Home » , » மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி

Written By DevendraKural on Tuesday, 22 January 2013 | 03:44

’உன்னால் முடியும் தம்பி’ உள்ளிட்ட இளைஞர்களின் சுயமுன்னேற்றத்திற்கு உதவும் பல்வேறு நூல்களை எழுதிய மக்கள் சக்தி இயக்க தலைவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி திருவான்மியூரில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 80.


இவர் ‘சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’.உன்னால் முடியும் தம்பி’ உட்பட ஏராளமான நூல்களை எழுதியவர்.இதன் மூலம் எக்கச் சக்கமான இளைஞர்களின் மனத்தில் தன்னம்பிக்கை விதை விதைத்தவர் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி. தமிழில் சுயமுன்னேற்ற நூல் என்று கேள்வியேப்படாத அந்த நாட்களிலேயே இவரது நூல்கள் பல மனங்களில் ஒளி பாய்ச்சியுள்ளன.

விளநகர் என்ற குக்கிராமத்திலிருந்து விஸ்கான்ஸின் வரை சென்று தொழிலதிபராகப் பரிணமித்தவர். ‘சிறந்த தொழிலதிபர்’ என்று அமெரிக்க நிறுவனங்களாலும், பத்திரிகைகளாலும் பாரட்டப் பெற்றவர்.
‘பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?’, ‘உயர்மனிதனை உருவாக்கும் சிந்தனைகள்’, ‘எண்ணங்கள்’, ‘நீதான் தம்பி முதலமைச்சர்’ ‘உன்னால் முடியும் தம்பி’ உட்படப் பல நூல்களை எழுதியவர். 25 ஆண்டுகள் அமெரிக்காவில் பணியாற்றிய பின், தாய்மண்மேல் கொண்ட பற்றால் இந்தியாவுக்குத் திரும்பி மக்கள் பணியாற்றியவர். ‘மக்கள் சக்தி இயக்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கியவர்

அவ்ர் அளித்த பேட்டியின் சில பகுதிகள்:
****************************************
கே: விளநகர் முதல் விஸ்கான்ஸின் வரையிலான உங்கள் வாழ்க்கை அனுபவத்தைக் கொஞ்சம் சொல்லுங்களேன்.
ப: பிறந்து வளர்ந்ததெல்லாம் விளநகரில். அதன் அருகிலுள்ள மயிலாடுதுறையில் பள்ளிப்படிப்பு. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேதியியலில் பட்டம் பெற்றேன். பின் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியராக வேலை பார்த்த பின் சென்னையில் வேலை பார்த்தேன். மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றேன். விஸ்கான்ஸின் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன்

