Home » , » இது இனவெறி அல்ல!

இது இனவெறி அல்ல!

Written By DevendraKural on Thursday, 4 April 2013 | 09:52


இப்போது தேசிய ஊடகங்களில் தமிழர்களின் இனவெறி பற்றி விரிவாகவே விவாதிக்கப்படுகிறது. ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கையிலும் 540 தமிழக மீனவர்கள் கடலிலும் கொலை செய்யப்பட்டபோது.....
சிங்கள இன வெறிக்கெதிராக தங்கள் கண்களையும் காதுகளையும் இதயத்தையும் இறுக மூடிக் கொண்டவர்கள் இப்போது தமிழ் இனவெறி பற்றி உரத்த குரலில் முழங்கு கிறார்கள். முதலாவதாக தமிழகத்தில் இலங்கையிலிருந்து வந்த சில புத்த பிக்குகள் தாக்கப்பட்ட சம் பவத்தையொட்டி தேசிய ஊடகங்கள் உணர்ச்சிவசப்பட்டு எழுதின.
இப்போது வரும் ஆறாவது ஐ.பி.எல். போட்டிகளில் சென்னையில் நடக்கும் பந்தயங்களில் இலங்கை வீரர்கள் பங்கேற் கக் கூடாது என்ற மாண வர்களின் கோரிக்கையை தமிழக அரசு ஏற்று இலங்கை வீரர்கள் வருவதற்குத் தடை விதித்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் சென்னையில் இலங்கை வீரர்களை தனது வர்த்தக நலன்களின் பொருட்டு விளையாட அனுமதிப்பதில்லை என்ற முடிவை ஐ.பி.எல். நிர்வாகம் எடுத்துள்ளது. இது பலரையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இலங்கையில் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப் பேரவலமும் இனப் படுகொலையும் நிகழ்ந்த 2009ஆம் ஆண்டின் சிங்கள இனவெறி அரசின் ஊதுகுழலாகச் செயல்பட்டதுடன் அந்தப் படுகொலைகள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் பார்த்துக்கொண்ட �ஹிந்து� நாளிதழ் இப்போது எந்தக் கூச்சமும் இல்லாமல் இலங்கை வீரர்களை தடைசெய்தது தமிழர்களின் இனவெறியைக் காட்டுவதாக தலையங்கம் எழுதுகிறது. ராஜபக்சேவுக்கும் சோனியா காந்திக்கும் டபுள் ஏஜென்டாக வேலை செய்துவரும் சுப்ரமணியம் சுவாமி தமிழக அரசின் இந்த முடிவை ஏதோ தேச துரோகக் குற்றம்போல வர்ணித்து தாக்குதல் நடத்துகிறார். இந்த முடிவிற்காக தமிழக அரசை 356 பிரிவைப் பயன்படுத்தி உடனடியாக கலைக்க வேண்டும் என்றும், சென்னையைப் பதற்றப் பகுதியாக அறிவித்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து இலங்கை வீரர்களை வைத்து போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்க, "சென்னையில் இலங்கை வீரர்கள் விளையாடா விட்டால் இந்தியாவில் அவர்கள் வேறு எங்குமே விளையாடக்கூடாது� என்று ஆவேசத்துடன் பேட்டி அளிக்கிறார். தமிழரான புகழ்பெற்ற இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளீதரன் இந்த கோஷ்டி கானத்தில் சேர்ந்துகொண்டு பின்வருமாறு சொல்கிறார், �"இலங்கையில் கடந்தகாலத்தில் போர்ச்சூழல் இருந்தது. நான் 20 வருடங்களாக இலங்கைக்குக் கிரிக்கெட் விளையாடினேன். எனக்கு அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. தமிழர்களாகிய நாங்கள் நடந்ததை எல்லாம் மறந்துவிட்டு எப்படி அமைதியாக வாழ்கிறோம் என்பதை இந்திய அதிகாரிகள் வந்து பார்க்கவேண்டும்.'�
இந்த பொய்களுக்கு நடுவே சில போலி அமைதிப் புறாக்களின் குரல்கள் வேறு கேட்கின்றன. விளையாட்டையும் அரசியலையும் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று வேதம் ஓதுகிறது ஒரு கோஷ்டி. இன்னொரு கோஷ்டி, இலங்கையிலிருந்து வந்து விளையாடும் வீரர்கள் ஐ.பி.எல்.லில் தனிப்பட்ட மனிதர்களாகத்தான் பங்கேற்கிறார்களே தவிர அந்த நாட்டின் பிரதிநிதிகளாக அல்ல என்று கயிறு திரிக்கிறது. இதில் குஷ்பு, இலங்கை வீரர்களை அனுமதிக்க மறுக்கும் தமிழக அரசின் முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக, என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியாமலேயே கருத்துச் சொல்லியிருக்கிறார்.
