Home » » சர்வதேச மகளிர் தினம் : அன்றும் இன்றும்

சர்வதேச மகளிர் தினம் : அன்றும் இன்றும்

Written By DevendraKural on Saturday, 8 March 2014 | 03:40


“பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது!
பாலியல் வேறுபாட்டிற்குப் புறம்பாக,
ஆண்மைக்கும் பெண்மைக்கும் அப்பாலாக, இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு, பெண்ணினம் ஆணினத்திடம் அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும்.” - 
 - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் 

தற்சமயம் உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் மகளிர் தினம், சர்வதேச மகளிர் தினமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினம் மார்ச் 18, 1911. ஆகவே மகளிர் தினம் கொண்டாட ஆரம்பித்து இந்த வருடத்துடன் 102 வருடங்கள் முடிந்து விட்டன.
ஃபிரெஞ்சுப் புரட்சியின் போதே பெண்கள் தங்களுக்கும் ஆண்களுக்குச் சமமான சுதந்தரம், சம உரிமை, அரசனது ஆலோசனைக் குழுமங்களில் பிரதிநிதிதத்துவம் கேட்டு போராட்டத்தில் இறங்கினர். எட்டு மணி நேர வேலை, வேலைக்குத் தகுந்த கூலி, அரசியலில் வாக்குரிமை ஆகியவையும் அவர்களது புரட்சி செயல்பாட்டில் பட்டியலிடப்பட்டன.
அப்போது ஆரம்பித்த இந்தப் போராட்டங்கள் 19ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் மெல்ல மெல்ல உலகம் முழுதும் பரவி பெண்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க அசாதாரண விழிப்புணர்வை ஏற்படுத்த ஆரம்பித்தன. பெண்கள் தங்கள் பலம் என்னவென்று உணரத் தொடங்கினர்.
பெண்ணடிமை, பெண்களை இழிவுபடுத்துதல், பெண்களை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்துதல், பெண் என்பதால் அவளை ஒதுக்குதல் ஆகிய சமுதாய போக்குக்களுக்கு எதிராகவே இந்தப் போராட்டங்கள் நடந்தன.
1908 ஆம் ஆண்டு சுமார் 15,000  பெண்கள் தங்களுக்கு வேலைக்குத் தகுந்த சிறப்பான சம்பளம், குறைந்த நேரப் பணி மற்றும் வாக்குரிமை கேட்டு நியுயார்க் நகர வீதிகளில் வலம் வந்தனர். இந்நிகழ்ச்சி மகளிர் போராட்டம் என்பதைவிட சோஷியலிஸ்ட் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருந்தது. 1913 ஆம் ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி ஞாயிறு தேசிய மகளிர் தினமாக அனுசரிக்கப்பட்டது.
1910 ஆண்டு கோபென்ஹேகன் நகரில் உழைக்கும் பெண்களின் மாநாடு நடைபெற்றது. அதில் ஜெர்மனி சோஷியல் டெமாக்ரடிக் கட்சியின் ‘மகளிர் அலுவலக’த் தலைவராக இருந்த க்ளாரா செட்கின் (Clara Zetkin) ஒரு யோசனையை முன்வைத்தார். அதாவது ஒவ்வொரு வருடமும் மகளிர் தினம் உலகம் முழுவதும் ஒரே தினத்தில் அனுசரிக்கப்படவேண்டும்; அதில் பெண்கள் தங்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும்  என்பது அவரது யோசனை. இந்த மாநாட்டில் 17 நாடுகளிலிருந்து 100 பெண்கள் கலந்து கொண்டனர். எல்லோருமே ஒரு மனதாக இவரது யோசனையை வரவேற்றனர்.
