Home » » 10 மாதத்தில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்!

10 மாதத்தில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்!

Written By DevendraKural on Saturday, 21 March 2015 | 06:31

''தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த உயர் போலீஸ் அதிகாரிகளை திடீரென மாற்றியிருக்கிறார்களே? என்னவாம்?'
''கடந்த சில மாதங்களில் தூத்துக்குடியிலும் நெல்லையிலும் நடந்த படுகொலைகள் நூற்றுக்கும் மேல்! ஸ்ரீவைகுண்டத்தில் புதிய தமிழகம் கட்சி நிர்வாகி பாஸ்கர் கொலை விவகாரம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை உண்டாக்கிவிட்டது. இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய வி.ஐ.பி-கள் யாரும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரவே பயந்து கிடந்தனர். பாணங்குளத்தில் ஹோட்டல் உரிமையாளர், வள்ளியூரில் கல்லூரி மாணவர், தச்சநல்லூரில் ஆட்டோ டிரைவர் ஆகியோர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியைப் பார்த்தால் அவர்களுக்கும் கொலையாளிகளுக்கும் எந்த மோட்டிவும் இல்லை. ஏரியாவில் தங்களைப் பற்றிய பீதி மக்களிடத்தில் இருக்கவேண்டும் என்பதற்காகவே சர்வசாதரணமாய் இந்த அப்பாவிகளைக் கொடூரமான முறையில் கொன்று போட்டுப்போனது தெரியவந்ததாம்!'
''போலீஸ் மீது பயம் போய்விட்டது என்று சொல்லும்!'
''நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களின் டி.ஐ.ஜி பதவி மற்றும் நெல்லை மாநகர கமிஷனர் பதவி இரண்டையும் சேர்த்து கவனித்து வந்தவர் ஸ்மித் சரண். இந்த மாவட்டங்களில்தான் கொலை சம்பவங்கள் அதிகம் நடந்துகொண்டிருந்தன. ஸ்மித் சரண் பொதுவாக அதிகம் வெளியே தலைகாட்டமாட்டார். இருந்த இடத்தில் இருந்தே கீழ்மட்ட அதிகாரிகள் சொல்வதைக் கேட்டுவந்தார் என்று கூறப்படுகிறது. நெல்லை எஸ்.பியாக இருந்த நரேந்திரன் நாயர், கீழ் மாவட்ட அதிகாரிகளிடம் சரிவர வேலை வாங்கத்தெரியவில்லை என்கிறார்கள். தூத்துக்குடி எஸ்.பி துரை... முக்கியமான பிரச்னைகளில் சரிவர செயல்படவில்லை என்று புகார். இந்த மூவரைப்பற்றி சமீபத்தில் நெல்லைக்கு விசிட் வந்த தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு கூடுதல் டி.ஜி.பியான ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர்களே சொல்லி ஆதங்கப்பட்டனர். விரைவில் எல்லாம் சரியாகும் என்று சொல்லிவிட்டு வந்தாராம். அதன் பிறகுதான் அவர்களுக்கு டிரான்ஸ்ஃபர்.!''
''உயர் அதிகாரிகளை மட்டும் மாற்றினால், நிலைமை சரியாகிவிடுமா?'

''உளவுத் துறை ஐ.ஜியான கண்ணப்பன், நெல்லை சரகத்தில் அதிக காலம் பணியில் இருந்தவர். அங்கே நிலவும் பல்ஸ் நன்றாகவே தெரியும். போலீஸ் துறையின் கீழ்மட்டத்தில் இருக்கும் சிலர் சாதி ரீதியாக ஆர்வம் காட்டுவதும்கூட வன்முறைச் சம்பவங்கள் நடக்க ஒரு காரணம். உதாரணத்துக்கு, சமூக ஆர்வலரான ஒரு வக்கீல் வன்முறைச் சம்பவத்தை மேற்கோள்காட்டி, 'அந்த தாதாவின் கையை ஒடிச்சுப்போடுங்க’ என்று சொன்னாராம். அடுத்த சில நாட்களில் அந்த வக்கீலின் நண்பரை சந்தித்த தாதா, 'என் மீது ஏன் இப்படி அவர் கோபத்தை காட்டுகிறார். அவருக்கு நான் என்ன துரோகம் பண்ணினேன்’ என்று அன்பாக எச்சரிக்கை விடுத்தாராம். இதைக் கேட்ட வக்கீல் ஆடிப்போய்விட்டாராம். போலீஸுக்கும் தாதாவுக்கும் எந்த அளவுக்கு நெட்வொர்க் சரியாக இயங்குகிறது என்கிற தகவல் கண்ணப்பனுக்கு உடனே போனதாம். இதையடுத்து, சாதிப் பாசத்துடன் பழகும்  கீழ்மட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கூடிய விரைவில் தென் மாவட்டங்களில் பெரிய அளவில் மாற்றம் இருக்கும் என டி.ஜி.பி ஆபீஸ் வட்டாரத்தில் பேச்சு!'
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்