Home » , , » பசுமை கிராமம் துவரங்காடு - பஞ்சாயத்து தலைவர் ராமாத்தாள்

பசுமை கிராமம் துவரங்காடு - பஞ்சாயத்து தலைவர் ராமாத்தாள்

Written By DevendraKural on Saturday, 19 October 2013 | 11:34

'எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே'

எவ்வழியில் மக்கள் நல்லவர்களாக இருக்கிறார்களோ அவ்வழியில் நாடும் நலம்பெறும் என்று கூறுகிறது இந்த புறநானூற்றுப் பாடல்.

கட்டப்பஞ்சாயத்து, கள்ளச் சாராயம் என்று கொடிகட்டிப் பறந்த துவரங்காட்டில் சாராயம், வெட்டு குத்து, தகராறு என்று எப்பொழுதும் நடுக்கம் அனைவருக்கும் இருந்து வந்தது. பெண் கொடுக்க பெண் எடுக்க பக்கத்து ஊரார் பயந்தனர். இருபத்து நான்கு மணிநேரமும் பாதுகாப்பிற்கென போலீஸ் பந்தோபஸ்து போடப்பட்டிருந்தது. காவலுக்கு வந்த போலீஸார் தாக்கப் பட்டிருக்கின்றனர் துவரங்காடு திருத்த முடியாத கிராமம் என்ற பழியுடன் இருந்த காலக்கட்டம் அது.

துவரங்காட்டில் ஊரைச் சுற்றி அதிகமாக கள்ளச் சாராயம் காய்ச்சப்பட்டு வந்தது. குடிப்பது, அரிவாள் தூக்கி சண்டைக்குப் போக வேண்டியது, வெட்டு குத்து என்று தினமும் போலீஸ் கேஸ¤க்குச் செல்லவேண்டியது என ஊர்மக்கள் இருந்ததால் விவசாயம் வேலைகள் நின்றுவிட்டன. 

கோயில் கொடை என்றால் முதல் மரியாதை எனக்கு உனக்கு என்று இரு பிரிவினரிடையே குடும்பப் பூசல் தொடர்ந்தது. கலவரம் வெடித்து கருப்பசாமி கோயிலுக்கு கொடை செய்வது பாதியில் ஆண்டுதோறும் நின்று போனது.

1970 ஆம் ஆண்டில் ஆரம்பித்த மோதல் 1995 ஆம் ஆண்டுவரை இப்படியே தொடர்ந்தது. இவர்களுடைய சண்டை பக்கத்து கிராமங்களுக்கும் பரவி துவரங்காடு என்றாலே கலவர ஊர் என்று களங்கம் ஏற்பட்டது.

ஊருக்குள் நுழையும்பொழுது முட்செடிகள் நிறைந்த கரடுமுரடான சாலை இருந்தது. சாலையின் இருமருங்கிலும் மலஜலம் கழிக்கப்பட்டதால் ஏற்பட்ட வீச்சம் ஊருக்குள் நுழையும்பொழுதே அருவருப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.

இப்படி இருந்த துவரங்காடு நேர்மாறாக அமைதியும் தூய்மையும் அழகும் நிரம்பிய பசுமை கிராமமாய் மாறியது சுவாரஸ்யமான விஷயம்.
இன்று துவரங்காடு செல்வது என்பது இனிமையான பயண அனுபவம். இப்பொழுது துவரங்காடு நன்மக்கள் நிறைந்த நல்லூர் ஆகி அனைத்து பிரிவினரும் ஆச்சரியப்படும் அளவில் கட்டுக்கோப்புடன் முன்னுதாரணமாக விளங்குவது ஊருக்கு இன்னும் சிறப்பு சேர்க்கும் விஷயம்.