காலங்காலமாக விளையாட்டுப் போட்டிகள், விளையாட்டு வீரர்கள் ஒரு தேசிய அடையாளத்தின் பிரதிநிதிகளாக இருந்து வந்திருக்கிறார்கள். இன்று ஒரு நாடு அமைதியான அரசியல், பொருளாதார சூழ்நிலைக்குள் இருக்கிறது என்பதை உலகிற்குக் காட்ட சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை அங்கே நடத்துவதுதான் முதன்மையான வழிமுறையாக இருக்கிறது. ஒரு நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்காகவோ அல்லது சர்வதேச விவகாரங்களில் அதன் நிலைப்பாட்டைப் பொறுத்தோ அந்த நாட்டின்மீது அழுத்தம் கொடுப்பதற்கு விளையாட்டுப் போட்டிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்பட்டு வந்திருக்கின்றன.
தைவானை ஒலிம்பிக்குக்காக ஒரு நாடாக அங்கீகரித்ததை எதிர்த்து 1956இலிருந்து 25 வருடங்கள் சீனா ஒலிம்பிக்கைப் புறக்கணித்தது. 1956ஆம் ஆண்டில் சோவியத் யூனியனின் ஹங்கேரிப் படையெடுப்பைக் கண்டித்து நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன் போன்ற நாடுகள் ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன. 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக்கை ஆப்கானிஸ்தானை சோவியத் யூனியன் ஆக்கிரமித்ததைக் கண்டித்து அமெரிக்கா உள்ளிட்ட 62 நாடுகள் புறக்கணித்தன. அதற்குப் பதிலாக 1984ஆம் ஆண்டு அமெரிக்கா நடத்திய ஒலிம்பிக்கை சோவியத் உள்ளிட்ட 16 நாடுகள் புறக்கணித்தன. 1988ஆம் ஆண்டு சியோலில் நடந்த ஒலிம்பிக்கை அரசியல் காரணங்களுக்காக வடகொரியா, க்யூபா, எத்தியோப்பியா நாடுகள் புறக்கணித்தன. ஈராக், குவைத்தை ஆக்கிரமித்ததைக் கண்டித்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விளையாட 1990ஆம் ஆண்டு அந்த நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது.
தென்னாப்ரிக்காவின் இனவெறிக் கொள்கைக்காக சர்வதேச சமூகம் நீண்ட காலமாக அதை விளையாட்டுப் போட்டி களிலிருந்து ஒதுக்கி வைத்த தை நாம் அனைவரும் அறிவோம். மேலும் மொன்றியோல் நகரில் 1976ஆம் ஆண்டு நடைபெற்ற உலக ஒலிம்பிக் போட்டியை ஆப்ரிக்காவின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து 22 ஆப்ரிக்க நாடுகள் புறக்கணித்தன.
இந்தியா, பாகிஸ்தா னோடு எப்போதெல்லாம் கசப்பும் மோதலும் வரு கிறதோ அப்போதெல்லாம் அதனுடனான கிரிக்கெட் பந்தயங்களை விலக்கிக் கொண்டிருந்திருக்கிறது. காஷ்மீரில் ஐந்து இராணுவ வீரர்கள் இறந்ததற்காக இந்தியா-பாகிஸ்தான் இடையே 2003 ஏப்ரலில் நடைபெற இருந்த ஹாக்கித் தொடரையும், இந்திய அணி பாகிஸ்தான் போவதற்கான அனுமதியையும் அரசு ரத்து செய்துள்ளது. 2013, ஜனவரியில் இந்திய எல்லையில் இந்திய இராணுவ வீரர் ஒருவர் தலையை அறுத்து கொல்லப்பட்டதற்கு எதிராக இந்தியா ஹாக்கி லீக்கில் விளையாடி வந்த ஒன்பது பாகிஸ்தான் வீரர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். 2013 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மகளிர் அணி மும்பையில் ஆடவேண்டிய மூன்று போட்டிகளும் சிவசேனாவின் எதிர்ப்பினால் ஒரிசாவிற்கு மாற்றப்பட்டது.
இவ்வளவு ஏன், ஐ.பி. எல்.லின் லட்சணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பைசா பெறாத உள்ளூர் கிரிக்கெட் வீரர்களையெல்லாம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் எடுக்கும் ஐ.பி.எல். அணிகள் 2009ஆம் ஆண்டிலிருந்து ஒரு பாகிஸ்தான் வீரரைக்கூட வாங்காததன் மர்மம் என்ன? இன்று இலங்கை வீரர்களை அந்த நாட்டின் பிரதிநிதியாகக் கருதக்கூடாது என்பவர்கள் அந்த சலுகையை ஏன் பாகிஸ்தான் வீரர்களுக்குக் கொடுக்கவில்லை? இங்கு பாகிஸ்தான் வீரர்களை தடுத்தால் அது தேசபக்தி. தமிழர்கள் இலங்கை வீரர்களை எதிர்த்தால் அது இனவெறி. உங்கள் போலி நாடகங்களுக்கு ஒரு எல்லையே இல்லையா?
