Home » » கந்துவட்டி!!

கந்துவட்டி!!

Written By DevendraKural on Monday, 23 October 2017 | 22:30

கந்துவட்டி தடுப்பு சட்டமும்குண்டர் தடுப்பு சட்டமும்...

" அவர் இறந்துவிட்டார் என்று சொன்னதும் ஓடிப் போய் பார்த்தேன். நான் அதை பார்த்திருக்கக் கூடாது. அவர்தூக்கு மாட்டிய மின் விசிறி என் கண்களுக்கு சினிமா ரீல் மாதிரி தெரிந்தது. தூக்கு போட்ட அங்கவஸ்திரம்சினிமா பிலிம் மாதிரி இருந்தது. அவர் மண்டியிட்டிருந்த நிலையைப் பார்க்கும்போது இந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று தோன்றியது "

இப்படி பேசியது யார் தெரியுமா சூப்பர் ரஜினிகாந்த் தான். பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜி.வி என்ற  ஜி.வெங்கடேஸ்வரன் 2003ம் ஆண்டு கந்துவட்டிக்கும்பலால் தற்கொலை செய்து கொண்ட போது திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் நடந்த இரங்கல் கூட்டத்தில் தான் இப்படி ரஜினி பேசினார்.  ஆனால், தற்போது  ஒரு பெண், 2 குழந்தைகள்  கலெக்டர் அலுவலகத்தில் சுடர்விடும் நெருப்பென எரிந்து செத்துப் போனார்கள். சூப்பர் ஸ்டார்களோ, கலைஞானிகளோ ஓடோடி போகவில்லை.

கொடி கட்டிப் பறக்கும் கந்துவட்டி தொழில்
======================================
தமிழகத்தில் கந்துவட்டி தொழிலால் ஏராளமான குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளன. பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். பல ஆயிரம் குடும்பங்கள் ஊரை விட்டு தலைமறைவாகியுள்ளன. பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். பலருடைய சொத்துக்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. எண்ணற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தமிழகத்தின் பிரபலமான தயாரிப்பாளர் .ஜி.வி கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்டது போலவே, நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து குடும்பத்தை சேர்ந்த மூவர் தீக்குளித்து இறந்து போய் உள்ளனர்.


கந்து வட்டி தடைச் சட்டம்
========================

தமிழகத்தில் 2003ல் கந்து வட்டி தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.  இச்சட்டம் ஓரளவு ஜெயலலிதா ஆட்சியின் போது அமலில் இருந்து உண்மை தான். ஜி.வி. தற்கொலை செய்து
கொண்டதன் பின்னனியில் தென்மாவட்டத்தை சேர்ந்த பெரும்புள்ளி பின்னிருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது.

இதை மையப்படுத்தி மதுரையில் நடக்கும் கந்துவட்டி கும்பல்கள் குறித்து தீக்கதிரில் நான் எழுதிய ஒரு கட்டுரையைத் தொடர்ந்து பலர் மீது வழக்கும் தொடுக்கப்பட்டது.

நீதிபதியின் கடிதம்
==================
ஆனால், இச்சட்டம் முழுமையாக அமலாகவில்லையென்பதே நிதர்சமான உண்மை. கடந்த 2013ம் ஆண்டு  அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ராஜேஷ்குமார் அகர்வாலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், " தமிழ் நாளிதழில் திருப்பூர் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து செய்தி வெளியாகியுள்ளது.  எனவே, தமிழகத்தில் 2003ம் ஆண்டு இயற்றப்பட்ட தமிழ்நாடு கந்துவட்டி தடுப்பு சட்டத்தை தீவிரமாக அமல்படுத்தவும், இந்த சட்டத்தின்கீழ் 2003ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையை அரசிடம் இருந்து பெறவேண்டும். இந்த கந்துவட்டி கொடுமை குறித்து தகுந்த நடவடிக்கையை  உயர்நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார்.

இந்த கடிதத்தையே பொதுநல மனுவாக தாமாக முன்வந்து பதிவு செய்த தலைமை நீதிபதி ராஜேஷ்குமார் அகர்வால், இதுகுறித்து பதிலளிக்கும்படி தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு நோட்டீசு அனுப்பினார். மேலும், இந்த வழக்கில் ஐகோர்ட்டுக்கு உதவும் விதமாக மூத்த வக்கீல் ஆர்.முத்துகுமாரசாமியை நியமித்தும் உத்தரவிட்டார்.அவரும் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தார்.

இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு மிக மிக முக்கியமானது.

குண்டர் தடுப்பு சட்டம்
======================
கந்துவட்டி குறித்து புகார் வந்தால் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி  கூறினார். ஆனால், கந்து வட்டி கும்பல் கடன் தொகையை வசூலிக்க குண்டர்களை பயன்படுத்துகின்றனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.


கந்து வட்டி தடுப்பு சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனைத்து வகையான ஊடகங்கள், சினிமா தியேட்டர்கள் மூலம் விளம்பரம் வெளியிட வேண்டும். இதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களையும் அரசு  பயன்படுத்திக் கொள்ளலாம்..