இதற்கு அடிப்படைக் காரணம் சமூகக்கல்வியே. குழந்தைகளிடம் சமுதாயத்தில் எப்படி பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் என்று கற்றுக்கொடுத்த சமூகக் கல்வியினால்தான் இந்த மாற்றம் ஏற்பட்டது. இந்த சமூக சீர்திருத்தக் கல்வியை (Civics Sense) மேற்கொள்ள வேண்டுமென்று பஞ்சாயத்தில் உள்ளவர்களுக்கு அவசர அத்தியாவசியமும் ஆர்வமும் ஏற்பட்டது. 
பஞ்சாயத்து தலைவர் ராமாத்தாள், அவரின் கணவர் முத்தையாசாமி. ஊரில் நடக்கும் சண்டையின் காரணத்தால் முத்தையாசாமி படிப்பைத் தொடர முடியாதலால் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டவர். 'தேவர் மகன்' திரைப்படத்தில் வரும் காட்சியைப் போல இரு குடும்பத்தினரின் இடையேயான சண்டையில் ஊர்மக்களும் சண்டையிட்டு அழிந்தனர். அதை மாற்றி முற்றுப்புள்ளி வைக்க சண்டை நிகழக் காரணமாயிருந்த இரு குடும்பத்தினரையும் சந்தித்துப்பேசினார். இது தொடர்ந்தால் ஊரே அழிந்துவிடும்; சந்ததிகள் சின்னாபின்னமாகிவிடும்; தலைமுறையினை அழித்த குற்றம் சேரும் என்று அவர் செய்த சமரச முயற்சி இன்று கிராமத்துக்கு நல்வாழ்க்கை விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது.

அடிதடிக்குக் காரணமான இரு பிரிவினரையும் குலதெய்வம் கருப்பசாமி முன்பு நிறுத்தி இனி சண்டை போடமாட்டோம் எனச் சொல்லச் செய்து சத்தியம் வாங்கினர். ஊர்மக்களுக்கு மாற்றம் அவசியம் என்ற கட்டாயத்தை உணர்ந்தனர். இந்த உணர்வைக் கொண்டு வந்தது பஞ்சாயத்தினரின் நடைமுறைகள்.

இவை எல்லாம் மந்திரம் போட்டதுபோல இன்று மாறியிருக்கிறது. இப்படி முன்னுதாரண கிராமாகத் திகழ்கிறதென்றால் அது உடனே நடந்த சாதாரண விஷயமல்ல. இந்தப்பெருமை முழுக்க அனைத்து மக்களையுமே சாரும் என்கிறார் ராமாத்தாள்.

அவர் மேலும் தனது பஞ்சாயத்து மூலமாக நடைபெற்றுவரும் ஒட்டுமொத்தமான சமுதாய இயக்கம் குறித்து கூறுகிறார்:

நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ், திட்ட அலுவலர் அப்துல் ராசிக், கீழப்பாவூர் யூனியன் தலைவர் எஸ்.கே.டி.பி. காமராஜ் ஆகியோரின் வழிகாட்டலின்படிதான் எங்களது கிராமத்தைச் சேர்ந்த சமுதாய தலைவர்களை அழைத்துப்பேசி நெல்லை மாவட்டத்தில் நமது ஊர் எல்லா வகையிலும் மிகச் சிறந்த ஊர் எனப் பெயர் வாங்க வேண்டும், அதனால் அனைவரும் ஒத்துழைப்புத் ரவேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். அவர்களும் அதற்கு சம்மதித்து முழு ஒத்துழைப்பு தந்தார்கள். கிராமத்து முழு சுகாதார இயக்கம், மரக்கன்று நட்டு பராமரிப்பது போன்றவை நிகழ்ந்தது கிராமமக்களின் முழுஒத்துழைப்பினால்தான் .அவர்களின் ஒத்துழைப்பால்தான் நூறு சதவிகிதம் தன்னிறைவு பெற்ற கிராம மாக்கி இதைச் சாதிக்க முடிந்தது. கிராமப்பஞ்சாயத்தின் இந்த வளர்ச்சிக்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தியபோது முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பூமாரியப்பன் மற்றும் கவுன்சிலர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.

மக்களும் எங்களுடன் முழுமையாக ஒத்துழைக்க இப்போது சாராயம் காய்ச்சுவது முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. டாஸ்மாக் கடைகள் கிடையவே கிடையாது.

