Home » » ''எந்த நேரத்திலும் எங்கள் உயிர் போகலாம்!''

''எந்த நேரத்திலும் எங்கள் உயிர் போகலாம்!''

Written By DevendraKural on Tuesday, 17 December 2013 | 14:58

''எந்த நேரத்திலும் எங்கள் உயிர் போகலாம்!''
'போலீஸ்' பக்ருதீன் பகீர் பேட்டி
இந்து முன்னணித் தலைவர்கள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக் ஆகிய இருவரும் போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பிறகு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 'இவர்கள் இருவரும்தான் முக்கியக் குற்றவாளிகள். இருவருமே தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்தச் சூழ்நிலையில் போலீஸ் பக்ருதீன் கருத்தை அறியத் திட்டமிட்டோம். அவரது வழக்கறிஞர் ஜாகீம் அகமத் மூலமாகக் கேள்விகளை வேலூர் சிறையில் உள்ள போலீஸ் பக்ருதீனுக்கு கொடுத்து அனுப்பினோம். நமது கேள்விகளும் அதற்கு போலீஸ் பக்ருதீன் அளித்த பதில்களும் இதோ...
 ''உங்கள் வாழ்க்கை தடம்மாறியது எப்படி?''
''எங்களின் சொந்த ஊர் மதுரை, நெல்பேட்டை. அங்குள்ள இரு ஜமாத்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதில் நான் தலையிட்டேன். மதுரை போலீஸ் என்னைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. அப்போது எனக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதற்காக என்னைப் பழிவாங்கும் நோக்கத்தில், ஒரு திருடன் கொலை செய்யப்பட்ட வழக்கிலும், இன்னொரு பெண் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் குற்றவாளியாகச் சேர்த்தார்கள். நீதிமன்றம் என்னை நிரபராதி என்றுவிடுதலை செய்தது. அதன்பிறகு இமாம் அலி போலீஸ் கஸ்டடியில் இருக்கும்போது அவரை நான் கடத்திச் சென்றதாகப் பொய் வழக்குப் போட்டு, சேலம் மத்தியச் சிறையில் அடைத்தார்கள். அந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டது. தண்டனைக் காலம் முடிந்து வெளியே வந்த பிறகும், போலீஸார் தொடர்ந்து எனக்குத் தொந்தரவு கொடுத்தனர். அதில் இருந்து தப்பிக்கத் தலைமறைவாக இருந்தேன். அதையே காரணமாக வைத்து என்மீது பல பொய் வழக்குகளைப் போட்டனர். அதன் பிறகு என்னைத் தீவிரவாதிபோல போலீஸ் சித்திரித்துவிட்டது.''
''அன்பைப் போதிக்கும் இஸ்லாம் மார்க்கத்தை விட்டு உங்களைத் தவறான பாதைக்கு அழைத்து வந்தது யார்?''
''நான் எந்தத் தவறான செயலிலும் ஈடுபடவில்லை. எந்தத் தீவிரவாத இயக்கத்திலும் இல்லை. அப்படி ஏதாவது  ஒரு இயக்கத்தில் இருந்திருந்தால், எங்கள் குடும்பம் இன்று வசதியாக இருந்திருக்கும். நான் ஒரு சாதாரண ஏழை இஸ்லாம் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால்தான் எங்கள் மீது பழி போட்டு யாரையோ திருப்திப்படுத்துகிறது போலீஸ். இது முற்றிலும் பொய்யான பிரசாரம்.''
''உண்மையைச் சொல்லுங்கள்... இதுவரை என்னென்ன தவறுகள் செய்திருக்கிறீர்கள்?''
''என் மனதாரச் சொல்கிறேன். நிச்சயமாக நான் எந்தத் தவறும் செய்யவில்லை. நான் நிரபராதி.''  
''அத்வானியைக் கொல்ல பைப் வெடிகுண்டு வைக்கவில்லையா?''
''இல்லை. அதை வைத்தது யார் என்பதும் எனக்குத் தெரியாது.''
''வேலூர் வெள்ளையப்பன், சேலம் ஆடிட்டர் ரமேஷ் ஆகியோரை எதற்காகக் கொலை செய்தீர்கள்?''
''நான் யாரையும் கொலை செய்யவில்லை. கொலையானவர்கள் யார் என்பதுகூட எனக்குத் தெரியாது. எங்களை அடித்துச் சித்ரவதை செய்த போலீஸ்,  நான் அனைத்துக் குற்றங்களையும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுத்ததாகச் சொல்லி வருகிறது. நான் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை. செய்யாத கொலைக்கு நாங்கள் எப்படி வாக்குமூலம் கொடுக்க முடியும்?''
''ஆடிட்டர் ரமேஷ் கொலைக்காக நீங்கள் பயன்படுத்திய பைக், ஆயுதங்களை கண்டுபிடித்திருக்கிறார்களே?''
''வண்டியையும், ஆயுதங்களையும் நாங்கள் பயன்படுத்தியதாக அவர்களே ஆவணங்களைத் தயாரித்துள்ளனர். எங்களுக்கும் அந்த வண்டிக்கும் ஆயுதங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எல்லாமே போலீஸ் ஜோடித்திருக்கிறது. சேலம் ஜே.எம். 4 நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தாக்கல்செய்த ஒரு மனுவில், 'எதிரிகள் ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர்கள்’ என்று புதிய ஒரு கதையையும் கட்டிவிடுகிறார்கள். நிச்சயம் நாங்கள் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்.''
''காவல் துறை உங்களை எப்படி நடத்துகிறது?''
''நாங்கள் சிறைக்குள் நீதிமன்றக் காவலில் இருந்தாலும், காவல் துறை கட்டுப்பாட்டின் காரணமாக 24 மணி நேரமும் தனிமைச் சிறையில் அடைத்துள்ளனர். எங்களை அப்ரூவராக மாறச் சொல்லியும், கொலைகளை நாங்கள்தான் செய்தோம் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லியும், சித்ரவதை செய்கின்றனர். நான் கடந்த 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களாக உண்ணாவிரதம் இருந்து நீதி கேட்டுப் போராடி வருகிறேன். எந்த நேரத்திலும் எங்கள் உயிர் போகலாம் என்ற அச்சத்தில் உள்ளோம். நாங்கள் இந்து முன்னணித் தலைவர்களைக் கொலை செய்யவில்லை. இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க நடுநிலையாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் சேர்ந்து குரல் கொடுத்து நீதியை நிலை நாட்ட வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்!''
வீ.கே.ரமேஷ்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்