1911ம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி  முதல் முறையாக ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினம் அங்கீகாரம் பெற்றது. சுமார் ஒரு மில்லியன் பெண்களும் ஆண்களுமாக பெண்களுக்கு சம உரிமை கேட்டு ஒரு பேரணியாகத் திரண்டு பிரசாரத்திலும் ஈடுபட்டனர். துரதிர்ஷ்டவசமாக மார்ச் 25 ஆம் தேதி நியூயார்க் நகரில் ஏற்பட்ட ‘முக்கோண தீ விபத்து’ 140 உழைக்கும் மகளிரின் உயிரைப் பறித்தது. இவர்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வயிற்றுப் பிழைப்புக்காக வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். இந்தக் கொடும் சம்பவம் பெண்களின் உழைக்கும் சூழலைப்  பற்றிய மோசமான நிலையை உலகுக்கு அறிவித்தது. இதே ஆண்டில் உழைக்கும் மகளிர் Bread and Roses என்ற போராட்டமும் நடத்தினர். இதில் பங்கு பெற்ற மகளிர் We want Bread but we want roses, too என்று எழுதப்பட்ட கொடிகளை தாங்கி ஊர்வலம் சென்றனர்.
1913 ஆம் வருடம் முதல், மார்ச் 8  சர்வதேச மகளிர் ஆண்டாக உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பெண்களின் நிலை:
வேத காலத்தில் பெண்கள் மெத்தப் படித்தவர்களாகவும், தங்கள் கணவன்மார்களுக்கு சரிசமமாக எல்லா விஷயத்திலும் மேன்மையாக வாழ்ந்து வந்ததாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். கார்கி, மைத்ரேயி போன்ற பெண் அறிவாளிகளைப் பற்றி உபநிடதம், ரிக் வேதமும் பேசுகின்றன.
ஆனால் பிற்காலத்தில் பெண்களின் நிலை சரியத் தொடங்கியது. சதி (கணவன் உயிர் துறந்த பின் பெண்ணும் அவனுடன் தீக் குளிக்கும் வழக்கம்) குழந்தை திருமணங்கள் பெண் வீட்டாரிடம் வரதட்சணை கேட்பது போன்ற சமுதாயச் சடங்குகள் பெண்களுக்கு எதிராக இருந்தன.
மிகவும் சிறிய வயதில் நடந்த திருமணங்களில் பெண் வயதுக்கு வரும் முன்பே கணவன் உயிர் துறக்க நேரிட்ட சந்தர்ப்பங்களில் அந்தப் பெண்கள் ஆயுள் முழுவதும் விதவை பட்டத்துடன் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டு வாழ நேர்ந்தது. மறுமணம் என்பது அவர்களால் மட்டுமல்ல, அவர்களின் குடும்பத்தாராலும் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக கருதப்பட்டது. பெற்றோர் ஆதரவிலோ அவர்களது மறைவுக்குப் பின் கூடப் பிறந்தவர்களின் நிழலிலோ அவர்களது குடும்பங்களின் சம்பளமில்லா வேலைக்காரிகளாக இந்தப் பெண்கள் வாழ நேர்ந்தது.
கோவில்களில் நாட்டியமாடும் பெண்கள் தேவதாசி என்றழைக்கப்பட்டனர். நாட்டியக்கலையை வளர்த்ததில் இவர்களது பங்கு மிக முக்கியமானது.  கடவுளுக்கே என்று தாங்களாகவே ‘பொட்டு’ கட்டிக் கொள்ளும் இவர்கள் ‘நித்ய சுமங்கலி’ என்று அழைக்கப்பட்டனர். கடவுளுக்கு தாசிகளாக இருந்து, கோவிலின் வருமானத்திலேயே தங்கள் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தனர். கோவில்களின் வருமானம் குறையக் குறைய  இவர்களது நிலையும் சிறிது சிறிதாக மாறி மனிதர்களின் – குறிப்பாக பணம் படைத்த ஆண்களின் – ஆசை நாயகிகளாக மாறும் அவல நிலைக்கு ஆளாகினர். இதனால் சமுதாயத்தில் எந்தவித உயர்ந்த மரியாதையும் இவர்களுக்கு மட்டுமில்லை இவர்களது வாரிசுகளுக்கும் கிடைக்கவில்லை. உயர்ந்த நிலையில் இருந்த இவர்கள் விலைமாது என்கிற பட்டத்தை சுமக்க வேண்டியதாயிற்று.
