Home » » கல்வி கடன்- பொதுவான கேள்வி பதில்கள்.

கல்வி கடன்- பொதுவான கேள்வி பதில்கள்.

Written By DevendraKural on Wednesday, 22 May 2013 | 10:47

கல்விக் கடன் கம்ப்ளீட் அலசல்! 


ல்விக் கடனுக்காக விண்ணப்பிக்க ஒரு மாணவன் வங்கியில் காத்திருக்கிறான். வங்கி மேலாளர் அழைத்துக் கேட்கிறார். 'உன் அப்பா ஒரு கூலித் தொழிலாளி.  உங்களுக்கென்று ஒரு சொந்த வீடுகூட கிடையாது. எப்படி உன்னிடம் இருந்து நான் கடனை வசூலிப்பது?''  ''வசதி இருந்தா நாங்க எதுக்குசார் கடன் கேட்டுவர்றோம்?''- இது மாணவனின் பதில். கடைசிவரை மாணவர்களுக்குப் போராட்டம் மட்டுமே மிஞ்சுகிறது. இப்படிக் கல்விக் கடன் கேட்டு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காவே போராடிக்கொண்டு இருக்கிறது E.L.T.F (EDUCATION LOAN TASK FORCE) எனும் கல்விக் கடன் அலுவல்படை. வங்கியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஸ்ரீனிவாசன் என்பவர்தான் இந்த அமைப்பை நடத்திவருகிறார்.

அவரிடம் பேசினோம். '' கல்விக் கடன் வாங்குவதற்காக மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்படுறாங்கன்னு எனக்குத் தெரியும். அவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னுதான் இந்த அமைப்பைத் தொடங்கினேன். கல்விக் கடனைப் பொறுத்தவரை இரண்டு திட்டங்கள்தான் நடைமுறையில் இருக்கின்றன. ஒன்று பொதுத் திட்டம். மற்றொன்று தனிப்பட்ட கடன் திட்டம்.

பொதுத் திட்டமானது மதிப்பெண் அடிப்படையில் சேரும் மாணவர்களுக்குப் பொருந்தும். மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட கடன் திட்டம். கல்விக் கடன் வாங்கும் எல்லோருமே  பொதுவாகத் தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களைச் சொல்கிறேன். கல்விக் கடனுக்கான  விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்றால், வங்கி  மேலாளர்கள், அவர்களுடைய உயர் அதிகாரிகளின் அனுமதியின் பேரில்தான் நிராகரிக்க முடியும். நிராகரிப்பதற்கான காரணங்களையும் எழுத்து மூலம் மாணவர்களுக்கு உடனடியாகத் தெரியப்படுத்த வேண்டும். தகுந்த காரணம் இல்லாமல் நிராகரிக்கப்பட்டதாகக் கருதினால்,  மாணவர்கள் வங்கியின் தலைவரிடமே மேல் முறையீடு செய்யலாம். கல்விக் கடன் வாங்கும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் வட்டியைச் செலுத்தவேண்டியக் கட்டாயம் இல்லை. அது அவர்களின் விருப்பத்தைப் பொறுத்தது. தொழிற்கல்வி மற்றும் மேலாண்மைக் கல்வி படிக்கும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு மத்திய அரசின் வட்டிக்கான மானியமும் உண்டு. இதற்கான விண்ணப்பத்தைக் கல்விக் கடனில் முதல் தவணை பெறும்போதே, வருமானச் சான்றிதழை இணைத்துக் கொடுத்துவிட வேண்டும். பெற்றோர்களின் எந்தவொரு தனிப்பட்ட கடனுக்கும் அவர்களுடைய பிள்ளைகளின் கல்விக் கடனுக்கும் சம்பந்தமில்லை.

ஒரே வீட்டில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கும் கல்விக் கடன் கொடுக்கச் சட்டத்தில் வழிவகை உண்டு.  நான்கு லட்சம் வரையிலான கல்விக் கடனுக்குத் தனி நபர் ஜாமீன் மற்றும் சொத்து ஜாமீன் தேவையில்லை.  பெற்றோர்கள் கையெழுத்துப் போட்டால் மட்டும் போதும். எங்களோட இணைய தளத்தில் கல்விக் கடன் சம்மந்தமான அனைத்துத் தகவல்களையும் கொடுத்திருக்கிறோம்.(www.eltf.in )

எங்கள் அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் 560 மாணவர்களுக்குக் கல்விக் கடன் வாங்கிக் கொடுத்து இருக்கிறோம். கல்விக் கடன் கிடைக்காம கஷ்டப்படும் மாணவர்கள் info@eltf.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பினால் போதும். நாங்களே தேடிவந்து உதவிகள்  செய்து தருவோம்'' என்கிறார்.

