Home » , » அரசின் உதவி இன்றி ஒரு சாதனை

அரசின் உதவி இன்றி ஒரு சாதனை

Written By DevendraKural on Wednesday, 30 January 2013 | 04:40


சாதிக்க பிறந்தவர்கள் சாதித்துக்கொண்டே இருக்கிறார்கள் எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும்...! அவர்களின் சாதனை பலருக்கும் தெரிய வேண்டும், தெரியவைக்கப்பட வேண்டும். சாதாரண குடும்பத்தில் பிறந்து திறமை வளர்த்து, தன்னம்பிக்கையுடன் நேர்மையாக வாழ்ந்து, பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். தங்களின் சாதனையை வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும் என்பதை விரும்பாதவர்களில் ஒரு சிலர் மட்டுமே வெளிச்சத்துக்கு வருகிறார்கள்.எதற்க்கெடுத்தாலும் அரசாங்கத்தை குறை சொல்லிக்கொண்டும் அரசை விமர்சித்து எதிர்த்தும் பேசிக்கொண்டிருப்பதை விட துணிச்சலுடன் செயலில் இறங்கி சாதித்துக் காட்ட வேண்டும். அப்படியான ஒன்றை செய்து கொண்டிருக்கிறார் ஆம்ஸ்ட்ராங் பமே !! கிட்டத்தட்ட 100 கி.மீ. தூரத்துக்கு சாலை அமைக்க ஏற்பாடு செய்து ஆச்சர்யப்பட வைத்திருக்கிறார் !யார் இவர் ?
மணிப்பூர் மாநிலம் டமீலாங் மாவட்டத்தில் ஜெமி என்னும் பழங்குடி இனத்தை சேர்ந்த முதல் ஐஏஎஸ் அதிகாரி என்ற பெருமை பெற்றவர் திரு. ஆம்ஸ்ட்ராங் பமே, 2005 ஆம் ஆண்டு டெல்லி செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவர். தற்போது தன் சொந்த மாவட்டமான டமீலாங்கின் துணை கலெக்டராக உள்ளார்.

1993ஆம் ஆண்டு 9 வயதில் இரண்டாம் வகுப்பில் படிக்கும் போது படிப்பில் சிறந்து விளங்கிய இவர், எல்லா பாடங்களிலும் 90 சதவீத மதிப்பெண்களை எடுத்து இரு முறை டபுள் பிரமோசன் பெற்றார்.இவரது அறிவியல் ஆசிரியர் இவருக்கு 120 மார்க் வழங்குவார் என்றும் 100 மார்க் பாடத்திற்கும், 20 மார்க் தனது கையெழுத்துக்கும் வழங்கினார் என குறிப்பிடுகிறார்.


டமீங்லாங் மாவட்டம், மணிப்பூர்இம்மாவட்டத்தில் நூறுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சாலை வசதி இல்லை. மக்களால் அவசரத்துக்கு மருத்துவரை சென்று பார்க்க இயலாது. மலைப்பாங்கான பிரதேசம் என்பதால் வெளியூர்களில் இருந்து மருத்துவர்கள் இங்கே வர மறுத்த நிலையில் கிராம மக்கள் சொல்லொண்ணா துன்பம் அனுபவித்து வந்தனர்.

கடந்த வருடம் ஜூன், ஜூலை மாதங்களில் டைபாய்டு, மலேரியா காய்ச்சலால் இங்குள்ள கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இவர்களின் அவல நிலையை நேரில் பார்த்த இவர், தனது டாக்டர் நண்பர்களின் உதவியை நாடினார், அதில் ஒரு தோழி இந்த ஊருக்கு வந்திருந்து தேவையான மருத்துவ உதவிகளை செய்ய சம்மதித்தார். அவரது உதவியால் 500 க்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சை பெற்று குணமடைந்தனர், உயிர் பிழைத்தனர் என்றே சொல்லலாம்.

