மே 16 2009. ஜோர்டான் நாடு.
தன்னுடைய சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேவை நம்பாமல் இருக்க முடியுமா? இலங்கை
முப்படைகளின் முதன்மை பொறுப்பில் இருந்து கொண்டு வழிகாட்டிக்கொண்டு
பாதுகாப்பு செயலாளராகவும் இருப்பவர்.
அவருடைய கண் அசைவில் நடத்தப்பட்டுக் கொண்டுருந்த இறுதி ராணுவ நடவடிக்கையின்
முடிவு ஜோர்டான் நாட்டில் இருந்த அதிபர் ராஜபக்ஷேவுக்கு
தெரிவிக்கப்படுகிறது. எல்லாவகையிலும் உறுதிபடுத்தப்பட்ட பிறகு இறுதியில்
அங்கிருந்தேபடியே அறிக்கை விட்டார்.
"இறுதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
விடுதலைப்புலிகளிடமிருந்து முழுமையாக விடுதலையான நாட்டிற்கு நான் நாளை திரும்புகிறேன்"
#-#-#
மே 17 2009. கொழும்பு சர்வதேச விமான நிலையம்.
தான் பயணித்து வந்த விமானத்தின் படிக்கட்டுகளில் இருந்து இறங்கியவர்
முழுங்காலிட்டு மண்ணைத் தொட்டு வணங்கி, வெற்றிப் பெருமிதத்துடன்
கூடியிருந்தவர்களை பார்த்த பார்வை முற்றிலும் புதிதானது. இதுவரைக்கும்
ஆண்டு விட்டுச் சென்ற பத்து பிரதமர்களுக்கோ, நான்கு அதிபர்களுக்கோ
கிடைக்காத வாய்ப்பு. அப்போது ராஜபக்ஷே பார்த்த பார்வை என்பது
"தீவிரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுத்து விட்டேன்".
புரிந்தவர்களுக்குத் தெரியும் அது சர்வதேசத்திற்கான அழைப்புமணி. இதற்காக
இவர் உழைத்த உழைப்பு அசாதாரணமானது, காரணம் மே 2009க்கு முன் 33 மாதங்கள்
படிப்படியாக உழைத்த உழைப்புக்கு கிடைத்தது இந்த வெற்றி, ஈழ நான்காம்
யுத்தம் என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்துடன் கூடிய யுத்தம்
முடிவுக்கு வந்து இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக, தமிழர் -
சிங்களர் என்ற இரண்டு இனங்களுக்கு இடையே நடந்து கொண்டுருந்த அரசியல்
போராட்டங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, இனி எப்போதும் இலங்கை என்பது
“சிங்களர்களின் தேசம் ” என்பதை சொல்லாமல் சொல்லியது. மகிழ்ச்சி என்ற
வார்த்தைக்கு மேலே வேறு எந்த வார்த்தைகளாவது இருக்குமா என்று மனதிற்குள்
யோசித்தபடி அவரின் வாகன வரிசைகள் கொழும்புக்குள் அணிவகுத்துச் சென்றது.
மே 18 2009. அமைதிக்குள் பேரமைதி
பரப்புரைகளும் வதந்திகளும் இறக்கை இல்லாமலேயே பறந்து கொண்டிருந்தது;
வேலுப்பிள்ளை பிரபாகரன் குறித்த செய்திகள். உறுதிப்படுத்துபவர்கள் எவரும்
இல்லை. அதிபர் மாளிகை உருவாக்கி இருந்த மயான அமைதி சர்வதேச தமிழர்களை
வாழ்ந்த நாடுகளில் அணி திரள வைத்தது. அவர்களின் கண்ணீர், கூக்குரல்,
கோரிக்கைகள் எல்லாமே வெறும் வேடிக்கைப் பொருளாக, ஊடக செய்தியாக மட்டும்
இருந்தது.