கல்வி கற்க இனி என்ன கவலை?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பிளஸ் டூ ரிசல்ட் வந்தாச்சு... அடுத்து காலேஜில் சேர வேண்டும். கல்லூரிகள்
பக்கம் போனால் அவர்கள் கேட்கும் கட்டணமோ சாதாரணமானவர்களால் கட்டக்கூடிய
அளவுக்கு இல்லை... இந்நிலையில் இருக்கும் ஒரே வழி கல்விக்கடன் வாங்குவதுதான்.
ஆனால் அதிலும் ஆயிரத்தெட்டு சந்தேகங்கள்... எந்த படிப்புக்கெல்லாம் கடன்
கிடைக்கும், எவ்வளவு தொகை கிடைக்கும், வட்டி எவ்வளவு? அதற்கான தகுதி என்ன என
ஏராளமான சந்தேகங்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மனதில் இருக்கும். அதற்கான
விடைகளைப் பார்ப்போம்.
*எந்தெந்த படிப்புகளுக்கு கிடைக்கும்?*
     கல்விக் கடன் என்பது உயர்கல்வி படிக்க கிடைக்கும் கடன். மருத்துவம்,
பொறியியல், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., பி.காம்., பி.எஸ்சி.,  போன்ற படிப்பு களுக்கு
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள
அனைத்து படிப்புகளுக்கும் கடன் வாங்கிக் கொள்ளலாம். சில வங்கிகளில் கலைப்
படிப்புகளுக்கு கல்விக் கடன் இல்லை என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அவர்கள்
இதுபோன்ற படிப்புகளுக்கு எளிதாக வேலை கிடைக்காது என்பதால் கடன் கொடுக்க
மறுக்கும் நிலை இருக்கிறது. அதுபோன்ற நிலையில் சற்று போராடினால் மட்டுமே கடன்
வாங்க முடியும். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு டிப்ளமோ படிப்பவர்களுக்கும்
கல்விக் கடன் உண்டு.
*எவ்வளவு கடன் கிடைக்கும்?*
நான்கு லட்சம் ரூபாய் வரை உத்தரவாதம் எதுவும் இல்லாமல் கடன் கிடைக்கும். 4
லட்சம் முதல் 7.5 லட்சம் வரை பெற்றோரில் ஒருவர் தனிநபர் உத்தரவாதம் கொடுக்க
வேண்டிவரும். 7.5 லட்சம் ரூபாய்க்கு மேல் கடன் என்றால் சொத்து ஜாமீன் கொடுக்க
வேண்டும். இது உள்நாடு மற்றும் வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களுக்கு என
அனைத்துக்கும் பொருந்தும்.
*எப்படி வாங்குவது?*
பெற்றோருக்கு எந்த வங்கியில் கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கி யில் கல்விக் கடன்
பெறலாம். சில நகரங்களில் ஏதாவது ஒரு வங்கி, கல்விக் கடன் தருவதற்கென்றே
ஒதுக்கப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்பட்சத்தில் அதில் கணக்கு ஆரம்பித்து,
கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
*
எந்த செலவுக்கு எல்லாம் கிடைக்கும்?*
கல்விக் கட்டணம், விடுதி வாடகை மற்றும் சாப்பாட்டுச் செலவு, சீருடை,
புத்தகங்கள், கல்விச் சுற்றுலா, மாணவருக்கு இன்ஷூரன்ஸ் பிரீமியம்,
கம்ப்யூட்டர்/லேப்டாப் உள்ளிட்டவைகளுக்கு கல்விக் கடன் வாங்கிக் கொள்ளலாம்.
*எப்படி கடன் வாங்குவது?*
கல்லூரியில் இருந்து கல்விக் கட்டணம், விடுதி வாடகை, உணவுக் கட்டணம்,
சீருடைகளுக்கு எனத் தனித்தனியாக எவ்வளவு ஆகும் என்று போனஃபைட் சான்றிதழில்
குறிப்பிட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். அதன்பிறகு வங்கியை அணுகி விண்ணப்பிக்க
வேண்டும். அதற்குரிய காசோலை கல்லூரி பெயரில் கொடுக்கப்படும். புத்தகங்கள்,
கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்கிவிட்டு அதற்குரிய ரசீதை வங்கியில் கொடுத்தால்
அந்த பணம் கிடைத்துவிடும். இது மாணவரின் கடன் கணக்கில் சேர்த்துக்
கொள்ளப்படும்.
*எப்போது கடனை திரும்பக் கட்டுவது?*
படிப்பு முடிந்து ஒரு வருடத் துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த
ஆரம்பிக்கலாம். ஆனால், வேலை கிடைத்துவிட்டால் உடனே கடனைக் கட்ட ஆரம்பித்துவிட
வேண்டும். முன்பு படிக்கிற காலத்தில் கடனுக்கான வட்டி கணக்கிடப்பட்டு,
வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால், 2009-க்குப் பிறகு கொடுக்கப்படும் கல்விக்
கடனுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 4.5 லட்சம் ரூபாய்க்குள் இருந்தால்
படிக்கிற காலத்திற்கான வட்டியை மத்திய அரசே வங்கிகளுக்குக் கொடுத்து விடுகிறது.
வெளிநாடுகளில் படிக்கிற மாணவர்களுக்கு இந்தச் சலுகையை வங்கிகள் தருவதில்லை.
