Home » » மோடி மந்திரம் சக்ஸஸ் ஃபார்முலா!

மோடி மந்திரம் சக்ஸஸ் ஃபார்முலா!

Written By DevendraKural on Tuesday, 17 December 2013 | 15:03


வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்த காலை நேரத்தில் கழுகார் நம்முன் ஆஜரானார். ''காலநிலை மாற்றம் அதிகமாக இருக்கிறது. அரசியல் நிலையும் அப்படித்தான்...'' என்றபடி கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார். 
''நாடாளுமன்றத் தேர்தலுக்காக முஸ்தீபுகள் தொடங்கிவிட்டன. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிந்ததும் அவை உடனடியாக ஆரம்பித்துவிடும் என்று எல்லோரும் எதிர்பார்த்த மாதிரியே தொடங்கிவிட்டன சம்பவங்கள். 15-ம் தேதி தி.மு.க. பொதுக்குழு நடக்க இருக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழு 19-ம் தேதி நடக்க இருக்கிறது. இரண் டிலும் கூட்டணி சம்பந்தமான வெளிப்படையான அறிவிப்பு இருக்காது என்றாலும் யாரோடு கூட்டணி, யாருடன் கூட்டணி இல்லை என்பதற்கான அரசல்புரசலான கருத்துக்கள் அங்கு பேசப்படும். அனைவரையும் முந்திக்கொண்டு, நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களின் விண்ணப்பத்தினைக் கொடுப்பதற்கான தேதியைக் குறித்துவிட்டார் ஜெயலலிதா. அந்த அடிப்படையில் ஜெயலலிதாவின் வாகனம் முதலில் ஸ்டார்ட் ஆகிவிட்டது!''
''கூட்டணிகள் பற்றிச் சொல்லும்!''
''தமிழகத்தைப் பொறுத்தவரையில் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பித்துவிட்டன. பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும், இல்லை தி.மு.க-தான் கூட்டணி வைக்கும் என்று ஆள் ஆளுக்கு ஒரு கணிப்பைச் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் அல்லவா? இவை அனைத்துக்கும் டெல்லி மேலிடம் சொல்லும் பதில் 'நோ’ என்பதுதான். 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதை, மோடி விரும்பவில்லை. தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதை அத்வானி விரும்பவில்லை’ என்றுதான் சொல்கிறார்கள். 'தன்னைப் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிக்கொள்ளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி வைக்க முடியாது’ என்பது மோடியின் முடிவு. 'தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு ஸ்பெக்ட்ரம் வழக்கைப் பற்றிப் பேசமுடியாது’ என்று அத்வானி சொல்கிறாராம். எனவே, இரண்டும் இல்லாத கட்சிகள் கொண்ட கூட்டணியாகத்தான் அமைய வேண்டும் என்பது டெல்லித் தலைவர்களது முடிவு!''
''ம்!''
''யஷ்வந்த்சின்காவிடம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஒருவர் பேசி இருக்கிறார். அவருக்கு தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதில் ஆட்சேபம் எதுவும் இல்லையாம். ஆனால், டெல்லியில் உள்ள தலைவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை என்பதை யஷ்வந்த்சின்கா சொல்லியிருக்கிறார். 'பி.ஜே.பி. வந்தால் காங்கிரஸுக்கு ஒதுக்குவதைப்போல இடங்களை ஒதுக்கலாம்’ என்று தி.மு.க. நினைப்பதாகவும் பி.ஜே.பி. தலைமைக்குச் சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், 'தி.மு.க-வுடன்தான் கூட்டணி வைக்கவேண்டும்’ என்று உறுதியாகச் சொல்லும் அளவுக்கு அந்தக் கட்சியில் ஆட்கள் இல்லையாம். இப்படிப்பட்ட நிலையில் பி.ஜே.பி. தலைமை ஒரு ஃபார்முலாவை வகுத்துள்ளது. இதன்படி பி.ஜே.பி. கூட்டணியில் தே.மு.தி.க., ம.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளைச் சேர்த்து ஒரு அணியை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார்கள். 'மோடி மந்திரம்’ என்று டெல்லியில் இதனை ரகசியமாகச் சொல்கிறார்கள்!''
