Home » » முதல்-அமைச்சர் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்: அமைச்சர் சுந்தர்ராஜன்

முதல்-அமைச்சர் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறார்: அமைச்சர் சுந்தர்ராஜன்

Written By DevendraKural on Friday, 8 February 2013 | 03:39





பரமக்குடி, போகலூர் யூனியன் அளவிலான மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாம் பரமக்குடி ஆர்.சி.யாதவா பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமை தாங்கினார். நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி, போகலூர் யூனியன் தலைவர் நாகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் சுந்தர் ராஜன் முகாமை தொடங்கி வைத்தார். பின்பு ஆயிரத்து 300 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை, தையல் இயந்திரங்கள், பசுமை வீடுகள், திருமண உதவி தொகை போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.



விழாவில் அமைச்சர் சுந்தர்ராஜன் பேசியதாவது:-



முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனைத்து தரப்பினரும் பயன்படும் வகையில் பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் உதவி தொகை, வேலைவாய்ப்பில் முன்னுரிமை உள்ளிட்ட பல சலுகைகளை வழங்கி வருகிறார். இது தவிர அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.



அ.தி.மு.க. ஆட்சியில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ராமநாதபுரம் மாவட்டத்தின் மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார். விவசாய நிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாறி வருகிறது. விவசாயிகள் இதனை தவிர்க்க வேண்டும். அரசு திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை விரைவாக சென்றடைய வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி அதிகாரிகள் அனைத்து நலத் திட்டங்களையும் உடனுக்குடன் செயல்படுத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் சாதி, மத பேதங் களை மறந்து ஒற்றுமையுடன் வாழ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



விழாவில் நகரசபை தலைவர் கீர்த்திகா முனியசாமி பேசும் போது, நகர்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற 520 வீடுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். மஞ்சள்பட்டினம் சுடுகாட்டில் நவீன எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலையும், விபத்துக்களையும் தடுக்க ஓட்டப்பாலம் பகுதியில் இருந்து கிருஷ்ணா தியேட்டர் வரை சாலையோர பூங்கா அமைக்கப்பட உள்ளது. இதே போல ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் காந்தி சிலை முதல் ரெயில் நிலையம் வரை பயணிகளின் வசதிக்காக நடைமேடை அமைத்து மின் விளக்குகள் பொருத்தப்பட உள்ளன என்று தெரிவித்தார்.



முகாமில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ராமகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் செந்தூர் பாண்டியன், புதுவாழ்வு திட்ட மேலாளர் ஜோசப் ஆனந்த ராஜ் உள்பட அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக டால்பின் டிரஸ்டு நிர்வாக இயக்குனர் ராஜேஸ்கண்ணன் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்