Home » , » இறுதி கட்டப் போர்: உறைய வைக்கும் உண்மை..

இறுதி கட்டப் போர்: உறைய வைக்கும் உண்மை..

Written By DevendraKural on Wednesday, 20 February 2013 | 12:13


இலங்கையில் உள்நாட்டுப்போர் முடிந்து எத்தனையோ நாட்கள், மாதங்கள் கடந்துவிட்டன. வருடங்கள் தொலைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் யுத்தத்தின் இறுதிக்கணங்களில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு மட்டும் இன்னுமும் நீதி கிடைக்கவில்லை..
அங்கு என்ன நடந்தது என்பதை சனல் 4 தொலைக்காட்சி 2 ஆவணப்படங்களை ஏற்கனவே வெளியிட்டது.. அடுத்த மாதம் ஐநா மனித உரிமை கவுன்சில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் அங்கு வெளியிடுவதற்காக இன்னுமொரு ஆவணப்படத்தை தயாரித்துள்ளது சனல் 4.
NO FIRE ZONE என்ற அந்த புதிய ஆவணப்படத்தில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிருடன் இருந்த கடைசி நேர புகைப்படங்கள் உட்பட புதிய காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
ஆவணப்படம்:
மாலையில் 4 மணி நேரத்திற்கு பிறகு நாங்கள் கடுமையான வெடிகுண்டு தாக்குதலில் இருந்து உயிர் தப்பியிருந்தோம். நாங்கள் இருந்த இடத்திற்கு தெற்கு பகுகியில் இருந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மணல் மூட்டைகள் மற்றும் தடுப்புகளுக்கிடையில் ஒழிந்திருந்த எங்கள் மீது எல்லா திசைகளில் இருந்தும் தாக்குதல் நடத்தப்பட்டது.
கண்விழித்துப் பார்த்தபோது, தாக்குதலில் படுகாயம் அடைந்த ஒரு இளம்பெண்ணின் உடல் என்மீது கிடந்தது.. அது தாக்குதலை விட என்னை அதிகம் அதிர வைப்பதாக இருந்தது. வெடிகுண்டின் கூர்மையான துகள்கள் அந்த பெண் உடலை கிழித்திருந்தன... அந்த பெண் இறக்கும் தருவாயில் இருந்தார். எனது அதிஷ்டமும் மெல்ல மெல்ல கரைந்து வருவதை நான் உணர்ந்தேன் என தெரிவித்தார் பீட்டர் மெக்கே, சர்வதேச ஐ.நா. ஊழியர்.
அடுத்த நாள் காலை... அந்த இடம் பேரழிவுக்களமாக காட்சியளித்தது. என் அறிவுக்கெட்டிய வரையில் நான் கண்ட காட்சிகள் அத்தனையும், மிக மிக மோசமானதாகவும், திட்டமிடப்பட்ட போர்க்குற்றத்தின் சாட்சிகளாகவும் இருந்தன..
எல்லாவிதமான நவீன ஆயுதங்கள் அருகேலேயே வைக்கப்பட்டிருந்த இடத்தை இலங்கை அரசு, ஏன் பாதுகாக்கப்பட்ட பகுதி என அறிவிக்க வேண்டும் . ? பாதுகாக்கப்பட்டப் பகுதியில் தனது ராணுவத்தைக் கொண்டு இவ்வளவு குண்டுகளையும், ஆயுதங்களையும் எல்லா திசைகளில் இருந்தும் பயன்படுத்தியது என்று தெரியவில்லை..
ஒன்று பொதுமக்கள் இறப்பை பொருட்படுத்த வில்லை அல்லது திட்டமிட்டே அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்க வேண்டும். ராணுவத்தின் இந்த செயல் இத்தனை பேரை கொல்லும் என்று நிச்சயமாகத் தெரிந்துதான் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.. அப்பாவிகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் இப்படித்தான் நடந்தது என்று நம்புகிறீர்களா?
நிச்சயமாக.. நிச்சயமாக..
கொல்லப்பட்ட இடத்தில், 5 பேர் இறந்து கிடந்தார்கள்.. அவர்களுடன் ஒரு சிறுவனும்.... அந்த சிறுவன், பாலச்சந்திரன் பிரபாகரன்.. விடுதலைப்புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 12 வயது மகன்... பாதுகாவலர்களுடன் இறந்து கிடந்தான்.. அவன் உடலில் 5 குண்டுகள் பாய்ந்திருந்தன.. சில குண்டுகள் அவன் கை தொடும் தூரத்தில் ... 2, 3 அடி நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டவை என்பது குண்டுப்பட்ட காயத்தில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்..இது கொலைதான் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை..
இலங்கை இராணுவ வீரர்களின் பாதுகாப்பில் பாலச்சந்திரன் உயிருடன் இருக்கும் காட்சிகள் அடங்கிய உறைய வைக்கும் புகைப்படங்கள் எங்களுக்குக் கிடைத்தன. சிறுவன் கொல்லப்படுவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்டதாக அவை இருந்தன. அந்த இளம் குழந்தை இராணுவத்தின் பிடியில் இருந்ததையும், எதையோ சாப்பிடும் காட்சிகளும் அதில் இருந்தன..