இந்தியப் பெண்களின் இன்றைய நிலை:
சர்வதேச மகளிர் தினத்தை  (மார்ச் 8, 2013) கொண்டாடும்  நாம் இந்தியப் பெண்களின் இன்றைய நிலையைச் சற்று ஆராயலாம்.
வேற்றுமையில் ஒற்றுமை காணலாம் என்பதற்கு இந்திய நாட்டை உதாரணமாகச் சொல்வார்கள். பெண்களின் நிலையும் இந்தியாவில் முரண்பாடுகள் நிறைந்தது என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் பெண் சிசுக்கொலை நடந்து கொண்டிருக்கும். இன்னொரு புறத்தில் ஏதோ ஒரு வெளிநாட்டில் அழகிப் போட்டிக்காக நம் பெண்கள் நீச்சல் உடையில் போட்டி போட்டுக் கொண்டு  வரிசையில் நின்று சிரித்துக்(!) கொண்டிருப்பார்கள்!
ஒரு பெண் பிரதமர், ஒரு பெண் ஜனாதிபதி, ஒரு பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள்   என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் பெண்களின் நிலை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு பசுமையானதாக இல்லை.
பால்ய விவாகங்கள் நடந்து, பால்ய விதவைகளும் அதிகரித்துக் கொண்டே இருப்பார்கள். வரதட்சணை கொடுமைகள், மரியாதை கொலைகள் என்று எல்லாமே பெண்களின் வாழ்வைத்தான் சூறையாடும் மேற்கண்ட கொடுமைகளை வாய்மூடி பார்க்கும் இந்திய சமூகம், நடிகைகள் தங்களுக்குக் கிடைத்த வாழ்வை முறித்துக் கொண்டு வருவதைப் பார்த்து ‘உச்’ கொட்டும்! இவர்களது பலமுறை மணங்களை செய்தித்தாள்கள் முதல் பக்கத்தில் போட்டு தங்கள் விற்பனையை உயர்த்திக் கொள்ளும்.
பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள் பலர் சமுதாயத்தின் தீ நாக்குகளுக்குப் பயந்து கொண்டு தங்கள் துயரங்களை, அவமானங்களை வெளியில் சொல்லாமல் மறைத்து வைத்து மன அமைதியை தொலைத்துவிட்டு வாழ்ந்து வருகிறார்கள். ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களும், நீதி மன்றங்களும் வாய்மூடி மௌனம் காப்பார்கள்.
மற்ற நாடுகளில் பெண்களின் நிலை என்ன?
ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் பெண்கள் முன்னேறியிருப்பது போலத் தோன்றினாலும் இது மிகவும் சிறுபான்மை தான். மூன்றாவது உலகம் என்று சொல்லப்படும் நாடுகளில் பெண்களின் நிலை இன்னும் பரிதாபத்திற்குரியதாகவே இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் தங்களது தினசரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகவே அதிகப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு ‘பெண்கள் சுதந்திரம், பாலியல் விடுதலை’ என்பது புரியாத, அவர்களுக்கு சம்மந்தப்படாத ஒன்றாகவே இருக்கிறது. இன்னும் பல பெண்களுக்கு ‘கள்’ ளானாலும் கணவன், ‘ஃபுல்’ லானாலும் புருஷன் என்கிற நிலைதான்.
1975 ஆம் ஆண்டு மெக்ஸிகோ நாட்டில் நடந்த சர்வதேச மகளிர் மாநாட்டில் அடித்தட்டுப் பெண்களுக்கும், மேல்வர்க்க பெண்களுக்கும் இடையே பூதாகாரமான இடைவெளி இருப்பது வெட்ட வெளிச்சம் ஆகியது. இந்த அடித்தட்டுப் பெண்களில் பெரும்பாலோர் எழுத்தறிவு இல்லாமலும், போஷாக்கு குறைந்தவர்களாகவும், வளர்ச்சியடையாத கிராமப் பகுதிகளில் இருப்பவர்களாகவும், ஏழைமையிலும், உடல்நலக் குறைவிலும் சிக்கித் தவிப்பவர்களாகவும்  இருக்கிறார்கள்.