முத்தையா முரளீதரனின் உளறல்களை எடுத்துக்கொள்வோம். மலையகத் தமிழரான முத்தையா முரளீதரனுக்கு அங்கு மலையக மக்கள் சிங்கள அரசாங்கத்தால் காலங்காலமாக எவ்வளவு கொடூரமாக ஒடுக்கப்படுகிறார்கள் என்பதைப் பற்றி எந்த மனஉறுத்தலும் இல்லை. சுழல் பந்து வீச்சில் அபூர்வமான ஆற்றல் படைத்த முரளியை சிங்கள அரசாங்கம் தனது தேசிய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக்கொண்டது. அவ் வளவுதான். உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பெரும் சாதனையாளராக இருந்த போதும்கூட அவரால் ஒருமுறைகூட இலங்கை அணியின் கேப்டன் பதவியைப் பெறமுடிய வில்லை. ஐ.சி.சி. விருதுக்கு அவர் பல ஆண்டுகளாக தேர்ந்தெடுக்கப்படாமலேயே இருந்தார். அதற்குக் காரணம் இலங்கை கிரிக்கெட் சபை அவர் பெயரை பரிந்துரைக்காமல் இருந்தது தான். உண்மையில் முத்தையா முரளீதரனுக்கு மட்டுமல்ல, டக்ளஸ் தேவானந்தா, கருணா, கே.பி. போன்ற தமிழர்களுக்கும் சிங்கள அரசாங்கத்தால் எந்தப் பிரச்சினையும் இல்லைதான். அதனுடைய வெற்றிக்கும் தேசிய பெருமிதத்திற்கும் யாரெல் லாம் துணையாக இருக்கிறார்களோ அந்த தமிழர்களுக்கெல்லாம் அவர்களது அன்பும் பாதுகாப்பும் கிடைக்கும். முரளி, லட்சக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதையும் பல்லாயிரம் தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதையும் குழந்தைகள் கொடூரமாகச் சுட்டுக் கொல்லப்பட்டதையும் கடந்தகாலம் என்று எளிதாக மறந்துவிடச் சொல்கிறார்.
முத்தையா முரளீதரன் போன்ற தங்கள் சொந்த நலனைத் தவிர வேறெதுவும்  தெரியாத கார்ப்பரேட் விளையாட்டுகளின் கூலி அடிமைகளுக்கு நடுவே நீதியையும் ஜனநாயகத்தையும் உயர்த்திப் பிடித்த சில விளையாட்டு வீரர்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வியட்நாமில் அமெரிக்கா நடத்திய கொடூரமான யுத்தத்தை கண்டித்து உலகப் புகழ்பெற்ற குத்துச்சண்டை வீரர் முகமது அலி அமெரிக்காவின் கட்டாய ராணுவப் பயிற்சிக்குச் செல்ல மறுத்தார். ஜிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹென்றி ஒலாங்கா தனது நாட்டில் தங்கள் அரசாங்கம் செய்து வந்த மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து உலகப் போட்டிகளில் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடினார்.
தமிழர்கள், சென்னையில் எந்த நாட்டு அணி சிறப்பாக விளையாடினாலும் இந்திய அணியை ஆதரிப்பது போலவே ஆதரிப்பவர்கள். சிறிய நாடான இலங்கை கடந்த காலத்தில் கிரிக்கெட் பந்தயங்களில் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களில் அதை ஆசிய நாடுகளின் வெற்றியாக கொண்டாடியவர்கள். இன்று சிங்கள இனவெறி என்பது தமிழ் இனத்தை பேரழிவிற்கு ஆளாக்கியிருக்கும் சூழலில் அதற்கான எந்த சிறிய நியாயத்தையும் வழங்க இந்தியாவும் சர்வதேச சமூகமும் மறுத்துவரும் சூழலில் இலங்கை வீரர்களை எதிர்ப்பது என்பது ஒரு தார்மீகரீதியான அரசியல் போராட்டமே தவிர அது இனவெறிப் போராட்டமல்ல. அதை இனவெறியாகச் சித்தரிக்க விரும்புகிறவர்களுக்கு ஒன்று அரசியல் தெரியவில்லை. அல்லது அவர்கள் தமிழர்களின்மீது ஆழமான இனவெறுப்பைக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.
விளையாட்டு ஒரு அரசியல் கருவி. அது தேசிய அடையாளத்தையும் தேசிய நலன்களையும் வெளிப்படையாகப் பிரதிபலிக்கிறது. தேசிய வெறியை வளர்ப்பதில் அரசியலும் விளையாட்டும் பிரிக்க முடியாதவை. அந்த வகையில் சிங்கள தேசிய வெறியை எதிர்ப்பதற்காகவே தமிழர்கள் இலங்கை வீரர்களை எதிர்க்கிறார்கள். இனியும் எதிர்ப்பார்கள். இலங்கையில் திரும்பியிருக்கும் போலி மயான அமைதிக்குப் பின்னே ஒளிந்திருக்கும் கொடூரத்தை இந்த உலகத்திற்குக் காட்ட இந்த எதிர்ப்பை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்