Home » » 'ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையும் ஆயுதம் தூக்குவதற்கு நாம் காரணமாகப் போகின்றோம்:கெலம் மக்ரே

'ஈழத் தமிழர்களின் அடுத்த தலைமுறையும் ஆயுதம் தூக்குவதற்கு நாம் காரணமாகப் போகின்றோம்:கெலம் மக்ரே

Written By DevendraKural on Tuesday, 4 June 2013 | 12:51

இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து சேனல் 4 வெளியிடும் மூன்றாவது திரைப்படமான No Fire Zone  நேற்று ஜெனிவாவில் பொதுமக்கள் காட்சிக்கு வந்தது. No Fire Zone இன், 90 நிமிட ஆவணத்திரைப்படமும் முதன்முறையாக இங்கு தான் பொதுமக்கள் காட்சிக்கு வருகிறது என முன்கூட்டியே தெரிந்திருந்தால் திரையரங்கு முழுவதுமாய் நிரம்பி வழிந்திருந்தது.
படம் தொடங்குவதற்கு முன்னர், மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சுவிற்சர்லாந்து பிரதிநிதியாக கலந்து கொண்ட அம்மையார், இலங்கை அரசு கூறும் பதில்கள் தங்களுக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளிப்பதாக கூறினார். இறுதிப்போர் 2009 இல் முடிவடைந்த பிறகும் தொடரும் சித்திரவதைகள், பெண்கள் மீது நடைபெறும் பாலியல் பலாத்காரங்கள் குறித்து ஆதாரத்துடன் தகவல்களை வெளிக்கொணர்ந்தோம். இக்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை, இலங்கை அரசு நிச்சயம் கண்டிக்கும், தண்டிக்கும் எனும் நம்பிக்கையில் தான் ஆதாரப்படுத்தினோம். ஆனால் ஆதாரங்கள் பொய், மருத்துவசான்றிதழ்களை சமர்ப்பியுங்கள் என அவர்கள் எம்மையே அவமானப்படுத்துகிறார்கள்' என்றார்.

'நான் அதிகம் பேசவில்லை. இப்படம் பேசட்டும். தங்களது மீட்பு நடவடிக்கையில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை.  யுத்தமற்ற பிரதேசமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தமது இராணுவம் எந்தவொரு விமானக்குண்டுவீச்சையும் நிகழ்த்தவில்லை என்கிறார்கள். அவர்கள் சொன்னது உண்மையா என்பதற்கு இந்த படம் பதில் சொல்லும்' என்றார் இயக்குனர் கெலம் மெக்ரே.

முதல் இரண்டு பாகங்களை போல் இல்லாது, இம்முறை ஆவணத்திரைப்படம், இலங்கையில் தமிழர்களுக்கு எப்போதிருந்து நீதி மறுக்கப்பட்டது என வரலாற்று ரீதியாக ஆரம்பித்தது.

1948ம் ஆண்டிலிருந்து இலங்கையில் தமிழர்களுக்கு இருந்த பிரச்சினை என்ன? கறுப்பு ஜூலையில் நடந்தது என்ன? 80' களில் புலிகளின் தோற்றம் எப்படிப்பட்டது? அந்த தோற்றத்திற்கு வித்திட்டவர்கள் யார்?  தமக்கான சம உரிமைகளை வலியுறுத்தும் அனைத்து அமைதிவழி போராட்டங்களும் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்கள் ஆயுதங்களை தூக்க வேண்டிய சூழ்நிலை எவ்வாறு உருவானது? என  ஒவ்வொன்றாக அலசத்தொடங்கியது.

