Home » » ஜெனிவாவில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது

ஜெனிவாவில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது

Written By DevendraKural on Thursday, 14 March 2013 | 08:51

ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா சபை நிறுவிட வேண்டும்- ஜெனிவா மாநாடு.

அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் நடாத்தப்பட்ட தமிழர் உரிமை மாநாடு, ஈழத்தமிழர்களின் உரிமையையும் இறைமையையும் வென்றெடுக்கும் போராட்டத்தில் ஒரு மைல்கல்லாக மாற்றமடைந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
மார்ச் 1,2,3 ம் திகதி வரை ஜெனிவா நகரில் இடம்பெற்ற இந்த மாநாட்டில், தாயகத்திலிருந்தும் தமிழகத்திலிருந்தும் தமிழ் அரசியல்வாதிகள் கலந்து சிறப்பித்தனர்.
யேர்மனி, கனடா, மொறிசியஸ், தென் ஆப்ரிக்கா, பிரான்ஸ், நோர்வே, அவுஸ்திரேலியா, நியூசீலாந்து, டென்மார்க், இத்தாலி, நெதர்லாந்து, பிரித்தானியா, பெல்ஜியம், மலேசியா ஆகிய நாடுகளில் இருந்து வருகை தந்திருந்த அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், சிங்கள முற்போக்கு சக்திகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தேசிய உணர்வாளர்கள் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வில் பங்கெடுத்ததுடன், ஈழத்தமிழர்கள் அடக்குமுறையிலிருந்து விடுபட்டு சுதந்திரத்தையும் நீதியையும் பெற்றுக்கொள்வதற்கு தாம் தமது பூரண ஆதரவை வழங்குவோம் என உறுதியுரைத்தனர்.
இம் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான மாண்புமிகு பற்றிக் பிறவுண் மற்றும் ஜிம் கரியானிஸ் அவர்கள் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதை வலிந்துரைத்ததுடன், தமிழர்களது நீதிக்கான போராட்டத்திற்கு தமது கட்சி ஆதரவு வழங்கும் எனவும் தெரிவித்தார்.
உரிமைப் போராட்டத்தில் தமது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கும், மரணத்தின் போதும் தமது மண்ணோடு விதையாகிய மக்களுக்கும் அக வணக்கத்துடனும் ஆரம்பமாகிய இரு நாள் அமர்வுகளை கலாநிதி யூட் லால் பெர்னான்டோ நெறிப்படுத்தினார்.
இரண்டாம் நாள் நிகழ்வு மூன்று அமர்வுகளாக இடம்பெற்றது. முதலாவது அமர்வு போர்க் குற்றம் மற்றும் மானுட குலத்திற்கு எதிரான சர்வதேச சுயாதீனா விசாரணை மீதானதாக அமைந்தது. களம், புலம், தமிழகம் மற்றும் சர்வதேச சமூகம் என்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி, அமர்வாளர்கள் பங்குபற்றினார்கள்.
சர்வதேச சுயாதீன விசாரணைக்கும் ஆதரவளித்தார்கள். இரண்டாவது அமர்வில், வெவ்வேறு வடிவங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் இன அழிப்பு தொடர்பாக ஆராயப்பட்டது. மே மாதம் 2009 ற்குப் பிற்பாடு அனைத்துலக சமூகத்தை சார்ந்தவர்களின் பிரசன்னத்துடன் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு தொடர்பாக ஆழமான கலந்துரையாடலாக இந்த அமர்வு அமைந்ததாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.
முதல்நாளின் இறுதி அமர்வாக ஐ.நா சர்வசன வாக்கெடுப்பு: இலங்கைத் தீவில் நிலையான சமாதானத்திற்கான முன்னெடுப்பு என்ற விடயப் பொருளை முன்னிறுத்திய அமர்வில், ஈழத்தமிழர்களது உரிமையையும் அவர்களது இறமையும் அங்கீகரிக்கப்படுவதே இலங்கைத் தீவில் நிலையான அமைதிக்கான உறுதிப்பாடாக அமையும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் தமது அரசியல் வேணவாவை தாமே நிர்ணயிக்கும் முகமாக ஐநா கண்காணிப்பில் சர்வசன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தினர் இரண்டாவது நாள் அமர்வு, அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன், பங்குபற்றுனர்களினது ஆதரவுடன் ஈழத்தமிழர்களது உரிமையையும் இறைமையையும் நிலைநிறுத்துவதற்காக இறுதியில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன் நிறைவடைந்தது.
மூன்றாவது நாள் அமர்வில், பூகோள அரசியல் நலனும் இலங்கைத் தீவும் என்ற விடயம் மையப்பொருளாக அமைந்தது. இதன்போது, பூகோள நலன்களுக்குள் சிக்காமல், ஈழத்தமிழர் உரிமையையும் சுதந்திரத்தையும் எவ்வாறு வென்றெடுப்பது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளையும் சார்ந்தவர்களால் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மிக விரைவில் தமிழிலும் மற்றும் பல்வேறு மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும்.
மாநாட்டின் இறுதி நிகழ்வாக, முதலாவது நாள் அமர்வாளர்களின் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மாநாட்டில் கலந்து கொண்டோர் தமது நாடுகளில் எவ்வாறு அதற்கமைய அரசியல் வேலைத்திட்டங்களை முன்னகர்த்துவது என்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு, சாதகமான உள்ளீடுகளுடன் நிகழ்வு இனிதே நிறைவேறியது.
இம் மாநாட்டின் அமர்வுகளில் கலந்து கொண்டவர்களைத் தவிர, பதினொரு நாடுகளைச் சார்ந்த ஈழத்தமிழர் மக்களவை உறுப்பினர்கள், தாயக தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் GTF, BTF, USTPAC, ATC, Mauritius Tamil Temple Federation (MTTF), Tamil Relief Malaysia போன்ற அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன.
மனிதவுரிமை அமர்வுகள் நடைபெறும் இவ் நாட்களில் ஜெனிவாவில் உள்ள அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை காரியாலயத்தில் பிரதிநிதிகள் தங்கி நின்று தொடர்ச்சியாக சந்திப்புகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

