அய்யோ...வினோதினி !

Written By DevendraKural on Tuesday, 12 February 2013 | 11:18


இன்று காலையில் இந்தச் செய்தியைக் கேட்டதில் இருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை. காதல் செய்கைகள் வாழ்க்கையில் சகஜமானதுதான் என்றாலும், சில அரைவேக்காடுகள் அதனைப் புரிந்து கொள்ளாத வெறியர்களாக இருப்பதையும் காண முடிகிறது.. வினோதினியின் இந்தக் கொடூர மரணத்திற்குக் காரணமானவனை நான் மரண தண்டனையை முற்றிலுமாக எதிர்ப்பவன் என்றாலும்....... ஒரு நிமிடம்  முகத்தில் கட்டுப் போட்டிருக்கும் நிலையில் வெளியாகியிருக்கும் வினோதினியின் வீடியோவைப் பார்த்தவுடனேயே “அவனை படுக்க வைச்சு அப்படியே புல்டோசர் வைச்சு ஏத்திரலாம்”னு என் நெஞ்சு கொதித்தது என்னவோ உண்மை..!


எப்பேர்ப்பட்ட கொடுமை இது..? பாவம் அவரது தந்தை..  தேவதை போன்ற தனது மகளை, இத்தனை ஆண்டுகள் வளர்த்துவந்து, அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கிப் போய் கிடப்பதை இந்த 3 மாதங்களாக பார்த்து எத்தனை துடித்திருப்பார்..! எவ்வளவு ஆறுதல் வார்த்தைகள் கூறினாலும் அவரை ஆற்றுப்படுத்திட முடியாது..! 

கடந்த சில ஆண்டுகளாகவே காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசீட் வீசும் வெறித்தனம் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது..! நேற்று கூட ஒரு பெண்ணின் மீது கெரசினை ஊற்றி எரிக்க முயன்றிருக்கிறான் ஒரு முட்டாள்..! இப்படி அரைவேக்காட்டுத்தனமாக காதலை அணுகுபவர்களையும், கொடுஞ்செயலை செய்ய நினைப்பவர்களையும் ஒரு நொடியில் அடையாளம் கண்டுவிட முடியாது.. தடுக்கவும் முடியாது..!

நம்மால் முடிந்தது, இந்தத் திராவகம் போன்ற நச்சுக்கள் மக்கள் கைகளில் எளிதாக கிடைக்கவிடாமல் செய்ய வேண்டும்..! அரசுகள் இந்த விஷயத்தில் முனைப்பாகச் செயல்பட்டு இதற்கொரு சட்ட வடிவையாவது கொண்டு வந்து தடுத்தாக வேண்டும்..! தற்கொலைக்கு நகைப்பட்டறை உரிமையாளர்களே சயனைடை பயன்படுத்தினார்கள்.. இப்போதும் அதுதான் அவர்களுக்குப் பயன்படுகிறது.. ஆனால் இதனைத் தடை செய்யவும் முடியாது.. கட்டுப்படுத்தவும் முடியாது.. ஆனால் திராவக பயன்பாட்டை மாநில அரசு நினைத்தால் தடுக்க முடியும்..!

இத்தனை பெரிய கொடூரத்தையும் தாங்கிக் கொண்டு இத்தனை நாட்கள் மூச்சுவிட்டுக் கொண்டிருந்த வினோதினியின் மன தைரியத்தை பாராட்டியே ஆக வேண்டும்.. இத்தனைக்குப் பிறகும் தான் இன்னமும் வாழ வேண்டும் என்று நினைத்து பேசிய வினோதினியின் வைராக்கியத்தை ஆச்சரியத்துடன் பார்க்க வேண்டியிருக்கிறது..! பல இடங்களில் இருந்தும் கிடைத்த நன்கொடைகளைக் கொண்டு மிக நீண்ட தாமதத்திற்குப் பின்பு மேல் சிகிச்சை செய்யத் துவங்கியதே இந்த பரிதாப மரணத்துக்குக் காரணம் என்று இப்போது அனைவருமே வருத்தப்படுகிறார்கள்.

இதில் அரசின் அலட்சியப் போக்கும் ஒரு காரணம்..! இத்தனை சீரியஸான நிலைமையில் இருக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, அரசு தனி அக்கறை எடுத்து அப்பலோ போன்ற பெரிய மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்திருக்க வேண்டும்.. இது அரசின் கடமையும்கூட..! இதுவும் ஒரு வன்முறைச் சம்பவம்தான்..! இதில் குற்றவாளியை கைது செய்து ஜாமீனில் விடாமல் வைத்திருக்கிறோம் என்று சொல்வதில்தான் என்ன கடமையுணர்ச்சி இருக்கிறது..? உடனே, உரிய மருத்துவ உயர் சிகிச்சைகள் செய்திருக்க வேண்டாமா..? இப்போது இறந்தவுடன் சர்ச்சைகள் கிளம்பியிருக்கின்றன.. ஒரு பக்கம் சரிவர கவனிக்கவில்லை என்று வினோதினி தரப்பும், தாமதமாக வந்ததால் எங்களால் காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர்களும் மாறி, மாறி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்..!

அதேபோல் காவல்துறையில் புகார் செய்திருந்தும் எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டதோடு காவல்துறை ஒதுங்கிக் கொண்டதாகவும் வினோதினியின் குடும்பத்தார் புகார் செய்கிறார்கள். காவல்துறையிடம் இதைப் பற்றிக் கேட்டால்,  “அவன் ஆசிட் அடிப்பான்னு யாருக்கு தெரியும்..” என்றுதான் நிச்சயம் சொல்வார்கள்..! இந்தப் பெண்ணுக்குத்தான் எத்தனை எதிரிகள்..? சுரேஷை தொடர்ந்து, காவல்துறை, கண்டுகொள்ளாத அரசு, கிடைக்காத மருத்துவ வசதிகள் என்று இத்தனை எதிரிகளையும் சமாளித்து இந்த 3 மாத காலம் உயிருடன் இருந்ததே பெரிய விஷயம்தான்..! 

இன்றைய நிலையில் சுரேஷ் என்னும் கிறுக்கன் செய்த இந்தக் கொலை நமக்கும் ஒரு எச்சரிக்கை பாடமாகவே அமைய வேண்டும்.. இத்தனை அழகு, அறிவுடன் மிதந்து கொண்டிருந்த ஒரு மகளை, தேவதையை இழந்த அந்தக் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்..! 

....உண்மைத்தமிழன்

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்