Home » » டெல்லி வராத ராஜபக்ச... திருப்பதிக்கு வந்த "றோ" அதிகாரி! ஓயாத போராட்டம்!

டெல்லி வராத ராஜபக்ச... திருப்பதிக்கு வந்த "றோ" அதிகாரி! ஓயாத போராட்டம்!

Written By DevendraKural on Wednesday, 13 February 2013 | 03:12





டெல்லி, புத்தகயா, திருப்பதி... என ராஜபக்ச செல்லும் இடம் எல்லாம் சென்று விரட்டி விரட்டிக் கறுப்புக் கொடி காட்டி வந்திருக்கிறார்கள் தமிழின உணர்வாளர்கள்! இனப் படுகொலைகள் மூலம் இனப் பிரச்சினைகளைத் 'தீர்த்து’க்கொண்டு இருக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ச, இந்தியாவில் அடிக்கடி புனிதப் பயணங்களையும் மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்டம்பரில் மத்தியப் பிரதேசம் சாஞ்சிக்கு வந்தவர், இப்போது மீண்டும் திருப்பதிக்கும் புத்தகயாவுக்கும் மனைவியோடு பயணம் செய்தார்.



அரசு மரியாதையோடு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் சித்தூர் கலெக்டரும் வரவேற்க, தமிழக அரசியல் கட்சிகள் போராடி ராஜபக்சவின் புனிதத் தூதுச் சாயத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கின.



பிரதமர் வீடு முற்றுகை!



டெல்லியில் கடந்த 8-ம் தேதி ஜந்தர் மந்தரில் திரண்ட ம.தி.மு.க. தொண்டர்கள், வைகோவை பின்தொடர்ந்து பிரதமர் வீடு நோக்கி ராஜபக்சவை எதிர்க்கும் கோஷத்தோடு சீருடையுடன் வரிசையாக அணிவகுத்து சென்றனர். இந்த முற்றுகைப் போராட்டத்தின் இடையே வைகோ ஆவேசமாகப் பேசி, டெல்லி மக்களின் கவனத்தை ஈர்த்தார்.



ராஜபக்சவின் கொடும்பாவியைத் தொண்டர்கள் கொளுத்த... வைகோவும் ராஜபக்ச படத்தைப் போட்டு கொளுத்தினார். இந்தத் தீவைப்புக்குப் பின்னர் பிரதமர் வீட்டை முற்றுகையிடப் புறப்பட்டது வைகோ டீம்.



பொலிஸார் குவிக்கப்பட்டு, தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகனங்களுடன் தயாராக இருந்தனர். 'தடையை மீறி புறப்​பட்டால் கைதுசெய்வோம்’ என்று பொலிஸார் கூறியவுடன், இந்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள். அதன்பிறகு கைது செய்யப்பட்டார்கள்.



வைகோ, நாடாளுமன்ற பொலிஸ் நிலைய அறை​யில் அமரவைக்கப்பட்டார். ''நான் 10-க்கு மேற்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்டு இங்கு கைது செய்யப்பட்டு இந்த அறையில் அமர்த்தப்பட்டேன்.



இதே அறையில்தான் பகத் சிங்கும் அடைக்கப்பட்டார். அவரது போராட்டம் வென்றதுபோல் என்னுடைய போராட்டமும் வெல்லும்'' என்றார் வைகோ.



பீகார் எம்.எல்.ஏ-க்களின் எதிர்ப்பு!



டெல்லியில் வைகோ கைதுசெய்யப்பட்ட அதே நேரத்தில்... மனைவி ஷிராந்தி, மகன்கள் யோகித்த, ரோகித்த ஆகியோருடன் புத்த கயா சர்வதேச விமான நிலையம் வந்து இறங்கினார் ராஜபக்ச.



பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதே விமான நிலையத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. சோம் பிரகாஷ், கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.



அங்கிருந்து புத்தருக்கு ஞானம் கிடைத்த புத்த கயாவுக்குப் புறப்பட்டார். அவர் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 'போர்க் குற்றவாளியே திரும்பிப் போ’ என்ற போஸ்டர்​களுடன் இடதுசாரி அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அவர்களை அவசர அவசரமாக பொலிஸார் அப்புறப்படுத்தினர்.



புத்த கயாவுக்கு வந்த ராஜபக்சவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் முழு மரியாதை கொடுத்து புத்த பிக்குகள் வரவேற்றனர். புத்தர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.



