Home » » விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!

Written By DevendraKural on Tuesday, 7 July 2015 | 22:43

விவசாயி மகனின், வித்தியாசமான விவசாய கண்டுபிடிப்பு!"இந்தியாவில் டாய்லெட்களின் எண்ணிக்கையைவிட, மொபைல் போன்களின் எண்ணிகை அதிகமாகி விட்டது. இதை வைத்து ஆக்கப்பூர்வமான பல விஷயங்களை உருவாக்க முடியும். அதில் ஒன்றுதான் மொபைல் போன்களை வைத்து இயக்கக்கூடிய இந்த கண்டுபிடிப்பு" என்கிறார் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி முனைவர் விஜயராகவன்.
இவர் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, முறையாக படித்து, இன்று வெளிநாட்டில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார். இருந்தாலும் பிறந்த ஊரில் விவசாயிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலோடு விவசாயம் சம்பந்தமான புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளார். இந்த கண்டுபிடிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால் விவசாயத்தில் பல வேலைகள் எளிதாகிவிடும். இன்று செல்போனை வைத்துக் கொண்டு, பல வேலைகளை இருக்கும் இடத்திலிருந்து இயக்கி கொண்டிருக்கிறோம். அதுபோன்று விவசாய பணிகளையும் செய்ய முடியும் என்கிறார் விஜயராகவன் விஸ்வநாதன். செக் குடியரசு நாட்டிலிருந்து தொலைபேசி வாயிலாக நமக்கு அளித்த பேட்டியிலிருந்து,

"எனக்கு சொந்த ஊரு விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம். எங்கப்பா விஸ்வநாதன் தென்னை மர விவசாயி. எட்டாவது வரைக்கும்தான் படிச்சிருக்கார். அதனால எல்லா அப்பாக்கள் மாதிரியும் புள்ளைங்கள நல்லா படிக்க வைக்கணுங்கற, கனவு அவருக்கு உண்டு. அதனால அக்கா, நான், தங்கச்சி மூன்று பேரையும் முதுநிலை பட்டதாரிகள் ஆக்கியுள்ளார். இவ்வளவுக்கு அவருக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தக்கூட தெரியாது. ஆனால், எங்கள பட்டப்படிப்பு படிக்க வைக்கிறதில ரொம்ப அக்கறை எடுத்துக்கிட்டார். பனிரெண்டாவது முடிச்சிட்டு கோவை, அமிர்தா இன்ஜினீயரிங் கல்லூரியில எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் பாடத்தை எடுத்து படித்தேன்.
கல்லூரியில் நுழையும்போது எனக்கு ஆங்கில மொழியறிவு குறைவாகத்தான் இருந்தது. வகுப்பில் பாடங்கள் ஆங்கிலத்தில்தான் நடக்கும். ஆசிரியர்கள் கேள்விகள் கேட்டால் கண்ணில் தானாகவே நீர் வழியும். கூனி குறுகி நிற்பேன். மொழி பிரச்னையால் முதல் செமஸ்டரில் நான் பெற்ற மதிப்பெண்ணும் குறைவுதான். பிறகு ஆங்கில பேராசிரியர் மினி மேனன், ஆங்கிலத்தை பேசுவதற்கு உதவினார். இரண்டாம் ஆண்டில் குடும்ப கஷ்டத்தால் படிக்க முடியாத நிலை. படிப்பை அப்படியே நிறுத்திக் கொள்ளலாமா? என்று இருந்தேன். அப்போதுதான் பி.வி.கோபி என்ற பேராசிரியர் மூலம் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று, மீண்டும் படிப்பை தொடர்ந்தேன். முதலில் என்னை யாரும் சட்டையே செய்யவில்லை. இருந்தாலும் கிடைத்த ஒவ்வொரு செமஸ்டரிலும் என்னுடைய திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தேன். இன்ஜினீயரிங் படித்த 4 ஆண்டுகளில் 1 நாள் கூட விடுமுறை எடுத்தது கிடையாது. ஏன்? 1 மணி நேரம் தாமதாமாககூட வந்தது கிடையாது. கல்லூரி இறுதியாண்டின்போது, 100 சதவிகித வருகை பதிவேட்டுக்காக பாராட்டினார்கள். இன்ஜினீயரிங் கடைசி செமஸ்டரில் 88 சதவிகித மதிப்பெண். மொத்தமாக 79 சதவிகித மதிப்பெண்களுடன் வெளியே வந்தேன்.