ஆனால், வெளிநாட்டுப் படிப்புக்கும், உள்நாட்டுப் படிப்புக்கும் ஒரே வட்டி
விகிதம்தான்.
விரைவாக கடனைத் திருப்பிச் செலுத்தும் மாணவர்களுக்கு 1% வட்டி
குறைக்கப்படுகிறது. மாணவிகளுக்கு வட்டியில் சுமார் 0.5% சலுகை
அளிக்கப்படுகிறது. கடனை மாதத் தவணையாகக் கட்ட வேண்டும் என்பதில்லை. மாதத் தவணை
காலம்போக எப்போதெல்லாம் பணம் கிடைக்கிறதோ, அப்போ தெல்லாம் அந்த தொகையைக் கட்டி
கடன் பளுவை குறைத்துக் கொள்ளலாம்.
*தேவையான ஆவணங்கள்!*
கல்லூரி போனோஃபைட் சான்றிதழ்.
கட்டணம் குறித்த தெளிவான தகவல்கள்.
பெற்றோரின் வருமானச் சான்றிதழ்.
இருப்பிடச் சான்றிதழ்.
பள்ளி மாற்று சான்றிதழ்.
10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்.
பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட தொழிற்கல்வி என்றால் கவுன்சிலிங் அழைப்புக்
கடிதம், சேர்க்கைக் கடிதம்  உள்ளிட்டவை தேவைப்படும்.
வெளிநாட்டு படிப்பு என்றால் கூடுதலாக விசா, எந்த கல்லூரியில் படிக்க
இருக்கிறார், கல்லூரி மற்றும் படிப்புக்கான அங்கீகார விவரம் போன்றவற்றையும்
கொடுக்க வேண்டும்.
*
கவனத்தில் கொள்ள வேண்டியவை!*
எக்காரணம் கொண்டும் மாணவர்கள் ஏதாவது ஒரு பாடத்தில்கூட ஃபெயிலாகி விடக்கூடாது.
ஏதாவது ஒரு பாடத்தில் ஃபெயிலானால்கூட சில வங்கிகள் அடுத்த ஆண்டுக் கான கடன்
தருவதை நிறுத்திவிடும் அபாயம் இருக்கிறது. அதன்பின் அந்த பாடத்தை மீண்டும்
எழுதி பாஸான பிறகுதான் கடன் கிடைக்கும்.
ஏதாவது ஒரு காரணத்துக்காக படிப்பை பாதியில் நிறுத்தினாலும் தொடர்ந்து கடன்
கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. அதுவரையில் வாங்கிய கடனை வட்டியோடு திரும்பச்
செலுத்த வேண்டிவரும்.
*வரிச் சலுகை!*
திரும்பச் செலுத்தும் கல்விக் கடனில் 80-இ பிரிவின் கீழ் வட்டிக்கு மட்டுமே
வரிச் சலுகை உண்டு. திரும்பச் செலுத்தும் அசலுக்கு வரிச்சலுகை இல்லை. யார்
படிப்புக்காக கல்விக் கடன் பெறப்பட்டுள்ளதோ, அவருக்குதான் வரிச் சலுகை உண்டு.
கல்விக் கடனைக் திரும்பச் செலுத்த ஆரம்பித்து, எட்டு வருடங்கள் வரை மட்டுமே
வருமான வரி விலக்கு கிடைக்கும்.
*
கடன் தர தயக்கம்*
கல்விக் கடன் கொடுப்பதும், கொடுக்காமல் இருப்பதும் பொதுவாக அந்தந்த வங்கியின்
மேலாளரைப் பொறுத்த விஷயமாக இருக்கிறது. குறைவாக மதிப்பெண்
எடுத்திருப்பவர்களுக்கு கடன் வழங்க வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால்,
சட்டப்படி மாணவருக்கு உயர் கல்வி படிக்க கல்லூரியில் அனுமதி கிடைத்துவிட்டாலே
அவருக்கு கடன் வழங்க வேண்டும் என்பதுதான் அரசு விதி. இருப்பினும் இந்த விதியை
பெரும்பாலான வங்கிகள் சட்டை செய்வதில்லை. அதேபோல் சில படிப்புகளுக்கு
எதிர்காலத்தில் வேலைவாய்ப்பு அவ்வளவு பிரகாசமாக இருக்காது என வங்கிகள்
நினைக்கலாம். அது போன்ற படிப்புகளுக்கு கடன் கிடைப்பது சற்று கடினம்தான்.
'மாணவர்கள் கடனை சரியாக திருப்பிச் செலுத்துவது இல்லை. இதனால், வாராக் கடன்
அதிகரிக்கும்' என்கிற பயத்தாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் தயக்கம்
காட்டுகின்றன. என்றாலும், முன்புபோல இல்லாமல் இப்போது நிறைய வங்கிகள் கல்விக்
கடனை அதிக அளவிலேயே கொடுத்து வருகின்றன. இந்தியன் வங்கி அடுத்த ஓராண்டில் 1.5
லட்சம் மாணவர்களுக்கு 900 கோடி ரூபாய் கடன் கொடுக்கப் போவதாக அறிவித்துள்ளது.
மற்ற வங்கிகளும் கல்விக் கடனை போட்டி போட்டுக் கொண்டு கொடுத்து வருகின்றன.
கொடுக்கும் கடன் மீண்டும் நல்லபடியாக திரும்ப வந்து சேரும் என்கிற நம்பிக்கை
மட்டும் வந்துவிட்டால் போதும்; வங்கிகள் கல்விக் கடன் கொடுக்கத் தயங்காது.
படித்துவிட்டு வேலைக்கு செல்லும் மாணவர்களும் ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்
பிரச்னைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும்'' என்கிறார் முன்னணி பொதுத் துறை
வங்கியின் மேலாளர் ஒருவர். 
----------------------------      ---------------------------------------   -----------------------------------------------------------------------
கல்வி கடன்- பொதுவான கேள்வி பதில்கள்.