1,500 ஆண்டுக்கு முன்பு புத்தர் ஞானம் பெற்ற மகாபோதியில் (அரச மரம்) வழிபாடுகளை முடித்துவிட்டு, அங்கேயே அமர்ந்து குடும்பத்தோடு தியானம் செய்தார்.



கோயிலுக்குள் இன்னொரு சுயேச்சை எம்.எல்.ஏ-வான ஓம் பிரகாஷ், தனது ஆதரவாளர்களுடன் நுழைந்து எதிர்ப்பு கோஷம் எழுப்பினார்.



புத்த கயா விழாக்கள் முடிந்த பிறகு, ராஜபக்ச​வுக்கு நிதிஷ்குமார் மதிய விருந்து அளித்தார். அப்போது, நாளந்தா பல்கலைக்கழகத்தின் சின்னம் பொறித்த நினைவுப் பரிசை ராஜபக்சவுக்கும், அதிபர் மனைவி ஷிராந்திக்கு பட்டு சேலையும் பரிசளித்தார்.



ஹோட்டலில் மதிய விருந்து நடந்தபோது, ராஜபக்சவைக் கண்டித்து இடதுசாரி அமைப்பு​களைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.



அவர்களை பொலிஸார் கைதுசெய்து, பின்னர் விடுவித்தனர். தமிழ் அமைப்புகளே இல்லாத புத்த கயாவிலும் கடும் எதிர்ப்புகள் வெடித்தது, ராஜ​பக்சவுக்கும் உளவு அமைப்புகளுக்கும் எதிர்பாராத திருப்பமாக இருந்தது.



திகைத்து நின்ற திருப்பதி!



புத்த கயா பயணத்தை முடித்துக்கொண்டு, 4.30 மணிக்கு திருப்பதிக்கு வர வேண்டிய ராஜபக்ச மாலை 5.30 மணிக்குத்தான் ரேணிகுண்டா வந்தார்.



ராஜபக்ச வருகைக்கு முன்னதாகவே ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்​தைகள், தந்தைப் பெரியார் திராவிடர் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்களால் திருப்பதியே அல்லோலகல்லோலப்பட்டுக் கிடந்தது.



விமான நிலையத்தில் இருந்து திருப்பதி வரை உள்ள 38 கி.மீ. சாலை வழியெங்கும் பொலிஸார் நிறுத்தப்பட்டு இருந்​தனர். ராஜபக்ச வருகைக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே ரேணிகுண்டா - திருப்பதி சாலை மூடப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிப்​பட்டனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் வீடு திரும்ப முடியாமல் தவித்தனர்.



திருமலையில் நடந்த முதல் ஆர்ப்பாட்டம்!



ரேணிகுண்டா விமான நிலையத்தில் இருந்து திருப்பதி நேரு மாநகராட்சி பள்ளி மைதானத்தில் ஹெலி​காப்டரில் வந்து இறங்க, விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.



மாலை 5 மணிக்கு மேல் ஹெலிகாப்டரை பயன்படுத்த முடியாது என்று சாலை மார்க்கமாகவே குண்டு துளைக்காத புல்லட் புரூஃப் காரில் பலத்த பாதுகாப்புடன் திருப்பதி வந்தார்.



ரேணிகுண்டா மற்றும் திருப்பதி முழுவதும் ராஜபக்ச வந்து செல்லும் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.



திருமலையில் ஸ்ரீகிருஷ்ணா காட்டேஜ் சொகுசு விடுதியில் ராஜபக்ச தங்கினார். எதிர்​பாராத வகையில், அந்த ஹோட்டல் அருகிலும் ம.தி.மு.க-வினர் 100 பேர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருமலையில் இதுவரை எந்தவொரு கண்டன ஆர்ப்பாட்டங்களோ, ஊர்வலங்களோ நடந்தது இல்லை என்பதால், ம.தி.மு.க-வினர் நடத்திய போராட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.



அவர்களை உடனடியாக அப்புறப்படுத்திய பொலிஸார், திருமலையில் உள்ள விடுதிகளில் சோதனை நடத்தினர். இதனால், ரூமில் தங்கி இருந்த தமிழக பக்தர்கள் பலர் கடும் சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர்.



ராஜபக்சவுக்கு இரண்டு லட்டு!



9-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு நடந்த சுப்ரபாத சேவாவில் ராஜபக்ச குடும்பத்துடன் கலந்துகொண்டார்.