#-#-#
மே 19 2009 சர்வதேசத்திற்கான சமிக்ஞை உரை
அதிமேதகு மகிந்த ராஜபக்ஷே பாராளுமன்றத்தில் தனது உரையைத் தொடங்கினார்.
இலங்கை ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் வாங்கிய பின்பு
தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதமர் சேனநாயகா போலவே தமிழில் தான்
ராஜபக்ஷேவும் தனது உரையைத் தொடங்கினார்.
இலங்கையின் எதிர்க்கட்சியான (Sri Lanka Freedom Party) சுதந்திர கட்சியின்
மூன்றாம், இரண்டாம் கட்ட தலைவர் பதவிகளில் இருந்து படிப்படியாக தன்னை
வளர்த்து, எதிர்பாராத அதிர்ஷ்ட திருப்புமுனையில் அதிபராக உள்ளே வந்தவர்
தான் மகிந்த ராஜபக்ஷே.
அதிபராக இருந்த சந்திரகா குமாரதுங்காவின் ஒத்துழைப்பு இல்லாத போதும் கூட
தன்னை நிலைநிறுத்திக் கொண்டவர். சந்திரிகாவின் நம்பிக்கையை பெற்று இருந்த
வெளியுறவுத்துறை அமைச்சருக்கு அந்த வாய்ப்பு தமிழர் என்பதால்
மறுக்கப்பட்டது. லஷ்மணன் கதிர்காமர் அமர வேண்டிய பதவியை தட்டிப்பறித்து
உள்ளே வந்த ராஜபக்ஷே இன்று சிங்கள மக்களில் ஆதர்ஷ்ண கடவுள். அப்போது
அறிவித்த அவரின் பாராளுமன்ற உரை இலங்கை வாழ் மக்களுக்கானது அல்ல.
அரசியல்வாதிகளுக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் அவரது நீண்ட உரையை முடித்த
போதும் அத்தனை பேர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த வேலுப்பிள்ளை பிரபாகரன்
குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. அது தான் ராஜபக்ஷே அரசியல். எதை சொல்ல
வேண்டும். அதையும் எப்போது சொல்ல வேண்டும் என்பதை உணர்ந்தவர். ஆனால்
சிங்கள மக்களைப் பொறுத்தவரையிலும் அன்றைய நாள் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக
கொடுத்த கொண்டாடித் தீர வேண்டிய விடுமுறை தினம்.
ஆரவாரங்கள். வீதியெங்கும் திருவிழா. அசைத்துக்கொண்டு செல்ல அரசாங்கத்தின்
சார்பாக வழங்கப்பட்ட, சிங்கக்கொடிக்குக்கூட கொழும்புவில் வாழ்ந்த தமிழ்
வியாபாரிகள் தான் தேவையாய் இருந்தார்கள். கொழும்புவில் வாழும் தமிழ்
மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகம் தான். கதவை சார்த்திக்கொண்டு
உள்ளே முடங்கி கிடந்தாலும் கதவைத்தட்டி வீதிக்கு வரவழைக்கும் சிங்கள
இனவாதிகளின் கொண்டாட்ட தினத்தை பார்க்கும் துணிவில்லாமல் பயத்தோடு தான்
இருந்தார்கள்.
“இது சிங்களர்களின் தேசம். சிங்களர்கள் மட்டுமே ஆள வேண்டிய தேசம்”.
இவ்வாறு சொல்லி மக்களை வெறியூட்டி வாக்கு கேட்டு வந்தவர்களும், கடந்த
காலத்தில் உருவாக்கிய பல இனக்கலவரங்களுமாய் மாறி மாறி ஒவ்வொருவரும்
ஆட்சியில் வந்து அமர்ந்ததும், அவர்களால் நடத்திக்காட்டிய இனவாத அரசியலில்
இன்றைய தினம் ராஜபக்ஷேவின் பங்கு. அதற்கு உறுதிப்படுத்தும் விதமாக நடந்த
எத்தனையோ கொண்டாட்டங்களில் இன்று நடப்பது மொத்தத் இலங்கை வரலாற்றிலும்
முக்கியமான விழா.