''ஆரம்பத்தில் தமிழருவி மணியன் இதற்கான முயற்சிகள் எடுத்தாரே?''
''காங்கிரஸுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்துத்தான் தமிழருவி மணியன் இந்த முயற்சிகளில் இறங்கினார். அவர் முதலில் வைகோவைச் சந்தித்தார். விஜயகாந்த்தைப் பார்த்தார். அதன்பிறகு ராமதாஸையும் சந்தித்தார். இந்த சந்திப்புகள் அனைத்தும் ஒரு மாதத்துக்கு முன்பு நடந்தன. அதைப் பற்றி அப்போதே சொல்லி வந்திருக்கிறேன். இப்போது அந்தப் பேச்சுவார்த்தைகள் சூடுபிடித்துள்ளன. ஒவ்வொரு கட்சியாகச் சொல்லி வருகிறேன். ஆரம்பத்திலேயே பி.ஜே.பி-யினர் பேச்சுவார்த்தை நடத்தியது வைகோவிடம்தான். 'தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணி யுடனும் கூட்டணி கிடையாது’ என்று வைகோ முடிவு செய்ததால் பி.ஜே.பி-யினர் அவரை உறுதியாக நம்பினார்கள். தமிழக பி.ஜே.பி. தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் போனில் பேசி இருக்கிறார். தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர் முரளிதர்ராவ், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் மோகன்ராஜுலு ஆகிய இருவரும் வைகோவை அவரது இல்லத்தில் கடந்த 26-ம் தேதி சந்தித்தார்கள். 'ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்ததும் பேசலாம்’ என்று வைகோ சொல்லியிருக்கிறார். தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு சாதகமாக வந்தது. உடனடியாக டெல்லியில் இருந்து வைகோவை தொடர்புகொண்டனர். கடந்த 11-ம் தேதி வைகோ டெல்லி போனார். பொன்.ராதாகிருஷ்ணனும் டெல்லி போனார். இருவரும் தனித்தனியாகத்தான் சென்றனர். டெல்லியில் அகில இந்திய பி.ஜே.பி. தலைவர் ராஜ்நாத் சிங்கிடம் வைகோவை அழைத்துச் சென்றுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். 'பி.ஜே.பி. கூட்டணிக்கு நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு நல்ல பிரசாரகர் கிடைத்த சந்தோஷம் ஏற்படுகிறது’ என்றாராம் ராஜ்நாத். அதன் பிறகு கூட்டணி  சம்பந்தமாக இருவரும் தனிமையில் பேசி இருக்கிறார்கள். 'அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளோடும் பி.ஜே.பி. கூட்டணி அமைத்துவிடாது என்பதற்கான உத்தரவாதம் தர வேண்டும்’ என்று வைகோ நினைக்கிறாராம். 'கட்சி விரும்பும் குறிப்பிட்ட தொகுதிகள் கிடைக்க வேண்டும்’ என்பதில் ம.தி.மு.க. தீவிரமாக உள்ளது!''
''அப்படியானால் வைகோ இந்த அணியில் சேருவது உறுதியாகிவிட்டது.... அப்படித்தானே?''
