
தவறுகளுக்கு மரணத்தண்டனை ஒருபோதும் ஈடாகாது என ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர்களில் ஒருவரான பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
" நாடாளுமன்ற தாக்குதல் போன்ற குற்றங்கள் தவறானதுதான். ஆனால் இதற்கு மரணத்தண்டனைகள் தீர்வாகாது. தீவிரவாதத்தை மேலும் தூண்டுவதற்குத்தான் இது பயன்படும்.
எவரோ ஒருவர் புத்திகெட்டுப்போய் கொலை செய்தார் என்ற குற்றத்திற்காக, அவரை தூக்கில்போடும் செயலுக்கும், அந்த புத்திகெட்ட நபர் செய்த செயலுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது? தவறுகளுக்கு மரணத்தண்டனை ஒருபோதும் ஈடாகாது.
காந்தி பிறந்த தேசத்தில் மரணதண்டனை ஒழிக்கப்பட வேண்டும். அப்சல் குருவுக்கு மரணதண்டனை கொடுத்ததால், காஷ்மீரில் இப்பொழுது பிரச்சினை வெடிக்கும் என்று அரசே, 144 தடை உத்தரவு பிறப்பித்து பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவும் ஒரு வன்முறையை தூண்டும் செயல்தானே...?
குற்றங்களுக்கு தண்டனை கூடாது என்பது எனது கருத்தல்ல. 'கண்ணுக்கு கண், பல்லுக்குப் பல்' என்ற தண்டனையை மாற்ற வேண்டும். தூக்குத்தண்டனை போன்ற கடுமையான தண்டனையால் அவரது குடும்பமே அனாதையாகிறது.
குற்றவாளி என்று தூக்கிலிடப்பட்டவரின் குடும்பத்தினர் செய்த பாவம் என்ன? அவர்களுக்கும் ஏன் தண்டனை கொடுக்கிறீர்கள். இதன் மூலம் அவரது குடும்பத்தினர் வாழ்வையே இழக்கிறார்கள்.
இப்படி அடுத்தடுத்து தூக்குத் தண்டனை நிறைவேற்றுவதை பார்க்கும்போது, எங்கே எனது மகனையும் தூக்கில் போட்டுவிடுவார்களோ என் அஞ்சுகிறேன்..." என்ற அற்புதம்மாள், " எனது மகனுக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்' என்று கண்களில் நீர் ததும்ப வேதனையோடு தெரிவித்தார்.