கே: நீங்கள் தொழில்துறையில் ஈடுபட்டது எவ்வாறு?
ப: ஓர் ஆய்வுப் பணிக்காக சிகாகோ சென்று விட்டுத் திரும்பும் வழியில் ஒரு பீட்ஸா கடையைப் பார்த்தேன். பீட்ஸாவை வீட்டுக்கு வாங்கிச் சென்றேன். வீட்டில் போய்ச் சாப்பிட்டால் அது மகா மட்டமாக இருந்தது. ஓரிரு நாட்கள் கழித்து அந்தக் கடைக்குப் போனேன். உங்கள் கடையில் வியாபாரம் மிகமிகக் குறைவாக இருக்குமே என்று சொன்னேன், கடையில் இருந்த அக்கவுண்டன்ட்டிடம். ஆமாம் என்று ஒத்துக் கொண்ட அவர், எனக்கு எப்படித் தெரிந்தது என்று ஆச்சரியத்துடன் கேட்டார். உங்கள் கடை பீட்ஸாவை இரண்டு நாள் முன்பு வாங்கிச் சாப்பிட்டேன். அது மகா மட்டமாக இருந்தது. அதிலிருந்தே தெரிந்து கொண்டேன் என்றேன். ஆமாம். உண்மைதான். முதலாளி இப்போது வெளியில் சென்றிருக்கிறார், நாளைக்கு வந்து விடுவார். நீ நாளைக்கு வந்து இதைப்பற்றி அவரிடம் பேசு என்று கூறினார். நானும் சரி என்று சொல்லி வந்து விட்டேன். மறுநாள் காலை அந்தக் கடைக்குச் சென்று முதலாளியைச் சந்தித்தேன். விஷயத்தைச் சொன்னேன். ஆமாம் என்று ஒப்புக் கொண்டவர், வியாபாரம் மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. நீங்கள் கன்சல்டன்ட்டாக இருந்து இதைச் சரிபண்ணித் தர முடியுமா என்று கேட்டார். நானும் “வொய் நாட்?” எனு சொல்லி அதற்கு ஒப்புக் கொண்டேன். முதலில் விளம்பரப் பலகையை மாற்றுவதற்கு ஏற்பாடு செய்தேன். அது அழுது வடிந்து கொண்டிருந்த நிறத்தில் இருந்தது. அதை மாற்றி, மக்கள் கவனத்தைக் கவரக் கூடியதாக அமைத்தேன். பின் வாடிக்கையாளர்/ஏஜெண்ட் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். தேவையறிந்து ஒவ்வொரு மாற்றமாகச் செய்யச் செய்ய வியாபாரம் பெருக ஆரம்பித்தது. தொடர்ந்து உணவுப் பொருள் உற்பத்தித் துறையில் இறங்கினேன். பகுதிவாரியாக ஏஜெண்டுகளைச் சந்திப்பேன். எங்களுடைய பொருள் மற்றும் தரத்தைப் பற்றி எடுத்துச் சொல்வேன். இப்படி ஓயாமல் உழைத்ததன் மூலம் அனைவரிடமும் நல்ல பெயரெடுக்க முடிந்தது. அதுவே தொழிலதிபராகும் வாய்ப்பையும் தந்தது. நஷ்டத்தில் இருந்த கம்பெனியை வாங்கி அதை லாபம் ஈட்டும் கம்பெனியாக மாற்றிக் காட்டினேன். தொழிலாளர்களுக்கான தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றினேன். இரண்டு மாதங்களுக்கொருமுறை குடும்பவிழாக்களை நடத்துவோம். அவர்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களைப் பரிசாக வழங்குவோம். பல்கலைக்கழகங்களிலிருந்து பேராசிரியர்களை வரவழைத்துச் சிறப்புப் பயிற்சிகளை அளிப்போம். மனோசக்தியைப் பற்றியும், எண்ண ஆற்றல்கள் பற்றியும் நம் இந்திய யோகிகளும், ஞானிகளும் முன்னரே குறிப்பிட்டுள்ளனர். அவற்றின் மூலம் நாம் கடவுளை உணரலாம். அவரது அருளையும் பெறலாம் தொழில் தொடங்க தன்னம்பிக்கை அவசியம்தான். ஆனால் அது மட்டுமே போதுமானதில்லை. அனுபவ அறிவு, படிப்பறிவு, எதிர்பாராத சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆற்றல், சீரான நிதி நிர்வாகத் திறமை இவையெல்லாம் இருந்தால்தான் தொழிலில் வெற்றி பெற முடியும். அப்படி உழைத்ததால் நான் ஆலோசகராக எந்தக் கம்பெனியில் வேலை பார்த்தேனோ அதன் தலைமையகம், என்னையே பொறுப்பேற்று நடத்துமாறு கூறி விட்டார்கள். இப்படி, பல நிறுவனங்களில் விற்பனையாளர் முதல் மேலாளர் வரை பல வேலைகள் பார்த்தேன். பலதரப்பட தொழில்களைப் பொறுப்பேற்று நடத்தினேன். தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தினேன். எண்ணெய் வளத்துறையிலும் ஈடுபட்டேன். பார்க்லே எனும் புதிய ரசாயன உற்பத்தி நிறுவனத்தையும் தொடங்கி நடத்தினேன். இதனால் அமெரிக்காவின் சிறந்த தொழில் முனைவோருள் ஒருவர் என்ற பட்டியலில் இடம்பெற்றேன்

கே: அவ்வளவு பெரிய தொழில் வாய்ப்பை விட்டுவிட்டு இந்தியாவிற்கு ஏன் வந்தீர்கள்?
ப: அமெரிக்காவில் வாழ்ந்ததும் செய்ததும் போதும்; இனிச் சொந்த மண்ணான இந்தியாவின் முன்னேற்றத்துக்காக உழைக்கலாம் என்று முடிவு செய்தேன். இந்தியாவுக்குத் திரும்பினேன். கல்லூரிகளில் பணியாற்ற வாய்ப்புகள் வந்தன. ஆனால் கிராமப்புற மேம்பாடே எனது முக்கியக் குறிக்கோளாக இருந்தது. சுகாதாரம், கல்வி, சத்தான உணவு என்று பல விஷயங்களில் கிராமங்கள் மிகவும் பின்தங்கி இருந்தன. அதை மேம்படுத்த உழைப்பதே முக்கியக் குறிக்கோளானது. காந்தி கிராமம் அமைப்பினரோடு இணைந்து பல விஷயங்களைச் செய்தேன். பல கிராமங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். பல விஷயங்களில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினோம். காந்தி கிராமத்தில்கூட என்னை அங்கேயே தங்கிவிடச் சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன். மக்கள் தங்கள் ஆற்றலை உணர்ந்து செயல்பட வேண்டும்; முன்னேற வேண்டும் என்பதற்காக மக்கள் சக்தி இயக்கத்தை ஆரம்பித்தேன்.

