Home » , » ஓயாத மாணவர் அலை! ஓயாது மாணவர் அலை!

ஓயாத மாணவர் அலை! ஓயாது மாணவர் அலை!

Written By DevendraKural on Wednesday, 20 March 2013 | 05:37


ஈழத்துச் சொந்தங்களுக்கு தமிழகக் கல்லூரி மாணவர்களின் கண்ணீர் பொங்கிப் பிரவாகம் எடுத்து​வருகிறது. கல்லூரிகளுக்குத் காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும், தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் தகிக்கிறது.
பல்வேறு ஊர்களில் பொதுமக்களும் தன்னெழுச்சியுடன் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். ஈழ விவகாரத்துக்காகத் தொடர் உண்ணா​விரதம் இருக்கும் மாணவர்​களின் கொதிப்புகள், குமுறல்கள் இங்கே...
''மிரட்டியது கல்லூரி நிர்வாகம்!''
சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தை முதலில் தொடங்கிய லயோலா கல்லூரி மாணவர்களை நள்ளிரவில் குண்டுக்​கட்டாகத் தூக்கிச் சென்ற காவல்துறையால், ஏழு நாட்களைக் கடந்து உண்ணாவிரதம் மேற்கொள்ளும் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது கைவைக்க முடியவில்லை. ஆனாலும், மாணவர்களின் போராட்டத்தைத் தடுக்க பல்வேறு வழிகளிலும் முட்டுக்கட்டை போடத் தவறவில்லை. பந்தல் அமைக்க வந்தவர்களை மிரட்டுதல், தண்ணீர் கேன் கொண்டுவந்தவர்களை எச்சரித்தல், மின்தடை ஏற்படுத்துதல், ஆதரவு தெரிவிக்க வருபவர்கள் மீது கழுகுப் பார்வை... என்று, பல வழிகளில் போராட்டத்தை முடக்க நினைத்தும் முடியவில்லை.
உண்ணாவிரதப் பந்தலில் இருந்த சவுந்திர​ராஜன் உடல்நிலை மிகவும் பலவீனம் அடைந்த நிலையில் சோர்வுடன் பேசினார். ''எங்கள் பல்கலைக்கழகத்தில் போராட்டம் ஆரம்பித்த உடனேயே, காலவரையற்ற விடுமுறை அறிவித்துவிட்டனர். விடுதியில் இருந்தவர்களையும் வெளியேற்றிவிட்டனர். 'உங்களை ஃபெயில் ஆக்கிடுவேன். போராட்டத்தைக் கைவிடுங்க’ என்று நிர்வாகத் தரப்பில் இருந்து மிரட்டினர். எதற்கும் அசராமல்​தான் எட்டாவது நாளாக உண்ணா​விரதம் இருக்கிறோம். சில மாணவர்களுக்கு உடல்நிலை ரொம்பவும் முடியாமல், அரசு மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறோம். எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்'' என்றார்.
''அகிம்சை வழியில் போராடுவதுகூட தவறா?''
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். இந்த நிலையில் பல மாணவர்களுக்கு உடல்நிலை மோசமடைய... மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மீண்டு வந்தனர். சட்டக் கல்லூரி மாணவர் யுவராஜ், ''எங்களுக்கு விடுதியில் தங்குவதற்கு இடம் இல்லை. கல்லூரியிலும் உட்கார்ந்து போராட அனுமதி இல்லை. எங்குதான் சென்று போராடுவது? அதனால்தான் காந்தி சிலைக்கு முன் அகிம்சைப் போராட்டம் நடத்த திட்டமிட்டோம். அங்கு வந்த போலீஸார், எங்களைக் கேவலமாகப் பேசித் துரத்துவதிலேயே குறியாக இருந்தனர். நாங்கள் அசரவில்லை. அந்த இடத்திலேயே படுத்துவிட்டோம். ஆனால், எங்களை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். அப்போது போலீஸ் நடத்திய தடியடியில் தனசேகரன் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த அடி. ஆம்புலன்ஸைக்கூட போலீஸார் அழைக்கவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி, 'நடிச்சது போதும்... வண்டியில ஏறுங்கடா’ என்று மிரட்டினார். கடைசியாக அந்த மாணவனை போலீஸ் ஜீப்பில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை எங்கள் போராட்டங்கள் ஓயாது'' என்றார்.
''போராட்டத்தில் வெளிமாநில மாணவர்கள்!'' சென்னை ஐ.ஐ.டி. மாணவர்களும் போராட்டத்தில் குதித்திருப்பது கூடுதல் சிறப்பு. பல மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு இலங்கைக்கு எதிரான வாசகம் ஏந்திய பலகையைப் பிடித்தபடி அமர்ந்திருந்தனர். மாணவர் ரத்தினவேல், ''ஐ.ஐ.டி-யில் தமிழ் மாணவர்கள் குறைவாகத்தான் இருக்கின்றனர். வெளிமாநிலத்தில் இருந்து வந்து படிக்கும் மாணவர்கள்தான் அதிகம். இங்கு ஒரு போராட்டம் செய்தால், நிச்சயமாக அது இந்தியாவையே ஒரு கணம் திரும்பிப் பார்க்கவைக்கும். அதனால்தான் இங்கே ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கிறோம். பீகார், கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று பல மாநில மாணவர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டதுதான் எங்களுக்கு மனநிறைவாக இருந்தது. எங்கள் போராட்டம் தொடரும்'' என்றார்.

