Home » » லீ’டர்…!இப்படியொரு தலைவர் இந்த மண்ணில் சாத்தியமா?

லீ’டர்…!இப்படியொரு தலைவர் இந்த மண்ணில் சாத்தியமா?

Written By DevendraKural on Sunday, 29 March 2015 | 03:54

லகத்தையே தன் நாட்டை நோக்கித்திரும்பிப் பார்க்க வைத்த தலைவர் அவர். ஆனாலும் அவரது சொந்த நாட்டில் அவர் பேசியதைக்கேட்டபோது ஆரம்பத்தில் பலரும் கேலியாக சிரிக்கத்தான் செய்தார்கள். 

“உம்மென்று இருக்காதீங்க. எப்போதும் சிரிச்ச முகமா இருங்க. நல்லா இங்கிலீஷ் பேசக் கத்துக்குங்க. கக்கூஸ்களை சுத்தப்படுத்தி வச்சிக்குங்க. அப்புறம், ரோட்டில் எச்சில் துப்பாதீங்க. சூயிங்கத்தை மென்று கண்ட இடங்களில் துப்பாதீங்க. மாடியிலிருந்து குப்பை கொட்டாதீங்க”– இப்படி அவர் சொன்னதற்குத் தான் சிரித்தார்கள். அவர் கவலைப் படவில்லை. தன் நிலையில் உறுதியாக இருந்தார். தான் நினைத்ததை நிறைவேற்றி வெற்றிப் புன்னகையை வெளிப்படுத்தும் காலம் நிச்சயம் வரும் என்று நம்பினார். அதற்கேற்றபடி செயல்பட்டார். குப்பை நிறைந்த குடிசைப் பகுதிகளிலும் தெருக்களிலும் அவரே துடைப்பம் எடுத்துப் பெருக்கினார். அவரது நம்பிக்கை சில ஆண்டுகளிலேயே நிறைவேறியது.
உலக நாடுகள் பலவும் அந்த நாட்டைப் போல நம் நாடு சுத்தமாக வேண்டும். அதுபோல நம் நாடு வேகமாக வளரவேண்டும். சாலைகளும் பாலங்களும் கட்டடங்களும் அந்த நாடு போல அமைய வேண்டும். வணிகத்துறையில் அதுபோலஉயரவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டுக்குக் கிடைத்தது போல ஒரு தலைவர் நமக்குக் கிடைக்க வேண்டும் என விரும்பியது. நினைத்ததை சாதித்த வெற்றிப் பெருமிதத்துடன் புன்னகைத்தார் அவர்.


அந்தஅவர்… சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ  குவான் யூ.


91 வயதில் 23-3-2015 அன்று லீ குவான் யூ இறந்தபோது, முதுமையில் ஏற்படக்கூடிய இயற்கையான மரணம் தானே என்று சிங்கப்பூர்வாசிகள் நினைக்கவில்லை. தங்களின் ஒப்பற்ற தலைவர் இனி திரும்ப முடியாத இடத்திற்குப் போய்விட்டாரே என்று தான் கலங்கினார்கள். கண்ணீர் விட்டார்கள். சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் தங்கள் குடும்பத்தில் ஒருவரை இழந்த துயரத்தில் இருந்தனர். அவர்களின் உறவினர்கள் பலர் வாழும் தமிழகத்தின் தஞ்சை-திருவாரூர்-நாகை மாவட்டங்களில் ‘இமயம் சரிந்தது’ என்ற துயர பதாகைகள் லீ குவான் யூ படத்துடன் பல இடங்களிலும் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். (அவர்களில் பலரும் முன்பு சிங்கப்பூரில் வேலை பார்த்து  சொந்த மண்ணுக்குத் திரும்பியவர்கள்)

