Home » » 'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்

Written By DevendraKural on Saturday, 6 June 2015 | 03:53

'அன்றைக்கு தேவைப்பட்ட பிராபகரன் இன்றைக்கு தேவைப்படவில்லையா?' - ஆவேச சீமான்
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த தெற்கு பொய்கைநல்லூரில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நிறுவிய  விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் சிலையை காவல்துறையினர் நேற்று இரவோடு இரவாக அகற்றினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ்  உள்ளிட்ட தலைவர்கள் தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். 

பிரபாகரன் சிலை விவகாரம் ஒருபுறம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்க, இதே பிரபாகரன் படம் அண்மையில் திருச்சியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநாட்டில் வைக்கப்பட்ட நிலையில், அதனையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினார்கள். 

இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்துள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தின்போது வாக்கு கேட்டபோது அதிமுகவுக்கு தேவைப்பட்ட பிரபாகரன் படம், இப்போது ஆட்சியில் இருக்கும்போது தேவைப்படவில்லையா? என்று ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் பொங்கி தீர்த்துள்ளார். 

''வாரிசு அரசியல் பின்னணியோ, அரசியல் கட்சிப் பின்புலமோ இல்லாமல், முதல் தலைமுறையாக சாதாரண ஒரு கிராமத்தில் இருந்து வந்த என்னை, பொதுவெளியில் களமாடவைத்தது ஈழ அரசியல். ஈழப் படுகொலைகளில் இருந்து பிறந்தவர்கள் நாங்கள். இந்த மண்ணில் தமிழ்த் தேசிய அரசியலின் தேவையை உணர்ந்து, 'நாம் தமிழர் கட்சியை உருவாக்கினோம். சில காலமாகவே முதல் மாநாட்டுக்கான வேலைகளைத் திட்டமிட்டுக்கொண்டு இருந்தோம். மாநாட்டுக்கு ஏக அரசுக் கெடுபிடிகள். கடைசி நேரத்தில் தலைவர் பிரபாகரனின் படங்களை அப்புறப்படுத்தினார்கள்.
இதே பிரபாகரனின் படத்தின் கீழ் நின்று வாக்குகள் கேட்டபோது, அதை வரவேற்றது அ.தி.மு.க அரசு. அன்றைக்குத் தேவைப்பட்ட பிரபாகரன், இன்றைக்கு ஆட்சியாளர்களுக்குத் தேவைப்படவில்லை. அவை அனைத்தையும் சமாளித்துச் சாகசம் நிகழ்த்தியிருக்கிறார்கள் எங்கள் பிள்ளைகள். லட்சம் இளைஞர்கள் திருச்சியில் திரள, பிரபாகரன் என்ற பெருநெருப்பே காரணம்'' என்று கூறிய சீமான் தொடர்ந்து அளித்த பேட்டியின் சில முக்கிய பகுதிகள் இங்கே... 

தேர்தல் நெருங்கும் சமயம், கூட்டம் திரட்டி தேர்தல் போட்டியில் இடம்பிடிப்பதுதான் உங்கள் மாநாட்டின் நோக்கமா?

கருணாநிதியை தீவிரமாக விமர்சிக்கும் அளவுக்கு நீங்கள் அ.தி.மு.க அரசையோ, முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளையோ விமர்சிப்பது இல்லையே... ஏன்?

''கருணாநிதி, ஜெயலலிதா... இருவரையும் சமஅளவில் வைத்துதான் விமர்சிக்கிறோம். என்னுடைய நான்கு ஆண்டு காலப் பேச்சில் அம்மையாரையும் சாடியிருக்கிறேன். இப்போது தனித்துப் போட்டியிடுவதே ஜெயலலிதாவுக்கு எதிரான நிலைப்பாடுதானே? கடந்த 50 ஆண்டு கால தமிழ்நாடு அரசியலின் மையம் கருணாநிதி என்பதால், அவர் மீதான விமர்சனங்கள் தீவிரமாக இருக்கின்றன. கருணாநிதி மட்டும் காமராஜர், கக்கன் போல இருந்திருந்தால், எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தமிழ்நாட்டு அரசியலில் உருவாகியே இருக்க மாட்டார்கள்.''