கே: களப்பணியில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மறக்க முடியாத அனுபவங்கள்…
ப: கிராம மக்கள் பலர் உண்மையில் அப்பாவிகள். விவரம் அறியாதவர்கள். ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தேன். பார்த்தால் 5, 6 பேர் வரிசையாகப் படுத்திருந்தார்கள். என்னவென்று விசாரித்தால் அவர்களுக்கு உடல்நலமில்லை. ‘டாக்டர் உதயமூர்த்தி’ என்று சொன்னவுடன் என்னைச் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். மருத்துவம் பார்க்கும்படிக் கேட்டுக் கொண்டார்கள். அப்புறம் நான் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன், “அப்பா, நான் மருத்துவ டாக்டர் அல்ல. ஆசிரியராக இருந்தவன். நாளை உங்களிடம் டாக்டரை அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னேன். அதுபோல் மறுநாள் டாக்டரை அனுப்பிவைத்தேன். இப்படி கிராமத்து மக்கள் சோம்பேறியாகப் பொழுது போக்குபவர்களாக, தங்கள் உரிமை என்னவென்று தெரியாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப் பல சம்பவங்களைச் சொல்லலாம்.

கே: தன்னம்பிக்கைக் கட்டுரைகள் எழுதும் ஆர்வம் எப்படி ஏற்பட்டது?
ப: இதற்கு முக்கியக் காரணமாக ‘இதயம் பேசுகிறது’ மணியன் அவர்களைத்தான் சொல்ல வேண்டும். என்னுடைய அனுபவங்கள் மக்களுக்குப் பயன்பட வேண்டுமென்று அவர் விரும்பினார். இங்கே பலர் தன்னம்பிக்கைக் குறைந்தவர்களாக இருந்தனர். அவர்கள் சுயச்சார்பு உடையவர்களாக மாற வேண்டும், என்பதற்காக எனது அமெரிக்க அனுபவங்ளை, நல்ல முயற்சிகளை இந்தியாவுக்குத் தகுந்த முறையில் எழுதினேன். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அவரும் தொடர்ந்து எழுத என்னை ஊக்குவித்தார். இளைஞர்கள் அவற்றை விரும்பிப் படித்தனர். கல்கி, விகடன், தினமணி எனப் பல இதழ்களில் தன்னம்பிக்கைக் கட்டுரைகளையும், சுய முன்னேற்றத் தொடர்களையும் எழுதினேன். ஆனாலும் தன்னம்பிக்கை நூல்கள் என்பது என் எழுத்தின் ஒருபகுதிதான். அது தவிரவும் பல தலைப்புகளில் நான் நிறைய நூல்கள் எழுதியிருக்கிறேன்.

கே: பல தலைவர்களுடன் பழகியிருக்கிறீர்கள் அல்லவா?
ப: ஆமாம். அண்ணா அமெரிக்கா வந்தபோது நான் கூட இருந்து வரவேற்றிருக்கிறேன். அவருடன் பயணம் செய்திருக்கிறேன். மிகவும் தன்மையானவர். எல்லோரிடமும் அன்போடு, மரியாதையாகப் பழகக் கூடியவர். கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான். அன்பாகப் பழகக் கூடியவர். அதுபோல எம்.ஜி.ஆர். நான் செய்யும் காரியங்கள் பற்றியெல்லாம் அன்போடு விசாரிப்பார். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் கூட அவரைச் சென்று பார்ப்பதற்கு எனக்கு சிறப்பு அனுமதி அளித்திருந்தார். அவருக்கு என்மீது மிகுந்த அன்புண்டு. நான் டெல்லி சென்றிருந்த போது ஆர். வெங்கட்ராமன் அவர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர் வீட்டிலேயே தங்கச் செய்து டெல்லியை சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்தார். வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லோரும் பிரியமுடையவர்கள். ஒருமுறை வானதி திருநாவுக்கரசுவும் நானும் காஞ்சி மகா பெரியவரைச் சந்திக்கப் போயிருந்தோம். பெரியவருக்குத் திருநாவுக்கரசை மிக நன்றாகத் தெரியும். பெரியவரின் புத்தகங்கள் எல்லா வானதி பதிப்பாகத்தான் வெளியாகும். அப்படிச் சந்திக்கும் போது திருநாவுக்கரசு என்னைப் பற்றியும், நான் செய்து வரும் காரியங்கள் பற்றியும் பெரியவரிடம் சொன்னார். பெரியவரும் “நல்லா இரு; நல்லா இரு” என்று சொல்லி என்னை ஆசிர்வதித்தார். அதுபோல ஜயேந்திர சரஸ்வதியும் என்னுடன் சகஜமாக உரையாடக் கூடியவர். இப்படிப் பலதரப்பட்டவர்களுடன் எனக்கு பழக்கமுண்டு.