இப்போது கிராமத்தில் விவசாய வேலைகள் நன்றாக நடக்கின்றன. 4 ஆண்டுகளாக இந்த பஞ்சாயத்தில் ஒரு வழக்குகூட பதிவு செய்யப்படவில்லை. போலீஸே ஊருக்குள் வரவில்லை. ஊர் வேண்டாமென ஓடியவர்கள் இங்கு வாழ்வதற்கென திரும்பி வந்திருக்கின்றனர்.

எடுத்துக்கொண்ட ஊர் சமுதாய சீரமைப்பு திட்டங்கள் அனைத்தும் கிராம மக்களின் தொடர்ந்த சலியாத நல்வழி முயற்சிகளினால் ¢றைவேற்றப்பட்டுள்ளன.

பஞ்சாயத்து தலைவரை ஊர்க்கூட்டம் போட்டு போட்டியின்றி தேர்ந்தெடுக் கிறார்கள். பஞ்சாயத்து தலைவர் ராமாத்தாளும், துணைத்தலைவர் தங்கத்துரையும், மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் கள்.ராமாத்தாள் பதவியேற்றதும் கணவர்முத்தையாசாமியின் உறுதுணையோடு கிராமத்தை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் சென்றார். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருக்கிறார் என்பதை நிரூபிக்கும் வகையில் ராமாத்தாளின் கணவர் அவருக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

ஊருக்குள் தொடக்கப்பள்ளி கட்டிடத்தில் இப்போது எட்டாம் வகுப்புவரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர். தூய்மையான பள்ளிக் கட்டடம். கட்டடத்துக்கு வெளியே வேப்பரமரநிழலில் மாணவ மாணவிகள் படிக்கும் காட்சி அழகானதாகவும், ஆரோக்யமானதாகவும் தெரிகிறது. பள்ளிக்கூடத்தையும் பள்ளிக்கூட கழிவறைகளையும் மாணவர்களே படுசுத்தமாக வைத்துக்கொள்கிறார்கள். சிறு குழந்தைகளுக்கென பால்வாடி ஒன்று இருக்கிறது.குழந்தைகள் விளையாட தனி இடம் துப்பரவாக விளையாட்டு சாதனங்கள், ஊஞ்சல் என அனைத்து வசதிகளுடனும் பரந்து விரிந்து காணப்படுகிறது.

சிறுவர்கள் சாக்லேட் காகிதங்களைக்கூட தெரியாமல்கூட கீழே போடுவதில் லை. வெளியே உள்ள குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள். அல்லது பையில் வைத்துக்கொண்டு வந்து வீட்டில் குப்பைத்தொட்டியில் போடுகிறார்கள். தனி யாக இனி சுகாதாரத்தை இவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டிய தேவையில்லை. அடிப்படையிலேயே தூய்மையின் மீதான அக்கறையுடன் வளரும் சூழல் வாய்த்துவிட்டது அவர்களுக்கு கொடுப்பினை. குழந்தைகள் தாங்கள் கற்றுக்கொண்டது மட்டுமல்ல, வீட்டிற்குச் சென்று பெரியவர்களுக்கும் சுகாதாரத்தின் தூய்மையின் மகத்துவத்தை எடுத்துச் சொல்லி ஊரின் மாற்றத்திற்கு உறுதுணையாய் இருந்திருக்கின்றனர். அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்பதை நடைமுறைப்படுத்திவிட்டனர். 100 சதவிகிதம் கல்வி தருவதே தனது லட்சியம் என்கிறார் ராமாத்தாள்.

திருநெல்வேலி மாவட்டம், பாவூர்சத்திரம் - சுரண்டை பாதையில் உள்ள கீழவெள்ளக்கால் பஞ்சாயத்தைச் சேர்ந்த ஒரு சிறு கிராமம் துவரங்காடு.