சிங்கப்பூரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் நண்பர் ஒருவர், “பிரதமராக இருந்த அவருக்கு என்ன சட்டமோ, என்னைப் போன்ற சாதாரணமானவர்களுக்கும் அதே சட்டம்தான். வேறுபாடு எதுவும் கிடையாது. மிகப்பெரிய ஜனநாயக நாடுன்னு சொல்லிக்கிற நம்ம இந்தியாவில் இப்படி கற்பனை செய்தாவது பார்க்க முடியுமா?” என்றார் வேதனையும் ஆதங்கமுமாக. சிங்கப்பூர் மண்ணில் தமிழ் மொழிக்கும் தமிழர்களுக்கும் லீ குவான்யூ தந்த முக்கியத்துவம் பற்றிய செய்திகள்  தொலைக்காட்சிகளிலும் இணையதளங்களிலும் பத்திரிகைகளிலும் வெளியாகிக் கொண்டிருக்க, ”அவரைப் போல நமக்கு ஒரு தலைவர் எப்போது கிடைப்பார்? நம் நாடு எப்போது சிங்கப்பூரைப் போல மாறும்?” என்று இங்குள்ள பலரும் தங்கள் ஏக்கத்தை வெளிப்படுத்தத்  தொடங்கி விட்டார்கள்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள போதும் தமிழ் மொழிக்கு ஆட்சி மொழித் தகுதி கிடைக்கவில்லை. உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தமிழ் அமைய வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பிறகும் ஆண்டுக்கணக்கில் அது நாடாளுமன்றத்திலும் ஜனாதிபதி மாளிகையிலும் தூங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சிங்கப்பூரின் ஆட்சி நிர்வாகத்தில் தமிழுக்குரிய உரிமைகளை லீ வழங்கினார். அங்குள்ள அரசு வானொலி, தொலைக்காட்சிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் தந்தார். நாட்டை முன்னேற்றும் தனது இலட்சியத்திற்குத் துணை நின்றதில் தமிழர்களின் பங்கு முக்கியமானது என்பதை அவர் மறக்கவில்லை. அதுபோலவே சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு உதவிய மற்ற நாட்டவர்களுக்கும் லீ மதிப்பளித்தார்.

ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நடத்திய கொடுந்தாக்கு தலைத் தடுத்து நிறுத்தும்படி அன்றைய இந்திய அரசிடம் தமிழகக் கட்சிகள் வலியுறுத்தியபோதும் அது அசைந்து கொடுக்கவில்லை. இப்போதுள்ள இந்திய அரசும் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே உள்ளது. போரின் போது இலங்கையில் நடந்த இனப்படுகொலையையும் மனித உரிமை மீறல்களையும் இன்றுவரை இந்தியா புறந்தள்ளியே வருகிறது. ஆனால் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த லீ, ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார். “அறிவுக்கூர்மையும் உழைப்பும் நிறைந்த ஈழத்தமிழர்களின் வளர்ச்சி கண்டு சிங்களர்கள் பொறாமைப்படுவதன் விளைவுதான் இலங்கையில் உள்ள நிலைமைகளுக்குக் காரணம்” என்று சொன்னதுடன், இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சேவின் சர்வாதிகாரப் போக்கையும் வன்மையாகக் கண்டித்தார். தமிழர்களுக்கு ஏற்பட்ட தோல்வி நிரந்தரமல்ல என்றும் அதிலிருந்து அவர்கள் மீண்டுவருவார்கள் என்றும் தெரிவித்தார்.

        லீயின் மூதாதையர்கள் சீனாவைப் பூர்வீகமாகக் கொண்ட நடுத்தர  குடும்பத்தினர். சிங்கப்பூரில் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் நாள் லீ பிறந்தார். 1954ஆம் ஆண்டில் மக்கள் செயல்பாட்டுக் கட்சியைத் (People’s Action Party  PAP) தன்னைப் போன்ற ஆங்கிலமறிந்த நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுர்களுடன் சேர்ந்து தொடங்கினார். கம்யூனிச ஆதரவு தொழிற்சங்கங்களுடன் இணைந்து செயல்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்த சிங்கப்பூரில் 1959ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் லீயின் மக்கள் செயல்பாட்டுக் கட்சி அமோக வெற்றி பெற்றதையடுத்து அந்நாட்டுக்கு சுயாட்சி கிடைத்தது. சிங்கப்பூரின் முதல் பிரதமரானார் லீ குவான் யூ..

         “கடலில் உள்ள பெரிய மீன்கள் சின்ன மீன்களை விழுங்கிவிடும். சின்ன மீன்களோ இறால் போன்றவற்றை விழுங்கும். உலக நாடுகளின் நிலையும் இதுதான். சின்ன நாடுகளின் பாதுகாப்புக்கான சர்வதேசசட்டம் எதுவும் இல்லாத நிலையில், சிங்கப்பூர் போன்ற சின்ன நாடு தனித்து செயல்பட்டு வளர்ச்சியடைய முடியாது” என நினைத்தார் லீ. மலேயா, சிங்கப்பூர், வட புருனே ஆகியவை இணைந்தமலேசியா கூட்டமைப்பு 1963ல் உருவாக்கப்பட்டது. ஆனால், லீ நினைத்த வளர்ச்சியை சிங்கப்பூர்பெற முடியவில்லை. அதனால் வருத்தத்துடன் மலேசியா கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் தீர்மானத்தை தனது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது சிங்கப்பூர்.

