Home » » மக்களாட்சி....

மக்களாட்சி....

Written By DevendraKural on Wednesday, 29 May 2013 | 05:03

இன்றைய காலகட்டத்தில், மக்களாட்சி என்றாலே கூட்டணி என்ற நிலை உருவாகி இருக்கின்றது. ஆரம்பகாலத்தில், தலைவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள்; காமராஜர், அண்ணாதுரை என்று தலைவர்களின் தலைமைப் பண்பினை, மக்கள் கண்டு உணர்ந்து, தங்களது ஆதரவுகளை வழங்கினார்கள். அதன்பிறகு, தலைவர்களைவிட, கட்சி முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்த கட்சி, அந்த கட்சி என்று, மக்கள் தங்களது வாக்குகளை அளித்தார்கள். தற்பொழுது, தலைவர்கள், கட்சிகள் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. இன்றைய சூழலில், கூட்டணியே முக்கியம் என்ற நிலை உருவாகி இருக்கின்றது.
ஆக, இன்றைய சூழலில், தலைவர்கள், யாராக இருந்தாலும் பரவாயில்லை; கட்சிகள், எதுவாக இருந்தாலும் பரவாயில்லை; கூட்டணி மட்டும் வலுவாக அமைந்து விட்டால், ஆட்சி நமதே என்ற நிலை உருவாகி இருக்கின்றது. இந்த நிலையை உருவாக்கியது யாரென்று பார்த்தால், வெளியில் இருந்து யாரும் வந்து உருவாக்கவில்லை; அவர்களே, தங்களது செயலினால், இந்த நிலையை அடைந்திருக்கின்றார்கள்.
அண்ணாதுரையைப்போல் தலைமைப் பண்புடன் தலைவர்கள் செயலாற்றி இருந்தால், மக்களாட்சியின் தேவை - சிறந்த தலைவனே என்ற நிலை உருவாகி இருந்திருக்கும். அல்லது, நல்ல கொள்கைகளைக் கொண்ட கட்சி என்ற வழியில் செயலாற்றி இருந்தால், மக்களாட்சியின் தேவை - சிறந்த கட்சி என்ற நிலை உருவாகி இருந்திருக்கும். ஆனால், நல்ல தலைவர்கள்; நல்ல கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் என்று இல்லாத நிலையில், மக்களாட்சியின் தேவை - கூட்டணியே என்ற நிலை உருவாகி இருந்திருக்கின்றது.
இன்று நிலவும், இந்த கூட்டணி தத்துவம், நல்ல தலைவர்கள் உருவாக முடியாத சூழலை ஏற்படுத்தி விட்டது; கட்சி. இந்த கூட்டணி தத்துவம், கட்சிகளை அழித்து விட்டது. இன்று அனைவரும், கட்சி ஆட்கள், பத்திரிக்கைகள், மக்கள் என்று அனைவருடைய கவனம், கூட்டணியின் மீதே.
கூட்டு அணி; அதாவது, பல அணிகள் கூட்டு சேர்வது. ஏன் கூட்டு சேர்கின்றார்கள்? ஏனென்றால், அனைத்து அணிகளும் பலமிழந்து, பலவீனமான நிலையை அடைந்திருப்பதால், அணிகள் கூட்டு சேர்கின்றன. பலவீனமான நிலையை அடைந்ததோடு அல்லாமல், மீண்டும் பலம் அடைவோம் என்ற நம்பிக்கையையும் இழந்ததால், அணிகள் கூட்டு சேர்கின்றன.
ஆக, நீயும் வீக்; நானும் வீக்; நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பலமான, வளமான பாரதத்தை உருவாக்குவோம் என்று அணிகள், கூட்டு சேர்வதுதான் கூட்டணி. இந்த கூட்டணி அமைக்கும் செயலில், அரசியல்வாதிகள், ஆனந்தமாக, பெருமையுடன் ஈடுபடுகின்றனர். ஆனால், மக்கள் உண்மையை தெளிவாக உணர்ந்து கொண்டு இருக்கின்றார்கள். கூட்டு அமைக்க முயலும் இந்த அணிகளின், பலவீனத்தை மக்கள் உணர்ந்து, பரிதாபம் கொள்கின்றார்கள்......


  • Share this article :
     
    Support : தேசம்
    Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
    DESAM
    DESAM தேசம்