Home » , » இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை!

இலங்கை கொடுமைகள்: சுதந்திரமான விசாரணை கோரியது இந்தியா!- திருத்தம் கொண்டு வரவில்லை!

Written By DevendraKural on Thursday, 21 March 2013 | 07:10

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை சுதந்திரமான, உலக நாடுகள் ஏற்கக் கூடிய விசாரணையை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் எந்த ஒரு திருத்தத்தையும் இந்தியா வலியுறுத்தவில்லை. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூடத்தில் அமெரிக்கா, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைத் தாக்கல் செய்தது.
இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய இந்தியப் பிரதிநிதி திலீப் சின்ஹா, இலங்கையின் அனைத்து குடிமக்களும் முழுமையான மனித உரிமைகளை பெறுவதற்கும் உண்மையான தேசிய நல்லிணக்கத்தின் மூலமா அரசியல் தீர்வுக்குமான ஒரு சாளரத்தை அந்நாட்டின் எல்.எல்.ஆர்.சி. குழுவின் பரிந்துரைகள் உருவாக்கியிருக்கிறது.
2009-ம் ஆண்டு இந்த ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த உறுதிகளை நிறைவேற்றுவதில் போதுமான முனேற்றத்தை இலங்கை வெளிப்படுத்தவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம். 13- வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலமாக அரசியல் அதிகாரத்தை வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை இலங்கை மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் போர் முடிவுக்கு வந்தது என்பது தமிழர்கள் உட்பட அனைத்து இலங்கை சமூகத்தினரும் ஏற்கக் கூடிய ஒரு அரசியல் தீர்வுக்கான நல் வாய்ப்பாக இந்தியா கருதுகிறது.
அதி உயர் பாதுகாப்பு வலயங்களைக் குறைத்தல், வடமாகாணத்தில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தனியார் நிலங்களை ஒப்படைத்தல், காணாமல் போதல், கடத்தப்படுதல் போன்றவற்றை குறைத்தல் என்பது உள்ளிட்ட எல்.எல்.ஆர்.சி.யின் பரிந்துரைகளை முழுமையாக உரிய காலத்துக்குள் இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும்.
சுதந்திரமான விசாரணை பொதுமக்களின் உயிரிழப்புக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சுதந்திரமான, நம்பகமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இதற்கு பொறுப்பேற்க இலங்கை முன்வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம்.
இத்தகைய நடவடிக்கைதான் அனைத்துலக சமூகத்தை திருப்திபடுத்தும் எனவும் எதிர்பார்க்கிறோம். இலங்கையின் அண்டை நாடு என்கிற வகையில் அந்நாட்டின் மறுசீரமைப்பு, மீள்குடியமர்த்தல் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் பங்களிப்பு செய்து வருகிறது.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்தோரை மீள் குடி அமர்த்தவும அங்கு வளர்ச்சிப் பணிகளை உள்கட்டமைப்புகளை மேற்கொளவதில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. இலங்கையின் வடமாகாணத்தில் வரும் செப்டம்பர் மாதம் தேர்தலை நடத்துவதாக இலங்கை அறிவித்திருக்கிறது.
வட மாகாண மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை சுதந்திரமாக செயல்படுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையரை இலங்கை அரசு அழைத்திருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று அவர் விரைவில் அங்கு செல்ல வேண்டும்.
இலங்கையில் அனைத்து சமூகத்தினரும் கண்ணியத்துடனும் சம உரிமையுடன் உரிய சட்டப் பாதுகாப்புடன் வாழ்வதற்கான அரசியல் தீர்வு மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை விரைவாக இலங்கை செயல்படுத்துவதற்கு இந்தியா ஊக்கமளிக்கும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இலங்கையுடன் உறவு கொண்டிருக்கும் இந்தியாவானது, அந்நாட்டில் நடைபெறக் கூடிய நிகழ்வுகளைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்றார். திருத்தம் கொண்டுவராத இந்தியா ஆனால் இந்தியாவின் இந்த நிலைப்பாடு கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.
இலங்கையில் நிகழ்ந்தது ஒரு இனப்படுகொலை, நிகழ்த்தப்பட்டது போர்க் குற்றம். இதற்காக ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுதான் தமிழக அனைத்து அரசியல் கட்சிகள் மாணவர்களின் கோரிக்கை. இந்தக் கோரிக்கைக்காகவே கடந்த 10 நாட்களாக தமிழகத்தில் பெரும் போராட்டத்தையே மாணவர் சமூகம் நடத்திக் கொண்டு வருகிறது.
இதற்காக மத்திய அரசுக்கான ஆதரவை திரும்பப் பெற்று கூட்டணியைவிட்டே வெளியேறியது திமுக. ஆனால் அமெரிக்காவின் தீர்மானத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காமல் பட்டுப்படாமல் 'கருத்து' மட்டும் தெரிவித்து உள்ளது மத்திய அரசு என்பது தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களின் தலைவர்களது கருத்து. அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா திருத்தம் கொண்டுவராமல் அப்படியே ஆதரித்திருப்பது தமிழகத்தில் பெரும் ஏமாற்றத்தை உருவாக்கியிருக்கிறது.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்