ஈழ நான்காம் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர இலங்கை அதிபருக்கு ஆதரவுக்கரம் நீட்டி வெளியேயிருந்து
பயமும் படபடப்புமும் பார்த்துக்கொண்டுருந்த சர்வதேச சமூகத்திற்கு இப்போது நிம்மதி பெருமூச்சு.
இனி பயங்கொள்ளத் தேவையில்லையடி பாப்பா என்று பாடலாம் போலிருந்தது. .காரணம்
கொடுக்கப்பட்ட ஆயுதங்களும், வழங்கப்பட்ட பயிற்சியும், அக்கறையாய்
நடத்திக்காட்டிய பயிற்சி வகுப்புகளுக்கும் உண்டான பலன் இன்று நல்ல முறையில்
முடிந்துள்ளது. இலங்கைக்கு கொடுக்கப்பட்ட கடன்களுக்கு ஈடுகட்டும் விதமாக
உள்ளே கடைவிரிப்பை நடத்தியாக வேண்டுமே? சீனாவின் பின்னால் போகாதே என்று
இந்தியாவும், இந்தியாவை விட தவணை முறையில் உங்கள் இடத்திலேயே வந்து
ஆயுதங்களை கொண்டு வந்து தருகின்றேன் என்ற சீனாவும் வெளியே நின்று கொண்டு
இருக்கிறது.
இரு நாடுகளும் முண்டியடித்துக்கொண்டு செய்த உதவிகளைப் பெற்ற ராஜபக்ஷே மற்ற சிங்கள தலைவர்களைக் காட்டிலும் அதிர்ஷ்டக்காரர் தான்.
பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல், அமெரிக்கா, பிரிட்டன் என்று நேச நாட்டு
கூட்டணி படை மொத்தமும் ஒவ்வொரு வேலையைச் செய்து முடிக்க முடிவுக்கு வந்தது
ஈழ நான்காம் யுத்தம்.
எல்லாவற்றுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கம் மட்டும் தான் காரணமா?
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் இருந்த இயக்கத்தை அழிக்க இத்தனை நாடுகள்
உள்ளே வர வேண்டிய தேவை தான் என்ன?
ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் பெற்றது முதல் இலங்கையென்பது
சிங்களர்களின் நாடு என்று பல பேர்கள் கனவு கண்டார்கள். இதற்காகவே தங்களை
இனவாத தலைவர்களாக மாற்றி எந்த அளவிற்கு இலங்கையின் சரித்திர பக்கங்களை
கேவலமாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வாழ்ந்த ஒவ்வொரு ஆட்சியாளர்களும்
வாழ்ந்து காட்டினார்கள். தங்களையும் பலிகொடுத்தும் அப்பாவி பொதுமக்களையும்
பலியாக்கி, உணராமலேயே அடுத்தவருக்கு வழிகாட்டியாய் வாழ்ந்து முடித்து
இருந்தனர்.
வாழ்ந்த அத்தனை பேர்களும் இலங்கை என்ற நாட்டின் தேச அரசியல் தலைவராக
மட்டும் இருந்தவர்கள். ஆனால் இன்று சாதித்துக் காட்டி சர்வ தேசத்தையும்
தனக்கு சாதகமாக மாற்றிய அதிபர் மகிந்த ராஜபக்ஷே இன்று சிங்களர்களுக்கு
மாமன்னர். அப்படித்தான் இறுதிக்கட்ட போருக்குப் பின் நடந்த வெற்றிவிழா
கொண்டாட்டத்தின் போது புத்த பிக்குகள் அதிபரை வரவேற்று உயரிய சிங்கள
விருதளித்து பேசினார்கள்.
"மகாசேனனும், துட்டகை முனுவும் செய்யாததை நமது மாமன்னர் ராஜபக்ஷே செய்துவிட்டார்"