Home » , » வாழ்க்கை என்பது போராட்டமே!-நெல்சன் மண்டேலா

வாழ்க்கை என்பது போராட்டமே!-நெல்சன் மண்டேலா

Written By DevendraKural on Wednesday, 26 June 2013 | 06:11

தென் ஆப்பிரிக்கா நிறையவே மாறியிருக்கிறது. ஆப்பிரிக்கர்கள் உயர் பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஹோட்டல்கள் திறந்திருக்கிறார்கள். செய்தித்தாள்களை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். அடுக்கு மாடி அபார்ட்மெண்ட்டுகளைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இருபது சதவீத ஆப்பிரிக்கர்கள் தங்களை நடுத்தர வர்க்கம் என்று அழைத்துக்கொள்கிறார்கள். பெருமையாக. மற்றொரு பக்கம், மண் தரைகளும் ஒழுகும் மேற்கூரைகளும் அப்படி அப்படியே நீடிக்கின்றன. பல ஆப்பிரிக்கர்கள் ஜாகுவார் கார்களை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் சிக்னலில் வண்டியை நிறுத்தும்போது, பிச்சை கேட்டு கறுப்பு கைகள் நீள்கின்றன. சைரன் ஒலிகளுக்கு இடையே, தேய்ந்த குரலில், அம்மா தாயே!
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பது தென் ஆப்பிரிக்காவில்தான். 45 மில்லியன் மக்களில் 5 மில்லியன் பேர். ஏழைமையும் மிக அதிகம். உலகளில், ஏற்றத்தாழ்வுகள் பெருமளவில் நிறைந்த நாடு, தென் ஆப்பிரிக்கா. 1994 கணக்குப்படி, தென் ஆப்பிரிக்க வெள்ளையர்களின் ணீஞுணூ ஞிச்ணீடிtச் டிணஞிணிட்ஞு ஆப்பிரிக்களைக் காட்டிலும் 9.5 மடங்கு அதிகம். எனவே, வன்முறையும் வழிப்பறிக்கொள்ளையும் அதிகம். 1994-95ல் 84,785 திருட்டு, வழிப்பறிப் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. 2002-03ல் இந்த எண்ணிக்கை 1,26,905 ஆக உயர்ந்தது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள். பதிவாகாத குற்ற விவரங்கள் இதைவிட அதிகமாக இருக்கலாம்.
இனஒதுக்கலை அதிகாரபூர்வமாகக் களைந்த பின்னர், தென் ஆப்பிரிக்கா சந்தித்த முக்கியப் பிரச்னைகளுள் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். அதன் காரணமாக தோன்றிய அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வு. தென் ஆப்பிரிக்கர்கள் அல்லாதவர்கள் காழ்ப்புணர்வுடன் நடத்தப்படுவதாக தொடர்ந்து  பல ஆண்டுகள் புகார்கள் வெளிவந்தன. பிழைப்பதற்காக பக்கத்து ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து வந்தவர்கள், தென் ஆப்பிரிக்கர்களால் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டனர். பல சமயங்களில், அவர்கள் தாக்குதலுக்கு உள்ளாயினர். தங்களுக்குக் கிடைக்கும் வேலை வாய்ப்புகளை அந்நியர்களாகிய அவர்கள் பறித்துக்கொண்டதாக தென் ஆப்பிரிக்கர்களோ, குற்றம் கூறினர். இதையடுத்து ஜொகன்னஸ்பர்கில் 2008ல் கலவரங்கள் வெடித்தன. இந்தக் கலவரங்களில் சோமாலியா, ஸ்வாஸிலாண்ட், நைஜீரியா நாட்டு மக்கள் கொத்துக் கொத்தாக அடித்து விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர். அறுபது பேர் இறந்துபோனார்கள்.
