Home » » மோடி திருமணத்தை மறைத்தாரா?

மோடி திருமணத்தை மறைத்தாரா?

Written By DevendraKural on Friday, 25 April 2014 | 14:11

Modi and his wife
ஜசோதாபென் – நரேந்திர மோடி
அர்ப்பணமயமான வாழ்வுக்கு உதாரணங்கள்
இதுநாள் வரை நரேந்திர மோடி திருமணமாகாதவர், பிரம்மச்சாரி என்று கருதப்பட்டவர், வதோதரா தொகுதியில் போட்டியிட  தன்னுடைய வேட்பு மனுவைத் தக்கல் செய்தபோது,  தான் மணமானவர் என்பதையும், மனைவியின் பெயர் யசோதா பென் என்பதையும் சொல்லியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  குறிப்பாக காங்கிரஸ்,  தி.மு.க. ஆகிய கட்சிகளிடையே இந்த விவகாரம், வெறும் வாயை மெல்லுவோர்க்குக் கிடைத்த அவலாகவே பயன்படுத்தப்படுகிறது.
இன்றைய தலைப்பாகப் பேசப்படுகிறது. நாட்டில் நிலவும் ஏராளமான பிரச்னைகளைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், விழுப்புரத்தில் மு.கருணாநிதி தன் அருகில் துணைவியார் ராசாத்தி அம்மாளை (ஒருகாலத்தில் இவரை யார் என்றே தெரியாது என்று சொன்ன புண்ணியவான் தான் கலாகார்) உட்காரவைத்துக் கொண்டு மோடியின் ரகசியம் ஒரு மோடி மஸ்தான் வேலை என்றெல்லாம் கேலி பேசக்கூடிய அளவுக்கு வந்திருக்கிறது. ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை என்றொரு சொல்வழக்கு உண்டு. போகட்டும், இந்தச் செய்தி பற்றிய விவரங்களை ஒரு பத்திரிகை (இந்தியா டுடே) வெளியிட்டிருக்கிறது.
இந்த பிரச்னை குறித்து நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சோமபாய் மோடி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர்கள் குடும்பம் குஜராத்தின் கிராமப் பகுதியில் இருந்த ஒரு ஏழ்மையான குடும்பம் என்றும், அங்கு அவர்களின் வழக்கப்படி நரேந்திர மோடியின் இளம் வயதிலேயே அவருக்கு விவரம் புரிவதற்கு முன்பாக அவர் விருப்பம் இல்லாமலேயே இந்த பெண்ணைத் திருமணம் செய்து வைத்துவிட்டதாகவும், அதன் பின்னர் அவருடைய கவனம் நாட்டு நன்மையைக் கருதித் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டதால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணிபுரிய வீட்டைவிட்டு வெளியேறி பொதுவாழ்வில் ஈடுபட்டுவிட்டதாகவும்,  யசோதா பென் தன் பெற்றோருடன் அவர்கள் வீட்டில் இருந்து கொண்டு கல்வித்துறையில் பணியாற்றிவிட்டு பணிநிறைவு பெற்று தன் சகோதரருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதையெல்லாம் யார் காதில் வாங்கிக் கொள்வார்கள்? கல்யாணம் செய்தாலும் பிரம்மச்சாரியாக வாழ்ந்து வரும் ஒரு உத்தமரைப் பற்றி,  என்னவேண்டுமாயினும் பேசுவதா?
முன்பு சிதம்பரம் ஜெயராமனின் சகோதரியைக் கல்யாணம் செய்துகொண்டு குடித்தனம் செய்தது, அங்கு மு.க.முத்து பிறந்தது,  பிறகு தயாளு அம்மாளுடன் திருமணம்- அவருக்குப் பிள்ளைகள் பிறந்தது,  பின்னர் அவர்கள் எல்லாம் இருக்கும்போதே மூன்றாவதாக துணைவியார் அமைந்தது, அவருக்கு ஒரு பெண் பிறந்தது – போன்ற சுயசைதைகளை மறந்துவிட்டு , மோடியை விமர்சிக்கிறார் கருணாநிதி.