''ஆமாம்! அடுத்து உறுதியாக்கப்பட்டுள்ள கட்சி பா.ம.க. அந்தக் கட்சியின் தலைவர் ராமதாஸுடன் தமிழருவி மணியன் ஒரு மாதத்துக்கு முன்பு பேசியபோது, 'தனித்துப் போட்டி’ என்பதில் அவர் உறுதியாக இருந்தார். 'எங்கள் செல்வாக்கை தெரியப்படுத்தவே நிற்கிறோம். வெற்றிக்குப் பிறகு மோடியை ஆதரிப்போம்’ என்று அப்போது ராமதாஸ் சொல்லியிருந்தார். ஆனால் டெல்லியில் இருந்து, அன்புமணியிடம் பேசி கரைத்துவிட்டார்கள். 'தேர்தலுக்கு முன்னதாக கூட்டணியில் சேர்ந்தால்தான் உங்களுக்கும் நல்லது, எங்களுக்கும் நல்லது’ என்று சொன்னார்களாம் டெல்லி தலைவர்கள். 'தனித்து போட்டி’ என்பதில் ஆரம்பத்தில் இருந்து ராமதாஸ் உறுதியாக இருந்தாரே தவிர அன்புமணிக்கு கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. 'தனியாக நின்றால் கௌரவமாக இருக்கும். ஆனால் வெற்றிபெற முடியாது’ என்று அன்புமணி நினைத்தார். எனவேதான் அவரை பி.ஜே.பி. தலைமை வளைத்தது. கூட்டணிக்கு அன்புமணி முதலில் சம்மதித்தார். அடுத்து ராமதாஸும் சம்மதித்தார். இதைத் தொடர்ந்து தமிழருவி மணியனும் ராமதாஸிடம் பேசி இருக்கிறார். ஸீட் எவ்வளவு என்பதை பேசவில்லை. ஆனால் கூட்டணியில் சேருவது உறுதியாகிவிட்டது!''
''அப்படியானால் பா.ம.க-வும் சேர்ந்துவிட்ட மாதிரிதான்!''
''அடுத்து விஜயகாந்த். ஒரு மாதத்துக்கு முன்பு தமிழருவி மணியன், விஜயகாந்த்தை சந்தித்து, 'நீங்கள் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணியில் சேர்ந்தால் என்ன ஆகும்?’ என்பதை விலாவாரியாக விளக்கினார். விஜயகாந்த்தும் பாசிட்டிவ்வாகப் பேசினார். ஆனால், இந்தக் கூட்டணிக்கான முயற்சிகளை பி.ஜே.பி-தான் செய்யவேண்டும் என்பதில் விஜயகாந்த் உறுதியாக இருந்தார். 'கடைசி நேரத்தில் பி.ஜே.பி. நம் காலை வாரிவிட்டு அ.தி.மு.க-வுடன் அணி சேர்ந்துவிடும்’ என்ற தயக்கம் அவருக்கு இருந்தது. அடுத்ததாக, தே.மு.தி.க. தலைமையில்தான் கூட்டணி என்றும் விஜயகாந்த் சொன்னார். அதனை ஆரம்பத்திலேயே பி.ஜே.பி. நிராகரித்துவிட்டது. இதனால் கூட்டணி உருவாகாது என்றே தோன்றியது. ஆனால் கடந்த 9-ம் தேதி, விஜயகாந்த்தை தமிழருவி மணியன் மீண்டும் சந்தித்துள்ளார். அப்போது விரிவாகப் பேசினாராம் மணியன். 'காங்கிரஸ் கூட்டணியில் சேர்ந்தால் அது தற்கொலைக்குச் சமம். நான்கு மாநிலத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் முழுமையாகத் தோற்றுவிட்டது. அத்துடன் தமிழகத்தில் ஈழத் தமிழர் பிரச்னையும் இருக்கிறது. இதுவும் சேர்ந்தால் இன்னும் மோசமாக காங்கிரஸ் தோற்கும். அதேபோல் தி.மு.க-வுடன் நீங்கள் சேர்ந்தால் ஊழலைப் பற்றி பேசுவதற்கான தார்மீகத் தகுதியை இழந்துவிடுவீர்கள். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் தி.மு.க-வை எதிர்த்து பிரசாரம் செய்ய வேண்டி வரும். அப்போது நம்பிக்கைத் தன்மையை இழந்துவிடுவீர்கள்’ என்று ஒவ்வொரு பாயின்டாக தமிழருவி மணியன் விளக்கினாராம். அத்தனையையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டாராம் விஜயகாந்த். 'டெல்லி பி.ஜே.பி. தலைவர்களை உடனடியாக சந்தியுங்கள்’ என்றும் மணியன் சொல்ல, 'ஜனவரி மாதம் கட்சி மாநாடு வைத்துள்ளேன். அதில்தான் அறிவிப்பேன்’ என்றாராம் விஜயகாந்த். வட மாநிலத் தேர்தல் முடிவுகள் விஜயகாந்த் மனதை அதிகம் பாதித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். 'லேட்டாக வந்தாலும் இங்கேதான் வருவார்’ என்று டெல்லி தலைமைக்கு தமிழக பி.ஜே.பி. தகவல் அனுப்பி உள்ளதாம்!''
