Home » » இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை !

இப்போது இல்லையென்றால் எப்போதுமில்லை !

Written By DevendraKural on Sunday, 15 February 2015 | 11:44

2195237_ambedkar_periyar

சமூக சமநிலை, பொருளாதார சமநிலை என்று இருக்க வேண்டிய நமது அரசியல், கெடுவாய்ப்பாக வெகுமக்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் தத்தமது   பொருளாதாரத் தேவைகளை மட்டுமே நோக்கியதாக அமைத்துக் கொள்ளப்படுகிறது, அமைந்துவிடுகிறது. அதிகாரவர்க்கம் இவர்களை அத்தேவைகளை நோக்கிய ஓட்டத்திலிருந்து விலகிவிடாமல் இருக்க அனைத்தையும் செய்துகொண்டே இருக்கிறது. இந்துத்துவமும், பார்ப்பனியமும் எக்காரணங்களுக்காக இம்மண்ணிலிருந்து விரட்டியடிக்கபட்டதோ, அக்காரணங்களும் அச்சமூகப் புரட்சியின் தேவையும் இன்னும் நீடிக்கும் நிலையில், இதோ அதே இந்துத்துவமும், பார்ப்பனியமும் அரசியல் இயக்கமாக, காவியும் காக்கியுமாக பரிவாரங்களுடன் அணிவகுத்து பெரியார் மண்ணைக் கொள்ளை கொள்ள வந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு வரலாற்றில் பல நெருக்கடிகளை நாம் கடந்து வந்திருந்தாலும் இப்பொது இந்துத்துவ ஆக்கிரமிப்பு வடிவில் நாம் சந்தித்துக் கொண்டிருப்பது மீண்டு வர இயலாத ஒரு நெருக்கடி. இதிலிருந்து மீள்வது என்பது நமக்கான அரசியலை நாம் மீட்டெடுப்பதாகவே அமையும்.