வைகுண்டம் கியூ 1 வழியாக வந்த அவர்களை திருமலை-திருப்பதி தேவஸ்​தான இணை அதிகாரி கே.சீனிவாச ராஜு வரவேற்றார்.



ஏழுமலையான் கோயில் வாசலில் பிரதான அர்ச்சகர் மற்றும் வேதபண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி வரவேற்றனர்.



கோயிலுக்குள் சென்ற ராஜபக்ச குடும்பத்தினர், 40 அடி தூரத்தில் இருந்து சுப்ரபாத சேவாவில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.



ஆளுக்கு இரண்டு லட்டு, தீர்த்தப் பிரசாதம், ஆன்மிக புத்தகம், ஏழுமலையான் படம் ஆகியவற்றை வழங்கி வாழ்த்தினர்.



திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி​களிடம் பேசிய ராஜபக்ஷே, ''ஸ்ரீனிவாச கல்யாண நிகழ்வை இலங்கையில் நடந்த வாருங்கள்'' என்று அழைப்பு விடுத்தார்.



றோ அதிகாரி!



கிருஷ்ணா காட்டேஜுக்கு சென்ற ராஜ​பக்சவை இந்திய உளவுத் துறையான றோ (ஆர்.ஏ.டபிள்யூ) அமைப்பின் இயக்குநர் அலோக் ஷோசி சந்தித்துப் பேசினார்.



இந்த சந்திப்பு அரைமணி நேரம் நடந்தது. டெல்லி பயணத்தை தவிர்த்துவிட்டு புத்த கயா, திருப்பதி வந்த ராஜபக்சவை உளவு அமைப்பின் உயர் அதிகாரி பார்த்தது முக்கியத்துவம் பெறுகிறது.



இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு 11.50 மணிக்குப் புறப்பட்டு ரேணிகுண்டா வழியாக தனி விமானத்தில் இலங்கைச் செல்ல ராஜபக்ச பயணத் திட்டம் இருந்தது.



ஆனால், திருப்பதியில் நடந்த தொடர் போராட்டங்கள் காரணமாக இரண்டு மணி நேரம் தாமதமாகவே புறப்பட்டார்.



இருப்பினும், திருமலை ஸ்டேட் வங்கி சாலையில் ராஜபக்ச காரில் வந்தபோது அவரது கார் அருகே சென்று ம.தி.மு.க-வைச் சேர்ந்தவர்கள் கறுப்புக் கொடி காட்டினர். இதை யாரும் எதிர்பார்க்கவில்லை.



இனி இந்தியா வந்தால் கறுப்புக் கொடி வரவேற்பும் இருக்கும் என்பதை காட்டிவிட்டார்கள்!



திருப்பதிக்கு அவர் வந்ததே அவமானம்!



தந்தைப் பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன்:



திருப்பதியில் நடந்த போராட்டம் எழுச்சியோடு நடந்தது. டெல்லியில் வைகோ போராட்டத்தை அறிவித்த​வுடன், ராஜபக்சவின் டெல்லி பயணம் ரத்தாகி விட்டது.



அதுபோல சென்னையில் போராட்டம் நடத்திய மற்ற கட்சிகள் அனைவரும் 'திருப்பதிக்கு வருவோம்’ என்று அறிவித்து இருந்தாலே, ராஜ​பக்சவின் திருப்பதி பயணமும் ரத்தாகி இருக்கும்.



சென்னையில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் உள்ள கோயிலுக்கு வந்த ராஜபக்சவைத் தடுக்க முடியாத நாம், கடல் கடந்து பிறிதொரு நாட்டில் வாழும் தமிழ் மக்களை எப்படிக் காக்கப் போகிறோம்?''



தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் - தலைவர் வேல்முருகன்:



தமிழ்ப் பெண்களை மானபங்கப்​படுத்திய, தமிழ்ப் பெண்களை வெள்ளைச் சேலை உடுத்தச் சொன்ன ராஜபக்சவுக்கு பீகார் அரசு முதல் மரியாதை கொடுத்ததோடு மட்டுமல்லா​மல், அவரின் மனைவிக்கு பீகார் முதல்வர் பட்டு சேலை பரிசளிக்கிறார்.



இப்படிப்பட்ட நிதிஷ்குமாருக்கு என்ன அனுப்பலாம் என்பதை தமிழர்கள் விரைவில் முடிவு செய்ய வேண்டும்!



ஜூனியர் விகடன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்