இலங்கையில் பிறந்து வளர்ந்து லண்டனுக்கு இடம்பெயர்ந்து மீண்டும் இறுதி யுத்த காலப்பகுதியில் வன்னியில் அகப்பட்டுக்கொண்ட வானி குமாரின் அனுபவங்கள், யுத்தகாலப்பகுதியில் வன்னியில் பணியாற்றிய ஐ.நாவின் முன்னாள் பணியாளர் பெஞ்சமின் டிக்ஸின் அனுபவங்கள் என்பவற்றுடன் திரைப்படத்தின் அடுத்த 30 நிமிடங்கள் தொடர்ந்தன.

2009 ஜனவரி 2ம் திகதி முதல், இறுதி 138 நாட்களுக்கு யுத்தகளத்தில் என்ன நடந்தது என்பதைத்தான் மீதிப் படம் கண்ணீருடன் சொல்லத்தொடங்கியது.  20ம் யுத்த நாள் இலங்கை அரசினால் முதலாவது யுத்த தவிர்ப்பு வலயம் (NFZ) அறிவிக்கப்பட்டதிலிருந்து நிகழ்ந்த போர்க்குற்றங்கள் வரிசையாக காட்சிக்கு வந்தன.

யுத்த தவிர்ப்பு வலயம் என்பதால் எந்த ஆபத்தும் நடந்துவிடாது என்ற நம்பிக்கையில் பொதுமக்களுடன் அங்கு தங்கியிருந்த ஐ.நா முன்னாள் பணியாளர் பீட்டர் மக்ரேய், தான் இரு வாரங்களுக்குள் அங்கு கண்ட காட்சிகள் எவ்வளவு கொடூரமானவை என்பதை விவரிக்கிறார்.

தொடர்ந்து 28ம் நாள், யுத்த தவிர்ப்பு வலயங்கள் எப்படி தாக்குதலுக்கு உள்ளாகின்றன, புதுக்குடியிருப்பு மருத்துவமனை எப்படி ஷெல் வீச்சில் அழிவடைகிறது என படிப்படியாக காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன.  தொடர்ச்சியான 65 தாக்குதலுக்கு பிறகு புதுக்குடியிருப்பு மருத்துவமனை முற்றாக அழிவடைந்ததால் அங்கிருந்து மூன்று கி.மீ தூரத்தில் காயப்பட்டவர்கள் கொண்டு செல்லப்படுவதும், அடுத்தடுத்த மருத்துவமனைகள் மீதும், யுத்த தவிர்ப்பு வலயங்கள் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதும் காண்பிக்கப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்களிலிருந்து சிந்திச்செல்லும் இரத்தத்தை துணியில் சேகரித்து காயப்பட்டவர்களுக்கு மீண்டும் இரத்தமளிக்கும் நிகழ்வை பற்றி வாணி குமார் கூறுகையில் போரின் அகோரம் பிளிர்கிறது.

யுத்தம் முடிவுற்றதாக இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட பின்னர் வி.புலிகளின் முன்னாள் தளபதிகள், போராளிகள் எவ்வாறு கைது செய்யப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். பெண்கள் எவ்வாறு பாலியல் வன்கொடுமைக்கும், படுகொலைகளுக்கும் உள்ளானார்கள் என அடுத்து காண்பிக்கப்படுகிறது. பாலச்சந்திரன் கொலை, கேணல் ரமேஷ், பா.நடேசன், புலித்தேவன் ஆகியோரின் படுகொலைகள் குறித்தும் காண்பிக்கப்படுகிறது.

கடைசிப்பகுதியில், இலங்கையின் இன்றைய மாயச் சுற்றுலா தோற்றம்,  வடக்கில் சிங்களமயமாக்கப்படும் நடவடிக்கைகள், ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்களுக்கு எதிரான வன்முறைகள் என்பவை குறித்து காண்பிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக மூன்றாவது பிள்ளை பெறும் இராணுவ வீரருக்கு, சிறப்பு சலுகைகள் குறித்து சொல்லப்படுகிறது.

இறுதியில் இலங்கையில் இப்போது தமிழர்கள் பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறார்களா? அவர்கள் மீதான இனவெறி அச்சுறுத்தல்கள் தொடர்கின்றனவா? போன்ற கேள்விகளை பார்வையாளர்கள் மனதில் தோற்றுவித்தபடியே படம் முடிவடைகிறது.