1965ல் சிங்கப்பூர் இறையாண்மை மிக்க குடியரசு நாடானது. அதிலிருந்து கடந்த 50 ஆண்டுகளில் வணிகத்திலும் அதற்கான உள்கட்டமைப்புகளிலும், மக்கள் வசதிக்கான அடிப்படைக் கட்டமைப்புகளிலும், சுற்றுலாத்துறையிலும் சிங்கப்பூர் பெற்ற மகத்தான வளர்ச்சியையும் அதன் பொருளாதார வளத்தையும் தான் உலக நாடுகள் ஆச்சரியத்தோடு பார்க்கின்றன. இந்தியர்களின் பார்வையும் அப்படித்தான் இருக்கிறது. அதே நேரத்தில், இந்தியாவைப் பற்றிய லீயின் பார்வை எப்படிப்பட்டது?
“உண்மையில் இந்தியா ஒற்றை நாடு அல்ல. 32 தனித்தனி நாடுகளை பிரிட்டிஷார் போட்ட ரயில் பாதை ஒன்றிணைத்து வைத்திருக்கிறது” என்பதே இந்தியா பற்றிய லீயின் பார்வை. நம் நாட்டிலுள்ள சாதிப்பிரிவுகள், மொழி  வேறுபாடு, பரப்பளவு, பன்முகத்தன்மை பற்றியும்லீ அறிந்திருந்தார். இந்திய ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் தலைமையும் அதன் கீழான நிர்வாகமும் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன என்பது லீயின் கருத்து. இந்திரா காந்தி கொண்டு வந்த எமர்ஜென்சியை ஜனநாயகப் படுகொலை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.லீ அதனை இந்தியாவில் ஒழுங்கைக் கொண்டு வர இந்திரா எடுத்த முயற்சியாகப் பார்த்தார். ஜனநாயகம்-சுதந்திரம் என்ற பெயரில் பொறுப்பற்றத்தனம் வளர்வதை லீ விரும்பியதில்லை. அதனை சிங்கப்பூரில் அவர் அனுமதித்ததும் இல்லை.

கருத்துசுதந்திரம், ஊடக செயல்பாடு, எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகள் ஆகியவற்றின் மீது அவர்கட்டுப்பாடுகளை விதித்தார். மக்களின் வசதிக்காகத் தான் சட்டங்கள் என்பதைவிட சட்டத்தை முறையாக செயல்படுத்தினால் தான் மக்கள் நலனுக்கானத் திட்டங்களை செயல்படுத்தி நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்பதில் லீ உறுதியாக இருந்தார். சாலையில் குப்பை போட்டால் அபராதம் என்பதில் தொடங்கி குற்றங்களுக்கானக் கடுமையான தண்டனை வரை அனைத்தையும் அவரது ஆட்சி தயவு தாட்சண்யமின்றி நடைமுறைப்படுத்தியது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை சிங்கப்பூர் அரசு நிலைநிறுத்தியது. சிங்கப்பூர் மாடல் என்பது இந்திய மாடலுக்கு முற்றிலும் மாறுபட்டது. இங்கே பொடா, தடா சட்டங்கள் ஆள்வோர்களால் எப்படி செயல்படுத்தப்பட்டன என்பதைமறக்க முடியாது.


அரசியல் கட்சியில் சேரும் பொழுதே இன்னின்ன பதவிகளைப் பெற்று இத்தனை ஆண்டுகளில் இந்தளவு சம்பாதித்துவிடலாம் என்ற கணக்குடன் தான் இந்தியாவில் பலரும் செயல்படுகிறார்கள். லீ தனது கட்சிக்காரர்கள் எப்படி மக்கள் நலப் பணிகளில் செயல்படுகிறார்கள் கவனித்து அதன் பின் பொறுப்புகளை வழங்கினார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என ஒவ்வொரு கட்டத் தேர்வின் போதும் அவர் கவனமாக இருந்தார். அதனால் தான் ஆசியக் கண்டத்திலேயே ஊழல் குறைவான நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர்சிறப்பு பெற்றிருக்கிறது.