''அப்படியா?''
''இவை போக, டாக்டர் கிருஷ்ணசாமியை இந்த அணிக்குள் கொண்டுவருவதற்கான முயற்சி நடக்கிறது. முஸ்லிம் கட்சி ஒன்றும் சேருவதற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறது. அநேகமாக இதுதான் பி.ஜே.பி. போட்டு வைத்திருக்கும் சக்ஸஸ் ஃபார்முலா என்கிறார்கள்!'' என்று சொல்லிவிட்டு கழுகார் பண்ருட்டி ராமச்சந்திரன் மேட்டருக்கு வந்தார்.
''பண்ருட்டியார், தே.மு.தி.க. தலைமையுடன் முரண்பட்டு இருக்கும் தகவலை ஏற்கெனவே உமக்குத் தந்துள்ளேன். 'பண்ருட்டி ராமச்சந்திரனை அ.தி.மு.க-வுக்கு பேக் பண்ண திட்டமிட்டுள்ளார்கள்’ என்று (19.06.13 தேதியிட்ட ஜூ.வி. இதழ்) முன்னமே சொல்லி இருந்தேன். இதற்காக மதுரை மாநகர மேயர் ராஜன் செல்லப்பாவுக்கு அசைன்மென்ட் தரப்பட்டுள்ளதாகவும் சொல்லி இருந்தேன். அவர்தான், பண்ருட்டி ராமச்சந்திரனிடம் முதல்முறை பேசிவிட்டு ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதனிடம் தகவல் சொல்லி இருக்கிறார்.''
''அப்புறமாக ஏன் தடங்கல்?''
''பண்ருட்டியார் தரப்பில் இருந்து சில கண்டிஷன்கள் போடப்பட்டதாம். 'அ.தி.மு.க-வுக்கு வந்தாலும் பதவியை ராஜினாமா செய்துவிட்டுத்தான் வருவேன். இல்லாவிட்டால் விமர்சனத்தை சந்திக்க வேண்டி வரும்’ என்றாராம் பண்ருட்டி. 'பண்ருட்டியார் அ.தி.மு.க-வில் இணைய வேண்டும்’ என்று ஜெயலலிதாவே அழைப்பு விடுத்தால் மரியாதையாக இருக்கும் என்றும் சொன்னார்களாம். அதன் பிறகு பண்ருட்டி ராமச்சந்திரனிடம் சரத்குமார் பேசியதாகவும் சொல்கிறார்கள். பொதுவாக அ.தி.மு.க. தலைமை கண்டிஷன்கள் போடுபவர்களை விரும்புவது இல்லை அல்லவா? அதனால் இழுத்துக்கொண்டே போனது விவகாரம். மேலும் பண்ருட்டி ராமச்சந்திரன் வருகையை அ.தி.மு.க-வில் உள்ள இரண்டாம் கட்டத் தலைகளே விரும்பவில்லை. 'புத்திசாலித்தனமும் அரசியல் அனுபவமும் கொண்ட ஒருவர் உள்ளே நுழைந்தால் தங்கள் நாற்காலி காலி ஆகும்’ என்றும் நினைத்தார்கள். 'இவர் இன்னொரு நாவலராக அம்மாவின் நல்லெண்ணத்தை அடைந்துவிடவும் வாய்ப்பு இருக்கிறது’ என்றும் சொன்னார்கள். அதனால் பண்ருட்டியின் எண்ணங்கள் முழுமையாக ஜெயலலிதா கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவில்லையாம்.''
''அவர் கட்சியைவிட்டுப் போனதற்கு உண்மையான காரணம் என்ன?''