''பெற்றோரிடம் பேசுகிறது போலீஸ்!''
கோவையில் சட்டக் கல்லூரி மற்றும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகின்றனர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாண்டியனிடம் பேசினோம். ''பொது இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்தனர். தனியார் இடங்களில் இருந்தபோதும், போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சிக்கின்றனர். உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களின் பெற்றோரை அழைத்து உளவுப் போலீஸார் பேசுகின்றனர். தனியார் கல்லூரி மாணவர்களை நிர்வாகத்தின் மூலம் மிரட்டுகின்றனர். இதுவெல்லாம் சரியானது அல்ல. தமிழகம் முழுவதும் மாணவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. முதல் கட்டமாக, கோவையில் உள்ள மாணவர்களை ஒருங்கிணைத்துள்ளோம். விரைவில், கோவையை உலுக்கும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்'' என்றார். இந்த நிலையில், மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சுந்தராபுரம் அருகே உள்ள பிள்ளையார்புரம், பெரியார் நகர், நேதாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி மக்களும் போராட்டத்தைத் தொடங்கி இருக்கின்றனர்.
''தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..?''
அரியலூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 27 பேர், கடந்த 13-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். போராட்டம் தொடங்கிய மூன்றாவது நாள், கார்த்திக், ராகுல், அசோக்குமார் ஆகிய மூவரும் மயங்கி விழுந்தனர். போலீஸார் ஆம்புலன்ஸ் வரவழைத்து, அவர்களைக் குண்டுக்கட்டாகத் தூக்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் தென்னரசுவிடம் பேசியபோது, ''இலங்கையில் இனப் படுகொலை செய்யப்பட்ட நம் தொப்புள் கொடி உறவுகளுக்காக நாம் என்ன செய்யப்போகிறோம்..? என்ற கேள்வியின் அடிப்படையில்தான் இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து இருக்கிறோம்'' என்றார்.
''அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி!''
திருச்சி சட்டக் கல்லூரியில் தொடர் உண்ணாவிரதம் இருந்த மாணவர்களில் நான்கு பேர் உடல்நலம் பாதித்து மயங்கி விழ, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மீதியுள்ள 15 பேர் கல்லூரியின் நுழைவுவாயில் அருகே உண்ணாவிரதம் இருக்கின்றனர். பாரதிலிங்கம் என்ற மாணவரிடம் பேசினோம். ''ஐ.நா-வில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் எனச் சொல்வதே பெரிய துரோகம். அமெரிக்கா ஒரு கசாப்பு வியாபாரி. அவர்களின் உண்மையான நோக்கம் இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது அல்ல. சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும், இலங்கையில் நிறைந்திருக்கும் வளங்களுக்கு ஆசைப்பட்டும்தான் இலங்கைக்கு எதிராக ஐ.நா-வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவருகிறது. இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்ஷேவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம்'' என்றார்.
''ராஜபக்சவைத் தூக்கிலிட வேண்டும்!''
செங்கல்பட்டு சட்டக் கல்லூரி மாணவர்கள் கடந்த 11-ம் தேதி உண்ணாவிரதத்தைத் தொடங்கினர். தலைமைத் தபால் அலுவலகம், ஸ்டேட் பேங்க் போன்ற மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலை மறியல்களும் அடிக்கடி நடத்தப்பட்டன.
உண்ணாவிரதம் இருந்தவர்களில் ஒருவரான கோகுல கிருஷ்ணனிடம் பேசினோம். ''தமிழ்நாட்டை நம்பி இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்தவர்களை நிரந்தரமாகவும் சுதந்திரமாகவும் இங்கே வாழ இந்தியக் குடியுரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும். ஐ.நா. கொண்டுவந்துள்ள தீர்மானம் ஒரு மாயமான தீர்மானம். அதில் போர்க்குற்றம் என்ற வார்த்தை மட்டுமே உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. அதில் இனப்படுகொலை என்ற வார்த்தையை சேர்க்க வேண்டும். இரட்டை வேடம் போடும் அந்தத் தீர்மானத்துக்குப் பதிலாக இந்தியாவே தமிழர்களைக் காக்க தனியாக ஒரு தீர்மானம் கொண்டுவர வேண்டும். இத்தனைத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை அனைத்து தமிழர்கள் மத்தியிலும் பொதுஇடத்தில் வைத்து பகிங்கரமாகத் தூக்கிலிட வேண்டும்'' என்று சீறினார்.
