Home » » சங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.

சங்கரலிங்கம் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.

Written By DevendraKural on Thursday, 6 June 2013 | 10:57

திருமண அழைப்பிதழ், அச்சகங்களின் ஓர் அச்சுப் பணி என்ற நிலையை மாற்றி, அவை அழகான வடிவத்தில் அமைக்கப் பட்டு முதன் முதலில் தமிழகத்தில் திருமண அழைப்புகளுக்கே ஒரு தனி கௌரவம் சேர்த்தவர்கள் மேனகா கார்ட்ஸ். இன்று இந்தத் துறையில் முதலிடம் பெற்று நாடெங்கும் 37 கிளைகளுடன் அமெரிக்கா, கனடா... போன்ற நாடுகளில் டீலர்களுடன், இயங்குகிறது இந்த நிறுவனம்.
மிக மிக எளிய குடும்பத்தில் பிறந்து படிப்பின் அருமையை உணர்ந்த, ஆனால் படிக்க முடியாத வாழ்க்கைச் சூழ்நிலைகளின் மேடு பள்ளங்களைக் கடந்து வந்தவர் சங்கரலிங்கம். இன்று வெற்றியின் வாயிலில் இருக்கும் இவர் கடந்து வந்த பாதையில் பூக்களில்லை; முட்கள் மட்டுமே.
தென் தமிழகத்தில் வானத்தை நம்பியிருக்கும் பல வறண்ட கிராமங்களில் ஒன்று சாத்தான் குளம். திருநெல்வேலியிலிருந்து ஐம்பது கி.மீ. இந்தக் கிராமத்தில் விவசாயிகளும் பனை மரங்களும் அதிகம். ஆனால், விவசாயத் தொழிலுக்கு வாய்ப்பில்லாததால் பலருக்கு வேலை சாராயம் காய்ச்சுவதுதான். அந்தக் கிராமத்தின் உழைப்பின், படிப்பின் அவசியத்தை உணர்ந்திருந்த ஒரு தந்தை, தன் மகனை பக்கத்து ஊர்ப் பள்ளிக்குக் கைபிடித்துக் கூட்டிப் போய் படிக்க வைத்தார். அப்படி ஆரம்ப கல்வியைப் படித்த பையன் சங்கரலிங்கம், நாங்குநேரி அரசின் விடுதியில் தங்கி உயர்நிலை பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தபோது, அடிக்கடி பார்த்தது அருகிலுள்ள டி.வி.எஸ். அதிகாரிகள் காரில் வருவதைத்தான்.
இந்த நிலையை அடைய தாம் நன்றாக படிக்க வேண்டியதின் அவசியத்தை யாரும் சொல்லாமலே உணர்ந்தான் மாணவன் சங்கரலிங்கம். தந்தையின் விருப்பப்படி அக்ரிகல்சுரல் ஆஃபீஸராகும் ஆவலில் கோவைக் கல்லூரிக்கு மனுச் செய்து நேர்முகத்துக்கு அழைப்பு வந்தவுடன், ஏதோ வெளிநாட்டுக்குப் போகும் ஆவலுடன் கோவை சென்ற சங்கரலிங்கத்துக்கு ஏமாற்றம். அட்மிஷன் கிடைக்கவில்லை. மன மொடிந்து ஊருக்கு திரும்பியவர் அடுத்த ஆண்டு மீண்டும் முயற்சிக்கும் வரை பக்கத்து ஊரான திசையன்விளை வரை சைக்கிளில் போய் டைப்ரைட்டிங் படிக்க ஆரம்பித்தவர், ஊர்க் காரர்களுக்கு உதவ, விறகு வாங்கித் தருவதையே ஒரு தொழிலாக ஆரம்பித்தார். “டிக்கடி சைக்கிள் பஞ்சரானதால் பஞ்சர் ஒட்ட கற்றுக்கொள்ள, சாத்தான் குளத்தில் முதல் முதலாக ஒரு பஞ்சர் ஒட்டும் கடை போர்டுடன் உருவானது.
கடை வைத்திருந்தால் கூட அக்ரி படிப்பின்மீது ஆசை போகவில்லை. அடுத்த ஆண்டும் அட்மிஷன் கிடைககவில்லை. மனம் வெறுத்துப் போன சங்கரலிங்கத்திடம், கடையைக் கவனத்துடன் கவனித்துப் பெரிதுபடுத்தும் யோசனையைச் சொல்லி ஆறுதல்படுத்தினார் தந்தை. ஆனாலும் அந்த இளைஞனின் மனத்தில் சாதிக்க வேண்டும் என்று கனன்று கொண்டிருந்த கனல் மெல்ல அனலாகி, உயரங்களைத் தொட நமக்கு வேண்டியது இந்தக் கிராமத்தில் இல்லை என்ற முடிவோடு கையில் முந்நூறு ரூபாயுடன் கோவைக்குப் பயணமானார்.
எந்த அறிமுகமும் இல்லாத ஒரு இளைஞனுக்கு, தெரியாத ஊரில் வேலை கிடைப்பதைவிட கஷ்டமான காரியம் வேறு எதுவுமில்லை என்பதை உணர்ந்த சங்கரலிங்கம் ஏற்றது ஒரு ஹோட்டலில் சர்வர் வேலை, சாப்பாடும், தங்குமிடமும் நிச்சயமாகயிருந்தாலும் தொடர்ந்து வேலை தேடுவதை நிறுத்தவில்லை. கோவையிலிருந்து வெளியாகிக் கொண்டிருந்த கலைக்கதிர் பத்திரிகையின் துணை ஆசிரியர் முருகானந்தம், அவருடைய பைண்டிங் தொழிலை நிர்வகிக்கும் வேலையைத் தந்தார். இந்த மனிதரைச் சந்தித்தது தம் வாழ்வில் அதிர்ஷ்டம் என்கிறார் சங்கரலிங்கம்.
இவரது படிக்கும் ஆர்வத்தைப் பாராட்டி மாலைக் கல்லூரியில் பி.காம்., படிக்க வைத்திருக்கிறார். அச்சகத் தொழிலில் நாளெல்லாம் இருந்ததினால் அதை முறையாக, சிறப்பாக அறிய பிரிண்டிங் டெக்னாலஜி படிக்க விரும்பியபோது அதற்கும் உதவி செய்து துணை நின்றிருக்கிறார் முருகானந்தம். தொடர்ந்து அச்சகக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் நடத்திய அச்சகத்திலேயே பணிக்குச் சேர்ந்து திறமையை வளர்த்துக் கொண்டிருந்தவரின் வாழ்க்கையில் ஒரு புதிய திருப்பம். டைரக்டர் மகேந்திரனின் “உதிரிப்பூக்கள்’ படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பு.