பெண் குழந்தை தங்களுக்கு கடன் சுமையை அதிகரிக்கப் பிறந்திருப்பதாகவும், ஆண் குழந்தை தங்களை காப்பாற்றுவான் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள். உணவு, ஆரோக்கியம், படிப்பு என்று எல்லா விஷயத்திலும் இவர்கள் வஞ்சிக்கப்படுகிறார்கள். அடிப்படை உரிமை என்பதுகூட இல்லாமல் பெற்றோர் காட்டும் ஒருவனை மணந்து வாழ்க்கை முழுவதும் அல்லல் படுகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையிலும்கூட வளர்ந்துவரும் நாடுகளான இந்தியா, ஸ்ரீலங்கா முதலிய நாடுகளில் பொறுப்பான அரசியல் பொறுப்புகளை பெண்கள் ஏற்று நடத்தி வருவது ஒரு நல்ல அறிகுறியாகவே தெரிகிறது. இதனால் பெண்கள் சுதந்திரம் என்பது ஒரு மேற்கத்திய மந்திரச்சொல்லாக மட்டுமில்லாமல் வளர்ந்துவரும் நாடுகளிலும் எதிர்காலத்தில் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம்.
images (1)2013 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி பெண்களுக்கான உரிமையை உறுதிப் படுத்தவும், உலகெங்கும் உள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் ஐக்கிய நாடுகள் சபை ‘ஒன் வுமன்’ (One Woman) என்ற ஒரு பாடலை மகளிர் தினத்தன்று வெளியிட இருக்கிறது.
சீனாவிலிருந்து கோஸ்டா ரிக்கா வரையிலும், மாலியிலிருந்து மலேசியா வரையிலும் இருக்கும் புகழ் பெற்ற பாடகர்கள், இசை வித்தகர்கள், பெண்கள், ஆண்கள் எல்லோரும் சேர்ந்து தங்களது ஒற்றுமை, ஐக்கியத்தை பற்றிய ஒரு செய்தியை அறிவிக்க இருக்கிறார்கள்: அந்தச் செய்தி தான் : நாங்கள் எல்லோரும் ஒருவரே என்று சொல்லும் ‘ஒன் வுமன்’ பாடல்.
‘பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அயர்ந்து போகாமல் எதிர்த்து நின்று பிரகாசிப்போம்’ என்பதுதான் இந்த வருட மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகத்திற்கு தெரிவிக்கும்  செய்தி.
மார்ச் 8ஆம் திகதி உலகெங்கும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையிலும் மேட்டுக்குடிப்பெண்கள் மகளிர் தினத்தை குளிர் அறைகளுக்குள்ளும் மண்டபத்திற்குள்ளும் மகளிர் தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
ஆனால் அவர்களின் கண்களுக்கு நெடுந்தீவில் படுகொலை செய்யப்பட்ட மாணவியோ,  அல்லது வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினராலும், அவர்களுடன் இயங்கும் துணை இராணுவ குழுக்களாலும் தினம் தினம் சித்திரவதைகளுக்கும் பாலியல் பலாத்காரங்களுக்கும் கொடுமைகளுக்கும் உள்ளாகும் வன்னிபெண்கள் பற்றியும் படுவான்கரை பெண்களின் முகங்கள்  பற்றியும் தெரியப்போவதில்லை.

Share this article :

+ comments + 1 comments

Anonymous
9 March 2014 at 06:52

super ji

Post a comment
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்