ஏழை மாணவர்களின் வரப்பிரசாதமான கல்விக் கடன் திட்டம், அடித்தட்டு மாணவர்களும் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2005-ம் ஆண்டு முதல் அமலில் இருந்து வருகிறது. மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் அறிவுரையின்படி சுமார் 25 தேசிய மயமாக்கப்பட்ட - பொதுத்துறை வங்கிகளும், சில தனியார் வங்கிகளும் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி வருகின்றன.
தங்களது குழந்தைகள் தரமான கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக, எப்பாடுபட்டாவது வங்கியில் கல்விக் கடன் பெற்றே தீர வேண்டும் என்று ஆண்டுதோறும் பிளஸ்-2 தேர்வு முடிவுகளுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான பெற்றோர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் கல்விக் கடன் பெறுவது தொடர்ந்து சிக்கலான நடைமுறையாகவே இருந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. வங்கிகளின் நடை முறைகளை பெற்றோர், மாணவர்கள் முழுவதுமாக அறிந்துகொள்ளாமல் இருப்பதும், சரியான முறையில், சரியான நபர்களை அணுகாததுமே இதற்குக் காரணம் என்று வங்கிகள் தரப்பில் கூறப்படுகிறது.

வங்கிக் கடன் விஷயத்தில் பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கேட்கப்படும் சில கேள்விகளுக்கு சில முன்னணி வங்கிகளின் உயர் அதிகாரிகள் தெரிவித்த பதில்கள் வருமாறு:

வங்கிக் கடன் பெற மாணவர்களுக்கான அடிப்படைத் தகுதிகள் ஏதேனும் உள்ளதா?

விண்ணப்பிப்பவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். நல்ல மதிப்பெண்ணுடன் எந்த கல்வி கற்க இருக்கிறாரோ அதற்கான முழு தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.

வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்க என்னென்ன ஆவணங்கள் தேவை?

மாணவரின் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரியில் சேருவதற்கான அட்மிஷன் கார்டு, கல்லூரியின் கட்டண விவரம், மாணவரின் இருப்பிடச் சான்று, அடையாளச் சான்றுகளில் ஏதேனும் ஒன்று.

கடன் பெறும் மாணவரின் தந்தைக்கு சொத்து ஏதேனும் இருக்க வேண்டுமா வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கடன் பெறத் தகுதியானவர்களா?

கல்விக் கடன் வழங்க மாணவர்களுக்கு எந்தவித நிபந்தனையையும் விதிக்கக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுரை வழங்கியுள்ளது. எனவே மாணவரின் பெற்றோருக்கு மாத வருமானம் எவ்வளவு, எவ்வளவு கடன் உள்ளது, அசையும்-அசையா சொத்துகள் என்னென்ன உள்ளது என்பது போன்ற விவரங்கள் அவசியம் இல்லை.
வாடகை வீட்டில் வசித்தாலும் கடன் பெறத் தகுதியானவர்கள்தான். ரூ.4 லட்சம் வரை கடன் பெறுபவர்களிடம் எந்த ஆணவங்களையும், உத்தரவாதத்தையும் கேட்கக் கூடாது என்று விதிமுறை உள்ளது.