மோதல்களை நிறுத்தச் சொல்லி மண்டேலா, டெஸ்மண்ட் டுட்டூ ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். அந்நியர்கள் மீதான வெறுப்புணர்வுக்கு என்ன காரணம்? வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, ஊழல். அதன் காரணமாக எழுந்த அச்சம், பாதுகாப்பற்ற நிலை, கோபம். இதன் அடிநாதம், மண்டேலா அரசு அறிமுகப்படுத்திய நியோ லிபரல் பொருளாதாரக் கொள்கை.
மண்டேலா பதவியேற்றபோது, அவர் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்னும் சந்தேகம் தென் ஆப்பிரிக்க, சர்வதேச முதலாளிகளுக்கு இருந்தது. கம்யூனிஸ்ட் இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர், அவர்கள் துணையுடன் தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர், கம்யூனிச சித்தாந்ததை உயர்த்திப் பிடித்தவர், ஒடுக்குமுறைக்கு ஆளாக சிறைவாசி. போராட்டக் குணம் கொண்டவர் வேறு. மண்டேலா அவர்களுடைய அச்சத்தைப் போக்கினார். கம்யூனிச சித்தாந்தத்தை நான் அறிவேன். ஆனால், நான் ஒரு கம்யூனிஸ்ட் கிடையாது. நான் அமைக்கப்போவது கம்யூனிச அரசு கிடையாது.
தென் ஆப்பிரிக்கா குறித்த சர்வதேச பார்வையும் மாற்றம் பெற்றது. மண்டேலா சிறையில் இருந்த சமயத்தில், பிரிட்டனின் பிரதம மந்திரி மார்கரெட தாட்ச்சர் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று அறிவித்தார். ஏ.என்.சி. ஆட்சியை அமைக்கும் என்று கனவுகூட காணவேண்டாம் என்று 1987வரை அவர் அரசாங்கம் சொல்லிக்கொண்டிருந்தது. அமெரிக்காவும் ஏ.என்.சி.யை தீவிரவாத அமைப்பு என்று தடை செய்திருந்தது. பதவியேற்று, ஓய்வு பெற்ற பிறகும், மண்டேலா தீவிரவாதிகள் பட்டியலில்தான் இருந்தார். மிகச் சமீபத்தில்தான், ஜார்ஜ் புஷ் அரசு இந்தத் தடைகளை அகற்றியது. அமெரிக்க ரீகன் அரசாங்கம் நிறவொதுக்கல் தென் ஆப்பிரிக்காவுக்கு தன் முழு ஆதரவையும் அளித்தது. பின்னர், மண்டேலா சிறையில் இருந்து வெளிவந்தபோது, அவருக்கு வாழ்த்து தெரிவித்த முதல் தலைவர், ஜார்ஜ் புஷ் சீனியர்.
மண்டேலா என்னும் தனிப்பட்ட ஆளுமை மீது அமெரிக்காவும் பிரிட்டனும் கொண்டிருந்த மதிப்பு ஒரு காரணம். மறுப்பதற்கில்லை. அதே சமயம், மண்டேலாவின் பொருளாதாரக் கொள்கைகளே இந்த இரு பெரும் நாடுகளை தென் ஆப்பிரிக்காவில் முதலீடு செய்ய பெருமளவில் தூண்டின என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும். இனஒதுக்கலை ஆதரித்த இந்த இரு நாடுகளோடும் மண்டேலா சுமூகமான உறவே கொண்டிருந்தார். எனவேதான் காலனியாதிக்க எதிர்ப்பை ஊக்குவித்த அளவுக்கு ஏகாதிபத்திய எதிர்ப்பை அவரால் மேற்கொள்ளமுடியவில்லை. மேற்கத்திய உலகோடு அனுசரித்துப் போகவேண்டும் என்றே விரும்பினார்.