''தனக்கு ஆரம்ப காலத்தில் விஜயகாந்த் கொடுத்த மரியாதை காலப் போக்கில் குறைந்தது என்பதை பண்ருட்டியார் உணர்ந்தார். அவரிடம் ஆலோசனை கேட்டுத்தான் எதனையும் செய்வார். வரவர ஆலோசனை கேட்பதும் குறைந்தது. குறிப்பாக தலைமைக் கழகத்தில் தனக்கான மரியாதை குறைவதாக நினைத்தார். எப்போதும் மதிய சாப்பாடு எடுத்துக்கொண்டுதான் தலைமைக் கழகம் வருவாராம் இவர். 'சோத்து மூட்டை வந்திருச்சா’ என்று சிலர் கிண்டல் அடித்துள்ளார்கள். அவர்கள் எம்.எல்.ஏ-க்களாகவும் இருந்தார்கள். இந்த அவமானம் தொடர வேண்டாம் என்றுதான் பொட்டியைக் கட்டிவிட்டார் பண்ருட்டியார்!'' என்று கிளம்பப் போன கழுகாரிடம்,
''என்ன திடீரென கலெக்டர், எஸ்.பி. மாநாடாம்?'' என்றோம்.
''அதனைப் பற்றி அடுத்த இதழில் விரிவாகச் சொல்கிறேன். பெங்களூரு கோர்ட்டில் புதிய நீதிபதி வருகை காரணமாக விசாரணைப் படலம் சூடுபிடித்துள்ளநிலையில் இந்த திடீர் மாநாடாம்'' என்று சொல்லிவிட்டுப் பறந்தார்.  
படம்: ப.சரவணகுமார்
ஜூனியர் கேப்டன் வந்தாச்சு!
விஜயகாந்த்தின் இளையமகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் 'சகாப்தம்’ படத்துக்கு பூஜை கடந்த 12-ம் தேதி நடந்தது. படவிழாவில் பிரபு, சத்யராஜ், கார்த்தி போன்ற நடிகர்களும், விக்ரமன், ஆர்.கே செல்வமணி, எஸ்.ஏ.சந்திரசேகரன் போன்ற இயக்குநர்களும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய விஜயகாந்த், ''ஜெயலலிதாவுக்கு பயந்து சிலர் வரலை... பரவாயில்லை. நான் என் இளைய மகன் நடிக்கும் 'சகாப்தம்' சினிமா தொடக்கவிழா ஏற்பாடு செய்ததே பலருக்கும் தெரியாது. கட்சியின் செயற்குழு கூட்டமும் இன்றுதான் நடக்கப்போகிறது என்றும்கூட யாருக்கும் சொல்லாமல் கடைசி நேரத்தில்தான் சொன்னேன். முன்னாடியே சொன்னா ஏதாவது சொல்லி கலைக்கப் பார்ப்பாங்க. இந்தப் படம் தோல்வி அடையுது... வெற்றி பெறுது... அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். யாருக்கும் நஷ்டம் வராமல் இந்தப் படம் 4 வாரம் 5 வாரம் ஓடினால் போதும். நான் பலரையும் திட்டறேன் அடிக்கறேன்னு சொல்லுறாங்க. நான் யாரை அடிக்கறேன் என் கட்சிக்காரனைத்தானே அடிக்கறேன்? வேற யாரை அடிக்கறேன். கோபத்தை  கோபம்னு சொல்லாமல் வேறு எப்படி சொல்ல முடியும்? சில எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தால் எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி போய்டும்னு சொல்றாங்க. எனக்கு பயம் கிடையாது. வேணும் என்றால் அவர்கள் ராஜினாமா பண்ணிட்டு போகட்டும். எனக்கு கவலையில்லை. என் மனதில் என்ன நினைக்கறனோ அதைத்தான் என் மச்சான் சுதீஷ் செய்வார். கட்சியிலும் சரி சினிமாவிலும் சரி. யார் என்ன சொன்னாலும் சுதீஷ் பற்றி எனக்குத் தெரியும். என் மண்டபத்தை இடித்து சிரமம் கொடுத்தாங்க. நான் எதுக்குமே கவலைப்படலையே. எனக்கு தைரியம் இருக்கு. அதே தைரியம் என் பசங்களிடமும் இருக்கு'' என்று படபடத்தார்.