கொல்லப்படுவதற்கு முன் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் மனிதாபமற்ற கொடூர கொலைக்கு சாட்சியாக உள்ளது.
இது ஒரு போர்க்குற்றம்.. இதுபற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பாக இருக்கிறது..
வாணி விஜி, ஈழத்தமிழர்
மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பாலத்தை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.. ஒரு மூதாட்டி இலங்கை அதிகாரியிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அந்த மூதாட்டியைப் பார்த்து சிரித்த அந்த அதிகாரி, பாலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருந்த அசுத்தமான தண்ணீரைக் காட்டி, " அதைப்போய் குடி " என்றார்.. அங்கு நான் பார்த்ததெல்லாம், உயிரற்ற சடலங்களைத்தான்.. தண்ணீருக்கு மேலே உடல்கள் மிதந்து கொண்டிருந்தன. எல்லாவற்றையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு, நாங்கள் அந்த தண்ணீரை எடுத்துக்குடித்தோம்..
 ஆவணக்குரல்
விடுதலைப்புலிகள் என்று சந்தேகிக்கப்பட்ட இளம் பெண்கள், ஒரு வாகனத்தில் ஏற்றப்பட்டிருந்தார்கள்.... 20 விநாடிகள் மட்டுமே எங்களுக்கு இந்த காட்சிகள் கிடைத்தன.
அதன் பிறகு அந்த பெண்களுக்கு என்ன ஆனது என்று எங்களுக்குத் தெரியவில்லை..
முதன்முதலில் நான் வன்னிக்குச் சென்றபோது, அந்த இடம் மிக அழகானதாக இருந்தது.. ஆனால் இப்போது, எங்கு பார்த்தாலும் இறந்த உடல்கள்.... பற்றி எரியும் காட்சிகள்... ஷெல் குண்டுகள்....
எங்கு பார்த்தாலும் உயிர்ப்பற்ற இருட்டு....
இலங்கைக்கு எச்சரிக்கை:
சனல் 4 வெளியிடும் NO FIRE ZONE: KILLING FIELDS OF SRI LANKA ஆவணப்படம் உண்மையை வெளிக்கொணரும் ஆவணப்படம் என்று கூறியுள்ள சனல் 4 இயக்குனர் கெலம் மெக்ரே, இலங்கையில் நடைபெற்ற குற்றங்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஒருமுறை அந்த மண்ணில் இரத்தம் சிந்தப்படுவது தவிர்க்க முடியாதது ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.
சனல் 4 நிறுவனம் NO FIRE ZONE: KILLING FIELDS OF SRI LANKA என்ற பெயரில் ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டிருந்தது சனல் 4 நிறுவனம்.
ஜெனிவாவில், இந்த மாதம் 25ம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 22 ம் தேதி வரை நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக்கூட்டத்தின் போது இந்த ஆவணப்படத்தை திரையிட்டும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பவும் முடிவு செய்துள்ளது சனல் 4.
அனுபவம் வாய்ந்த ஆவணப்பட இயக்குனர்கள், தொழில் நுட்ப வல்லுர்களைக் கொண்டு மூன்று ஆண்டுகள் உழைப்பில் இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
துணிச்சலான பெரும்பாலும் இலங்கையை விட்டு வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மற்றும் சிங்கள பத்திரிகையாளர்களின் அயராத உழைப்பின் வெளிப்பாடாக இந்த ஆவணப்படம் உருவாகியுள்ளதாக சனல் 4 இன் இயக்குனர் கெலம் மெக்ரே தெரிவித்துள்ளார்.
தமது முந்தைய ஆவணப்படத்திற்கு சாட்சிகளற்ற போர் என்று பெயரிட்டிருந்ததை சுட்டிக்காட்டி பேசியுள்ள மெக்ரே, நடந்த போர்க்குற்றங்களுக்கு சாட்சிகள் இன்னமும் உள்ளன என்று கூறியுள்ளார். அவர்கள்தான் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பியவர்கள் என்றும் கூறியுள்ளார்.
இறந்தவர்கள்..இலங்கை இராணுவ வீரர்கள் ஆகியோரின் கைவிடப்பட்ட மொபைல் போன்கள், கமராக்கள் என ஆயிரக்கணக்கான ஆவணங்களும் சாட்சிகளும் சேகரிக்கப்பட்டு அவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்த அனைத்து வல்லுனர்களின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மெக்ரே கூறியுள்ளார்.
போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களே இலங்கையில் பதவியில் நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ள மெக்ரே....இந்த ஆவணங்கள் அனைத்தும் பொய் என்று மறுக்க எந்த அளவுக்கும் முயற்சி செய்வார்கள் என்றும் கூறியுள்ளார்.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்