ஒரு வங்கியின் சேவைக்கு உட்பட்ட பகுதியில் இருப்பவர்கள்தான் அங்கு கடனுக்கு விண்ணப்பிக்க முடியுமா?

ஒரு மாணவருக்கு பொதுத் துறை வங்கிதான் கடன் வழங்க வேண்டும், தனியார் வங்கிதான் வழங்க வேண்டும் என்ற விதிமுறைகள் எதுவுமில்லை. மாணவர்கள் உயர் கல்வியைப் பெறுவதற்கு அலைக்கழிக்கப்படக் கூடாது என்பதற்காக எல்லா வங்கிகளும் கல்விக் கடன் வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒரு மாணவர் அருகில் உள்ள வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம். அங்கு ஒரு வேளை கடன் மறுக்கப்பட்டால் மறுக்கப்படுவதற்கான சான்றைப் பெற்று அருகில் உள்ள மற்றொரு வங்கியில்
கொடுத்து கடனைப் பெறலாம்.

கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் குடும்பம், சூழ்நிலையால் வெளியூர் செல்ல நேர்ந்தால் எங்கு கடன் பெறுவது?

அவர்கள் தற்போது வசிக்கும் இடத்தின் இருப்பிடச்சான்று இருந்தால் வீட்டின் அருகில் உள்ள வங்கியில் கடனுக்கு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி படிப்புகளுக்கு மட்டும்தான் வங்கிக் கடன் கிடைக்குமா?

மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்படிப்புகளுக்கு மட்டுமல்ல, கலை, அறிவியல், டிப்ளமா உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் கடன் பெற முடியும். நர்சரி முதல் பிளஸ்-2 வரை படிப்பதற்கும், குழந்தைகள் கணிப்பொறி வாங்குவதற்கும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி பெறுவதற்கும் கூட வங்கிக் கடன் வழங்கப்படும். கல்லூரிப் படிப்பு கடனைப் பொருத்த
வரை, மாணவர்கள் சேரும் கல்லூரி, படிக்கும் நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும். அந்தப் படிப்பும் அங்கீகாரம் பெற்ற படிப்பாக இருக்க வேண்டும். சான்றிதழ் படிப்புகளுக்குப் பொதுவாக வங்கிகள் கடன் வழங்குவதில்லை.

ஒரு மாணவனுக்கு அதிகபட்சம் எவ்வளவு கல்விக் கடன் கிடைக்கும்?

பொதுவாக கல்விக் கடனுக்கான உச்சவரம்பு எதுவும் இல்லை. இருப்பினும் உள்நாட்டுப் படிப்புகளுக்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளுக்கு சென்று படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக கடன் வழங்கப்படுகிறது. செக்யூரிட்டி, ஜாமீன், அடமானம் எதுவுமின்றி ரூ.4 லட்சம் வரை கடன் பெறலாம். நான்கு லட்சம் முதல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடனுக்கு 3-ம் நபரின் உத்தரவாதம் தேவைப்படும். அந்த 3-ம் நபர் வருமான வரி செலுத்துபவராக இருக்க வேண்டும். மேலும் விளிம்புத் தொகையும் செலுத்த வேண்டும். ரூ.7.50 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு விளிம்புத் தொகையுடன் ஏதேனும் சொத்து உத்தரவாதமாக காண்பிக்க வேண்டும்.

ஒரே வீட்டில் இருவருக்கு வங்கிக் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

நிச்சயமாக கிடைக்கும். ஒரே வீட்டில் 2 மாணவர்கள் இருக்கும்போது, ஏற்கெனவே ஒருவர் வங்கிக் கடன் பெற்று படித்துக் கொண்டிருக்கலாம். இந்நிலையில் மற்றொரு மாணவரும் அதே வங்கியில் கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும். இவ்வாறு கடன் வழங்கும்போது மேலே குறிப்பிட்டதைப் போல் இருவரின் மொத்த கடனும் ரூ.4 லட்சம் வரை இருந்தால் பிணை எதுவும் தேவையில்லை. அதற்கு அதிகமாக இருந்தால் 3-வது நபரின் உத்தரவாதம், சொத்து உத்தரவாதம், விளிம்புத் தொகை போன்றவை தேவைப்படும்.

கல்லூரிகளில் தனியார் ஒதுக்கீட்டில் இடம் பெறும் மாணவர்களுக்கு கல்விக் கடன் கிடைக்குமா?

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரியில், அங்கீகாரம் பெற்ற படிப்புக்குக் கடன் கிடைக்கும். இருப்பினும் கவுன்சலிங் மூலம் செல்லாதவர்களுக்கு ரூ.4 லட்சத்தை விடக் குறைவான கடனுக்கே சில வங்கிகள் 3-ம் நபரின் உத்தரவாதம் வேண்டும் என்று கேட்கின்றன. பொதுவாக கவுன்சலிங் மூலம் ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு வங்கிக் கடனில் பிரச்னைகள் எதுவும் வருவதில்லை.

