Home » , » இனவெறி..புதிய தலைமுறை புதிய ஆதாரம்

இனவெறி..புதிய தலைமுறை புதிய ஆதாரம்

Written By DevendraKural on Thursday, 14 March 2013 | 12:08


இலங்கையின் போர்க்குற்றம்: "இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்"- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு
கைகளை பின்புறமாக பிணைத்து, தலையில் சுட்டு கொல்லும் இலங்கை இராணுவத்தின் ஈவிரக்கமற்ற செயல்... காட்சிகளாக வெளியான போது நம்மை அதிர்ச்சியூட்டின.
இதேபோல ஒவ்வொருவரையும் செயலற்றவராக்கி உதவியற்ற நிலையில் கொன்று குவிக்கப்பட்டவர்கள் எத்தனைபேர். அதற்கான விடை நம்மிடம் இல்லையென்றாலும், சாட்சியமாக இதுவரை வெளிவராத காட்சிகள் அடங்கிய பதிவுகள் புதியதலைமுறைக்கு கிடைத்துள்ளன.
கண்கள் கட்டப்பட்டு, கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிராயுதபாணியான ஆண்கள், ஆடைகளின்றி இழுத்துத் தள்ளப்படுகிறார்கள்.. பின்னால் இருந்து வெற்றி எக்காளத்துடன் இலங்கை இராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுகிறார்.
ஒரு போர் மூண்டால் இராணுவ வீரர்கள் உயிர் துறப்பார்கள். உயிருடன் பிடிபடுபவர்கள் போர்க் கைதிகளாவார்கள். ஆனால் போரில் கைதிகளாக பிடிபட்டவர்களை கொல்வதென்பது சர்வதேச சட்டங்களின் படி ஏற்றுக்கொள்ள முடியாத குற்றம்.
போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க் குற்றங்கள்தான்.
போர்க்கைதிகள் கொல்லப்படுவது பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்படுவது பற்றியும் பேசும் சர்வதேச சட்டங்கள் போர்க்காலத்தில் கொல்லப்படும் குழந்தைகள் பற்றி இதுவரை எங்குமே பேசவில்லை என்பது தான் துயரம்.
அப்படி ஒரு சிறுவனை கொல்லும் காட்சிகள் பிரத்தியேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கிறது.
இலங்கை இராணுவத்தினரிடம் பிடிபட்ட இளைஞர்கள் மத்தியில் ஒரு சிறுவன் அமர்ந்திருக்கிறான். அடுத்து, அந்த சிறுவனின் உடல், தலை சிதைத்த நிலையில் மற்ற உடல்களுடன் சேர்ந்து கிடக்கிறது.
லண்டனைச் சேர்ந்த உலகத் தமிழர் பேரவை தனக்கு கிடைத்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரத்தை புதிய தலைமுறைக்கு வழங்கியிருக்கிறது.
இதை நாம் ஒரு முறைக்கு இருமுறையாக உறுதிப்படுத்திக்கொள்ள தடயவியல் துறையில் பெரும் நிபுணத்துவம் பெற்ற ஒரு வல்லுனரை அணுகி ஆய்வு செய்தோம்.
மாநிலத்தில் பல குற்ற வழக்குகளில் துப்புத் துலங்குவதற்கு பெரும் துணையாக இருந்த, 22 ஆண்டு காலமாக மாநில தடய அறிவியல் துறையில் பணிபுரிந்த திரு.சந்திரசேகரன், இந்த காட்சிகளை நன்கு ஆயுவு செய்து, தனது ஆய்வு விவரங்களை விவரித்தார்.
2009ம் ஆண்டு இலங்கை உள்நாட்டுப்போர் முடிந்ததற்கு பிறகு, இதுவரை பல அதிர்ச்சிகரமான காட்சிப் பதிவுகள், புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன.
உலகத்தமிழர் பேரவை வெளியிட்ட இந்த காட்சி ஆதாரங்கள், ஒருவேளை அந்தச் சிறுவன் உயிரோடு இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையை முற்றாக சிதைத்திருக்கிறது.
இராணுவத்தின் பிடியில் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் இருந்ததையும், உயிரற்று கிடந்த புகைப்படங்களும் உலகையே உலுக்கின. அந்த புகைப்படங்கள் கேலம் மேக்ரேவின் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தில் அந்த புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
இலங்கை இராணுவம் அரங்கேற்றிய போர்க்குற்றங்களின் இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய அந்த புகைப்படங்களோடு புதிய தலைமுறைக்கு கிடைத்த காட்சி ஆதாரங்கள், போர்க்குற்றத்தின் இன்னொரு வடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டின.
உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்த போர்க் குற்றங்களுக்கோ, மனித உரிமை மீறல்களுக்கோ சாட்சியம் இல்லை என்று நினைத்தது இலங்கை. ஆனால். எதை வெற்றிக் களிப்பில் பதிவு செய்தார்களோ அந்த காட்சிகள்தான் இன்று சாட்சியங்களாக அவர்களுக்கு எதிரானதாக திரும்பிக் கொண்டிருக்கின்றன.
இந்த வீடியோ ஆதாரங்கள் மூலம் வெளிப்படும் ஓர் உண்மை, இந்தக் கொடிய செயலில் ஈடுபட்டவர்களே, இந்த நீளமான வீடியோ காட்சிகளையும் எடுத்துள்ளனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தி சுட்டவர்கள். மறு கையில் தங்களிடம் உள்ள கைபேசியில் அதனை பதிவு செய்திருப்பது தெளிவாகத் தெரிகிறது. சாட்சியமற்ற போராக கருதப்பட்ட இலங்கை யுத்தத்தில் சாட்சியமாக நின்று இந்த விடியோ காட்சிகள், உலக சமுதாயத்தின் மனசாட்சியை உலுக்கி எடுத்து கேள்வி கேட்டுக்கொண்டிருக்கின்றன..
இறந்து போன குழந்தைகளின் எண்ணிக்கை பற்றி மட்டும் அல்ல.. காணாமல் போன குழந்தைகளைப் பற்றி கூட ஐநா அறிக்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. ஆனால், குழந்தைகளின் மறுவாழ்வுப் பணிகளை இலங்கை அரசு சிறப்பாக மேற்கொண்டிருந்ததாக பாராட்டு தெரிவித்திருந்தது ஐநா அறிக்கை.
பொதுமக்களையும், குழந்தைகளையும் விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்று இலங்கை அரசு தொடர்ந்து கூறிக்கொண்டிருக்கிறது.
ஆனால் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படங்களோ, புதிய தலைமுறை வசம் கிடைத்துள்ள விடியோ காட்சிகளோ, அந்த குழந்தைகள் போரில் சிக்கி உயிரிழந்ததாக இலங்கை சொல்லும் நொண்டிச்சாக்கை நிராகரிக்கின்றன.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உடலாவது அடையாளம் தெரிந்த ஓர் உடலாக இருக்கிறது.
ஆனால் நமக்கு கிடைத்த காட்சியில் உள்ள சிறுவன் யாரென்றே தெரியாது. இவனைப்போல எத்தனை எத்தனையோ சிறுவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். 
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்