Home » » செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி

Written By DevendraKural on Tuesday, 7 April 2015 | 12:33

செம்மர கடத்தலை தடுக்க துப்பாக்கிச் சூடு...திடுக்கிடும் பின்னணி தகவல்கள்!
லக அளவில் வனவளம் வெகுவாகக் குறைந்துவிட்ட சூழலில்,  செம்மரம் மட்டுமல்ல எந்த மரமாக இருந்தாலும் அவை வெட்டப்படுவதைத் தடுக்கவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரத்தில் மரங்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடந்துள்ள துப்பாக்கிச் சூடும், இதில் 12 தமிழக தொழிலாளர்கள் உட்பட 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவமும் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
வானுயர்ந்து வளர்ந்து நிற்கும் செம்மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுக்க, ஆந்திர போலீசார் துப்பாக்கிச் சூடு  நடத்தி அப்பாவித் தமிழக  தொழிலாளர்களை கொன்று குவித்து இது முதன்முறையல்ல. இதனால் சேஷாசலம் காடு தமிழர்களின் சுடுகாடாக மாறியுள்ளது.அந்த அளவிற்கு கண்மூடித்தனமாக துப்பாக்கி தர்பார் நடத்தி வருகிறது ஆந்திர காவல்துறை. சொற்ப கூலிக்கு மரம் வெட்ட செல்லும் தொழிலாளர்கள், சொற்ப நேரத்தில் துப்பாக்கிக் குண்டிற்கு இரையாகும் சோகம் தொடர்கதையாகி வருகிறது.

இன்று திருப்பதி வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தமிழக தொழிலாளர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில்  தமிழகத்தின் மரம் வெட்டும் தொழிலாளர்கள் 12 பேர் உட்பட  20 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
திருப்பதி சேஷாசல வனப்பகுதியான  ஈசகுண்டாவில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல்,  செம்மரங்களை வெட்டுவதாக கிடைத்த தகவலையடுத்து, அங்கு வந்த ஆந்திர போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதில்  20 பேர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் வனத்துறை அதிகாரிகள்தான்  இவர்களை சுட்டுக் கொன்றதாக முதலில் தகவல் வெளியான நிலையில், பிரச்னை வெடிக்கலாம் என்ற எண்ணத்தில்  அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்த துப்பாக்கிச் சூட்டை ஆந்திர மாநில சிறப்பு பிரிவு காவல் துறை அதிகாரிகள்தான் நடத்தினார்கள் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில், 9 தொழிலாளர்கள் திருவண்ணாமலை மாவட்டத்தையும், 3 பேர் வேலூர் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்  என்று தெரிய வந்துள்ளது. 

இந்திய அளவில் ஆந்திராவின் சித்தூர், கடப்பா, கர்னூல், நெல்லூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்குட்பட்ட சேஷா சல வனப்பகுதியில்தான் செம்மரங்கள் எனப்படும் சிவப்பு சந்தன மரங்கள் அதிக அளவில் உள்ளன. உலக அளவில் இந்த செம்மரங்களுக்கு பெரிய சந்தை இருக்கிறது.அங்கீகரிக்கப்பட்டும், அரசின் அங்கீகாரம் இல்லாமலும் செம்மரங்கள் கோடிக் கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் வணிகமாக வளர்ந்துள்ளது. தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு மரம் வெட்டும் தொழிலாளர்கள்  செம்மரங்களை வெட்டும் பணியில் அதிக அளவில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

ஒரு மரத்தை வெட்டி பட்டைகளை உரித்து, பளபளப்பாக்கி,  5 அல்லது 6 அடி நீளத்திற்கு சரி சமமாக வெட்டி,  கடத்தும் வாகனங்களில் ஏற்றி முக்கிய இடங்களுக்கோ அல்லது இதற்கென உள்ள குடோன்களுக்கோ கொண்டு செல்லப்படுகின்றன. இதற்கு கிலோ கணக்கில் கூலி வழங்கப்படுகிறது. இதன்படி ஒரு மரத்திற்கு சுமார் 2,000 முதல் 3,000 வரை கூலி கிடைக்கும்.