கோவன் ம்பெகி ஒரு மார்க்சிஸ்ட். ஆனால் அவர் மகன் தபோ ம்பெகி முதலாளித்துவத்தை ஆதரித்தார். தேசியமயமாக்கத்தை எதிர்த்தார். தென் ஆப்பிரிக்க கதவுகளை சர்வதேச முதலீட்டுக்காக அகலமாகத் திறந்துவிட்டவர். நியோ லிபரல் கொள்கையை ஏற்றுக்கொள்ளும்படி மண்டேலாவுக்கு அழுத்தம் கொடுத்தார்.
இதன் விளைவை தென் ஆப்பிரிக்கா இன்றும் அனுபவித்து வருகிறது. புதிய வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஒரு புதிய கறுப்பின மேட்டுக்குடி வர்க்கம் உருவாக ஆரம்பித்தது. பொருளாதார அடித்தளம் மாறவில்லை என்பதால் ஆப்பிரிக்கானர்களும் தடங்கலின்றி மென்மேலும் வளர்ச்சியுற்றனர். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளி பெருகிநின்றது. இந்தப் புதிய மேட்டுக்குடி ஆப்பிரிக்கர்களுக்கு குறைந்த கூலியில் பணியாற்ற பக்கத்து நாடுகளில் இருந்து ஏழை கறுப்பின மக்கள் தென் ஆப்பிரிக்காவுக்குள் நுழைந்தனர். ஏற்கெனவே தேக்கத்தில் இருக்கும் தென் ஆப்பிரிக்க கறுப்பின மக்கள், அந்நிய கறுப்பின  மக்களை எதிர்க்க ஆரம்பித்தனர்.
இதை தென் ஆப்பிரிக்காவின் புதிய இனவெறுப்பு  (Xenophobia) என்று மேற்கத்திய ஊடகங்கள் எழுதின. இது பிரச்னையை திசைதிருப்பும் செயலே அன்றி வேறில்லை. இனத்துக்கு, நிறத்துக்கு அப்பாற்பட்ட பிரச்னை இது. இது பொருளாதாரப் பிரச்னை.
0
மண்டேலாவும் அவர் இயக்கமும் இடையில் சில காலம் வன்முறை மீது நம்பிக்கை வைத்திருந்தபோதும், பெரும்பாலும் அவர் அகிம்சை கொள்கையையே உயர்த்திப் பிடித்துள்ளார். உலகம் தழுவிய அளவில் மண்டேலா இன்று கொண்டாடப்படுவதற்குக் காரணம் அவருடைய பொருளாதாரக் கொள்கைகளோ ஆட்சிமுறையோ அல்ல, அவரது அகிம்சை வழிமுறையே. எதை அவர் முன்னிறுத்தினாரோ அதன் குறியீடாகவே அவர் இன்று மாறியிருக்கிறார். மாற்றப்பட்டிருக்கிறார். காந்தி, மார்ட்டின் லூதர் கிங் வரிசையில் நெல்சன் மண்டேலாவின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது இதுவே காரணம்.
ஆப்பிரிக்காவின் முதன்மையான மகன் என்று மண்டேலாவை வருணிக்கிறார் காஸ்ட்ரோ. மண்டேலாவுடன் ரோபன் தீவுக்குச் சென்று பார்வையிட்டார். நீங்களும் மண்டேலாவைப் போல் தனிமைச் சிறையில் இருந்தவர்தானே என்று கேட்கப்பட்டபோது, அவசரமாக மறுத்தார் காஸ்ட்ரோ. நான் இருந்தது இரு ஆண்டுகள் மட்டும்தான். தயவு செய்து என்னை அவரோடு ஒப்பிடாதீர்கள். அவ்வாறு ஒப்பிட்டால் எனக்கு அவமானமாக இருக்கிறது.
மண்டேலா ஆப்பிரிக்காவுக்கோ ஐரோப்பாவுக்கோ சொந்தமானவர் அல்லர், அவர் உலகுக்கு சொந்தமானவர் என்கிறார் மண்டேலாவால் ஈர்க்கப்பட்ட நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர், நதின் கார்டிமர்.