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுவிக்கப்பட்டிருப்பது, முன் எப்போதும் இல்லாத பலத்த விவாதங்களைக் கிளப்பியிருக்கிறதே... அந்தத் தீர்ப்பு பற்றி உங்கள் பார்வை என்ன?
''அது எப்படி, தீர்ப்பு சரியா... தப்பா என நாம் சொல்ல முடியும்? சட்டம் படித்த மேதைகள் அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறார்கள். நான் இந்த அமைப்பையே மாற்ற வேண்டும் எனப் போராடுகிறேன். இந்தியாவே விற்பனைப் பண்டமாகிவிட்ட நிலையில், நீதியும் விற்கப்படுவதில் ஆச்சர்யம் இல்லை. அதனால் இந்த வழக்கு, அது தொடர்பான தீர்ப்பு பற்றி நான் பேசுவது சரியாக இருக்காது.''


திருச்சி மாநாட்டில் ஹிட்லர் படம் வைத்திருந்தீர்களே... என்ன காரணம்?

''அந்தப் படத்தை ஆர்வத்தில் சில தம்பிகள் வைத்துவிட்டார்கள். வழிகாட்டும் தலைவர்கள் படத்தில், புத்தர் படம்கூட வைத்திருந்தார்கள். நேற்று இலங்கையிலும் இன்று பர்மாவிலும் புத்தரின் பெயரால்தான் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கிறார்கள் அதற்காக புத்தரை ஃபாசிஸ்ட் எனச் சொல்ல முடியுமா? மாநாடுகளில் வைக்கப்படும் விளம்பரப் பலகைகளை வைத்து அரசியல் முத்திரை குத்தத் தொடங்கினால், எல்லா அரசியல் கட்சிகளைப் பற்றியும் இப்படி ஆயிரம் அபத்தங்களை அடுக்க முடியும்.''

'சீமான், முருகன் வழிபாட்டில் தொடங்கி ஹிட்லர் வழிபாடு வரை செய்துகொண்டிருப்பதற்கு ஒரே காரணம் ஈழம் பிசினஸ் படுத்ததுதான்’ என்கிறாரே தி.மு.க முகாமைச் சேர்ந்த எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன்?

''எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் பிசினஸ் செய்யும் கட்சியான தி.மு.க-வில் இருந்துகொண்டு இதைப் பார்த்தால்,  பிழையாகத்தான் தெரியும். தி.மு.க என்பது, கட்சி அல்ல; ஒரு தொழில்நிறுவனம். தேர்தல் நேரத்தில் நிதி கேட்பார்கள். வேட்பாளர் தேர்வு நேர்காணலின்போது, 'கட்சிக்கு எவ்வளவு நிதி கொடுப்பாய்?, தொகுதிக்கு எவ்வளவு செலவு செய்வாய்?’ என்றுதான் கேட்பார்கள். இப்படி தேர்தலை வைத்துத் தொழில் செய்யும் ஒரு கட்சியைச் சேர்ந்தவர், அனைத்தையும் வணிகமாகத்தானே பார்ப்பார். இத்தனைக்கும் ஈழத்தை வைத்து வியாபாரம் செய்ததே தி.மு.க-தான். ஆனால், ஈழத் தமிழர்களுக்கு தி.மு.க செய்த துரோகங்களால் அதன் ஈழ வியாபாரம் படுத்துவிட, இப்போது கடையைத் தொடர்ந்து நடத்த முடியாமல் டெசோ என்ற டம்மி அமைப்பைத் தூக்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

நான் ஹிட்லரை வைத்திருப்பது இருக்கட்டும். தி.மு.க தலைவர் தன் மகன் கருணாநிதிக்கு 'ஸ்டாலின்’ என ஏன் பெயர் வைத்தார்? 'ஸ்டாலின் ஒரு ஃபாசிஸ்ட்’ எனச் சிலர் சொல்கிறார்களே. மனுஷ்ய புத்திரன் இது பற்றி கேட்டுச் சொல்லட்டும். அப்படியே, கலைஞர் தொலைக்காட்சியில் ஹிட்லர் தொடரை ஏன் ஒளிபரப்பினார்கள் என்றும் கேட்டுச் சொல்லட்டும்.''

தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்தால், அதன் பிரச்னைகள் சரியாகிவிடுமா?

''சரி நான் கேட்கிறேன்... தமிழ்நாட்டை தமிழன் ஆட்சி செய்யவில்லை என்றால், அனைத்துப் பிரச்னைகளும் தீர்ந்துவிடுமா? நாங்கள் ஆந்திராவையோ, கேரளாவையோ, கர்நாடகத்தையோ ஆள வேண்டும் எனச் சொல்லவில்லையே. எங்கள் அமைப்புக்கு 'நாம் திராவிடர்’ எனப் பெயர் வைத்திருந்தால், சீமான் நல்லவனாகியிருப்பானா? 'நாம் தமிழர்’ என்ற பெயர்தான் இங்கு பிரச்னையா?

ஆனால், ஆந்திராவில் என்.டி.ஆர் கட்சி தொடங்கும்போது 'திராவிட தேசம்’ என்றா பெயர் வைத்தார்? 'தெலுங்கு தேசம்’ எனத்தானே பெயர்வைத்தார்! இதெல்லாம் யாருக்கும் பிரச்னை இல்லை. அரசியலாகத்தான் தெரியும். ஆனால், நாங்கள் தமிழ்த் தேசியம் பேசினால், அது பக்கவாதமாகவும் முடக்குவாதமாகவும் இருக்கும். ஆக, அனுபவங்களின் அடிப்படையில் சொல்கிறேன்... உணர்வுள்ள தமிழன் வந்தால், இங்கு எல்லாம் சரியாகிவிடும். இதை நான் சத்தியம் செய்து சொல்கிறேன். அதற்குத்தான் வாய்ப்பு கேட்டு வருகிறோம். ஏனென்றால், நாங்கள் தேர்தல் கூட்டணியில் இருந்து விலகி நிற்கிறோம். அதனால் அற்ப தேர்தல் நலன்களுக்காகக் கட்சிகளிடம் சரணடையும் தவறை, நாங்கள் செய்ய மாட்டோம்.''

திராவிடம் என்ற வார்த்தையோ, திராவிடர் என்ற அடையாளமோ, இன்றைய காலச்சூழலுக்குப் பொருந்தவில்லையா?

''எந்தக் காலத்துக்கும் பொருந்தவில்லை; அதற்கான தேவையும் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு. மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள்... யாரும் தங்களை திராவிடர்களாக அடையாளப்படுத்தாதபோது, நமக்கும் அது தேவை இல்லை என்றே சொல்கிறேன். உடனே, 'தமிழன் என்று சொன்னால், பிராமணர்களும் தமிழன் என்று நம்மோடு வந்துவிடுவான்’ என்கிறார்கள் ஒரு தரப்பினர். நாங்கள் கட்சி தொடங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை ஒரு பிராமணர்கூட 'நானும் தமிழன்தான்’ என வரவில்லை. ஆனால், அவர்கள் திராவிட இயக்கங்களில் இணைந்திருக்கிறார்கள். ஆக, தமிழர்களின் மான உணர்வைச் சிதைத்து ஐயாவின் காலில் விழும், அம்மா பயணிக்கும் ஹெலிகாப்டரின் நிழலில் விழுந்து வணங்கும் அடிமை அரசியலைத்தான் திராவிடம் இங்கே கொண்டுவந்தது.''
 
டி.அருள் எழிலன்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்