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் மலைப்பகுதிகளில் அடர்ந்து வளர்ந்து இருந்த சந்தன மரங்கள் மொத்தம் மொத்தமாக வெட்டி கடத்தப்பட்டு கேரளம் மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு எப்படி விற்கப் பட்டதோ அதைக் காட்டிலும் கூடுதல் வேகத்தோடு செம்மர கடத்தல்  நடந்து வருகிறது. இதில், துரதிர்ஷ்டமாக செம்மரங்கள் ஆந்திராவில் குறிப்பாக தமிழக எல்லையான திருப்பதி வனப்பகுதியில் ஏக்கர் கணக்கில் செம்மரங்கள் வளர்ந்துள்ளன. 
வெட்டப்பட்ட மரங்களை கடத்தல்காரர்கள், தங்களின் பிரத்யேக  ‘பைலட்’ கள் மூலம் கடத்தப்படும் வாகனங்களைக்  கண்காணித்து,  போலீஸ் கெடுபிடி உள்ளனவா என்பதை உடனுக்குடன் வாகன டிரைவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து எல்லை தாண்டி கடத்துகிறார்கள். இந்த முறையில்தான் செம்மரங்கள் மாநிலம் தாண்டி மாநிலம் கடக்கின்றன. பின்னர் சென்னை, மங்களூரு போன்ற இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு துறைமுகங்கள் மூலம் கண்டெய்னரில் ஜப்பான், துபாய், சீனா, மலேசியா போன்ற நாடுகளுக்குக்  கடத்தப்படுகிறது.

வெட்டப்படும் செம்மரங்கள், இங்கு டன் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சத்துக்கு கைமாறுகிறது. இதுவே வெளிநாட்டில், ஒரு டன் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை விற்கப்படுகிறது. அரசியல்வாதிகள், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் துணை இல்லாமல் கோடிக்கணக்கான செம்மரங்களைக் கடத்துவது துளி கூட சாத்தியமில்லை. இதில் ஈடுபடும் மிகப்பெரிய கடத்தல் முதலாளிகள் பற்றியும் பணமுதலைகள் பற்றியும் உண்மையான விவரங்கள் வெளியே தெரிவதில்லை. 

ஆனால், இவர்கள் மூலம் செயல்படும் செம்மரக்கடத்தல் புரோக்கர்கள், சிறிய அளவிலான கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வனத்துறை மற்றும் காவல்துறையின்  சோதனையின்போது பிடிபடுகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையின் பிரபல தாதாவான அப்பு செம்மரக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவமனை சிகிச்சைப் பலனிக்காமல் மரணம் அடைந்தது நினைவூட்டத்தக்கது.

செம்மரக் கடத்தல் இன்றோ, நேற்றோ நடக்கும் கடத்தல் அல்ல. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக  நடைபெற்று வரும் ஒன்று. ஆனால், தற்போது திடீ ரென ஆந்திர போலீஸார் தமிழக கூலி ஆட்கள் மீது `என்கவுன்ட்டர்` நடத்துவதன் பின்னணி திடுக்கிட வைக்கிறது.

கடந்த 2013 ஆண்டு முதல் ஆந்திர  போலீஸ் என்கவுன்ட்டரில் 30 க்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள் அனை வரும் தினக்கூலிகளாக மரங்களை வெட்ட வந்தவர்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு, திருப்பதி வனக்காவலர்கள் ஸ்ரீதர், டேவிட் ஆகியோர் செம்மரக் கடத்தல் கும்பலால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சேஷாசலம் வனப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் போலீஸார் 24 மணி நேரமும் கடத்தல் கும்பலை பிடிக்க கண்காணித்து வருகின்றனர்.

அதோடு ஆந்திர மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ள நிலையில்,முதல்வர்  சந்திரபாபு நாயுடு இந்த கடத்தல் விசயத்தில் போலீசாருக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். ஏனெனில் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருப்பதி மலைப்பாதையில் சந்திரபாபு சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதில்  நாயுடு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்திய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய  இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக, செம்மரக் கடத்தல் தொழிலதிபர் கொல்லம் கங்கி ரெட்டியின் பெயர் அடிபட்டது. பின்னர் ரெட்டியைப் பொறி வைத்துப் பிடித்து சிறையில் அடைத்தனர். ஆனால் அவர் கடந்த ஆண்டு  ஜாமீனில் வெளியே வந்து, தற்போது வெளிநாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து கங்கி ரெட்டியினால் தனது உயிருக்கு ஆபத்து என சந்திரபாபு நாயுடு எப்போதும் அச்சத்தோடு இருப்பதால் தலை மறைவாகி உள்ள கங்கி ரெட்டியை, ஆந்திர போலீஸார் தீவிரமாகத்  தேடி வருகின்றனர்.