1991ம் ஆண்டு காஸ்ட்ரோ கூறியது. ‘நேர்மையான மனிதர் என்பதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் தேவைப்பட்டால், நெல்சன் மண்டேலாவை எடுத்துக்கொள்ளலாம். எதற்கும் விட்டுக்கொடுக்காத, துணிச்சலான, அமைதியான, புத்திசாலியான, செயல்வேகம் கொண்ட ஒரு நாயகன் உங்களுக்குத் தேவைப்படுகிறாரா? இதோ மண்டேலா இருக்கிறார். அவரை நேரில் சந்தித்த பிறகு இந்த முடிவுக்கு நான் வந்து சேரவில்லை. பல ஆண்டுகளாக நான் இதுகுறித்து சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். இந்த சகாப்தத்தின் அசாத்தியமான ஒரு அடையாளமாக நான் அவரைக் காண்கிறேன்.’
பதவியைவிட்டு அகன்ற பிறகு துணிச்சலும் துடிதுடிப்பும் மண்டேலாவிடம் ஒட்டிக்கொண்டது. அதிகாரத்தில் இருந்தபோது சாதிக்கமுடியாத விஷயங்களை இப்போது செயல்படுத்தி பார்க்க அவர் விரும்பினார். நெல்சன் மண்டேலா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. ‘46664: எய்ட்ஸுக்காக உங்கள் வாழ்வில் இருந்து ஒரு நிமிடத்தை ஒதுக்குங்கள்’ என்னும் வாசகத்துடன் தொடங்கப்பட்ட பிரசாரம், பரவலான கவனத்தைப் பெற்றது. (466 என்பது ரோபன் தீவுச் சிறையில் மண்டேலாவின் கைதி எண். 64 சிறையிலிருந்த வருடத்தைக் குறிக்கிறது). நான் ஒரு எய்ட்ஸ் நோய் சிகிச்சை ஆதரவாளர் என்னும் வாசகத்தை தனது டி ஷர்ட்டில் அணிந்து பெருமிதத்துடன் வலம் வந்தார். 2005ல் ஒரு கூட்டத்தில், வெடித்துக் கிளம்பிய அழுகைக்கிடையே ஓர் உண்மையை ஒப்புக்கொண்டார். ஆம், என் சொந்த மகன் மக்காதோ, எய்ட்ஸ் நோயால் பீடிக்கப்பட்டு, இறந்துபோனான். தென் ஆப்பிரிக்கா மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆப்பிரிக்காவும் ஒன்று சேர்ந்து எய்ட்ஸை விரட்டியடிக்கவேண்டும்.
தொண்டு செய்வதை தனது முதன்மையான பணியாக மாற்றிக்கொண்டார். புஷ், இராக் மீது தொடுத்த யுத்தத்தை எதிர்த்தார். புஷ்ஷிடம் பேசி தன் வருத்தங்களைத் தெரிவிக்க அவர் விரும்பியபோது, அவர் தொலைபேசிக்குப் பதிலில்லை. உடனே மண்டேலா சீனியர் புஷ்ஷைத் தொடர்பு கொண்டார். உங்கள் மகனிடம் பேச முயன்றேன். அவர் பதிலளிக்கவில்லை. நீங்கள் உங்கள் மகனைக் கொஞ்சம் கண்டித்து வையுங்கள். மகனை ஒரு தந்தையால் கண்டித்து வழிக்குக் கொண்டவரமுடியும் என்று நம்பும் ஓர் அப்பாவி ஆப்பிரிக்கத் தந்தையாக மண்டேலா வெளிப்பட்ட தருணம் இது.
தனது 89வது பிறந்தநாளின்போது, தி எல்டர்ஸ் என்னும் பெயரில் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார். ஜிம்மி கார்ட்டர், டெஸ்மான் டுட்டு, கோஃபி அனான் போன்ற மூத்தவர்களோடு அணி சேர்ந்து அரசியல் வழிகாட்டலை நடத்தலாம் என்று திட்டமிட்டார். யுத்த பூமியாக மாறியிருந்த டாஃபருக்கு அமைதி குழு அனுப்புவது, உலக அமைதி குறித்து விவாதிப்பது என்று சில முயற்சிகளை மேற்கொண்டார்.