கல்லூரியில் 3ம் ஆண்டில் நடந்த கேம்பஸ் இண்டர்வியூவில் எல் அன் டி நிறுவனத்தின் வேலைக்கு தேர்வானேன். இதற்கிடையில, மேலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளுக்குள் தகித்துக் கொண்டிருந்தது. ஒரு ஜெர்மன்காரர் வெளிநாட்டில் இருக்கும் படிப்புகளை பற்றியும், அதற்கு கிடைக்கும் ஸ்காலர்ஷிப் பற்றியும் கல்லூரியில் பேசினார். அதை பற்றி தெரிந்து கொண்டு 2007ல் ஸ்காலர்ஷிப் மூலமாக வெளிநாட்டில் படிக்க முயற்சி பண்ண ஆரம்பிச்சேன்.

வெளிநாட்டு படிப்புக்கு ஸ்காலர்ஷிப் இருந்தாலும், படிச்சி முடிச்சி வர்றதுக்கு அன்றைய நிலவரப்படி 15-20 லட்சம் ஆகும்னு சொன்னாங்க. அப்போ கோவை, ராஜபாளையம்னு பல வங்கிகளை கல்வி கடனுக்காக அணுகினோம். எந்த வங்கியிடமிருந்தும் சரியான பதிலே இல்லை. ‘உன் பேர்ல என்ன இருக்கு? நீ கடனை வாங்கிட்டு வெளிநாட்டு போயிட்டா பணத்தை யார் கட்டுவது?’ என்று பல கேள்விகள் கேட்டார்கள். அப்போதுதான் புரிந்தது வங்கிக் கடன்களுக்கும், நாம் வாங்கும் மார்க்குக்கும் சம்பந்தமில்லை என்பது.

அந்த நேரத்துல சென்னை, எழும்பூரில் இருக்கிற டபில்யூ யு எஸ் (வேர்ல்டு யுனிவர்சிட்டி சர்வீஸ்)க்கு அடிக்கடி வருவேன். அங்கே தங்கி, வெளிநாட்டு படிப்புகள், அதற்கான ஸ்காலர்ஷிப், எங்கெங்கு என்னென்ன கல்லூரிகள் என்பது பற்றி தேடுவேன். பல முயற்சிகள், தேடல்களுக்கு பிறகு இந்தோ-இத்தாலி 100 சதவிகித ஸ்காலர்ஷிப் மூலம் செப்டம்பர் 2007-ல் இத்தாலியில் படிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இதற்கு எங்க மாமா ஜெயராமன் உட்பட பலரும் உதவி செய்தனர். அதிகம் வெளியில் போகாதவன், இத்தாலியில் என்னமாதிரியான சூழல் நிலவும் என்பது கூட தெரியாமல் போய் மிலன் நகரில் இறங்கி விட்டேன். அங்கு குளிர் வாட்டி எடுத்தது. என்னிடம் குளிருக்கு போட்டுக்கிற ஜாக்கெட் கூட இல்ல. பணம் பற்றாக்குறையால் வாங்காமல் இருந்தேன். அதனால நிமோனியா காய்ச்சல் வந்துடுச்சு. இதை பார்த்த ஒரு சீன மாணவர் அவருடைய ஜாக்கெட்டை கொடுத்து உதவினார்.
முன்னாள் ஜனாதிபதி, விஞ்ஞானி அப்துல் கலாம் ‘இனி வரும் காலங்களில் நேனோ டெக்னாலஜி முக்கிய வரவேற்பை பெரும்’ என்று பல கூட்டங்களில் பேசியிருக்கிறார். அதை வைத்து ‘மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் அன்டு நேனோ டெக்னாலஜி’ என்ற 2 ஆண்டு படிப்பை தேர்ந்தெடுத்தேன். இத்தாலி, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து என்று மாறி மாறி வகுப்புகள் நடக்கும். இரண்டாண்டு முடிவில் 110க்கு 108 மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றேன்.

பிறகு நானோ எலக்ட்ரானிக்ஸ், 3டி வடிவமைப்போடு கூடிய படங்கள் எடுக்கக்கூடிய கேமராக்கள் உற்பத்தி குறித்து பி.எச்.டி. படிக்க ஆரம்பிச்சேன். இதற்கு பிரெஞ்சு அரசு, கல்வி நிறுவனம், தொழிற்சாலைகளின் கூட்டு முயற்சியோடு இந்த படிப்பு தொடர்ந்தது.