விழாவில் பேசிய சத்யராஜ், ''விஜயகாந்த்தால் நாங்கள் சந்தித்த நெருக்கடிகள் அதிகம். 'ஜனவரி 1’ படத்தில் 1000 மெழுகுவர்த்திகள் எரிந்துகொண்டிருக்க டூப்பே போடாமல் அந்தரத்தில் தொங்கியபடி சண்டை போட்டார். அந்தக் காலத்தில் நாங்கள் ஹீரோவாக நடித்தபோது ரிஸ்க் எடுத்து விஜயகாந்த் சண்டைபோட, அதுபோலவே எங்களையும் சண்டை போடச்சொல்லி எங்களிடம் டைரக்டர்கள் சண்டை போடுவார்கள். அந்தளவுக்கு சினிமாவில் நிர்ப்பந்தம் செய்யும் சக்தியாக விளங்கியவர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் மற்றக் கட்சிகளுக்கு நிர்ப்பந்தம் செய்யும் சக்தியாக விஜயகாந்த் விளங்குகிறார்'' என்று சொல்ல அவரைப் பார்த்து சிரித்தார் விஜயகாந்த்.
சண்முக பாண்டியனை அறிமுகப்படுத்திய போது, 'ஜூனியர் கேப்டன் வாழ்க!’ என்று தே.மு.தி.க-வினர் போட்ட கோஷத்தைக் கேட்டு புளகாங்கிதமடைந்தார் சீனியர் கேப்டன்!
சீற்றத்தில் சிதம்பரம்!
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டியலைப் பார்த்து கொதித்துப் போனவர்களில் முக்கியமானவர் ப.சிதம்பரம். 'கொஞ்சம் பேருக்குத்தான் பதவி போடமுடியும்’ என்று சொல்லி சிதம்பரத்திடம் பட்டியல் கேட்டாராம் ஞானதேசிகன். இவரும் சிலரை பரிந்துரை செய்துள்ளார். ஆனால் பட்டியலில் ஏராளமான ஆட்களைச் சேர்த்து இவரது ஆட்களின் எண்ணிக்கையை குறைத்துவிட்டாராம் ஞானதேசிகன். 'இதுதான் புதுப் பட்டியல்’ என்று ஒரு பட்டியலை சிதம்பரத்திடம் காட்டினாராம் ஞானதேசிகன். அதில் இல்லாத பெயர்கள்தான் அறிவிக்கப்பட்டதில் அதிகம் இருக்கிறதாம். அனைத்தும் மேலாக, துணைத் தலைவர் பதவிக்கு கார்த்தி சிதம்பரம் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தது. அறிவிக்கப்பட இருந்த பட்டியலிலும் அவர் பெயர் இருந்தது. ஆனால் அறிவிக்கப்பட்ட பட்டியலில் இல்லையாம். கிருஷ்ணசாமியின் மகனுக்கும் ஆரூண் மகனுக்கும் பதவி தரப்பட்டுள்ளது. கராத்தே தியாகராஜனுக்கு பதவி வேண்டும் என்று சிதம்பரம் கேட்டிருந்தார். 'ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்குப் பதவி இல்லை’ என்றாராம் ஞானதேசிகன். ஆனால் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஜி.ஏ.வடிவேலு, துணைத் தலைவர் ஆகி உள்ளார். திட்டமிட்டு தன்னுடைய ஆட்கள் புறக்கணிக்கப்பட்டதாக நினைக்கிறாராம் சிதம்பரம்.
ஜி.கே.வாசன் நீங்கலாக மற்ற தலைவர்கள் அனைவரும் சிதம்பரத்திடம் இதுசம்பந்தமாக பேசி வருகிறார்களாம். ''அறிவிக்கப்பட்ட பட்டியலை நிறுத்தி வைக்கவேண்டும்'' என்று கோரிக்கை வைக்கிறார்களாம் இவர்கள். மேலும், இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய பட்டியலை வெளியிட்ட ஞானதேசிகனை தலைவர் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்களாம். இந்த கோஷ்டியினர் அனைவரும் சேர்ந்து, 'நீங்கள் மாநிலத் தலைவராக ஆகுங்கள்'' என்று சிதம்பரத்திடம் சொல்லி வருகிறார்கள். டெல்லி தலைமை இதனை ஏற்றுக்கொண்டால், அமைச்சர் மற்றும் மாநிலத் தலைவராக சிதம்பரம் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்