கனவுத் தொழிற்சாலை, சினிமா ஆர்வத்தைத் தூண்டியது. சில வாய்ப்புகள், பல ஏமாற்றங்கள் என நான்காண்டு போராட்டத்துக்குப் பின்னர், தாம் கண்ட கனவு கலைந்தபின் இவர் புரிந்து கொண்டது.
“முயற்சித்தும் ஒரு விஷயம் முடியவில்லையென்றால், முடியும் விஷயத்தை நாம் முயற்சிக்க வில்லை,’ என்பதுதான். இந்த நிலையில் ஊரில் குடும்பத்தினர் இவருக்குத் திருமணம் பேசி முடிவு செய்திருந்தனர். அச்சுக் கலையை நன்கு அறிந்த இவர், தம் திருமணப் பத்திரிகையை, தாமே அழகாக வடிவமைத்து அச்சகத்தில் கொடுத்தபோது, எல்லா அச்சகங்களும் சொன்ன பதில், “இதை உடனடியாகச் செய்ய முடியாது.’
மிகச் சாதாரண முறையிலேயே தம் திருமண அழைப்பை அச்சிட நேர்ந்த இவருக்குத் தோன்றிய யோசனை, “ஏன் இதற்காகவே ஓர் அச்சகத்தை ஏற்படுத்தக் கூடாது?’ என்பதுதான். எண்ணம் எழுச்சி பெற்று 1980ஆம் ஆண்டு செயல் வடிவம் பெற்றது. தரமாகத் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் கார்டுகளில் 24 மணி நேரத்தில் அழைப்பிதழ் அச்சிட்டுத் தரப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் இது ஓர் ஆச்சரியமான விஷயம். இந்து மதப் பிரிவுகள் தவிர மற்ற மதத்தினருக்கும் ஏற்ப வடிவமைக்கப்பட்ட கார்டுகளும், தயாரித்து வைக்கப்பட்டிருந்த பத்திரிகைகளின் வாசகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
இன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிஸைன்களுடன் எந்த மதப்பிரிவினரின் திருமணத்துக்கும் கார்டுகளுடன் காத்திருக்கும் இவர்கள், தொடர்ந்து புதிய டிஸைன்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். முதலில் திருமணத்துக்கு மட்டும் என டிஸைன் கார்டுகளைத் தொடங்கிய இவர்கள், இப்போது பிறந்த குழந்தையைத் தொட்டிலிடுவதிலிருந்து, சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் வரை எல்லா சுபநிகழ்வுகளுக்கும் பல டிஸைன்களில் கார்டுகளைத் தயாரிக்கிறார்கள்.
ஒரு கார்டு 5 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரையான விலைகளில் பல வகைகள் வைத்திருக்கும் இவர்களின் கார்டுகளை, ஆன்லைனில் பார்த்துத் தேர்ந்தெடுக்கும் வசதியையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். “இன்டர்நெட்டைப் பயன்படுத்தி நேரிலே வராமல் தேர்ந்தெடுத்த கார்டில் அழைப்பிதழைத் தயாரித்துப் பெற்றுக் கொள்பவர்களும் உண்டு. எங்களிடம் வந்து இருக்கும் டிஸைன்களையெல்லாம் பார்த்துவிட்டு, மாறுதல்களைச் சொல்லிப் புதிதாக உருவாக்கச் சொல்பவர்களும் உண்டு. எதுவாகயிருந்தாலும் சிறப்பாகச் செய்ய வேண்டும்,’ என்கிறார் சங்கரலிங்கம்.
சென்னையிலும் பெரிய நகரங்களிலும் விற்பனை செய்தாலும் கார்டுகள் தயாரிக்கும் தொழிற்சாலையை, தம் சொந்த கிராமமான சாத்தான்குளத்தில் நிறுவி கிராமத்து இளைஞர்கள் பலருக்கும் வேலை வாய்ப்பைத் தந்திருக்கிறார். தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு இவர் சொல்ல விரும்புவது, “பிஸினஸில் நேர்மையாக இருக்க முடியாது - ஏமாற்றினால்தான் நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்லுவதை நம்பாதீர்கள்; ஏற்காதீர்கள்,’ என்பதுதான்.

ரமணன் 
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்