Home » » பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்!

பொலிஸ் முற்றுகையில் முள்ளிவாய்க்கால் முற்றம்!

Written By DevendraKural on Wednesday, 13 November 2013 | 01:01

கருணாநிதியால் தமிழினத்துக்கு எந்த ஒரு நன்மையும் நேராது. இனி, ஜெயலலிதாவே துணை என்ற எதிர்பார்ப்பில் இருந்து வந்த தமிழின உணர்வாளர்களின் நம்பிக்கைகள் தவிடுபொடி ஆகிவிட்டது. முள்ளிவாய்க்கால் முற்றம் திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழகக் காவல்துறை ஏற்படுத்திய அடுக்கடுக்கான நெருக்கடிகளைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தனர்.
நீதிமன்றம் சென்று தடையை உடைத்தாலும்கூட, நிகழ்ச்சிகள் முடியும் வரை தொல்லைகள் தொடர்ந்துகொண்டேதான் இருந்தன.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்ற முழக்கத்தோடு தமிழகத்தின் ஐந்து முனைகளில் இருந்தும் சுடர் ஏந்தி, முள்ளிவாய்க்கால் முற்றத்துக்கு வரமுயன்ற மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
மூன்று நாள் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த பந்தலை அகற்றுமாறும் காவல்துறை மிரட்டியது.
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் புகைப்படம் இடம்பெற்ற பேனர்கள் கிழிக்கப்பட்டன. பிரபாகரனின் படம் இடம்பெற்ற ஒருசில விளம்பர பதாகைகளுக்காக, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்தது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் இரவு 10 மணியைத் தாண்டியும் நடைபெற்றது விதிமுறை மீறல் எனக்கூறி, ஒலிப்பெருக்கி அமைப்பாளரையும் ஊழியர்களையும் கைது செய்ததோடு, ஒலிப்பெருக்கி சாதனங்களையும் பறிமுதல் செய்தது.
காவல்துறை அதிகாரிகளிடம் சமரசம் பேசி அனுமதி பெற்று, மூன்றாம் நாள் நிகழ்ச்சியைத் தொடங்க, மதியம் 12 மணியைத் தாண்டிவிட்டது. இப்படியாக தொந்தரவுகள் தொடர்ந்தாலும், 8, 9, 10 ஆகிய மூன்று நாட்களுமே மக்கள் கூட்டத்தால் முள்ளிவாய்க்கால் முற்றம் நிரம்பி வழிந்தது.
தஞ்சாவூர் நகரத்துக்கு மிகவும் ஒதுக்குப்புறமான, மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத பகுதியில் இது அமைந்திருப்பதால், மக்கள் அதிகளவில் வருவதற்கு வாய்ப்பு இல்லை என உளவுத் துறையினர் நினைத்திருந்தனர். ஆனால் கணவன்-மனைவி, குழந்தைகள், தாத்தா-பாட்டி என குடும்பம் குடும்பமாக மக்கள் இங்கு படையெடுத்ததைக் கண்டு திகைத்துப் போனது காவல்துறை.
முற்றத்தின் அருகே அமைக்கப்பட்ட திடலுக்கு முத்துக்குமார் திடல், அரங்கத்துக்கு பாலச்சந்திரன் அரங்கம் என பெயர் சூட்டப்பட்டன.
முதல் நாள் நிகழ்ச்சி இங்கு நடைபெற, அடுத்த இரண்டு நாள் நிகழ்ச்சிகள் ம.நடராஜனின் தமிழரசி மண்டபத்தில் நடைபெறுவதாகத்தான் அழைப்பிதழ்களில் அச்சிடப்பட்டிருந்தது. காவல்துறை அனுமதி வழங்காததால் மூன்று நாள் நிகழ்ச்சியும் பாலச்சந்திரன் அரங்கத்திலேயே நடைபெற்றன.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பழ.நெடுமாறன், ''இது விழா அல்ல. இது ஒரு துயர நிகழ்ச்சி. இங்கு எழுப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், ஈழத் தமிழர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை நம் எதிர்காலத் தலைமுறைக்கு என்றென்றும் எடுத்துரைக்கும். நம் முன்னோர்களை நினைவுகூர, நடுகல் அமைக்கும் வழக்கம் தமிழகத்தில் காலங் காலமாக நிலவுகிறது. இந்த நினைவு முற்றமும் நடுகல் போன்றதுதான். இதை யாரேனும் இடிக்கவோ, தகர்க்கவோ முற்பட்டால், நான் விடமாட்டேன்'' என்றார்.