ராசாத்தி அம்மாளுடன் கருணாநிதியின் திருமணம் எந்தக் காலகட்டத்தில் வெளியில் தெரிய வந்தது?  சர்க்காரியா கமிஷனில் யார் இந்த அம்மையார் என்ற கேள்விக்கு “என் மகள் கனிமொழியின் தாயார்” என்று பதிலளித்தவர் அல்லவா கருணாநிதி?
இதையெல்லாம் சுலபமாக மறந்துவிட்டு, ஏதோ விவரம் அறியாத வயதில் நடந்த மோடியின் பால்ய வயது திருமணத்தையும்,  அதில் விருப்பமில்லாமல் வீட்டை விட்டு வெளியேறி ஒரு துறவியைப் போல நாட்டுக்குச் சேவை செய்யும் மோடியையும்  பார்த்து,  மேடையில் தன் அருகில் துணையை அமர்த்திக் கொண்டு, ஆயிரக் கணக்கானவர் முன்னிலையில் கேலி பேசுகிறார் கலையுள்ளம் படைத்த கண்ணதாசனின் நண்பர் (நன்றி: வனவாசம்).
நாட்டு மக்கள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்னாயிற்று? மவுன்ட் ரோடில் டாடா கொடுத்த இடம் என்ன ஆயிற்று? என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்கும் போது,  ‘மோடி சின்ன வயசுல கல்யாணம் பண்ணிட்டாராம், ஆகாகா இதுவரை இதை யாருக்கும் சொல்லலையே, ஏன் இந்த மர்மம்?’  என்றெல்லாம் திண்ணைப் பேச்சு பேசுவது ஒரு தலைவருக்கு அழகாகவா இருக்கிறது? கேவலம்.
நரேந்திர மோடியின் மூத்த சகோதரர் சொல்கிறார்,  இந்தத் திருமணம் நரேந்திர மோடியின் விருப்பமில்லாமல், விவரம் புரியாத வயதில் நடத்தப்பட்டது. அவர்கள் பிறந்த இனத்து வழக்கப்படி குழந்தைத் திருமணம் அந்தக் காலத்தில் நடந்துவிட்டது.  அது விவரம் புரிந்தபின் புதுப்பிக்கப்படவில்லை.  மோடியோ தனக்குத் திருமணம் போன்றவற்றில் ஆர்வம் இல்லை, சுவாமி விவேகானந்தர் காட்டிய வழியில் நாட்டுக்கு உழைப்பதே என் நோக்கம் என்று போய்விட்டார் என்று சொல்லியிருக்கிறார்.
நமக்கெப்படி இவரைப் போன்றவர்களின் நல்ல உள்ளம் புரியப் போகிறது?  பசி ஏப்பக்காரனைப் பார்த்துப் புளிச்ச ஏப்பக்காரன் கேலி பேசுவதைப் போல, விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் செம்மாந்து பேசிய அந்தப் பேச்சையும், அருகில் அமர்ந்திருப்பவரையும் பார்க்கும்போது அட கேடுகெட்ட தமிழ்நாடே, நீ மட்டும்தான் இதுபோன்ற கேவலங்களைச் சகித்துக் கொண்டிருக்க முடியும் என்று கேட்கத் தோன்றியது.
மோடி வேட்புமனு தாக்கல்
மோடி வேட்புமனு தாக்கல்
நரேந்திர மோடி குறித்த இந்த விவரங்களையெல்லாம் பத்திரிகைகளுக்குச் சொன்ன சோமபாய் மோடி, மூத்த குடிமக்களுக்கென்று குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ஓர் இல்லத்தை நடத்திக்கொண்டு மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருப்பவர். இவர் தன்னுடைய அறிக்கையில், குஜராத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் வாழும் எளிய குடும்பத்தின் பின்னணி, பழக்க வழக்கங்கள் பற்றி நன்கு தெரிந்துகொண்டு இந்த விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டுமே தவிர, வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று வாய்க்கு வந்ததை பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் வாழும் சில ஆட்களைப் பார்த்துத் தான் அவர் இந்த விளக்கங்களைச் சொல்லியிருக்க வேண்டும். இங்குள்ளவர்கள் ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வல்லமை படைத்தவர்கள். பகாசுரன் போல இரண்டு லட்சம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டபிறகு,  ஒன்றுமே நடக்காதது போல நடிப்பதில் வல்லவர்கள் என்பதை அவர் தெரிந்து வைத்திருப்பார் போலும்.