இந்த நேரத்தில் ஐரோப்பிய கமிஷன் மூலம் ஐரோப்பிய அணு ஆராய்ச்சி கழகம் (சிஇஆர்என்) ஒரு ப்ராஜக்ட்டை அறிவித்தது. அதாவது அட்வான்ஸ் ரேடியேஷனை கண்டறிவது பற்றிய ப்ராஜக்ட். இதற்கு பகுதி நேரமாக ஆராய்ச்சி வேலைகளில் ஈடுபடுவதற்கு விண்ணப்பித்து இருந்தேன். இந்த நேரத்தில் லேட் நைட்டில் வந்து படிப்பேன். மீண்டும் அதிகாலையில் எழுந்து பணிக்கு சென்று விடுவேன். 2012, அக்டோபரில் பி.எச்.டி. படிப்பை முடித்தேன். அப்படியே சி.இ.ஆர்.என்னில் ஆராய்ச்சி வேலைகள் தொடர்ந்துகிட்டிருந்தது. அந்த நேரத்தில் ராஜபாளையத்துக்கு ஒருமுறை வந்திருந்தேன். தண்ணீர் பற்றாக்குறை, தண்ணீரில் சுவை குறைவு, அதிக ரசாயன உரங்கள் பயன்பாடு ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருந்ததை பார்த்தேன். இதுதான் விவசாயம் குறித்து என்னுடைய ஆராய்ச்சியை தூண்டியது. தொடர்ந்து விடுமுறை நாட்களில் இந்த ஆராய்ச்சிக்காக தனியாக வேலை செய்தேன்" என்றவர் அந்த கண்டுபிடிப்பை பற்றியும் பேசினார்.

"ஸ்மார்ட் அக்ரி (நேர்த்தியான விவசாயம்) என்ற பெயரில் இதை ஆய்வு செய்து வருகிறேன். அதாவது நிலத்திலுள்ள மண்ணின் கீழ் சென்சாரை வைத்துவிட வேண்டும். இந்த சென்சார் பூமிக்கு அடியில் இருக்கும் மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, கார-அமில நிலை (பி.எச்.) ஆகியவற்றை அளந்துவிடும். இந்த சென்சாரிலிருந்து வரும் தகவல்கள் பண்ணையிலேயே கிணற்றுக்கு அருகில் வைக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டு அறைக்குள் இருக்கும் ஜி.எஸ்.எம். மோடத்துக்கு வந்துவிடும். மோடத்திலிருந்து செல்போன் டவர் மூலமாக சர்வருக்கு செல்லும். சர்வரிலிருந்து கம்ப்யூட்டருக்கு வந்துவிடும். கம்ப்யூட்டரிலிருந்து நம்முடைய மொபைல் போனுக்கு தகவல்கள் வந்தடையும். இதெல்லாம் ஒரு சில நொடிகளில் நடந்துவிடும்" என்றவர் இதனால் ஏற்படும் பலன்களை பற்றியும் சொன்னார்.
"இப்போது இந்தியாவில் மழையளவு, வெப்பநிலை, காற்றின் ஈரப்பதம் ஆகியவற்றை அளந்து காட்டும் காலநிலை அறியும் கருவி பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பூமிக்கடியில் தகவல்களை சேகரித்து கொடுக்கும் கருவி அறிமுகப்படுத்துவது இதுவே முதல்முறை. பூமிக்கடியில் இணைப்பின் மூலம் செயல்படுவது இந்த கருவியின் சிறப்பு. இந்த கருவியின் மூலம் மண்ணில் உள்ள ஈரப்பதத்தை அறியும்போது, அந்த நிலத்துக்கு ஈரத்தை பொறுத்து எவ்வளவு தண்ணீர் கொடுக்கலாம் என்பதை முடிவு செய்து கொள்ளும். அதாவது ஏக்கருக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது என்றால், ஈரப்பதத்தை பொறுத்து 5 ஆயிரம், 7 ஆயிரம், 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரை கொடுக்கலாம். இதனால் மோட்டாரை இயக்கும் மின்சாரத்தின் அளவும் குறையும். அதேமாதிரி மண்ணின் வெப்பநிலையை அறிந்து அதற்கேற்ப தண்ணீரை அதிகம் கொடுக்க வேண்டிய பயிர்களுக்கு கொடுக்கலாம். இதனால் பயிர்கள் வாடிப்போவதை தவிர்க்கலாம். கார-அமில நிலையை அளவிடும்போது, மண்ணுக்கு என்ன சத்துக்கள் பற்றாக்குறையாக உள்ளதோ, அதை மட்டும் கொடுத்தால் போதுமானது. அதாவது உரம், யூரியாவை தேவைக்கேற்றாற் போல் கொடுத்து அளவிட முடியும்.