''கடற்படையால் கொல்லப்பட்டவர்களைக் கணக்கெடுங்கள்!''
சேலம் சட்டக் கல்லூரியில் தொடங்கப்பட்ட காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நீடிக்கிறது. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டிருந்தாலும், அனைத்துக் கல்லூரி மாணவர்களும் ஒருங்கிணைந்து கலெக்டர் அலுவலக முற்றுகை, ரயில் மறியல் எனப் பல போராட்டங்களை நடத்துகின்றனர். மாணவர் சின்னமுத்து, ''மத்திய அரசு உளவுத் துறை மூலமாக அறிக்கை தயாரிப்பதாகத் தகவலைச் சொல்லி மாணவர்களின் போராட்டத்தை நசுக்கப் பார்க்கின்றனர். எங்களைக் கணக்கெடுப்பதை விட்டுவிட்டு சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுநாள் வரை எத்தனை இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கிறது என்று கணக்கெடுக்கட்டும். இல்லை என்றால், இந்தியாவில் பிரிவினைவாதம் ஏற்படுவதைத் தடுக்கவே முடியாமல் போய்விடும்'' என்றார்.
''தூதரக உறவுகளைத் துண்டிக்க வேண்டும்!''
மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆறு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். உண்ணாவிரதத்தில் இருந்த மாணவர் கணேஷ் பிரபுவிடம் பேசினோம். ''போர்க் குற்றம் புரிந்த ராஜபக்ஷே உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும். இலங்கையுடனான தூதரக உறவுகளைத் துண்டிப்பதோடு, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் இந்தியா முன் வர வேண்டும்'' என்றார்.
தமிழகக் கொந்தளிப்பு டெல்லிக்குத் தெரியுமா? - ஜூ.வி. டீம்
''லீவு விட்டாச்சுன்னா மாணவர் இல்லியா?''
பாளையங்கோட்டை சவேரியர் கல்லூரி மாணவர்கள் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள திலீபன் அரங்கில் தொடர் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதைத் தடுக்க வழி தெரியாமல் தவிக்கும் மாவட்ட நிர்வாகம், போலீஸ் ஆகியவை, பேச்சுவார்த்தை நடத்தி மாணவர்களை வழிக்கு கொண்டுவர முயற்சித்தது. ஆனால், போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். இதனால், கோபம் அடைந்த நெல்லை கலெக்டர் சமயமூர்த்தி, மாணவர்களுடன் செல்போனில் பேசினார். 'இப்போது கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. இனிமேலும் நீங்கள் கல்லூரி மாணவர்கள் என்ற பெயரில் உண்ணாவிரதம் இருக்க அனுமதிக்க முடியாது’ என, காட்டம் காட்டி இருக்கிறார். சளைக்காத மாணவர்கள், 'அப்படின்னா நீங்க ரெண்டு நாள் லீவு போட்டீங்கன்னா, அப்போ நீங்க கலெக்டர் இல்லியா..?’ என்று பதிலுக்குக் கேட்டதும் இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.
''இலங்கையா? தமிழ்நாடா? இந்திய அரசே முடிவு செய்!''
தமிழீழத்துக்கான மாணவர் போராட்டக் குழு சார்பில், கடந்த 18-ம் தேதி கவர்னர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்கு சென்னை மற்றும் செங்கல்பட்டு சட்டக் கல்லூரி, சட்டப் பல்கலைக்கழகம், குருநானக், டி.பி.ஜெயின், நந்தனம், பச்சையப்பா, பிரெஸிடென்சி உட்பட 23 கல்லூரிகளில் இருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் விண்ணைப் பிளந்தது. ''இந்திய அரசே... இந்திய அரசே... இலங்கை உங்களுக்கு நட்பு நாடென்றால், இந்தியா எங்களுக்கு எதிரி நாடு!'' என்ற அதிரடி கோஷம் கேட்டு காக்கிகளே கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள். சுற்றிலும் மண்டை ஓடு அடுக்கப்பட்ட பல்லக்கில், ராஜபக்ஷே கத்தியுடன் கோர முகத்துடன் அமர்ந்திருக்க... அந்தப் பல்லக்கை சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் சுமப்பது போன்ற கார்ட்டூனையும் காண முடிந்தது. மொத்த மாணவர்களும் பெருந்திரளாக கவர்னர் மாளிகையை நோக்கி ஓட... 'இனியும் தாமதித்தால் கலவரமே நடக்கலாம்’ என்று கருதிய போலீஸார், மாணவர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.

 ஜூனியர் விகடன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்