இந்த ரகசியத்தை இத்தனை நாள் மூடி வைத்திருந்தாரே மோடி,  ஏன்? என சினிமா வசனம் பேசுகிறார்கள். ஆம், இதற்கு முந்தி என் பிள்ளைக்குத் தாயார் என்றெல்லாம் சொல்லி ஊரை ஏமாற்றவில்லை, நேரடியாக மனைவி  என்று வேட்பு மனுவில் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் எழுதாமல் வெறுமே விட்டிருந்தார். பொய்யா சொன்னார், சிலரைப் போல?
வயது வந்து விவரம் தெரிந்து திருமணம் செய்துகொண்டு அவருடன் வாழ்ந்துவிட்டு, கைகழுவிவிட்டா ஓடினார்? சின்ன வயதிலே பொம்மைத் திருமணம் ஆனபின், அது பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறி ஊருக்கு உழைக்கும் ஒருவரை என்ன சொல்லி கேலி செய்வது? மனசாட்சி உள்ளவர்கள் தங்களை கண்ணாடி முன் நின்றுகொண்டு கேள்வி கேட்டுக் கொள்ள வேண்டும்.
மோடி நாட்டிற்காக தனது வாழ்வை தியாகம் செய்தவர் என்றால், அவரது மனைவி யசோதா பென்னொ, மோடி வற்புறுத்தியும்கூட மறுமணம செய்துகொள்ளாமல் ஒரு துறவி  போல வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெற்ற தாய், சொந்த சகோதரர்களையே கண்டுகொள்ளாத துறவி மனநிலை கொண்ட மோடிக்கு யசோதா பென்னை மறந்தது பெரிய விஷயமல்ல. இப்போதும்கூட, தங்கள் திருமண வாழ்வு  பொம்மைக் கல்யாணம் தான் என்ற போதிலும் அதை வெளியே சொன்னால் பிரச்னை என்று தெரிந்தும்  துணிவுடன் கூறியிருப்பதற்கு காரணம் யசோதா பென் தான்.  மோடியை விஞ்சும் தியாக வாழ்க்கையை  வாழ்ந்திருப்பவர் அவர்தம் மனைவியல்லவா?
இபோதும்கூட, ஒவ்வொரு பாஜக பொதுக்கூட்டத்திலும் மோடி,  தனக்கு யாரும் இல்லை, யாருக்காகவும் நான் செல்வம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவருகிறார்.  யசோதா பென் அவர்தம் மனைவி என்பது எவ்வளவு உண்மையோ, அதேபோல, மோடிக்கு யாரும் துணையில்லை என்பதும் உண்மை அல்லவா?
சில நாட்களாகவே காங்கிரஸிலுள்ள திக்விஜய் சிங் போன்ற சில அரை வேக்காடுகள் மோடி என்னவோ பெரிய இமாலய தவற்றைச் செய்துவிட்டு மறைப்பவரைப் போல சித்தரித்து, இவருக்குத் திருமணம் ஆகிவிட்டது, மனைவி பெயர் எனக்குத் தெரியும் என்றெல்லாம் மார்தட்டிக் கொண்டு சில்லரைத்தனமாக அலைவதைப் பார்த்துவிட்டு,  மோடி நடந்த உண்மைகளை இந்த முறை தெளிவாக உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளார்.  புத்தி உள்ளவர்கள் புரிந்துகொண்டு, அவரையும் அவரது நேர்மையையும் பாராட்டுவார்கள். போற்றுவார் போற்றலும், தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே என்று,  அவர் இங்கு ஊளையிடுபவர்கள் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் வேலையைப் பார்த்துக்கொண்டு போய்விடுவார்.