இந்த கண்காணிப்பு கமிட்டி , கந்து வட்டி தடுப்பு சட்டத்தின்கீழ் பொதுமக்கள் கொடுக்கும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? இதுபோன்ற புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கந்து வட்டி கும்பலுடன், போலீசார் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றனரா? என்பதை கண்காணிக்காக மாவட்டம் மற்றும் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகளை உருவாக்க அரசு பரிசீலிக்க வேண்டும்.

மேலும், கந்து வட்டி தொழிலில் முக்கிய நபர்களாக செயல்படுபவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். கந்து வட்டி கொடுமை வழக்குகளின் விசாரணை மாநகர போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் நேரடி கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும்.
அமல்படுத்த வேண்டும்

யார் மீது பாய்ந்தது சட்டம்?
=========================
கந்து வட்டி வழக்கில் கோர்ட்டு மூலம் தண்டனை பெறுபவர்களின் விவரங்களை அவ்வப்போது உயர்நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல் செய்ய வேண்டும் என்று  நீதிபதிகள் கூறியிருந்தனர்.
ஆனால், தமிழகத்தில் தாலுகா அளவில் கண்காணிப்பு கமிட்டிகள் உருவாக்கப்படவேயில்லை.

அத்தடன், கந்துவட்டி நடத்தும் நபர்கள் மீது  குண்டர் தடுப்பு சட்டம் பாய்ச்சுவதற்குப் பதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு யார் மீது இந்த சட்டத்தை பயன்படுத்தியது தெரியுமா?

சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த வந்த மே பதினேழு இயக்கம் திருமுருகன் காந்தி, டைசன், அருண்குமார், இளமாறன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்ட்ம் பாய்ச்சப்பட்டது. ஓஎன்ஜிசிக்கு எதிராக துண்டுபிரசுரங்களை விநியோகித்த சேலம் மாணவி வளர்மதி மீது குண்டர் சட்டம் பாய்ச்சப்பட்டது. இப்படி உரிமைக்காக போராடும் மக்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தை பாய்ச்சும் தமிழக அரசு, கந்துவட்டி கும்பல் மீது எப்படி இச்சட்டத்தை பாய்ச்சும்?

உயிர் கொடுத்த  தோழர் வேலுச்சாமி
=================================

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் கந்து வட்டிக் கும்பலால்  இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டனர். இக்கொடுமைக்கு எதிராக களத்தில் நின்று போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுச்சாமியை   2010 மார்ச் 10ம் தேதி   7 பேர் கொண்ட கந்துவட்டி கும்பல் படுகொலை செய்தது.அத்துடன் இவ்வழக்கில்  முக்கிய குற்றவாளியான ஆமையன், அப்ரூவராக மாறியதால் அதே கும்பல் அவனை தலை துண்டித்து கொலை செய்து காவிரியில் வீசியது.

கந்துவட்டி கும்பலின் கொட்டத்தை அடக்க இதுவரை ஆண்ட தமிழக அரசுகளால் உருப்படியான நடவடிக்கைகள் இல்லை.  இந்த நிலையில் தான் கந்துவட்டிக்கும்பலால் பாதிக்கப்பட்டு  மனதிற்குள் வெம்பிச் சாக முடியாமல் தீயிடம் இசக்கி முத்து குடும்பம் தங்களை ஒப்படைத்தது. 

முன்வந்து வழக்கை எடுக்குமா உயர்நீதிமன்றம்?
============================================

தொலைக்காட்சியில் காட்சிகளைப் பார்க்க பார்க்க நெஞ்சு கொதிக்கிறது. எதுவுமறியாத பிஞ்சு குழந்தைகள் அகல் தீபங்கள் போல எரியும் கொடுமையை காணாச்சகிக்கவில்லை.  பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்து நடவடிக்கை எடுக்காததோடு, கந்துவட்டிக்குமபலோடு சேர்ந்து காவல்துறை அதிகாரிகள் மிரட்டியதால் இசக்கி முத்து  இந்த நிலையை எடுத்துள்ளார்.

அவரது மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி ஆருண்யா, அக்‌ஷயா என்கிற பரணிகா  ஆகியோரின்  உயிர் பிரிந்ததற்கு காரணம், உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத தமிழக அரசு தான். காவல்துறையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதல்வர் தான் காரணம்.

எனவே, இவ்வழக்கை தானாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை எடுத்து விசாரிக்க வேண்டும். அரசு நிர்வாகத்தை கூண்டில் ஏற்ற வேண்டும். இது எரிந்தவர்களுக்கு மட்டுமல்ல, இனிமேல் எரிய  நினைப்பவர்களுக்கும் நியாயம் சேர்க்கும். செய்யுமா உயர்நீதிமன்றம் ? 
- ப.கவிதா குமார்
Share this article :
 
Support : தேசம்
Copyright © 2013. தேவேந்திரக்குரல் - All Rights Reserved
DESAM
DESAM தேசம்