2009ல் பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மண்டேலா தனது வாழ்த்துகளை அவருக்குத் தெரிவித்தார். உலகை மாற்றும் கனவை யாரும் மேற்கொள்ளலாம் என்பதை ஒபாமாவின் வெற்றி உணர்த்துகிறது என்றார். காந்தியும் மண்டேலாவும் தன்னை ஈர்த்த முக்கியத் தலைவர்கள் என்று ஒபாமா முன்னர் கூறியிருந்தார்.
மண்டேலாவின் நோக்கங்களை, கனவுகளை கேள்விக்கு உட்படுத்தமுடியாது. தென் ஆப்பிரிக்கர்கள் சுதந்தர, ஜனநாயக தேசமாக உயிர்த்திருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். நிறவெறி ஆட்சியை உடைத்து ஜனநாயகத்தை மீட்டுக்கொண்டுவந்ததில் அவர் பங்களிப்பு மிக முக்கியமானது. ஆனால் அவர் மேற்கொண்ட நடவடிக்கைககளும், அமல்படுத்திய பொருளாதாரத் திட்டங்களும் மண்டேலாவின் நோக்கங்களைச் சிதறடித்தன.
நூற்றாண்டுகால அடிமை வாழ்க்கையை, நூற்றாண்டு கால காலனியாதிக்க விளைவுகளை ஐந்தாண்டு காலத்தில் மாற்றிவிடமுடியாது என்பது நிஜம். மாற்றங்கள் உடனே நிகழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கவேண்டாம் என்று தேர்தல் வாக்குறுதியிலேயே மண்டேலா இதை அழுத்தமாக குறிப்பிட்டிருந்தது நிஜம். தென் ஆப்பிரிக்கா செல்லவேண்டிய பாதை நீண்டது என்பதிலும் இருவேறு கருத்துகள் இல்லை. ஆனால், மண்டேலா நிர்வாகம் ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் தெளிவாக அரசியல் பாதையை வகுத்துக்கொள்ளவில்லை. கனவுக்கும் செயல்திட்டத்துக்கும் இடையே, கொள்கைக்கும் நடைமுறைக்கும் இடையே, லட்சியத்துக்கும் யதார்த்தத்துக்கும் இடையே  விழுந்துவிட்ட இடைவெளியை இந்த ஐந்தாண்டுகளில் மண்டேலாவால் குறைக்கமுடியவில்லை.
அரசியலில் இருந்து விலகிக்கொள்வதாக 2006ம் ஆண்டு தனது 88வது வயதில் மண்டேலா அறிவித்தார். இந்த அறிவிப்பை வெளியிடுமாறு தென் ஆப்பிரிக்கா அரசாங்கம் அவரை நிர்ப்பந்திப்பதாகவும், அரசாங்கத்தை விமரிசனம் செய்து அவர் சில சமயம் பேசுவதை தடுக்கவே இந்த ஏற்பாடு என்றும் யூகங்கள் எழுந்தன.
தன் வாழ்க்கையின் மூலம், தன் போராட்டங்கள் மூலம், தன் சாதனைகள் மூலம், தன் அரசியல் பங்களிப்புகள் மூலம், ஏன், தன் தவறுகள் மூலமும் தென் ஆப்பிரிக்காவுக்கு, ஆப்பிரிக்காவுக்கு, உலகுக்கு மண்டேலா தெரிவிக்க விரும்பும் செய்தி ஒன்றுதான். விடுதலையை யாராலும் கொடுக்கமுடியாது. பேச்சுவார்த்தைகள் மூலம் பெறமுடியாது. போராடித்தான் பெற்றாகவேண்டும். வாழ்க்கை என்பது போராட்டமே!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்