கடன் பெறும் வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?

ஏற்கெனவே வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால் கடனுக்கு விண்ணப்பித்து அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியில் மாணவரும் அவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவரும் இணைந்து வங்கிக் கணக்குத் தொடங்க வேண்டும்.

கல்லூரியில் பல்வேறு வகையான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. எந்தெந்த தேவைகளுக்கு கல்விக் கடன் வழங்கப்படும்?

கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், டியூஷன் கட்டணம், தேர்வுக் கட்டணம், புத்தகம், சீருடைக் கட்டணம் போன்ற செலவினங்களுக்கான தொகையை கல்விக் கடனில் செலுத்த முடியும். மற்றபடி தனியார் கல்லூரிகளில் கேட்கப்படும் நன்கொடை, கேப்பிடேஷன் ஃபீஸ் போன்றவற்றுக்கு கல்விக் கடன் கிடைக்காது. தேர்வுக் கட்டணம் போன்றவை குறித்து முன்கூட்டியே குறிப்பிடுவது நல்லது.

கல்விக் கடனுக்கு வட்டி எவ்வளவு விதிக்கப்படுகிறது? இதில் சலுகைகள் ஏதேனும் உள்ளனவா?

வட்டியே இல்லாத கல்விக் கடன் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து இன்னும் தெளிவான, அதிகாரப்பூர்வ உத்தரவு வங்கிகளுக்கு வழங்கப்படவில்லை. எனவே அதுவரை கல்விக் கடனுக்கு வட்டி செலுத்தியே ஆக வேண்டும். வங்கிகளின் விதிமுறைகள் ஒரேபோல இருந்தாலும் வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. பொதுவாக தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்தபட்சம் 12 சதவீதம் முதல் அதிகபட்சம் 14 சதவீதம் வரை கல்விக் கடனுக்கு வட்டி வசூலிக்கப்படுகிறது. 12-க்கு குறைவாகவோ, 14-க்கு அதிகமாகவோ எங்கும் வட்டி வசூலிக்கப்படுவதில்லை. மாணவிகளுக்கு வட்டியில் 0.25 சதவீதம் முதல் ஒரு சதவீதம் வரை சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எந்த மாதிரியான வட்டி விகிதம் மாணவர்களுக்கு ஏற்றது?

கல்விக் கடனுக்கான வட்டி வீட்டு கடன்களுக்கான வட்டியைவிடச் சிறிது கூடுதலானது. ஃபிக்சட் வட்டி, ஃபுளோட்டிங் வட்டி என்ற இரண்டு முறைகளில் வட்டி விகிதம் உள்ளது. ஃபிக்சட் வட்டியை நிர்ணயிப்பதில் பல வங்கிகள் குழப்பமான நடைமுறையைக் கொண்டுள்ளன என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும். இரு வட்டி விகிதங்களுக்கும் இடையே சிறிய அளவுதான் வித்தியாசம் என்றால் ஃபிக்சட் வட்டியைத் தேர்வு செய்வதே சிறந்தது. கடன் வாங்கியதில் இருந்தே அசல், வட்டியை செலுத்த வேண்டுமா? படிப்பை முடிக்கும் வரையிலும் அசல் கொடுக்கத் தேவையில்லை. ஆனால் மாணவர்கள் விரும்பினால் வட்டியையும் அசலையும் ஆரம்பத்திலிருந்தே தவணை முறையில் (இ.எம்.ஐ.) செலுத்தலாம். ஆனால் வங்கிகள் இதை வற்புறுத்தக் கூடாது. பொதுவாக கொடுத்த கடனைத் திரும்ப வசூலிக்க இரண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் கடன் தொகை பெற்ற மாதத்திலிருந்தே வட்டி
செலுத்துவது ஒருமுறை. பணியில் சேர்ந்த பிறகு கடன் தொகையுடன், வட்டித் தொகையையும் சேர்த்து 60 மாதங்கள் முதல் 84 மாதங்கள் வரை மாதாந்திர தவணையில் திரும்பச் செலுத்தும் திட்டம் மற்றொரு முறை. படிக்கும்போதே மாதந்தோறும் இ.எம்.ஐ. செலுத்தினால் வட்டி குறைய வாய்ப்பு உள்ளது.

படிப்பை முடித்த பிறகு வேலை கிடைக்காவிட்டாலும் கடனைச் செலுத்த வேண்டுமா?