நீதிபதி சந்துரு, ''சீப்பை ஒழித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடும் என நினைப்பது போல், இந்த நிகழ்ச்சிக்கு அரசு தடை உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்றத்தால் அந்தத் தடை நீக்கப்பட்டு, இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஈழத்தில் இறந்தவர்களுக்கு இங்கு ஏன் நினைவிடம் அமைக்க வேண்டும் என நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள். இரண்டாம் உலகப் போரில், இந்திய வீரர்களை ஈடுபடுத்த இங்கிலாந்து முயற்சித்தபோது, 'உங்களுடைய நாடு பிடிக்கும் சண்டையில் இந்தியாவை ஈடுபடுத்தாதீர்கள்’ என இங்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியது.
நமக்கு உடன்பாடே இல்லாத அந்த இரண்டாம் உலகப் போரில் கொல்லப்பட்ட வெள்ளைக்கார வீரர்களுக்கு, சென்னையில் இரண்டு இடங்களில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கல்லறை மேம்பாட்டு வாரியம் அமைக்கப்பட்டு, அந்த நினைவிடங்கள் இன்றைக்கும் அரசாங்கத்தால் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது'' என்றார்.
காவல்துறையினரின் கெடுபிடிகள் குறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பேசினோம். ''யாரை திருப்திபடுத்த காவல்துறை இப்படியெல்லாம் செய்கிறது... மத்திய அரசையா? மாநில அரசையா? முற்றத்தின் மீது தனிப்பட்ட கோபம் என்ன? முதல் நாள், வழக்குப் போட்டனர்.
இரண்டாம் நாளும் வழக்குப் போட்டுள்ளனர். ஏன் ஒரே வரியில் முற்றம் திறப்பதற்கு அனுமதி இல்லை என்று தடைவிதிக்க வேண்டியதுதானே? தைரியம் இருந்தால் அதைச் செய்யட்டும்.
நாங்கள் என்ன ஆயுதம் தாங்கியா நிகழ்ச்சி நடத்தினோம். இங்கு வந்து பேசியவர்கள் யாரும் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசவில்லை. ஈழத்துப் பிரச்சினைகளை, அவலங்களை மட்டும் பேசினர்.
மத்திய உளவுப் பிரிவு, மாநில உளவுப் பிரிவினர் ஆகியோர் நிகழ்ச்சிகளைக் கண்காணிக்க வந்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த உளவுப் பிரிவினரும் உளவு பார்த்தனர்.
எங்களிடம், 'யார் யார் இலங்கையில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வந்தனர்’ என்று கேட்கிறார்கள். வீசாவை அனுமதிப்பது இந்திய வெளியுறவுத் துறைதானே? எங்களை ஏன் கேட்கிறார்கள்? இலங்கையில் இருந்து எம்.பி-க்கள், மாகாண சபை உறுப்பினர்கள் வந்தார்களா என்று கேட்கிறார்கள்.
அவர்களின் வீசா பற்றி வெளியுறவு அமைச்சகத்துக்குத் தெரியாதா என்ன? அழைப்பிதழில் நாங்கள் யார் பெயரையும் தனிப்பட்ட முறையில் போடவில்லை. உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு தகவலைச் சொன்னோம். அவர்களாக வந்து நாங்கள் வந்திருக்கிறோம் என்று அறிமுகப்படுத்தி, கலந்து கொண்டனர்.
மொரீசியஸ் நாட்டில் புலம்பெயர்ந்த தமிழர்கள் மாநாடு இதே தேதியில் நடைபெற்ற காரணத்தால், உலகத் தமிழர்கள் வருகை குறைவு. இல்லை என்றால், இன்னும் குவிந்திருப்பார்கள். தமிழகத்தில் இருந்துதான் எங்களுக்கு நெருக்கடி கிளம்புகிறது என்பதை மட்டும் உணர முடிகிறது.
அதுவே, எங்களுக்கு இன்னும் நெருக்கடிகள் வரலாம் என்று அச்சத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இவை அனைத்தையும் துணிவுடன் நாங்கள் சமாளிப்போம் என்றனர்.
ஈழப் பிரச்சினையே தடைகளைத் தாண்டுவது தானே!
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்