வம்பர்களும், தம் குற்றங்களைக் காணாமல் அடுத்தவர்களைப் பற்றி வம்புக்கு அலையும் மனிதர்களும் எங்கேயும் உண்டு அல்லவா? 1992இல் இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது. குஜராத்தில்  ‘அபிக்ஞான்’  எனும் வாரப் பத்திரிகை முதன் முதலில் இந்த விவரங்களை வெளியிட்டது. அப்போது கல்வித்துறையில் பணியில் இருந்துகொண்டு தன் சகோதரன் வீட்டில் வசித்து வந்த யசோதா பென்னைக் கண்டு கேட்டதற்கு அவர் சொல்லிவிட்டார், இது முழுக்க தங்கள் சொந்த குடும்பப் பிரச்சனை, இதில் பத்திரிகைகளோ அன்னியர்களோ தலையிட தேவையில்லை என்று சொல்லி, நரேந்திர மோடியின் பணிகள் சிறந்து விளங்க தன்னுடைய வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்திருந்தார்.
இவ்வளவையும் சொன்ன பிறகாவது அக்கப்போருக்கு அலையும் பேர்வழிகள் கெளரவமாக வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன போயிற்று?   ‘போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும்’ கண்டுகொள்ளாத ஸ்திதப்ரக்ஞரை என்ன செய்துவிடும்? கர்மயோகிகளைக் களங்கப்படுத்த காரிருள் மனத்தவர்களால் என்று முடியாது.
***
மோடி பிரதமராக பிரார்த்தனை செய்யும் மனைவி
மேஹ்சானா, ஏப். 12: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காக அவருடைய மனைவி யசோதாபென் விரதமிருந்து பிரார்த்தனை செய்துவருகிறார்.  மோடியை விட்டுப் பிரிந்து வாழ்ந்துவரும் அவர், புனித யாத்திரை செல்லவும் திட்டமிட்டுள்ளார்.
யசோதா பென்
யசோதா பென்
இதுகுறித்து யசோதாபென்னின் சகோதரர் கமலேஷ் கூறியதாவது:
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இந்த நாட்டின் பிரதமராக வேண்டும் என்று யசோதாபென் மனப்பூர்வமாக விரும்புகிறார். மோடியை பிரதமராக பார்க்கும் வரை  ‘அரிசி உணவு சாப்பிடமாட்டேன், காலணி அணியமாட்டேன்’ என்று அவர் உறுதியோடு இருக்கிறார். மேலும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 திருத்தலங்களுக்கு புனித யாத்திரை மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார் என்று கமலேஷ் கூறினார்.
ஓய்வுபெற்ற ஆசிரியையான யசோதாபென் (62), குஜராத் மாநிலம், மேஹ்சானா மாவட்டத்தில் உள்ள ஈஸ்வர்வாடா கிராமத்தில், தனது 2 சகோதரர்களுடன் வசித்து வருகிறார். மிகுந்த கடவுள் பக்தி கொண்ட யசோதாபென் தினமும் அதிகாலையில் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தினமும் செய்தித்தாள்கள் படிக்கும், தொலைக்காட்சி பார்க்கும் பழக்கம் கொண்டுள்ள அவர், மோடியைப் பற்றிய செய்திகளை ஆர்வத்துடன் தெரிந்து கொள்கிறார். “யாரையும் எதிர்த்துப் பேசாத சுபாவம் கொண்ட ஜசோதாபென், மோடியைப் பற்றி யாராவது தவறாக விமர்சனம் செய்தால் கோபமாகி விடுகிறார்” என்கிறார் அவரது சகோதரர் கமலேஷ்.
திருமண வாழ்க்கை: குடும்பத்தில் 4 குழந்தைகளில் மூத்தவராக பிறந்த யசோதாபென்னுக்கு 17ஆவது வயதில், 1968ஆம் ஆண்டு நரேந்திர மோடியுடன் திருமணம் நடைபெற்றது.
தனது திருமண வாழ்க்கை குறித்து குஜராத் மாநிலத்தில் வெளியாகும் வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் இருவரும் மிகக் குறுகிய காலமே சேர்ந்து வாழ்ந்தோம். திருமணம் நடைபெற்றவுடனே ஆசிரியர் பயிற்சியில் நான் சேர விரும்பியதால் அதற்கு ஊக்கமளித்த மோடி, ஆர்.எஸ்.எஸ் இயக்க பிரசாரகர் ஆவதற்காக என்னை விட்டுப் பிரிந்து சென்றார்” என்று கூறினார்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்