன்ற வெளிநாட்டினர் அதிகம் இருக்கும் மாநிலங்களில் இருந்து ஒபாமாவுக்கு பூஸ்டு கொடுக்கும் விதத்தில் முடிவுகள் வந்து இருக்கின்றன

அதிபர் தேர்தல் அமெரிக்காவுக்கு தானே நமக்கு என்ன வந்தது ஒபாமா அதிபரானால் நமக்கும் உலகிற்கும் எந்த விதத்தில் பயனளிக்கும் என்று கேள்வி எழுவது நியாமானது தான். ஒபாமா மீண்டும் அதிபர் ஆனதால் மின்வெட்டு விலகிவிடப் போவதில்லை, டெங்கு காய்ச்சல் ஒழிந்துவிடப் போவதில்லை, ஜாதிக் கலவரம் அடங்கப் போவதில்லை, செயின் திருடர்கள் மீண்டும் ஆந்திராவுக்கு போகப் போவதில்லை ஆனால் உலகம் இன்னும் நான்காண்டுகள் கொஞ்சமேனும் அமைதியாக இருக்கும். புஷ் அதிபராக இருந்த போது ஆப்கானிஸ்தான், ஈராக் என்று மட்டுமில்லாமல் சீனா, ரஷ்யா, வெனிசூலா, கியூபா என்று பல்வேறு நாடுகளுடனும் எப்போது உரசல் இருந்து கொண்டே இருந்தது. உலகின் பல இடங்களில் ஒரு கொந்தளிப்பான சூழ்நிலை நிலவியது. ஒன்று நீங்கள் எங்களுடன் இருங்கள் அல்லது அவர்களுடன் இருங்கள் என்று கிட்டத்தட்ட உலகையே புஷ் மிரட்டிய சூழ்நிலை இருந்தது. கடந்த நான்காண்டுகள் அப்படி ஏதும் இருக்கவில்லை இந்த ஒரு காரணத்துக்காக தான் உலகின் நாடுகள் எல்லாம் ஒபாமாவே மீண்டும் வர வேண்டும் என்று விரும்பின. ஒபாமா அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வார் என்று நம்பிக்கை வைப்போம்

அமெரிக்க தேர்தலைப் பற்றி நம்மூர் செய்திகளில் வந்த ஒரு தகவல் நம்மூரைப் போலவே இங்கேயும் தேர்தலுக்கு இலவசங்கள் தருகிறார்கள் என்று. நம்மூரில் தேர்தலுக்கு முன்னால் இலவசமாக பொருட்கள் அல்லது பணம் மக்களுக்கு கொடுக்கப்படும், அது அரசியல் கட்சிகளால் மக்களுக்கு கொடுக்கப்படுவது. இங்கே இலவசமாக கொடுக்கப்படுவது குடிப்பதற்கு காப்பி அல்லது உணவாக பீட்சா போன்றவை தான், அதுவும் அதனைக் கொடுப்பது அரசியல் கட்சிகள் அல்ல வணிக நிறுவனங்கள் தான். ஓட்டு போட்டதற்கு அடையாளமாக கொடுக்கப்படும் வில்லையை காண்பித்தால் இலவச காப்பி அல்லது பீட்சாவோ கிடைக்கும், அதுவும் ஓட்டு போட்ட பின்னர் தான். இது வணிக நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் ஒரு மார்க்கெட்ட்ங் யுத்தியே அன்றி இதற்கும் தேர்தல் முடிவுக்கும் எவ்வித சம்மந்தமும் இருப்பதாக தெரியவில்லை
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்