படம் முடிவடைந்ததும் கெலும் மெக்ரே தனது அச்சத்தை இப்படி வெளிப்படுத்துகிறார். 'ஐ.நா இன்னமும் தவறு செய்து கொண்டிருப்பதாக உணர்கிறேன். சர்வதேச விசாரணைக்கு பரிந்துரைக்காத பட்சத்தில் இலங்கையில் நீதி கிடைப்பதற்கு ஒரு போதும் வாய்ப்பில்லை. வேறு வழியில்லாது, ஈழத்தமிழர்களின் அடுத்த தலைமுறையினரும் ஆயுதத்தை கையில் ஏந்தி தமக்கான உரிமையை தாமே வென்றொடுப்போம் என புறப்பட்டு விடுவதற்கு நாமும் காரணமாகிவிடப்போகிறோம் என்ற பயம் எனக்குள் இருக்கிறது'.

அவரது அச்சம் அரங்கை ஒரு கணம் அமைதிப்படுத்தியிருந்தது.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் வேளையில், இந்த ஆவணத்திரைப்படம் முதன்முறையாக ஐ.நாவின் உள்ளேயும் ஒளிபரப்பட்டிருந்தது.  கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் சுமார் 200 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகளை இத்திரைப்படத்தை பார்த்திருந்தனர்.  ஐ.நாவில் திரையிடக்கூடாது எனும் இலங்கை அரசின் கடும் எதிர்ப்பை மீறி இந்த படம் அங்கு ஒளிபரப்பட்டதும், பின்னர் மனித உரிமைகள் திரைப்பட விழாவில் ஒளிபரப்பட்டிருப்பதும் இலங்கைக்கு புதிய நெருக்கடிகளை தோற்றுவித்துள்ளன.

திரைப்பட விழாவில் பொதுவாக எந்த திரைப்படத்திற்கும் இல்லாத அதிகளவு மக்கள் தொகை இந்த படத்திற்காக திரையரங்கை நிரப்பியிருந்ததால், இயக்குனர் கேலம் மெக்ரேய் கூட 90 நிமிட படத்தை நின்று கொண்டு பார்க்க வேண்டியிருந்தது.

இலங்கையில் இவ்வளவு கொடூரம் நடந்து வருகிறது. எப்படி இங்கு அகதி தஞ்சம் கோரும் இலங்கை அகதிகளை எம்மால் (சுவிற்சர்லாந்து) திருப்பி அனுப்ப முடிகிறது என ஒரு பெண்மணி கெலம் மெக்ரேயிடம் கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளித்த அவர், 'பிரித்தானியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். இலங்கைக்கு விமானம் ஏற்றப்படவிருந்த 40 அகதிகள் இறுதி வினாடியில் உயர் நீதிபதியின் உத்தரவால் தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அது தற்காலிகமானது தான். இதே போன்று அனைத்து நாடுகளிலும் இப்பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும்' என்றார்.

திரையரங்கை விட்டு வெளியில் வந்த போது நண்பனொருவர் எழுப்பிய, பதில் சொல்ல முடியாத இரு கேள்விகள் இவை!

1.இந்த திரைப்படம், இலங்கைக்குள் குறிப்பாக சிங்கள பள்ளிமாணவர்களை, இளம் தலைமுறையினரை சென்றடையுமா?

2.அடுத்தமுறை கோடை விடுமுறைக்காக செல்லும் நாடாக இலங்கை இருக்க கூடாது என வெள்ளைக்காரர்கள் முடிவெடுப்பது ஒரு புறம் இருக்கட்டும். புலம்பெயர் தமிழர்கள், அவர்களது அடுத்த தலைமுறையினர் இம்முடிவில் உறுதியாக இருப்பார்களா?
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்