அங்கு நான் சென்றபொழுது துவரங்காடு பெயர்ப்பலகை அன்புடன் வரவேற்றது. குளிர்ந்த காற்றும் குதிபோட்டு வரவேற்றது. கிராமத்தின் ஆரம்ப வாசலிலிருந்து ஊருக்குள் வரும் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையிலும் சாலையின் இருமருங்கிலும் பலவகையான மரங்கள், மலர்கள் நிறைந்த மரங்கள் கண்களுக்கு குழுமையைத் தந்தன. வாதாம், புங்கை, அசோகமரம், வேம்பு, நாகலிங்கம், பன்னீர், செண்பகம், கூந்தல்பனை போன்ற மரங்கள் கிளை இலைகளை அசைத்து வரவேற்றன. பொன் அரளி மலர்கள் சிரித்தக் கொண்டிருக்க, குயில் கூவி வரவேற்றது.கிராமத்தின் உள்ளும், தெருவெங்கிலும், ஊர்க் கடைசி வரையிலும் பூங்கா வினைப் போன்ற அழகு. மாசில்லாத காற்று தூய்மையாய் நுரையீரலை நிரப்பி யது. சாலை முழுக்க தூசியின்றி கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போன்று அழகு. ஊர்முழுக்க மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டுள்ளன. பூந்தோட்டத்துக்குள் வீடுகள் கட்டியது போன்ற தோற்றப்பொலிவு காணப்படு கிறது. எங்கு நோக்கினும் அழகின் சிரிப்பு.
மொத்தம் 410 குடும்பங்கள், 2 ஆயிரத்து 118 மக்கள் வசிக்கின்றனர்.  380 குடும்பங்களுக்கு வீடுகளில் அரசு மானியத்துடன் தனிக்கழிப்பிடம் கட்டப்பட் டுள்ளது. மீதமுள்ள தனிக்கழிப்பறைகள் அமைக்க இடம் இல்லாத குடும்பங்க ளுக்கு பொதுக்கழிப்பிடம் கட்டித்தரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தெருவிலும் அத்தெருவிலுள்ள வீடுகளின் எண்ணிக்கை, கழிப்பறை எண்ணிக்கை என முழு விபரங்களும் எழுதி வைக்கப்பட்டுள்ளன. தெருக்கள்தோறும் குப்பைத்தொட்டிகள் வைக்கப்பட்டு தினந்தோறும் தூய்மைப்படுத்தப்படுகிறது.

கால்வாய்கள் அமைத்து கழிவுநீர் சேராமல் தூய்மை செய்ததால் கழிவுநீர்த் தேக்கமோ, துர்நாற்றமோ, கிருமிகளோ கிடையாது. மேலும் தூய குடிநீர், தூய காற்று இருப்பதால் நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. தப்பித் தவறி இருமல், காய்ச்சல் என்று வந்தாலும் மூலிகைத் தோட்டத்திற்கு வந்து மூ லிகைகள் பறித்துத் தாங்களே சரிசெய்து கொள்கிறார்கள். நோய்களாலான இறப்பு சதவிகிதம் கிடையாது இங்கே.

அழகிய பூக்களைத்தரும் மரங்கள் ஊர் முழுவதும் நடப்பட்டது. அனைத்து வீடுகலிலும் தெருவெங்கும் ஊர் முழுக்க மலர்கள் நிறைந்த மரங்கள் செழுமையாகக் காணப்படுகின்றன. பசுமை கிராமமாகத் திகழ்கிறது.துவரங்காடு கிராமத்தை சுத்தத்திற்கான ஊர்க்கட்டுப்பாட்டில் சிங்கப்பூருக்கு நிகராக எடுத்துக் கொள்ளலாம். வீட்டிற்கு ஒரு ஆள் என கிராமத்தை சுத்தம் செய்கின்றனர். திறந்த வெளியில் மலம் கழித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கின்றனர். இந்த கட்டுப்பாடு விதித்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஒருவர் கூட விதியை மீறிச் சென்றதில்லை. அபராதமும் கட்டியதில்லை. இந்த சிவிக் சென்ஸ்தான் இந்த ஊரின் வளர்ச்சிக்குக் காரணம். இதை தாராளமாக சமுதாயப் புரட்சி எனலாம். பஞ்சாயத்து புரட்சி எனலாம். கிராமப் புரட்சி எனலாம். மக்களின் நல்வழிப் புரட்சி எனலாம். குழந்தைகளின் புரட்சி எனலாம். சொல்லில் மட்டுமல்ல புரட்சி செயலிலும் புரட்சி என்று செய்து காட்டியிருக்கிறார்கள்.