படிப்பை முடித்து குறைந்தபட்சம் ஓராண்டு கழித்து அல்லது வேலை கிடைத்த 6 மாதத்துக்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். ஒருவேளை மாணவருக்கு வேலை கிடைக்காவிட்டால், அது தொடர்பான விவரத்தை சம்பந்தப்பட்ட வங்கியில் தெரிவித்தால் கடனைத் திருப்பிச் செலுத்த மேலும் கால அவகாசம் வழங்கப்படும்.

எந்த வகை சூழ்நிலைகளில் ஒருவருக்கு வங்கிக் கடன் மறுக்கப்படலாம்?

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் மாணவரின் தந்தையோ, பெற்றோரில் ஒருவரோ அந்த வங்கியில் ஏற்கெனவே கடன் பெற்று அதை சரிவர திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் (தவணை கடந்த பாக்கி) கடன் மறுக்கப்படவாய்ப்பு அதிகம். மேலும் மாணவரின் குடும்பத்தில் ஏற்கெனவே ஒருவர் கல்விக் கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ, குடும்ப உறுப்பினர் யாரேனும் வங்கியில் பெற்ற பிற வகைக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலோ வங்கிக் கடன் மறுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.

இளநிலைக் படிப்பை வங்கிக் கடனில் முடிக்கும் ஒருவர் முதுநிலைப் படிப்பைத் தொடர மீண்டும் வங்கிக் கடன் கிடைக்குமா?
நிச்சயம் கிடைக்கும். உதாரணமாக ஒரு மாணவர் கல்விக் கடன் பெற்று மெக்கானிகல் பட்டயப் படிப்பை முடித்த நிலையில், பி.இ. பட்டப் படிப்பில் சேர நினைத்தால். அதற்காக மீண்டும் கல்விக் கடன் பெறலாம். இதே போல் பி.எஸ்சி. முடித்தவர் எம்.எஸ்சி.க்கும், பி.இ. முடித்தவர் எம்.இ.க்கும் கல்விக் கடன் பெற முடியும்.

கல்விக் கடனுக்காக வங்கியை அணுகும்போது, எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு கடன் வழங்கிவிட்டோம். எனவே வேறு வங்கியை அணுகுங்கள் என்று சில வங்கிகள் கூறுகின்றனவே?

அப்படிக் கூற முடியாது. இந்த ஆண்டு 50 பேருக்குதான் கொடுப்போம், 100 பேருக்குதான் கொடுப்போம் என்று வங்கிகள் கூறித் தட்டிக் கழித்துவிட முடியாது. எவ்வளவு பேர் வந்தாலும் தகுதியுள்ளவர்களுக்குக் கடன் கொடுத்தே ஆக வேண்டும். சேலம் மாவட்டம் கொளத்தூரில் இந்தியன் வங்கி சார்பில் ஒரே கிராமத்தில் சுமார் 1,500 மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. சிலர் வேறு வங்கியில் கணக்கு வைத்திருக்கக்கூடும். அந்த வங்கியில் கல்விக் கடன் கொடுக்க மறுத்தால், அவர்களிடம் ஒப்புதல் கடிதத்தைப் பெற்று, எந்த வங்கியில் கல்விக் கடன் பெற வேண்டுமோ அந்த வங்கிக்கு விண்ணப்பிக்கலாம். வங்கிக் கடன் விஷயத்தில் இடைத்தரகர்களை நம்பாமல், பெற்றோரே வங்கியை நேரடியாக அணுகுவது நல்லது. சில வங்கிகள் கல்விக் கடன் வழங்காமல் தட்டிக் கழிப்பதால்தான் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, ஒவ்வொரு வங்கிக்கும் ஒவ்வொரு கிராமம், வார்டு வீதம் பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது.

சரியாக படிக்காத மாணவ-மாணவிகளுக்கு கல்விக் கடன் திடீரென நிறுத்தப்பட்டு விடுவதாக கூறப்படுகிறதே?
சில வங்கிகள் ஒவ்வொரு பருவத்திலும் (செமஸ்டர்) மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழைக் கேட்டுப் பெறுகின்றனர். மாணவர்கள் ஒரு செமஸ்டரில் தோல்வி அடைந்திருந்தாலும் அடுத்த செமஸ்டருக்கான கட்டணத்தைக் கொடுப்பதில்லை. மாணவர்கள் நன்கு படித்து வேலையில் சேர்ந்து கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது.

வங்கிக் கடன் தொடர்பான புகார்களை யாரிடம் தெரிவிப்பது?
தகுதி இருந்தும் கடன் வழங்க மறுப்பது, படிப்பு காலம் முடியும் முன்னரே கடனைத் திரும்பச் செலுத்துமாறு நிர்பந்திப்பது போன்ற வங்கி சங்க விதிகளை மீறும் வங்கிகள் மீது ரிசர்வ் வங்கியில் புகார் தெரிவிக்கலாம். மேலும் சம்பந்தப்பட்ட வங்கியின் மண்டல மேலாளர் அலுவலகத்திலும், வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் புகார் தெரிவிக்கலாம். இந்தியன் வங்கி உள்ளிட்ட சில வங்கிகள் எஸ்.எம்.எஸ். மூலம் புகார் தெரிவிக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளன. ஏழை மாணவர்களுக்கு கல்விக் கடன் பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எஜுகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ் உள்ளிட்ட அமைப்புகளும் இயங்கி வருகின்றன.