மக்களின் துன்பத்திற்கு சாலை வசதி இல்லாததே ஒரு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொண்டார் ஆம்ஸ்ட்ராங்.

அரசின் கவனமின்மை1982ம் ஆண்டு, மத்திய அரசு 101 கோடி ரூபாய் பணத்தை இங்கு சாலை போடுவதற்காக ஒதுக்கி, திட்டத்திற்கும் அனுமதியளித்தது.ஆனால், சாலைகள் போடப்படவில்லை...!!? போன வருடம் டிசம்பர் மாதத்தில் மணிப்பூர் வந்த மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாலைகள் போடப்படாததை பற்றி விசாரித்தற்கு அங்குள்ள மாநில அதிகாரிகள் உடனே சாலை போட்டு விடுவதாக உறுதி கூறினார்களாம். உறுதி அளித்ததுடன் இந்த முறையும் நின்றுவிட்டது சாலை போடுவதை பற்றிய அரசின் பேச்சுக்கள் !!??


இப்படி பட்ட நிலையில் இனி அரசின் உதவியை எதிர்ப்பார்ப்பதை விட நாமாக முயற்சி செய்வோம் என்று மக்களின் துணையுடன் வேலையில் இறங்கினார்.

குறைந்தது 150 கிராம மக்கள் தங்களுக்குள் முறை வைத்து தினமும் சாலை போடும் வேலையை பார்த்து வருகிறார்கள். புதர் அடர்ந்த பகுதிகளை சுத்தம் செய்வது, சிறு மண் மேடுகளை சமப்படுத்துவது போன்ற பணிகளை மக்கள் மேற்கொள்ள, கரடுமுரடான பகுதிகளையும் , விழுந்து கிடக்கும் பெரிய மரங்களின் வேர் பகுதிகளையும் வெட்டி அகற்ற வாடகைக்கு அமர்த்திய புல்டவுசர், JCB யை பயன்படுத்துகிறார்கள்.நிதி வசதி

டெல்லி பல்கலைகழகத்தில் உதவி பேராசிரியராக பணி புரியும் இவரது சகோதர் இவருக்கு உறுதுணையாக இருக்கிறார். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களிடமிருந்தும் , அரசு துறையில் பணியாற்றும் சில நல்ல அதிகாரிகள் ஆகியோரிடமும் நிதி பெற்றிருக்கிறார்கள். மேலும் இவரது குடும்பத்தினர் அப்பா, அம்மா, அண்ணன், அண்ணி, இளைய சகோதரன் மற்றும் இவரது சம்பளம் எல்லாமுமாக சேர்த்து மொத்தம் 4 லட்சம் ரூபாய் பணம் செலவிட்டு இருக்கிறார்கள்.