கலெக்டர் பிரகாஷ் நேரில் கிராமத்தைப் பார்வையிட்டு துவரங்காடு கிராமத்தை பூஞ்சோலை கிராமம் எனக்குறிப்பிட்டு இக்கிராமத்தின் தூய்மையை அனைவரும் பின்பற்ற வேண்டுமென பிற பஞ்சாயத்தினரும் இதை முன்னுதாரணமாகக் கொண்டு ஆக்கபூர்வமாகச் செயல்படவேண்டுமென துவரங்காடு கிராம வளர்ச்சி குறித்த குறுந்தகடுகளை பிற பஞ்சாயத்தினருக்கு கொடுத்திருக்கிறார்.

கிராம மக்களின் ஒற்றுமை காரணமாக 94 நபர்களிடம் நிலம் தானமாகப் பெற்று மேலப்பாவூருக்கு சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது.ஐந்து செண்ட் பரப்பில் அரிய வகை 92 வகையான மூலிகைச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. காய்ச்சல், ஆஸ்த்மா, மஞ்சள் காமாலை, இருமல், அம்மை, சிறுநீரகக்கல், மூட்டுவலி, வெட்டுக்காயம் ஆகியவற்றுக்கு மருந்தாகும் பலவகை மூலிகைகள் நிறைந்த மூலிகைத்தோட்டம் அமைக்கப்பட்டு  நோயிலிருந்து மக்களுக்கு பாதுகாப்பளிக்கிறது.மருத்துவமனை என்பதே இந்தக் கிராமத்தில் இல்லை. அத்தனை சுகாதாரம். சிக்கன் குனியா நோயால் அனைவரும் அவதிப்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் கூட இந்தக்கிராமத்தில் எந்த நோயும் இல்லை. வைரஸ் காய்ச்சல் என்பதும் கிடையாது.

இக்கிராமத்தில் கொசுத்தொல்லையும் இல்லை. புங்கை மரங்கள் அதிகமாக உள்ளன. அந்த மரத்தைத்தொட்டு வரும் காற்றினால் தோல் வியாதிகளே இல்லை என்று சொல்லும்போதே கொசுவும் இல்லை. அதனால் கொசுவினால் பரவும் நோயும் இல்லை என்கிறார்.

ஊரின் அழகுக்கும் சுற்றுப்புற அழகுக்கும் ஊரைச் சுற்றிச் செல்லும் மாறாந்தை கால்வாயும், சிற்றாறும் உறுதுணையாய் இருக்கின்றன. கடின உழைப்பு வெற்றியைத்தரும் என்பதற்கு எடுத்துக்காட்டான கிராமம் துவரங்காடு. கிராம சமூகத்தின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பு துவரங்காடு கிராமத்தை முன்னுதாரண கிராமமாக்கியுள்ளது.

சிறந்த முன்னுதாரணமான கிராமத்து பஞ்சாயத்து தலைவர் என ராமாத்தாள் 19. 12. 2008 இல் தமிழ்நாடு மாநிலத்தின் உத்தமர் காந்தி விருது பெற்றுள்ளார். 2007 - 2008 ஆண்டுக்கான தேசிய நிர்மல் கிராம் புரஸ்கார் விருது பெற்றிருக்கிறார். 26.01.2009 இல் ஜனாதிபதியை சந்திக்க நேரடி அழைப்பு பெற்று டில்லி சென்று வந்திருக்கிறார்.மேலும் இந்த கிராமத்திற்காக, மாறாந்தை அணைக்கட்டில் படகு விட்டு, சுற்றுலா தலமாக்கவேண்டும் என்பது ராமாத்தாளின் விருப்பம்.

நல்வழி எவ்வழியென்று என்று சிந்தித்து அவ்வழியில் சென்று சமுதாயக் கட்டுக்கோப்பில் உயர்நிலை அடைந்துவரும் துவரங்காடு மக்கள் புண்னியம் செய்தவர்கள். வாழிய அவர்கள் கட்டுக்கோப்பு.

அன்புடன்
மதுமிதா
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்