இந்த தகவல்களை வைத்து, ஒரு பண்ணையை நிர்வகிக்க கூடிய முடிவுகளை நாம் இருக்கும் இடத்திலிருந்தே கையாள முடியும். இன்று இந்தியாவின் முக்கிய பிரச்னை தண்ணீரும், உரங்களும்தான். இந்திய அரசு உரங்களுக்கென்று பல ஆயிரம் கோடிகளை ஆண்டுதோறும் செலவு செய்து வருகிறது. விவசாயிகளும் மண்ணுக்கு தேவையோ, இல்லையோ உரங்களை கொட்டி வருகிறார்கள். நல்ல மண் என்று தெரிந்தால் எதற்கு உரங்களை கொட்டவேண்டும். ஓரளவு வளமான மண்ணுக்கு உரங்களின் அளவையாவது குறைத்து கொள்ளலாம் இல்லையா? தண்ணீர் வளமுள்ள மண்ணுக்கு குறைந்தளவு தண்ணீர் கொடுத்து, தண்ணீர் இல்லாத பகுதிக்கு தண்ணீரை வழங்க முடியும்.

ஸ்விட்சர்லாந்தின் கிளைமேட்-கிக் என்ற அமைப்பு புதுமையான கண்டுபிடிப்பு என்று அங்கீகரித்திருக்கிறது. இதன் மூலம் மண்ணில் கார்பனின் அளவை குறைக்க முடியும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. இதுகுறித்து மேன்மேலும் ஆராய்ச்சிகள் தொடர நிதிவுதவியும் அளித்து வருகிறது.
ஐரோப்பா மற்றும் பிற நாட்டினர் பங்குபெற்ற ஸ்விஸ் நேஷனல் வர்த்தக போட்டியில் இந்த கண்டுபிடிப்புக்காக முதல் பரிசை பெற்றுள்ளேன். இது ஆய்வுக்கூட வேலை மட்டும் அல்ல. இது நடைமுறையில் செயல்படுத்தக்கூடியது என்று இதில் கலந்து கொண்ட ஜூரிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஜப்பான், டோக்கியோ பல்கலைக் கழகத்தில் இதுகுறித்து மாணவர்களிடத்தில் விளக்கியுள்ளேன்.

இந்தாண்டு ஐ.நா. சர்வதேச தொலைதொடர்பு துறை 150 ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. அதையொட்டி 150 இளம் விஞ்ஞானிகளை உலகம் முழுவதுமிருந்து தேர்ந்தெடுத்திருக்கிறது. இதில் முதல் 15 இளம் கண்டுப்பிடிப்பாளர்களில் நானும் ஒருவன்.

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் இந்த கண்டுபிடிப்பை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து இந்தியாவிலும் பேசியிருக்கிறேன். ஆராய்ச்சி நிலையிலிருந்து, கருவியை உருவாக்கிவிட்டோம். அடுத்து கள ஆய்வு சோதனை மட்டுமே இருக்கிறது. இந்த கருவியை 40-50 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கி செயல்படுத்தக் கூடியதாக இருக்கும். ஆனால், இதன் நன்மைகள் பன்மடங்கு. இந்திய அரசு மனது வைத்து உதவினால் இதை விரைவில் நடைமுறைப்படுத்துவிட முடியும். அரசுக்கும், விவசாயிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அங்கீகாரம், விருதுகள் எனக்கு மட்டுமல்ல. என்னோடு பணிபுரியும் குழுவினருக்கும் பங்கு உண்டு. இந்த தொழில்நுட்பம் விவசாயிகளை சென்றடைய வேண்டும் என்பதே என் குறிக்கோள்" என்று சத்தமில்லாமல் சொல்லி முடித்தார் இந்த சாதனை மனிதர்.
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்