31 ஆண்டுகள் தொடர்ச்சியாக பிரதமர் பதவியில் இருந்த லீ, தனது முதுமையின் காரணமாக பதவி விலகினார். பின்னர், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும், அடுத்த தலைமுறைக்கு வழிவிட்டு ஒதுங்கினார். இப்போது சிங்கப்பூரின் பிரதமராக இருப்பவர் லீயின் மகன் லீ சின் லூங் (Lee Hsien Loong). குடும்பத்தினரில் வேறு சிலரும் பொறுப்புகளில் இருக்கிறார்கள். ஆனால் அவரவரும் அதற்குரிய தகுதிகளோடும் அனுபவங்களோடும் ஆண்டுக்கணக்கானப் பயிற்சிகளுக்குப் பிறகு அந்த இடங்களை அடைந்துள்ளனர். லீயினால் சிங்கப்பூர் அடைந்த வளர்ச்சி எல்லோராலும் பாராட்டப்படும் அதேவேளையில், அவரது அரசியல்-நிர்வாகக் கொள்கைகள் உலகத்தின் பார்வையில் பாராட்டுகளையும் விமர்சனங்களையும் கலந்தே பெற்று வந்தன.   


தமிழகத்தில் உள்ள மக்கள் தொகையைவிட குறைவான எண்ணிக்கையில் மக்கள் உள்ள சிங்கப்பூர் போன்ற சிறியநாட்டில் ஏறத்தாழ ஒற்றையாட்சி முறையிலான சர்வாதிகாரம் தொனிக்கும் ஜனநாயகத் தன்மை கொண்ட நிர்வாகத்தால் எதிர்பார்த்த வளர்ச்சியையும் அதற்கு மேலேயும் அடைய முடியும். இந்தியா போன்ற 120 கோடி மக்கள் தொகை கொண்ட  பல்வேறு தேசிய இனங்களும் மதத்தவரும் வாழும் நாட்டை சிங்கப்பூர் ஆக்குவது அத்தனை எளிதல்ல. முழுமையான சர்வாதிகார ஆட்சியில் வேண்டுமானால் அது சாத்தியமாகலாம். ஆனால், அப்படியொரு சர்வாதிகாரம் உருவானால் இந்தியா ஒரே நாடாக இருக்குமா, லீ சொன்னது போல பிரிட்டிஷாரின் ரயில் தண்டவாளத்தால் இணைக்கப்பட்ட 32 நாடுகளும் தனித்தனியாகுமா என்பதும் சிந்திக்க வேண்டியதாகும்.

ஒருவேளை, 32 தனித்தனி நாடுகளில் ஒன்றாக தமிழகம் உருவானால், இங்கே ஒரு  லீ கிடைப்பாரா? ஓட்டுக்குப் பணம், சட்டத்தை மதிக்காமல் அதில்  உள்ள சந்து பொந்துகளை மட்டுமே பயன்படுத்துதல், உள்ளொன்று வைத்து  புறமொன்று செயல்படுதல், போலித்தனமான நடத்தைகள், லஞ்ச-ஊழலுக்கு நியாயம் கற்பித்தல்,  இவையனைத்தும் தலைமைகளிடம் மட்டுமின்றி மக்களின் மனநிலையிலும் நிறைந்துள்ள  மண்ணில்  ஒரு லீ குவான் யூ உருவாக வேண்டிய கட்டாயம் நிறையவே உள்ளது. ஆனால், அந்த லீ தமிழகத்தை சிங்கப்பூராக மாற்றுவாரா அல்லது இங்குள்ள அரசியல் சூழலும் மக்களின் மனநிலையும் லீயை மாற்றிவிடுமா என்பதைத்தான் கணிக்க முடியவில்லை. எதையும் முன்கூட்டியே கணித்து ஒரு முடிவு செய்துவிடாதீர்கள் என்பதும் சிங்கப்பூரின் முதல் பிரதமரான லீயின் கூற்று.

“ஒரு மனிதனின் சவப்பெட்டி மீது ஆணி அடிக்கப்படும்வரை அவனைப் பற்றிய இறுதி முடிவுக்கு வராதீர்கள். சவப்பெட்டி மூடப்பட்ட பிறகு முடிவு செய்யுங்கள். அதன் பின் அந்த மனிதனை மதிப்பீடு செய்யுங்கள். என்னுடைய சவப்பெட்டி மூடப்படுவதற்கு முன்னால் நான்கூட ஏதேனும் முட்டாள்த்தனமான காரியத்தை செய்யக்கூடும்” – லீ குவான் யூ.

(தகவல் உதவி- The New York Times, The Guardian, The Hindu, The Times of India, Reuters)
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்