கே: ‘உன்னால் முடியும் தம்பி’ என்ற பெயரில் உங்களை கௌரவிக்கும் விதமாக கே. பாலசந்தர் திரைப்படம் எடுத்தது குறித்து…

ப: பாலசந்தர் என் நீண்ட நாள் நண்பர். என் எழுத்தின் மீதும், காரியங்கள் மீதும் மதிப்புடையவர். அந்த மதிப்பினால் நான் எவற்றுக்காகப் பாடுபட்டுக் கொண்டிருந்தேனோ அவற்றை மையமாக வைத்து அந்தத் திரைப்படத்தை எடுத்திருந்தார். கதாநாயகனுக்குக் கூட என் பெயர்தான். எனக்கு அது குறித்துக் கடிதம் எழுதியிருந்தார். இதெல்லாம் எதற்கு என்று அவரிடம் நான் சொன்னேன். எல்லாம் உங்கள் மீது கொண்ட அன்பினால்தான் என்றார். அதிலும் புலமைப்பித்தன் ரொம்ப அற்புதமாக பாடல்களை எழுதியிருந்தார். “உன்னால் முடியும் தம்பி, தம்பி; உனக்குள் இருக்கும் உன்னை நம்பி…” என்று. நமக்குள் இருக்கும் ஆற்றலை நாம் உணர வேண்டும். அதுதான் முக்கியம். நம் இதயத்துள் கடவுள் இருக்கிறார். அவரைப் பார்க்க முடியும், பேச முடியும், உணர முடியும். அவர் நம்முள் இருப்பதை நாம் உணர வேண்டும். அந்தக் காலத்தில் அதற்கான பயிற்சி முறைகள், வேதம், தியானம் என்று எல்லாம் இருந்தது. அதையெல்லாம் உணராமல், சும்மா உன்னால் முடியும், முடியும் என்று சொல்லிக் கொண்டிருப்பதால் ஒன்றும் பயனில்லை. ராமகிருஷ்ண மடத்துக்கு எதிரே “அண்ணா” என்று ஒருவர் இருந்தார். மிகுந்த கெட்டிக்காரர். புத்திசாலி. தமிழ், சம்ஸ்கிருத இரண்டிலும் பெரிய புலமை மிக்கவர். எதுகுறித்துக் கேட்டாலும் விளக்கம் சொல்லும் அளவுக்கு திறமைசாலி. அவரது நூல்களையெல்லாம் வாங்கிப் படித்தால் பலவிஷயங்களை நாம் தெரிந்து கொள்ளலாம் என்று புலமைப்பித்தனிடம் சொன்னேன். ´

டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் ஒலி பதிவுகளாக (MP3 - Audio)டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 1 - எண்ணங்களே வருக


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 2 - எண்ணம் ஒரு விதை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 3 - எண்ணங்களின் வலிமை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 4 - ஞானிகளின் எண்ண நிலை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 5 - எண்ணமும் இயங்கும் சக்தியும்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 6 - நமது எண்ணங்கள் நமது கதிர்வீச்சு


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 7 - மாற்றிய எண்ணங்கள்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 8 - லட்சியப் பாதை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 9 - மனம் எனும் சொர்க்கவாசல்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 10 - லட்சிய தீபம்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 11 - நம்பிக்கை எனும் வழிகாட்டி


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 12 - எண்ணங்களை அடைகாத்தவர்கள்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 13 - எண்ணம் பெறும் வடிவம்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 14 - வெற்றிக்கு ஒரு எண்ணப் பாதை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 15 - மனப்பயிற்சியும் சாதனையும்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 16 - நம்மைப் பற்றிய கற்பனை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 17 - எதிர்காலத்தைப் பற்றிய கற்பனை


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 18 - உள்ளுணர்வு


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 19 - உள்ளுணர்வு கனவாக வெளிப்படுகிறது


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 20 - அதிர்ஷ்டமும் மனநிலையும்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 21 - புலனறிவும் பகுத்தறிவும்


டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தியின் எண்ணங்கள் பகுதி 22 - பிரச்னையும் பயிற்சியும்


  -----சுரேஷ் குமார்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்