லட்சக்கணக்கான தமிழ் மக்களை கொன்று அழித்த ராஜபக்சேவுக்கு எதிராக சர்வதேச சுதந்திரமான விசாரணை ஆணையத்தை ஐ.நா சபை நிறுவிட வேண்டும் என்றும் இலங்கையில் நடைபெறுகின்ற ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலையையும்,போர் விதிமுறை மீறல்கள்,இன அழிப்பு நடவடிக்கைகளை விசாரிக்கவும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மாநாடு,ஜெனிவா நகரில் நடைபெற்றது.


இந் நிகழ்வில் தமிழகத்திலிருந்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவரும்,உலக பாதுகாப்பு செயலகத்தின் தலைவருமான சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி அவர்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன், ம.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, முன்னாள் திட்டக்குழுதலைவர் நாகநாதன்,புதிய பார்வை ஆசிரியர் எம்.நடராஜன், டாக்டர்.தாயப்பன்  லண்டன் பாராளுமன்ற உறுப்பினர்கள், அயர்லாந்து பிரதிநிதிகள், மலேசியா, இத்தாலி, பிரான்ஸ், கனடா பா., தென்னாபிரிக்க அமைச்சர், நோர்வே பாராளுமன்ற உறுப்பினர்கள்,  மொறிசியஸ் பிரதிநிதிகள், இலங்கையிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், பா.அரியநேந்திரன, சீ.யோகேஸ்வரன், சி.சிறிதரன் மற்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னமபலம், செல்வராஜா கஜேந்திரன், மணிவண்ணன் உட்பட, குறிப்பாக தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் இருந்து வெளிநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்