பலநூறு ஆண்டுகளாய் புரையோடிய, அழுகிய ஆறாப் புண்ணாகிய, இந்துத்துவத்தின் மூலக்கூறுகளான, சாதியையும் அதன் படிநிலைகளையும் காயங்களூடே அறுத்தெறிந்த பெரியாரையும், அம்பேத்கரையும் நினைவில் நிறுத்துவதும்,அவர்களின் அரசியலை முன்னெடுப்பதுமே பாசிச ஆற்றல்களுக்கு எதிரான நமது வெற்றியாக அமையும். இந்தியாவின் விடுதலைக்குப் பின்னான ஐம்பது ஆண்டுகளில் இவர்களிருவரின் அயராத உழைப்பும், ஓயாத போராட்டமும் தான் நம்மை நமதுப் பொருளாதார, சமூக வாழ்வில் வெற்றியடைய வைத்திருக்கிறது. அதன் பலனே வெள்ளையர்களுக்குப் பின் அனைத்து அரச அதிகாரங்களிலும், ஆட்சி அலுவலகங்களிலும் இருந்த பார்ப்பனர்களின்விகிதம் குறைந்து, பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும், சிறுபான்மையினர்களும் அந்த இடங்களை நிரப்ப முடிந்தது.
இன்று இந்த மூன்றாவது தலைமுறையானது பகட்டான உடையுடன் தகவல் தொழில்நுட்ப அலுவலகங்களுக்குச் செல்வது அப்போரட்டத்தின் எச்சமே. நாம் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பதும், நமது இவ்வெற்றிக்காக தம் வாழ்நாள் முழுவதும்உழைத்த அண்ணலையும், பெரியாரையும் மறப்பதும் ஒன்றே. அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்படவேண்டிய பெரியார் அரசியலின் தேவை இன்னும் இருப்பதை மறுக்கயியலாது. காரணம் அவரின் சமூகப் புரட்சியை நாம் நமது பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் ஒரு வாய்ப்பாக மட்டும் தன்னல நோக்குடன் பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து நமது சாதிய அடுக்கு நிலைகளைப் பற்றிக்கொண்டும், ஆதிக்கச் சாதியாய் பெருமைப்பட்டுக் கொண்டும் (அமெரிக்கா, ஐரோப்பாவிற்குச் சென்று வந்தாலும் ஆண்ட சாதியாகவும், ஆதிக்கச்சாதியாகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்பவர்களை த.தொ.அலுவலகங்களில் காணமுடியும்) இருப்பது, நாம் இந்த இருவரையும் தோல்வியுறச் செய்கிறோம் என்பதைத் தற்திறனாய்வோடு ஒப்புக்கொள்ளவேண்டும். இத்தோல்வி அவர்களின் கொள்கைக்கானதல்ல, நமது இருப்புக்கானது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்கு “நான் யாருக்கும் அடிமையில்லை, எனக்கு அடிமை யாருமில்லை” என்ற அண்ணலின் வாக்கு நினைவு கூறத்தக்கது. எந்தத் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் இழிநிலையை மறுக்கக்கோரி மூத்திரப்பையோடு இறுதி மூச்சுவரை பெரியார் போராடினாரோ, அவர்களே இன்று தங்கள் சாதியை மறுப்பதற்குப் பதிலாய் மறைத்துக்கொண்டு, சமூகப் புரட்சியின் பலனாய்த் தமது பொருளாதார நிலையை மேம்படுத்த மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் ஓடிகொண்டிருக்கின்றார்கள்.
sanskitpolicy
இப்பொழுதும் நாம் தன்ன்ல நோக்கோடு சாதியைத் தூக்கிகொண்டோ, இவர்கள் கொள்கைகளைப் புரிந்துகொள்ளாது மறுத்துவிட்டோ, மறந்துவிட்டோ கடந்து செல்வோமானால் நமது இருப்பு வினாக்குறியாக்கப்படும். குறிப்பாக இடைநிலைச்சாதியான பிற்படுத்தப்பட்ட (பெரும்பான்மை) மக்களிடம் “வளர்ச்சி, வளர்ச்சி” என்றும் “ஊழல், ஊழல்” என்றும் “மாற்று அரசியல்” என்றும் கூவிக்கொண்டு காவிகள் ஊடுருவுவதைக் காணமுடிகிறது. ஊழல் மிகுந்த திராவிட இயக்கங்களுக்கு மாற்று பாசிச இந்துத்துவா அரசியல் அல்ல என்பதை நாம் தெளிவுப்படுத்திக் கொள்ளவேண்டும். பார்ப்பன, இந்துத்துவ நலம்பேணும் பா.ச.க. வெறும் காற்று ஊதப்பட்ட காற்றுப்பையாகப் பெருத்து, வளர்ச்சிக்கான எந்த மாற்றுத்திட்டங்களும் இல்லாது வெறும் இந்து, இந்தி, இந்தியா என்று நமக்கு எதிரானக் கருத்துகளைக் கூறி அவற்றை நமது பேசுபொருளாக்கி, திரைமறைவில் உலக முதலாளிகளின் கைக்கூலிகளாக அவர்களுக்கான அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறது.
 ஊழல் மிகுந்த காங்கிரசின் மாற்று தாங்கள் தான் என்று சொல்லிக்கொண்டு ஆட்சியைப் பிடித்த பா.ச.க. அரசு, காங்கிரசு ஆட்சியில் தாம் எதிர்த்த, மக்கள் நலனுக்கு எதிரான அனைத்துத் திட்டங்களையும் கடந்த ஆறு திங்களாக திணித்துக் கொண்டிருக்கிறது. வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் வளர்ச்சி எனும் மாயையைக் (காவியை) கரியாக நம் கைகளில் திணித்து நம் முகங்களில் பூசிக்கொள்ளத் தூண்டி,பின்னாலிருந்து பல்லிளிக்கிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின்னான பண்பாட்டு வளர்ச்சியில் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் சார்பான அரசியல் முன்னெடுக்கப்பட்டது. அதுவே  காங்கிரசு, மற்ற அனைத்து இந்திய கட்சிகளின் கொள்கையாக இருந்தது. தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறுபான்மையினர் நலத்தை முதன்மையாகக் கொண்டு இயங்கியது (பின்னாளில் வாக்கு அரசியலாக மாறிவிட்டது). நம் குடும்பத்திலோ, நண்பர்களிலோ ஒருவர் உடல்நலம் குன்றியோ, வலிமை குறைந்தவராகவோ இருக்கும் போது அவரது பணிகளை நாம் பகிர்ந்தோ, அவரது வேலைப் பளுவைக் குறைத்தோ நாம் உதவி செய்வோம், இதுதான் இயற்கையான உளநிலை. இப்படித்தான் நாம் சிறுபான்மையினர் நலத்தைப் பண்பாட்டுடன் கையாள்கிறோம். ஆனால் தன்னைத் தூய்மையின் வடிவமாக முன்னிறுத்திக்கொள்கிற இந்துத்துவம், இயற்கைக்கு எதிரானபண்பாடற்ற முறையில் சிறுபான்மையினர் நலத்தைப் புறந்தள்ளுகிறது. இன்று ‘இந்தியா இந்துகளுக்கான நாடு’ என்று பெரும்பான்மைவாத அரசியல் பேசி சிறுபான்மையினர் மீதான வெறுப்பரசியலை வளர்கிறது.
சிங்கள பௌத்தப் பேரினவாதம் எப்படி சிங்களப் பெரும்பான்மை மக்களிடையே தமிழர்கள் மீதான வெறுப்பரசியலை இனவெறியாக வளர்த்தெடுத்து இனவழிப்பை நிகழ்த்தியதோ, அதே வகையான இனவழிப்பை குசராத்தில் இந்த்துத்துவம் செய்ததை நாம் கண்டோம், தமிழகத்திலும் இப்படியான வெறுப்பரசியலின் முன்னோட்டத்தை தர்மபுரியில் கண்டோம். பா.ச.க.வின் மதவாதத்தை ஏற்றுகொண்ட தமிழக சாதியக் கட்சிகள், அதன் ஆளும் அதிகாரத் துணையுடன் எதையும் செய்ய ஆயத்தமாக உள்ளன. அதன் முதல் படிதான் திராவிட அரசியல் காலவதியானது என்பதும், தேவையற்றது என்பதும். இப்படியான இக்கட்டான சூழலில் நாம் பெரியாரை வெறும் கடவுள் மறுப்பாளராகவும்,அம்பேத்கரை வெறும் தலித் தலைவராகவும் முன்னிறுத்தும் கயமைகளை வீழ்த்தி, நமக்கான இவர்களின் போராட்டங்களை நினைவில் நிறுத்தி சிந்தித்தாலொழிய நம்மால் நமக்கான அரசியலையும் சமூக உரிமையையும் வென்றெடுக்க முடியாது.
எப்போதும் இல்லாத வீரியத்துடன் இந்துத்துவமும், பார்ப்பனியமும் தமிழகத்தில் காலூன்ற முயன்று கொண்டிருகிறது என்பதை நாம் உணர்ந்து செயல்படவேண்டும். ஏனென்றால் இப்பொது இல்லையேன்றால், நாம் மீண்டு வர எப்போது வாய்ப்பு கிட்டும் என்று சொல்வதற்கில்லை.
—–தோழர்.கிருபாகரன் – இளந்தமிழகம் இயக்கம்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்