கல்விக் கடன்களை கட்டாயம் நமது வங்கிகள் தர வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்துகிறது. தற்போதைய பொருளாதார சூழலில் கடன்கள் கிடைப்பது எளிதானதாகவே இருந்தாலும் கல்விக் கடன்களை மாணவர்கள் பெறுவது இன்னமும் கூட முழுமையாக எளிதானதாக இல்லை என்றே கூறலாம்.

தரமான கல்விக்காக எவ்வளவு செலவானாலும் சரி நமது குழந்தைகள் நல்ல கல்வி நிறுவனத்தில் தான் படிக்க வேண்டும் என பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

ஸ்காலர்ஷிப் கிடைக்காதவர்கள் கல்விக் கடன்களை பெரிதும் நம்புகிறார்கள். தனியார் வங்கிகளும் கல்விக் கடனைத் தருவதாகக் கூறினாலும் பொதுவாக பொதுத் துறை வங்கிகள் தான் இவற்றை அதிகம் தருகின்றன. பொதுவாக தொழிற்படிப்புகள் படிப்பவர் தான் இவற்றை நம்பியிருக்கிறார்கள். திருப்பி அடைக்கத் தொடங்குவது ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு அப்புறம் என்பது தான் இதன் மிகப் பெரிய வசதி.

படிப்பு முடித்த ஒரு ஆண்டுக்கு பின்பாகவோ அல்லது வேலை கிடைத்த 6 மாதத்திற்கு அப்புறமாகவோ கடனை அடைக்கத் தொடங்கலாம் என்றே பொதுவாக வரைமுறைகள் உள்ளன. படிப்பின்போது வட்டியை மட்டும் செலுத்தினால் போதும். படிப்பு முடித்தபின் இ.எம்.ஐ. எனப்படும் அசலும் வட்டியுமாக திரும்ப அடைக்கத் தொடங்குதல் ஆரம்பிக்கிறது. படிப்பின் போதே இ.எம்.ஐ. செலுத்த தயாராக இருந்தால் வட்டியில் தள்ளுபடி கிடைக்கிறது. இந்த நியதிகள் வங்கிக்கு வங்கி சற்றே மாறுபடலாம்.

கல்விக் கடன்கள் பொதுவாக பர்சனல் லோன் எனப்படும் கடன்களை விட குறைந்த வட்டியை கொண்டுள்ளன. ஆனாலும் வீட்டு கடன்களுக்கான வட்டியை விட கொஞ்சம் கூடுதலானவை. பிக்சட் வட்டி மற்றும் புளோட்டிங் வட்டி என்னும் இரு முறைகளுக்கிடையேயான வித்தியாசம் ஒரு சதவீதம் தான் என்றால் பிக்சட் வட்டியை தேர்வு செய்வதே புத்திசாலித்தனமானது. 5 முதல் 7 ஆண்டுகால இடைவெளியை கொண்டுள்ள கல்விக்கடன்களில் இதுவே அறிவுறுத்தப்படுகிறது.

பிக்சட் வட்டியை நிர்ணயிப்பதில் பல வங்கிகள் குழப்பமான நடைமுறையைக் கொண்டுள்ளன என்பதால் இதில் கவனமாக இருக்க வேண்டும். மாணவிகளுக்கான கல்விக்கடன்களில் சிறப்புத் திட்டங்களை பல வங்கிகள் கொண்டிருக்கின்றன. ஒரு சதவீதம் குறைவான கடன்களை பல வங்கிகள் பெண் கல்விக்குத் தருகின்றன என்பதால் நன்கு விசாரித்து இதை அறிந்து கொள்ளவும். பிராசசிங் கட்டணம் என்ற பெயரில் வங்கிகள் கடனை தருவதற்கு முன்பாகவே கூறத் தொடங்கினால் அதை தள்ளுபடி செய்ய முயற்சிக்க வேண்டும்.

சமீபத்தில் மதுரை உயர்நீதிமன்ற பெஞ்ச் கல்விக் கடன் தொடர்பாக முக்கியமான தீர்ப்பு ஒன்றை தந்துள்ளது. கல்விக் கடன் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையல்ல என்று. எனவே கல்விக் கடன்பெற நீங்கள் தகுதியானவர் என்றால் அதை வங்கிகள் கட்டாயம் கொடுத்திடும் என்பதில் சந்தேகமில்லை.

Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்