முகநூலில் பக்கம் ஒன்றை தொடங்கி அதில் உதவி கேட்டதின் மூலமாக உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 1,20,000.00 ரூபாய் டொனேசன் கிடைத்திருக்கிறது.டெல்லி, பூனா, பெங்களூரு, சென்னை, கௌகாத்தி, ஷில்லாங், திமாப்பூர் போன்ற ஊர்களில் டொனேசன் சென்டர்களை அமைத்து நிதி உதவி பெற்றிருக்கிறார்கள்.இதை தவிர அந்த கிராம மக்களின் ஒத்துழைப்பும உதவியும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களின் வசதிக்கு தகுந்த மாதிரி வேலை செய்பவர்களுக்கு உணவு கொண்டு வந்து கொடுப்பது, தங்க வசதி செய்து தருவது , இயந்திரங்களுக்கு டீஸல், பெட்ரோல் வழங்குவது என்று சுயநலம் சிறிதும் இன்றி உதவி இருக்கிறார்கள்.மாதம் ஆயிரம் ரூபாய் பென்சன் வாங்கும் ஒரு முதியவர் தனது ஒரு மாத பென்சன் தொகையை இப்பணிக்காக கொடுத்துவிட்டு, "என் ஆயுளுக்குள் எப்படியாவது ஊருக்குள் மோட்டார் வாகனங்கள் வருவதை பார்த்துவிட வேண்டும் " என்று சாலைவசதி வரும் நாளை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறாராம்...!!கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட இப்பணி இடையில் கடுமையான மழை பொழிவினால் சிறிது தடைபட்டிருக்கிறது. பின் முழு வீச்சுடன் செயல்பட்டு கொண்டிருக்கிறது. 70 கி மி தூரப் பணிகள் முடிவடைந்து விட்டது. இது மணிப்பூர் , அசாம், நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களை ஒன்றிணைக்கும் வகையில் உள்ளது !!இத்தகைய சிறந்த செயல் இன்னும் மாவட்டத்தின் வெளியில் இருக்கும் பலரால் கவனிக்கப்படவில்லை. அதை இவர்கள் பெரிது படுத்தவும் இல்லை, அரசாங்கத்தின் நிதி உதவி இன்றி தனி ஒரு மனிதனாக மேற்கொண்ட இம்முயற்சி பொது மக்கள், நண்பர்கள் உறவினர்கள், போன்றோரின் துணையுடன் வெற்றிகரமாக செயல்பட்டு முடியும் தருவாயை நெருங்கிவிட்டது. வரும் டிசம்பருக்குள் வேலை நிறைவடைந்து மக்களுக்கு கிறிஸ்மஸ் பரிசா இந்த சாலை வசதி இருக்கும் என்று சந்தோசமாக நம்பிக்கையுடன் கூறுகிறார் ஆம்ஸ்ட்ராங் பமே அவர்கள் !ஐ ஏ எஸ் ஆனால் தான் இதை எல்லாம் செய்ய முடியும் என்று இல்லை. நமது தகுதி, திறமை, வேலை, வசதிகளுக்கு ஏற்ற மாதிரி குறைந்த பட்சம் நாம் வசிக்கும் தெருவிலாவது ஏதோ ஒரு நல்லதை செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் அரசு செய்யும், அரசின் கடமை என்று சொல்லாமலும், நாமதான் வரி கட்டுறோமே என்று வரி கொடுப்பதே பெரிய உபகாரம் என்பதை போல் நடந்துகொள்ளும் சராசரிகளாக இல்லாமல் இருப்போம் !!

நாம் வாழும் சமூகம், நாளை நம் குழந்தைகள் வாழபோகும் சமூகம் நன்றாக இருக்க வேண்டாமா ?! வாழ்நாளில் ஒரு மரம் நடாதவர்கள் கூட நம்மிடையே இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் இன்று ஒரு மரத்தையாவது நடுங்கள் !தன் வீட்டை சுத்தப்படுத்தி அடுத்த வீட்டு வாசலில் குப்பையை கொட்டும் தேசிய பழக்கத்தை மட்டுமாவது இன்றே நிறுத்துவோம், நிறுத்த முயற்சியாவது செய்வோம்.தமிழ்நாட்டிலும் பல கிராமங்கள் சாலை வசதி இன்றி இருக்கின்றன...மாணவர்கள் கல்வி கற்க பல கிலோ மீட்டர் தூரம் கல்லிலும் முள்ளிலும், ஆற்றை கடந்தும் பயணிக்கிறார்கள். இங்கும் ஆம்ஸ்ட்ராங் போல ஒருவர் தேவைப் படுகிறார்...!!திரு.ஆம்ஸ்ட்ராங் பமே அவர்களின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.வாழிய எம் நாடு !! வாழிய எம் மக்கள் !!* * * * *

Sources:http://e-pao.net/epSubPageExtractor.asp?src=education.Jobs_Career.Armstrong_Pame_as_I_see

http://www.northeasttoday.in/our-states/nagaland/northeast-villagers-pool-money-to-build-road-set-christmas-deadline

http://articles.timesofindia.indiatimes.com/2012-11-03/india/34892690_1_tamenglong-village-motorable-road


DYWA
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்