அதனால்  சேஷாசலம் வனப்பகுதியில் ஒரு கடத்தல்காரர் கூட இருக்கக் கூடாது என்ற சந்திரபாபுவின் ரகசிய உத்தரவின் பேரில்தான், தற்போது போலீஸார் தங்களது தேடுதல் வேட்டையை அதிகரித்துள்ளனர் எனக் கூறப்படுகிறது. இந்தப் பகுதியில் மட்டும்  530 சிறப்புப் படையினர் இந்த ‘ஆபரேஷன் சேஷாசலம்’ எனும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஆந்திர  செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், தமிழகத்  தொழிலாளர்கள் 12 பேர் உட்பட 20 பேர் உயிரிழந்த சம்பவம். இது தமிழக எல்லையோர மாவட்டங்களான வேலூர்,திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.

வன உயிரினங்களைக் கொல்ல தடைவிதிக்கும் சட்டம், மனித உயிர்களை சுட்டுக் கொள்வதை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை.கடத்தல் குற்றமே.அதற்கு கைது செய்யவும் விசாரிக்கவும்,சிறையில் அடைக்கவும் சட்டங்கள் உள்ளன. இந்த விசயத்தில் துப்பாக்கிச் சூடு மட்டுமே நிரந்தரமான தீர்வு இல்லை.மாறாக வேறு வகையிலான பிரச்னைகளுக்கு வித்திடும் என்பதை ஆந்திர மாநில அரசு யோசித்து உடனே செயல்படுத்த வேண்டும்.வங்கக் கடல் பகுதியில்,ஆந்திர மீனவர்கள் எல்லை தாண்டி, தமிழக மீனவர்கள் காலம் காலமாக மீன் பிடிக்கும் பகுதியில் நுழைந்து மீன் பிடிக்கிறார்கள். இதில் அவ்வப்போது தமிழக காவல் துறையால் கைதும் செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது கைது நடவடிக்கைக்குப் பதிலாக துப்பாக்கிச் சூடு மேற்கொண்டால் என்ன ஆகும் என்பதை ஆந்திர அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது.     

கடந்த சில ஆண்டுகளாக கடத்தல்  கும்பலிடமிருந்து 20 ஆயிரம் டன் செம்மரங்களை ஆந்திர அரசு பறிமுதல் செய்து குடோன்களில் பாதுகாப்பாக வைத்துள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 50,000 கோடி என்று கூறப்படுகிறது. இந்த 20 ஆயிரம் டன் செம்மரங்கள் வெளிநாடுகளில்  சுமார் 2 லட்சம் கோடி வரை விற்பனையாகும் என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மரங்களை குளோ பல் டெண்டர் மூலம் விற்க   மத்திய அரசு, ஆந்திரத்திற்கு  அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

செம்மரங்களின் மூலம் ஜப்பான், சீனா,ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாடுகளில் இசைக்கருவிகள்  வீட்டு அலங்கார பொருட்கள், பொம்மைகள், புத்தர் உள்ளிட்ட கடவுள் சிலைகள் போன்றவை தயாரிக்கப் படுகின்றன. மேலும் ஆண்மை சக்தியை  அதிகரிக்க செய்யும் மாத்திரைகள்  தயாரிக்கவும் இது பயன்படுவதாகக் கூறப்படுகிறது.இதனாலேயே செம்மரங்கள் அண்மைக்காலத்தில் அதிக அளவில் வெட்டிக் கடத்தப்படுகின்றன. சீனாவில் செம்மரங்கள் வெட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

செம்மரங்கள் கடத்தப்படுவதை தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஆந்திர அரசு ஈடுபடவேண்டும். இதில் ஈடுபடும் தொழிலாளர்களிடம்  வேறு தொழிலில் ஈடுபடுமாறு போலீஸ்-வனத்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தி அறிவுறுத்த வேண்டும். அதே சமயம் செம்மரங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க, ஆந்திரத்துடன் இணைந்து தமிழக அரசும் உரிய  நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்